துணைநகர வணிகம்
ஒரு புதுமாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வேலையை விட்டுவிட்டு உள்ளூரில் ஒரு வேலைக்கு சென்றபோது அங்கே அந்த முதலாளி ஏறத்தாழ திவால் ஆகி இருந்தார்.
வங்கியிலும் கந்துவட்டியிலும் வாங்கிய கடன் அவர் கழுத்தை நெறித்தது.
அவர் முதலீடு செய்திருந்த கார்ப்பரேட் நிறுவனம் அவர் ரத்தத்தை உறிஞ்சி துப்பிவிட்டது!
அவர் வீடு, நகைகள் எல்லாம் கரைந்துவிட்டது!
மீதமிருந்த அந்த நிறுவனத்தின் பொருட்களை திரும்ப ஒப்படைத்து கணக்கு முடிக்கத்தான் அவன் வந்திருந்தான்.
அவனுக்கு வணிகம் பற்றி எதுவும் தெரியாது.
ஆனால் அவன் தன் முதலாளி இழந்த எல்லாவற்றையும் மீட்டு அந்த பெரிய நிறுவனத்தை பழிவாங்குவான் என்று அப்போது யாருக்கும் தெரியாது.
கதையை முதலில் இருந்து தொடங்குவோம்!
அது ஒரு பெருநகரம்! அதற்கும் 25 கி.மீ தொலைவில் இருந்த மாநில எல்லைக்கும் இடையில் ஒரு துணைநகரம் இருந்தது.
இந்த துணைநகரம்தான் கதைக்களம்!
ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம்! நாடு முழுவதும் ஏன் அண்டைநாடுகள் வரை கோலோச்சும் நிறுவனம்!
நூறாண்டு கடந்த வெள்ளைக்கார நிறுவனம்! தொலைக் காட்சியில் வரும் விளம்பரங்களில் பாதி அதன் தயாரிப்புகள்தான்.
அந்த துணைநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அந்நிறுவனப் பொருட்கள் (வாங்கி வைத்து விற்பனை செய்யும்) விநியோக உரிமையை அந்த துணைநகரத்தின் வியாபாரி ஒருவர் பெருமுயற்சி செய்து வாங்கினார்.
அந்த நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் தினசரி வீட்டு உபயோகப் பொருட்களில் 40% அளவுக்கு புழக்கத்தில் இருந்தது.
கடை ஒன்று நடத்தி 30 ஆண்டுகாலம் ஏற்படுத்திய சேமிப்பை இதில் முதலீடு செய்தார். வியாபாரிகள் பலரும் அந்த நிறுவனம் பற்றி எச்சரித்தனர். இருந்தாலும் அவர் நம்பிக்கையுடன் இதில் இறங்கினார்.
முதல்கட்டமாக 30 லட்சம் கொடுத்து பொருட்கள் வாங்கினார். மாதம் ஒரு கோடிக்கு மேல் புரளும். அதன் 4% அதாவது நான்கு லட்சம் லாபமாக நிற்கும் என்பது அந்த நிறுவனம் அளித்த வாக்குறுதி.
ஊருக்கு சற்று வெளியே மூன்று பெரிய அறைகள் உள்ள தகரம் வேய்ந்த கிட்டங்கி வாடகைக்கு எடுத்தார். இரண்டு சின்னயானை வண்டிகள், நான்கு பைக் வண்டிகள், ஒரு எக்செல் வண்டி தவணையில் வாங்கினார்.
கல்லூரி செல்லமுடியாத ஓரளவு ஆங்கிலம் தெரிந்த இளைஞர்கள் 4 பேர் பெரிய கடைகள் முதல் பெட்டி கடைகள் வரை பைக்கில் சென்று கைபேசியில் ஆர்டர் எடுப்பார்கள்.
கணினிக்கு ஒரு ஆள்! பொருட்களை எடுத்து வைத்து கடை வாரியாக பெட்டியிட நான்கு படித்த பெண்கள். வண்டிகளுக்கு இரண்டு ஓட்டுநர்கள். வரவு செலவு பார்க்க ஒருவர் உதவிக்கு சிலர் என மொத்தம் 15 பேர் வரை வேலைவாய்ப்பு பெற்றனர். இதுபோக வாரம் இருமுறை பாதி லாரி அளவு 10 லட்சம் வரை பெறுமானமுள்ள பொருட்கள் வரவழைக்கப்பட்டு இறக்கி அடுக்கப்படும்.
மொத்தம் 300 கடைகள், 350 வகையான பொருட்கள், அவற்றில் ஒரு நாளைக்கு தோராயமாக 50 என்று ஒவ்வொரு வாரமும் கடைகள் சப்ளை செய்யப்படும்.
அந்நிறுவனம் கெட்டுப்போகாத பொருட்கள் தயாரித்து விற்கும். சோப், ஷாம்பு, க்ரீம், பற்பசை, கழுவும் திரவங்கள், தேயிலை, காபி, வாசனை திரவியம், பவுடர் ஆகியன அடங்கும்.
முன்பு ஒரு நகரத்தில் எது எவ்வளவு எப்போது விற்கும் எது விற்காது போன்ற விபரங்கள் இப்படி விநியோகஸ்தர் கூறித்தான் நிறுவனத்திற்கு தெரியும். எதையாவது அழுத்தி விற்கவேண்டும் என்றால் அதற்கு நிறுவன பிரதிநிதி வருவார். விளம்பரம், சலுகை, இலவசம் என செய்து தள்ளிவிடுவார்கள்.
சரக்குகள் தொழிற்சாலையில் உற்பத்தி ஆகி அங்கிருந்து மைய கிடங்கு அங்கிருந்து கிட்டங்கி அங்கிருந்து பெரிய கடை அங்கிருந்து சிறிய கடை அங்கிருந்து வாடிக்கையாளர் என்று போகும்.
அதாவது மனிதர்கள் வணிகம் செய்தனர்.
தொடுதிரை கைபேசி வந்தபிறகு எல்லாம் மாறிவிட்டது. ஒரு பெட்டிக்கடை என்னென்ன பொருட்கள் வாங்குகிறது என்பது வரை தரவுகள் மென்பொருளில் சேகரிக்கப்பட்டு செயற்கை மூளை அதைப் பதிந்து வைத்துக்கொள்ளும்.
மனிதர்கள் இல்லாமலேயே நிறுவன மென்பொருள் கடைகளை வகைப்படுத்தி ஆர்டர்களைக் கண்கானித்து மனிதர்களுக்கு கட்டளை இடும்.
ஒரு பெட்டிக்கடையில் 10 பொருட்கள் விற்றால் அடுத்தமுறை 11 பொருட்கள் விற்கச் சொல்லும். கடைகளுக்கு இலக்கு நிர்ணயித்து அதைத் தாண்டினால் சலுகை என்று முடிவு செய்யும்.
வணிகத்திற்கு மனிதர்கள் தேவையில்லாமல் போனார்கள். முன்பெல்லாம் விநியோகஸ்தர்கள் அனுபவம் வியாபாரத்திற்கு தேவையாக இருந்தது இப்போது அந்த அனுபவம் மென்பொருள் வசம் இருக்கும்.
காலையில் கைபேசியுடன் ஒரு புதிதாக வேலைக்கு வந்த பையன் கிளம்பினாலும் அதுவே வழிகாட்டி அதுவே ஆர்டர் கேட்கச் செய்து அதுவே புதிய பொருளைப் பரிந்துரைத்து அதுவே பில் ரெடி செய்து அனுப்பிவிடும். போட்டிப் பொருட்களையும் விசாரித்து தெரிந்துகொள்ளும்.
பொருட்களுக்கு விநியோகஸ்தர் விலை வைக்கமுடியாது. பில்லைப் பார்த்து பொருட்களை எடுத்து சரிபார்த்து பெட்டியிட வேண்டும்.
வாகனங்களில் ஏற்றி மறுநாள் கடைகளுக்கு சப்ளை செய்து வசூல் செய்து வரவு செலவு பார்க்கவேண்டும். சிறுசிறு கடைகள் வரை சப்ளை செய்ய அந்நிறுவனம் கட்டாயப் படுத்தியது. இதனால் வண்டிக்கான செலவு அதிகரித்தது.
100 ரூபாய் பொருள் அனுப்பினால் 50 ரூ வசூல் 50 ரூ பற்று என்று நிற்கும். இப்படி முதலீட்டில் ஒரு பகுதி பற்று என்று வெளியே நிற்கும். பொருள் போய்ச் சேர்வது மட்டுமே நிறுவனத்தின் கவலை பணம் வசூலிப்பது விநியோகஸ்தர் பாடு. கடைசியில் கணக்கு பார்த்தால் 1% அல்லது 1.5% சதவீதமே லாபம் நிற்கும். கடைக்காரருக்கு 8% அதுபோக விநியோகஸ்தர் கடனும் தரவேண்டும். உடனடி பணம் அளித்தால் 2% தள்ளுபடி தரவேண்டும்.
இப்படியாக தினசரி இலக்கை முடித்து மாத இறுதியில் நிறுவனம் நிர்ணயித்த இலக்கை நெருங்க வேண்டும். அதை அடைந்துவிட்டால் 2% லாபம் நிறுவனம் தரும்.
ஆரம்பத்தில் ராஜாவாக இருந்த விநியோகஸ்தர்கள் இப்போது வேலைக்காரர்கள் ஆயிருந்தனர்.
அவர்களுக்கு இலக்கை அடைந்து 2% வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை. நிறுவன பிரதிநிதி தன் பங்குக்கு அழுத்தம் கொடுப்பார். இலக்கை அடையாவிட்டால் ஒரே இரவில் கூட விநியோக உரிமை பறிக்கப்படலாம்.
அந்த நிறுவனத்தில் ஒரேயொரு நல்ல கொள்கை இருந்தது. விற்காத பொருட்களை அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டால் திருப்பிக் கொடுத்து அசலை வாங்கிக்கொள்ளலாம்.
ஆனால் இதையும் கெடுக்க பிரதிநிதிகள் இலக்கை அடைய விற்காத பொருட்களை விற்றதாக காட்டச் சொல்வர். இந்த படித்த ஏமாற்றுக்கார பிரதிநிதிகளை நம்பி அந்த முதலாளி மோசம் போனார்.
இதுபோக அருகில் இருக்கும் பெருநகரத்தில் பெரிய கடைகளில் இந்நிறுவன சரக்கு வாங்கி இந்த துணைநகரத்தில் வந்து விற்கும் சிலர் இருந்தனர். இவர்கள் சிறு திருடர்கள்.
ஒரு கடை ஒரு சோப்பு வாங்கும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர் சோப்புகளை வாங்கி அது கிடைக்க அதிகம் விற்காத இன்னொரு சோப்பை வாங்க கட்டாயப் படுத்தப்பட்டு அதையும் வாங்கி கடைக்கு போனால் அந்த சோப்பு ஏற்கனவே அந்த சிறுதிருடன் மூலம் அங்கே வந்திருக்கும்.
கடைக்காரர் ஒரு முறை அவனிடம், ஒருமுறை விநியோகஸ்தரிடம் என வாங்கி இருவரிடமும் பாக்கி வைத்து கடன் பெற்றுக் கொள்வார்.
அந்த முதலாளி இதைக் கூட சமாளித்துவிட்டார்.
ஆனால் ஒரு விநியோகஸ்தர் எல்லைக்குள் இன்னொரு விநியோகஸ்தர் வந்து சப்ளை செய்வதும் நடந்தது. நிறுவன மேலிடத்தில் புகாரளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படமாட்டாது. இதனால் இந்த புதிய விநியோகஸ்தர் மிகவும் திணறினார்.
அப்போதும் பிரதிநிகள் தவறான யோசனை கொடுத்தனர். அத்துமீறும் விநியோகஸ்தர் எல்லைக்குள் ஒரு பெரிய கடைக்கு குறைந்த விலைக்கு சப்ளை செய்து இதை ஈடுகட்டுமாறு கூறினர். இரவில் திருட்டுத்தனமாக ஒரு வண்டி சரக்குகள் குறைந்த விலைக்கு எல்லை தாண்டி அந்த பெரிய கடைக்குள் சென்று இறக்கப்பட்டன.
இதையெல்லாம் விட ஒவ்வொரு கடைக்காரருக்கும் கைபேசியில் அந்நிறுவன (சலுகைகளை அறிந்து ஆர்டர் போடும் வகையில்) செயலியை கொண்டுசேர்த்தனர்.
இப்போது கடைக்காரர் பொருட்களை சலுகை விலை, இலவச இணைப்பு போன்ற வசதிகளைப் பார்த்து எந்நேரமும் ஆர்டர் செய்வார். விற்க சிரமமான பொருட்களைத் தள்ளிவிடுவது மேலும் சிரமமானது.
இப்படியாக உள்ளே முதலீடு செய்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது. இதைவிட்டு விட்டு ஓட்டல் தொடங்கலாம் என்ற முடிவை எடுத்தபோது காலம் கடந்துவிட்டது.
இந்த நிலையில் அந்த புதியவன் வந்தான். அப்போது அந்த விநியோகஸ்தர் திவாலாகும் நிலையில் இருப்பது வெளியே தெரியாது. அதனால் வேலையாட்கள் விட்டுச் செல்லாமல் இருந்தனர். 30 லட்சம் புழங்க வேண்டிய இடத்தில் 7 லட்சம் அதுவும் மிகவும் கடினப்பட்டு புழங்கிக் கொண்டிருந்தது.
அவன் வந்தவுடனே அவன் தன் உறவினன் என்பதால் முதலாளி தன் நிலையை அவனிடம் மட்டும் கூறினார்.
அவன் முதலில் ஒரு மாதம் உன்னிப்பாக கவனித்தான். பிறகு களத்தில் இறங்கினான்.பெரிய கடைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடச் சொல்லிவிட்டான்.
விற்காத பொருட்களை கணக்கெடுத்தான்.
ஒவ்வொரு கடைக்காரராக அழைத்து வந்து காட்டி அசல் விலைக்கு முடிந்தவரை பொருட்களைத் தள்ளிவிட்டான். விற்றதாகக் காட்டப்பட்ட மீதி பொருட்களை மென்பொருளுக்கு உள்ளே கொண்டுவர அதை விற்ற கடைக்காரர்கள் திருப்பித் தந்தது போல காட்டி நிறுவன மென்பொருளின் இருப்பிற்குள் கொண்டுவந்து அவற்றை திரும்ப ஒப்படைத்து அசலை வாங்கினான்.
இப்படியாக பொருட்கள் காலியாகி அந்த பணம் கைக்கு வந்தது.
வாகனங்களையும் ஆட்களையும் பாதியாகக் குறைத்தான்.
கடைக்காரர்கள் வைத்திருக்கும் பாக்கியை வசூலிக்க திறமையான ஒரு பையனை நியமித்தான்.
இப்படி ஒவ்வொரு ரூபாயும் முதலாளிக்கு கிடைக்கும்படி செய்தான். இப்போது முதலாளியின் கடன் கொஞ்சம் குறைந்தது. கணக்கு முடித்து பணத்தை வாங்க பிரதிநிதி உதவவில்லை. நிறுவனமும் அலைக்கழித்தது. அவனுக்கு அந்த நிறுவனத்தின் மீது கோபத்தை வரவழைத்தது.
எல்லைக்குள் வந்து விற்றவனுக்கே விநியோக உரிமையை அளித்தது அவனுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது.
கட்டிடத்தையும் வாகனங்களையும் அந்த புதிய அராஜக விநியோகஸ்தரிடரிமே விற்றுவிட்டு வேலையாட்களும் அங்கேயே வேலைக்கு சேர்ந்துகொள்ள முதலாளி முடிவு செய்துவிட்டார்.
பூர்வீக வீட்டை விற்று மீதி கடனைக் கொடுக்க அவர் நினைத்தார்.
அப்போதும் அவருக்கு 8 லட்சம் வரை கடன் இருக்கும்.
அவனால் இதைப் பொறுக்க முடியவில்லை. நிறுவனத்தின் இலக்கை நியாயமாக எட்ட முடியாமல் விநியோகஸ்தரை ஏமாற்றி போலி விற்பனையைக் காட்டிய பிரதிநிதி, அடுத்தவன் எல்லைக்குள் அத்துமீறி சப்ளை செய்து அவனை விரட்டி அந்த பகுதியைக் கைப்பற்றும் இன்னொரு விநியோகஸ்தன், இதை கண்டுகொள்ளாமல் லாபவெறியில் இயங்கும் நிறுவனம் என அனைவரையும் பழிவாங்க அவன் முடிவெடுத்தான்.
முதலாளியிடம் தன் திட்டத்தைக் கூறினான். அவனுக்கு வழிகாட்டி அந்த சிறுதிருடன். முதலில் அந்த சிறுதிருடனைப் பிடித்து உதைத்து அவனிடம் அருகில் இருக்கும் பெருநகரத்தின் பெரிய கடையின் விபரங்களைக் கேட்டறிந்தான். அந்த பெரிய கடை மொத்தமாக பெரிய அளவில் பொருட்களை வாங்குவதால் பெரிய சலுகை கிடைக்கும். அவர்களால் விநியோகஸ்தரை விட குறைந்த விலைக்கு தரமுடியும். ஆனால் சில கிடைக்காத அல்லது ஸ்பெசலான பொருட்கள் விநியோகஸ்தரிடம் மட்டுமே கிடைக்கும். இதுதான் வித்தியாசம்.
அந்த பெரிய கடைக்கு தன் முதலாளியை அழைத்துச் சென்றான். அங்கே ஒரு ஊரின் கடைவீதியில் இருக்கும் அத்தனை கடைகளுக்கும் தேவையான அத்தனை பொருட்களும் மொத்தமாகக் கிடைக்கும்.
தங்கள் கிட்டங்கியைக் கடையாக மாற்றி மொத்த வியாபாரம் செய்யப் போவதாகவும் கடனாகப் பொருள் கொடுத்தால் விற்க விற்க காசு தருவதாகவும் கூறி உதவி கேட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்ன அந்த பெரிய கடைக்காரர் அந்த துணைநகரத்தில் அவருக்கு இருந்த மரியாதையை விசாரித்து அறிந்துகொண்டு முதல்கட்டமாக 5 லட்ச ரூபாய்க்கு சரக்கு தரத் தயாராக இருந்தார்.
அவன் வேகமாக விற்கும் பொருட்களை வாங்கினான்.
அந்நிறுவன சரக்குகள் கடைவாரியாக எது விற்கும் என்பது அவனுக்கு மென்பொருள் புண்ணியத்தில் தெரியும் அதுமட்டுமின்றி அந்நிறுவனத்திற்கு போட்டியான பொருட்களையும் (கடைக்காரர்களிடமும் ஆர்டர் எடுக்கும் பையன்களிடமும்) விசாரித்து வைத்திருந்தான்.
அந்த பொருட்களை வாங்கி கிட்டங்கியில் வைத்தான்.
கிட்டங்கியை கடை போன்று காட்டிக்கொள்ள பெயர்பலகை மாட்டினான்.
துணைநகரத்தி்ல் பெரிய கடைகள் பத்துதான்.
அவற்றில் போய் அனைத்து நிறுவன பொருட்களையும் ஆர்டர் எடுத்தான்.
ஒரு நாளைக்கு இரண்டு கடை என்று அவன் சப்ளை செய்தான். ஒவ்வொருவரிடமும் நயமாகப் பேசி முடிந்த அளவு 'பணம் கொடுத்த பிறகே பொருள் ஒப்படைப்பது' என்ற முறையில் வியாபாரம் செய்தான்.
விநியோகஸ்தரை விட குறைவான விலை என்பதால் முக்கிய கடைகள் அவனிடமே பொருள் வாங்குவதாக வாக்களித்தனர்.
ஒரு வாரத்திற்குள் 4 லட்சம் திருப்பிக் கொடுத்து அடுத்த கட்டமாக பத்துலட்ச ரூபாய் சரக்கு வாங்கி வந்தான்.
இப்போது அராஜக விநியோகஸ்தன் பதறிக்கொண்டு நிறுவனத்தில் புகாரளித்தான்.
கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்கிறார்கள் என்று.
பிரதிநிதி ஓடோடி வந்தான். "நீங்கள் எங்கள் நிறுவன பொருட்களை வாங்கி விற்பது எங்கள் விதிமுறைக்கு புறம்பானது" என்றான்.
"ஆனால் பொதுவான விதிமுறைப்படி அது தவறில்லையே! ஒரு கடை வேறொரு கடையில் மொத்தமாக பொருள் வாங்கக்கூடாது என்றோ இன்னொரு கடைக்கு பொருட்கள் விற்கக் கூடாது என்றோ சட்டமில்லையே?" இவன் திருப்பிக் கேட்டான். "எந்த கடை இன்னொரு கடைக்கு டோர் டெலிவரி செய்கிறது?" பிரதிநிதி வாக்குவாதம் செய்ய அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.
பிரதிநிதி கைகளை நெறித்தபடி அந்த விநியோகஸ்தன் முன்னால் போய் நின்றான்.
" இங்கே இத்தனை கட்டுமானம் செய்து ஆட்களைப் போட்டு வரி கட்டி விற்பதற்கு கடினமான பொருட்களில் முதல் முடக்கி ஒவ்வொரு சந்துக்குள்ளும் வண்டியை ஓட்டி நான் வியாபாரம் நடத்துகிறேன். அவன் ஒரு பழைய நோட்டில் ஆர்டர் எழுதி மறுநாள் கொடுத்துவிடுகிறான். இலக்கு இல்லை. தேவையற்ற அழுத்தம் இல்லை. மெதுவாக விற்கும் பொருட்களில் முதல் முடக்கமில்லை. எல்லா நிறுவன பொருட்களும் கிடைக்கும். வாசல் வரை சப்ளை வேறு, இனி நான் எப்படி இங்கே பெரிய கடைகளுக்கு பொருட்களை விற்பேன்?!" என்று பொருமினான்.
அவர்களது கிட்டங்கி அந்த துணைநகரத்தில் இருந்து பெருநகரை நோக்கி செல்லும் சாலையிலேயே அமைந்திருந்தது வசதியாக இருந்தது. இதனால் அந்த துணைநகரத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெருநகரம் சென்று பொருட்கள் வாங்கும் சிறு வியாபாரிகள் அதே விலைக்கு இவன் கடையிலேயே வாங்கினர். அதாவது பெருநகரத்தில் இருக்கும் அந்த பெரிய கடையின் ஒரு கிளை துணைநகரக்கு அருகே வந்துவிட்டதாகவே இதைக் கொள்ளலாம். பழைய முறைப்படி இவன் விலை வைக்க முடிந்தது. பெரிய கடைகள் மூலம் சிறிய கடைகளுக்கு பொருள் போய்ச் சேர்ந்தது.
துணைநகரின் பெரிய கடைகள் விநியோகஸ்தர் வழியே பொருட்களை வாங்குவது மிகவும் குறைந்து போனது சிறிது காலத்தில் அந்த அராஜக விநியோகஸ்தன் நஷ்டத்துடன் இந்த எல்லையை விட்டுவிட்டு தன் எல்லைக்குள் போய்விட்டான். அருகிலுள்ள வேறொரு விநியோகஸ்தருக்கு இந்த எல்லையை சேர்க்க நிறுவனம் முயல அவர்கள் இந்த விநியோகஸ்தன் பின்வாங்கிய கதை அறிந்து மறுத்துவிட்டனர். அது மாநில எல்லை என்பதால் அருகே வேறு விநியோகஸ்தரும் இல்லை.
இப்போது நிறுவனம் அந்த துணைநகரத்தில் வேறு புதிய விநியோகஸ்தரை பிடிக்க முயன்றது. இவரின் நிலைகண்டு எவரும் அதற்குத் தயாராக இல்லை.
இப்போது அந்த நிறுவனம் இறங்கி வந்து அவரிடம் மண்டல பிரதிநிதியை அனுப்பி பேசியது. உங்களுக்கே விநியோக உரிமை தருகிறோம். மேற்கொண்டு அரை பைசா வட்டியில் 30 லட்சம் கடனும் தந்து சரக்கும் தருகிறோம். ஒரு வாரம் கழித்து சரக்குக்கு பணம் போட்டால் போதும் எந்த வகையிலும் அழுத்தம் இருக்காது என்று கெஞ்சியது.
முதலாளி அவனிடம் கேட்டார் அவன் முடியாது என்று கூறிவிட்டான். இப்படியாக சில ஆண்டுகள் அந்தப் பகுதியில் பாதி விற்பனையை இழந்தது அந்த நிறுவனம். அதை அந்த முதலாளி அடைந்தார். அதன் பிறகு ஒரு பெரும்பணக்காரர் விநியோக உரிமை வாங்கினார். அவர் இந்த மோதல் போக்கைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இப்போது முதலாளி கடனை அடைத்து பிள்ளைகளை ஆளாக்கி வீடும் கட்டிவிட்டதால் இந்த தொழிலை அவனிடமே ஒப்படைப்பதாக சொன்னார்.
அவனுக்கு ஏனோ இந்த தொழிலை தொடர விருப்பம் இல்லை. புதிய விநியோகஸ்தரும் வேலைக்கு அழைத்தார் அங்கும் அவன் செல்லவில்லை.
ஒருநாள் அந்நிறுவன அதிகாரிகள் அவன் வீடு தேடி வந்தனர்.
"நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பிரதிநிதியாக சேரமுடியுமா?" என்று கேட்டனர்.
அதற்கும் அவன் மறுத்துவிட்டான்.
கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டு வாழ்வது அவனுக்குப் பிடிக்கவில்லை.
அவன் அந்த பெருநகர கடை முதலாளியிடம் போய் சேர்ந்துகொண்டான்