Sunday 13 June 2021

யாதும் ஊரே என்கிற ஏமாற்று

யாதும் ஊரே என்கிற ஏமாற்று

உண்மையில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது பூங்குன்றனார் தமது துறவற மனநிலையில் கூறியது.
உலகின் போக்கைப் பற்றிய ஒரு துறவியின் பார்வையே அது!
அந்த தனிப்பட்ட நிலைப்பாட்டைத்தான் அன்றைய ஒட்டுமொத்த தமிழினத்தின் நிலைப்பாடாக திரிக்கிறார்கள்.

தமிழன் அந்த அளவுக்கு பரந்த மனம் படைத்தவன் (இளிச்சவாயன்) கிடையாது. வந்தாரை எல்லாம் வாழவைத்தவனும் கிடையாது
(வந்தாரில் தகுதியானவரை மட்டும் வாழவைத்தவன்தான் சங்ககாலத் தமிழன்.
அதுவும் அவர்களது அடையாளத்தோடு!).

கணியன் பூங்குன்றனார் எழுதிய முழுப்பாடல் வருமாறு,

யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
(புறநானூறு 192)

இதன் சுருக்கமான எளிய பொருள் வருமாறு,

எல்லா ஊர்களும் சொந்த ஊர்தான் (அதாவது உலகமே ஓர் ஊர்).
எல்லோரும் (ஒருவருக்கு ஒருவர்) உறவினர்தான்.

தீமையும் நன்மையும் பிறரால் வருவன அல்ல (அவை அவரவர் கர்ம வினையின் பலன்களாக தாமே வருவன).
துன்புறுவதும் துன்பம் இல்லாமையும் (மகிழ்ச்சியும்) அவ்வாறே (தாமே) நேர்கின்றன (அதாவது துன்பமும் இன்பமும் பிறரால் வருவன அல்ல).

சாவு என்பது இயல்பானது (அதை வெறுக்க வேண்டாம்) வாழ்வது இனிமையானது என்று போற்றவும் வேண்டாம், வாழ்வு இனியதல்ல என்று தூற்றவும் வேண்டாம் (அதாவது வாழ்க்கைமீது விருப்பு வெறுப்பு மாறிமாறி வரும்) .

மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்து போகும் தெப்பம் போல நமது  வாழ்க்கை அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம்.
ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் வேண்டாம்.
சிறியோரை இகழ்தலும் வேண்டாம்.

இதில் உலக வாழ்க்கை பற்றிய தத்துவம் துறவற மனநிலையில் இருந்து கூறப்பட்டுள்ளது.
இந்த துறவி மனப்பான்மையைத்தான் நம்மீது திணிக்கிறார்கள். அதிலும் வந்தேறிகள் நம்மை ஏமாற்ற முதல்வரியை மட்டும் எடுத்துக் கொண்டு "பார்த்தீர்களா நீங்கள் உலகத்தையே சொந்த ஊராக நினைத்தவர்கள்,  மனிதர்களை எல்லாம் உங்கள் உறவினராக ஏற்றுக்கொண்டவர்கள், உங்களுக்கு இனப்பற்றெல்லாம் கிடையாது, அதனால் எங்களையும் ஏற்று உங்கள் வீட்டில் பங்கு கொடுங்கள்"  என்று மூளைச் சலவை செய்துவருகின்றனர்.

ஒருவேளை இதில் "எல்லாம் என் சொந்த ஊர்" என்று கூறப்பட்டிருந்தால் கணியன் பூங்குன்றன் தமிழின பிரதிநிதியாக அவ்வாறு நினைப்பதாகக் கொள்ளலாம்.
அல்லது "எல்லாம் எங்கள் சொந்த ஊர்" என்று இருந்தால் தமிழர்கள் அவ்வாறு நினைப்பதாக கூறலாம்.

ஆனால் இப்பாடலில் எங்குமே எனது, எங்களது என்று கூறவில்லை. "உலகமே ஒரு சிற்றூர், அதில் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்கள்" என்று பொதுவாகவே கூறியுள்ளார்.  "உலகமே வீடு" என்பது எப்போதுமே தமிழர்களின் கொள்கையாக கிடையாது. தமிழர்கள் என்றுமே அடுத்தவருக்கு சேர்த்து தாம் ஒரு கொள்கைகளை உருவாக்கி அதனை (மதம், தத்துவம் என்றவாறு) பிறர் மீது திணித்தவர் கிடையாது.

சிந்தனை: திரு. நாக.இளங்கோவன் அவர்களுடையது
பதிவு கருத்தாக்கம்: ஆதி பேரொளி

Saturday 5 June 2021

அவுக

அவுக

இங்க எல்லாமே அவுகதான்!
1 ) கம்யூனிச அரசியல்
2 ) இந்துத்துவ அரசியல்
3 ) திராவிட அரசியல்
4 ) இயக்க அரசியல்
என அனைத்தும் அவுக கைகளில்தான்.

நம் கையில் இருப்பது
5 ) தலித் அரசியல்
6 ) சாதி அரசியல்
7 ) சிறுபான்மை அரசியல்
8 ) ஈழ அரசியல்
9 ) லெட்டர் பேடு இயக்கங்கள்
10 ) தமிழ்தேசிய அரசியல்

  இவற்றில் தலித் அரசியல் அவுகளுக்கு அடிமையாகிவிட்டது, சாதி அரசியல் அவுகளுக்கு விலைபோய் விட்டது, சிறுபான்மை அரசியல் மலிவான விலைக்கு அவுகளிடம் விற்பனையாகிவிட்டது, ஈழ அரசியல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. லெட்டர்பேடு இயக்கங்கள் இயங்குவதே இல்லை.

  தமிழ்தேசிய அரசியலிலும் அவுக தாக்கம் இருக்கிறதுதான். ஆனால் மற்ற அரசியல்கள் போல நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து கிடக்கவில்லை. அப்படிப் பார்த்தால் பல குறைகள் இருந்தாலும் தமிழ்தேசிய அரசியல் மட்டுமே அவுகளை எதிர்த்து போராடி வருகிறது.
இதிலும் ஒற்றுமையின்றி குறைகளை கண்டுபிடித்து பெரிதாக்கி அடித்துக்கொண்டு கிடந்தோம் என்றால் நம்மை காப்பாற்ற நூறு பிரபாகரன்கள் வந்தாலும் முடியாது!

முதலில் தமிழ்தேசியத்தை அரியணை ஏற்றுவோம் அதன்பிறகு தலைமையையோ தேவைப்பட்டால் கட்சியையோ கூட மாற்றிக்கொள்ளலாம்.