Thursday 31 December 2015

திருப்பதி: சைவ, வைணவ மோதலால் தமிழன் இழந்த மண்

திருப்பதி: சைவ, வைணவ மோதலால் தமிழன் இழந்த மண்

"திருப்பதி முருகன் கோவில் இல்லை அது திருமாலின் உறைவிடம்" என்போர் காட்டும் ஒரு வலுவான சான்று சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் வரும்,

ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் *கையி னேந்தி*
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

என்ற பாடலைத்தான்,
அதாவது காவிரிக்கரையில் (திருவரங்கம்?!) கிடந்தவண்ணம் இருக்கும் இறைவன் வேங்கடத்தில் சக்கரமும் சங்கும் கையில் ஏந்தி வேங்கடத்தில் நிற்கிறான் என்று இதிலிருந்து அறியமுடிகிறது.

இதுதான் முறியடிக்கவியலாத வலுவான சான்று.
ஆனால் இதை வலுவிழக்கச் செய்யமுடியும்.

திருப்பதி சிலையில் சங்கும் சக்கரமும் கையிலா ஏந்தப்பட்டுள்ளது??????

இல்லை. தோளில்தான் ஒட்டப்பட்டுள்ளது!

வேங்கடத்தைக் குறிக்கும்போது மறக்காமல் குறிப்பிடப்படும் பெரிய அருவி இன்று இல்லை.
அதேபோல ஆயிரம் தலையுடைய பாம்பின்மேல் அரங்கன் படுத்திருக்கவும் இல்லை.

சரி, சங்கும் சக்கரமும் திருமாலுக்கு மட்டுமே உரியதா?

இதே சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதைக்கு அடுத்துவருவது வேட்டுவ வரி அதில்,

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த
கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்

தனது சடைமுடியில் கங்கையை அணிந்துள்ள, நெற்றியில் கண்ணை உடையவனின் (சிவன்?!) திருமேனியிலே மறைகள் போற்றும் பாதி பெண்ணுருவமான நீ,
உன் தாமரை போன்ற கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தி சினத்தால் சிவந்தகண்ணுடைய சிங்கத்தின் மேலேறி நிற்பது என்ன மாயமோ?!
என்று இதற்குப் பொருள்.
கொற்றவை கூட சங்கு சக்கரம் ஏந்தியுள்ளாள்!

பால்வெண் சங்கம் என்று வந்துள்ளது. திருமாலுக்கு பிடித்தது சாளக்கிராமம் என்ற கருப்பு சங்கு.
சிவனுக்கு பிடித்தது அதிவெண்மையான வலம்புரி சங்கு.

அழகாபுத்தூர் சிவன் ஆலயத்தில் முருகன் சங்கும் சக்கரமும் ஏந்தியுள்ளான்.

சரி நெடியோன் என்பது திருமாலுக்கு மட்டுமே உரிய பெயரா?

சிலப்பதிகாரம் மற்றொரு இடத்திலும் 'நீலமேனி நெடியோன் கோயிலைப்' பற்றிக் கூறுகிறது.

அகநானூறு (149) நெடியோன் என்று விளிப்பது திருப்பரங்குன்றத்து தலைவனை அதாவது முருகனை!!!

"வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்" என்று புறநானூறு (241) கூறுகிறது. வச்சிரம் வைத்திருப்பவன் இந்திரன்.

மதுரைக் காஞ்சி தேவர்தலைவனை (இந்திரனை) 'மழுவாள் நெடியோன்' (453 - 467) என்கிறது.

பெரும்பாணாற்றுப்படை (402) கூறும் நெடியோன் கரிய நிறத்திலும் தொப்புள்கொடியில் நான்முகனைக் கொண்டவனாகவும் திருமாலுடன் ஒத்துபோகும் உருவத்துடன் உள்ளான்.

குமரிக்கண்டத்தில் ஆட்சி செலுத்திய பாண்டியமன்னன் பெயர் நெடியோன்தான் (மதுரைக்காஞ்சி 764).

சிலப்பதிகாரமே அழற்படுகாதையில் (56-61) பல அரசர்களை தோற்கடித்து நான்குவகை நிலங்களை கைப்பற்றிய மன்னனை 'உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன' என்று உவமை கூறுகிறது.
நடுகற்காதையில் பகைவரை வென்ற சேரனான செங்குட்டுவனை 'நிலந்தரு திருவின் நெடியோன்' என்று குறித்தலைக் காணலாம்.

நெடியோன் என்பது பொதுப்பெயர்.
உயர்ந்தவன் அல்லது உயரமானவன் என்று பொருள்படும்.
இது மன்னருக்கும் கடவுளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சரி கிடந்தநிலை திருமாலுக்கு மட்டுமே உரியதா?

திருப்பதிக்கு அருகே சுட்டபள்ளியில் உள்ள சிவனும் குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முருகனும் கூட கிடந்தநிலையில்தான் உள்ளனர்.
சிறுதெய்வங்களிலும் சில தெய்வங்கள் கிடந்தநிலையில் உண்டு. சிறந்த எடுத்துக்காட்டு வண்டிமறிச்சம்மன்.

சிலப்பதிகாரத்தில் வரும் தெய்வங்களின் அடையாளங்கள் இன்றைய சிவன், திருமால், முருகன், துருக்கை ஆகிய தெய்வங்களுடன் ஒத்துப்போனாலும்
அப்போது சைவமோ வைணவமோ இந்துமதமோ இருந்திருக்கவில்லை.

மாயோனை திருமாலாக்கி வைணவம் எடுத்துக்கொண்டது.
சேயோனை முருகனாக்கி சைவம் எடுத்துக்கொண்டது.

மாயோன்தான் திருமால் என்று பழந்தமிழ் இலக்கியம் எங்கும் கூறவில்லை.

மாயோன் அன்ன மால் என்கிறதுதான் நற்றினை (37:1) கூறுகிறது.

மால் மாயோன் ஆகியோர் கடவுளரா?

கலித்தொகையில் தலைவன் மாலுக்கும் (104:35) மாயோனுக்கும் (109:17) ஒப்பானவனாக புகழப்படுகிறான்.

புறநானூறு பாண்டிய மன்னின் புகழ் மாயோனின் புகழுக்கு ஒப்பானது என்கிறது (57:1)

ஆக மால், மாயோன் ஆகியோர் ஏற்கனவே புகழ்பெற்றிருந்த *மனிதர்கள்* என்று கருதமுடியும்.

சங்க நூல்களிலே வேங்கடமும், அதனைச் சூழ்ந்த நாட்டிற்கும் தலைவரென விளங்கிய
புல்லி (அகம் 61, 83, 209, 393-புறம் 385),
திரையன் (அகம் 85),
ஆதன் உங்கன் (புறம் 389) என்போரும் புகழ்பெற்ற மன்னர்கள்.

மலைபடுகடாம் பாடும் நன்னன் வேண்மான், வேல் உடையவனாகவும் திருவார் மார்பன் என்றும் புகழப்படுகிறான்.
வேல் முருகனுடன் தொடர்புடையது, திருவாழமார்பன் என்பது மார்பில் திருமகளைக் கொண்ட திருமாலைக்குறிப்பது.
மதுரைக்காஞ்சி (611) முருகனை நன்னன் என்றே அழைக்கிறது.

மேலும் ஒரு சான்று தரவா?

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் *திருமலை*மேல் எந்தைக்கு,
இரண்டுருவும் *ஒன்றாய் இணைந்து*
- பேயாழ்வர், (மூன்றாம் திருவந்தாதி 63)

அதாவது சடை, மழு, சூழரவு இவை சிவனின் அடையாளங்கள்,
நீள்முடி, சக்கரம், பொன்னாண் இவை திருமாலின் அடையாளங்கள்,
இரண்டும் கலந்த உருவம்தான் திருப்பதியில் உள்ளது என்று பொருள்.

திருப்பதியில் நடக்கும் வில்வ அர்ச்சனை, பாலாஜி என்பதில் பாலா என்ற  வேலைக் குறிக்கும் வடசொல் என பல சான்றுகள் சைவத்தின் தொடர்புக்கு வலுசேர்க்கின்றன.

என்றால் திருமால் என்ற சொல் அப்போது இருந்ததில்லையா?
இருந்துள்ளது.
காடுகாண் காதையிலேயே
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்

*திருமால்*குன்றம் மலையின் மேலே
புண்ணிய*சரவணம்* என்ற  பொய்கை இருந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார் இளங்கோவடிகள்.
அதுதான் இன்றைய அழகர் மலை.
பழைய பெயர் 'திருமாலிருஞ்சோலை'.
மலைக்கு மேலே சுனையும் உண்டு.
இதனை சிலம்பாறு (சிலம்பு!) என்றும் கூறுவர்.

ஆனால் இவ்விரண்டிற்கும் நடுவில் இருக்கும் பழமுதிர்சோலை பற்றி எந்த குறிப்பும் இல்லை.
அழகர்தான் முருகரோ என்ற ஐயம் தோன்றுகிறது.
காரணம் முருகனைத்தான் அழகன் என்று கூறுவர்.
இளங்கோவடிகள் திருமால் என்று முருகனைக் குறிப்பிட்டுள்ளார் என்றுகூடச் சொல்லலாம்.

சரவண என்பது முருகருடன் தொடர்புடையதா?
ஆம். குன்றக்குரவையில்
'சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான்
திருக் கை வேல்' என்று வருகிறது.
அதாவது ஆறுகுழந்தையாகப் பிறந்து சரவணப் பொய்கையில் ஆறு (கார்த்திகைப்) பெண்களிடம் தாய்ப்பால் குடித்த முருகன் கையில் இருக்கும் வேல் என்பதிலிருந்து இதை அறியலாம்.

அழகர் ஆற்றிலிறங்குவது நாயக்கர்கள் காலத்தில்தான் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
காலங்காலமாக அழகர் மலையில் இருந்து அலங்காநல்லூர் வழியாக தேனூரில் வைகையாற்றிலிறங்கிய அழகரை, நாயக்கர்கள் இறங்கவிடாது தடுத்து முறையை மாற்றி மதுரையிலேயே இறக்குகின்றனர்.

மேலேயிருந்த சிலம்பாற்றில் 'ராக்காயி' அம்மனை உட்காரவைத்தனர்.
கள்ளழகர் நகைகள் தெலுங்கு குடும்பத்தின் பொறுப்பில்தான் உள்ளது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாயக்கர்களால் முருகனின் படைவீடான பழமுதிர்சோலையே மறைக்கப்பட்டது.
அதை வெளிக்கொணர்ந்து இப்போது தற்காலக் கோவிலான சோலைமுருகன் கோவிலை 1950களில் நிறுவியவர் அண்ணல் கி.பழனியப்பனார்.

நான் ஏற்கனவே போட்ட இந்த பதிவிலும் சில சான்றுகளைத் தந்துள்ளேன்.
( vaettoli.blogspot.in/2014/09/blog-post_20.html?m=1 )

அப்பதிவு தமிழர் மண்மீட்பை அடிப்படையாகக் கொண்டது.
அதாவது நாயக்கர்காலத்தில் வைணவ ஆதரவும் தெலுங்கு ஆதரவும் தமிழர் பகுதியான திருப்பதியை பறித்து தெலுங்கு வைணவரிடம் கொடுத்துவிட்டன.

திருமால் பக்தரோ முருக பக்தரோ தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளாமல் திருப்பதியை மீட்டுவந்தால் போதும்.

நில அமைவுக்கு ஏற்ப தரைவழிப் படைநகர்வு நிலைகள்

1.மையங்கொள்தல்
2.நிலை பெறுதல்
3.முன்னேறுதல்
4.ஆக்கிரமித்தல்

(நில அமைவுக்கு ஏற்ப தரைவழிப் படைநகர்வு நிலைகள்)

Wednesday 30 December 2015

குருதியில் நனைந்த குமரி -7

குருதியில் நனைந்த குமரி -7

ஆகஸ்ட் 11, 1954
இரவு 8:30மணி
நாகர்கோவில்

நேசமணி வீட்டில் தமிழ் தலைவர்களான
இராமசாமி(பிள்ளை),
சைமன்,
அப்துல் ரசாக்,
தாணுலிங்கம்(நாடார்),
பொன்னப்பன்(நாடார்),
ராஜா(பிள்ளை)
ஆகியோர் அமர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

"தலைமைச் செயலகத்தை மலையாள காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டுவிட்டது"

"தொலைபேசி இணைப்பு அனைத்தையும் துண்டித்துவிட்டார்கள்"

"ஊர்வலம் நல்லபடியாக நடந்ததா எதுவும் எதுவும் தெரியவில்லை"

கதவு படாரென திறந்துகொண்டு பதறியபடி உள்ளே நுழைந்தார் குஞ்சன்(நாடார்)

"என்னாச்சு குஞ்சு?"

"ஐயா மார்த்தாண்டத்திலும் புதுக்கடையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தி பல அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டனர்"

"என்ன?!" தன் மார்பில் குண்டு பாய்ந்ததுபோல நெஞ்சைப் பிடித்துக்கொண்டார் நேசமணி.
அப்படியே சரிந்து இருக்கையில் அமர்ந்தார்.

மற்ற தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

"எத்தனை பேர் இறந்தார்கள்?"

"தெரியவில்லை, குறைந்தது 30பேர் இறந்திருப்பதாக கேள்விப்படுகிறேன்"

"இந்த பட்டம் தாணுப்பிள்ளை மீண்டும் தமிழர்களை குருதி சிந்தவைத்துவிட்டான்.
போனமுறை 2பேரைத்தான் காவு வாங்கினான் இப்போது 30பேர்.
இந்த நாள் கருப்புநாளாகிவிட்டது"

"பிணங்களைக்கூட அள்ளிக்கொண்டு போய்விட்டனர்.
எத்தனைபேரை கொன்றோம் என்று அவர்களே அறிவிப்பார்கள், அதுதான் கணக்கு"

"போராட்டத்தைக் கைவிட்டுவிடலாமா?"

"கைவிடுவதா? நமக்கு மட்டும் துப்பாக்கி வெடிக்கத் தெரியாதா?
களரி படித்த தமிழ்-இளைஞர்களைத் திரட்டி துப்பாக்கி பயிற்சி அளிக்கவேண்டியதுதான்"

"ஆமாம் அதுதான் சரி, மலையாளிகளா நாமா பார்த்துவிடுவோம்"

"வேண்டாம் தமிழகத்திடம் உதவிகேட்போம். அப்போதும் பணியவில்லை என்றால் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் தூக்கிய தென்பாண்டி நாட்டு இளைஞர்களை அழைத்துவந்து காவல்நிலையங்களைக் கைப்பற்றுவோம்"

"மத்திய அரசிடம் கொண்டு செல்வோம்.
அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றால் தென்னிந்தியாவின் தமிழ்பகுதிகளைத் தனிநாடாக்கும் நடவடிக்கையில் இறங்குவோம்"

கொதித்துப்போய் பேசிக்கொண்டிருந்த அந்த தலைவர்களை நேசமணி அமைதிப்படுத்தினார்.

"குஞ்சு வேறெதுவும் தகவல் உண்டா?"

"துப்பாக்கிச் சூடு நடந்த இடமே காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கண்ணில் படுவோரையெல்லாம் கைது செய்கிறார்கள்.
பார்வையிட நான் அனுப்பிய தொண்டர்கள் திரும்பி வரவே இல்லை"

"நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
இனிதான் நாம் பதறாமல் இருக்கவேண்டும்.
ஆயுதம் தாங்கி போராட நாம் தனிநாடு கேட்கவில்லை.
இழப்புகள் ஏற்படத்தான் செய்யும்.
அது எந்த வழியில் போராடினாலும் சரி.
இந்த இழப்பை நான் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் தெரிவிக்கவேண்டும்.
அதன்பிறகும் நீதி கிடைக்கவில்லை என்றால் நாம் கூறவே வேண்டாம். நம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தாமாகத் தூக்குவார்கள்"

"எங்கே ஐயா, தமிழகத்திலிருந்து நமக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லையே"

"இருக்கட்டுமே, தமிழகம் நாம் இல்லாமல் இயங்கிவிடும்.
நாம் தமிழகத்தை விடுத்து இயங்கமுடியாது.
அது தாய்நிலம் நாம் அதன் சிறுதுண்டு.
நம் பி.எஸ்.மணியையே எடுத்துக்கொள்ளுங்கள்.
தமிழகத்தில் நடக்கும் எல்லா அரசியல் கூட்டத்திலும் அழையா விருந்தாளியாக சென்று குமரி தமிழகத்துடன் இணைவதன் அவசியத்தைப் பற்றி நான்கு வார்த்தையாவது பேசிவிட்டு வருகிறார்.
அவர் என்ன முட்டாளா?
தமிழக மக்கள் அப்பாவிகள்.
தமிழக மக்களுடன் நாம் சற்று வேறுபட்டுவிட்டோம்.
இதோ நிற்கிறாரே குஞ்சன்.
இவருக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது.
இவர் பேசும் தமிழ்கூட மலையாளத்தைப்போலதான் இருக்கும்.
அதற்காக இவர் தமிழன் இல்லையென்று ஆகிவிடுமா?
நூறாண்டுகள் முன்புகூட உயர்சாதி தமிழர்கள் உயர்சாதி மலையாளிகளைத்தான் ஆதரித்தார்கள்.
அவர்களை ஏற்கனவே தெலுங்கரும் கன்னடரும் ஏய்க்கப் பார்க்கின்றனர்.
தமிழக அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துவோர் தமிழ்பேசும் வேற்றினத்தவர்கள்தான்.
மொழி வேறு இனம் வேறு அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இது தமிழகத்தின் பாமர மக்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
மலையாளிகளும் தமிழக அப்பாவி மக்களைச் ஏய்க்க நாம் அனுமதிக்ககூடாது.
தமிழகம் நமக்கு உதவாவிட்டாலும் நாம் அவர்களோடு இணைவதுதான் முறை. "

"ஐயா இந்த பகுதிகளை காப்பது முழுக்க நமது பொறுப்பு மட்டும்தானா?
ஒருவேளை நாம் காக்கமுடியாவிட்டால் என்ன நடக்கும்?"

"மலையாளிகளிடமிருந்து தமிழகப் பகுதிகளைக் காக்கவேண்டிய தலையாய பொறுப்பு நமக்குதான் உள்ளது.
இது வளமான பகுதி.
திருவனந்தபுரம் நகரத்தையும்
முல்லைப்பெரியாறையும்
குமரி முனையையும்
கோவை நீலகிரி பகுதிகளையும்
மூணாறு தேயிலைத் தோட்டங்களையும்
பாலக்காடு கணவாயையும்
மலையாளிகள் கைக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும்.
இது மலையாளிகள் கைக்குப் போனால் இதன் பலனை அனுபவிப்பதோடு நில்லாமல்
தேர்தலுக்கு தேர்தல் தமிழகத்தை நோண்டி இனவெறியைத் தூண்டி  அதை வாக்குகளாக மாற்றுவார்கள்.
மலையாள அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி வரும்போது இந்த பிரச்சனைகளை கிளப்பி மக்களை திசைதிருப்புவார்கள்.
இவ்வளவு ஏன் இப்பகுதியைத் தக்கவைக்க வேண்டுமெனில் மத்தியில் இருக்கும் கொச்சியை விடுத்து தென்கோடியில் இருக்கும் திருவனந்தபுரத்தையே தலைநகராக மாற்றினாலும் மாற்றுவார்கள்"

"இப்போது நாம் என்ன செய்வது ஐயா?"

"தற்போதைக்கு போராட்டத்தை நிறுத்துவதாக அறிவிக்கிறேன்.
நீங்கள் அனைவரும் தலைமறைவாக தயாராக இருங்கள்.
பட்டத்தின் அடுத்த நடவடிக்கையைப் பார்த்து அதன்படி முடிவெடுப்போம்"

தலைவர்கள் கலைந்து சென்றனர்.

அன்று இரவே குஞ்சன்(நாடார்) வீட்டுக் கதவை தட்டாமல் நேரடியாக இடித்து தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தது காவல்துறை.
அவர் குடும்பத்தினர் முன்பே கால்முட்டி இரண்டையும் உடைத்து அவரை தூக்கிக்கொண்டு சென்றது.

(தொடரும்)
_____________________________
குருதியில் நனைந்த குமரி -6
https://m.facebook.com/photo.php?fbid=643665792403744&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

Monday 28 December 2015

குருதியில் நனைந்த குமரி -6

குருதியில் நனைந்த குமரி -6

மார்சல் நேசமணி தலைமையிலான  ஊர்வலம் அமைதியாகத்தான் முடிந்தது.

அதே 11-08-1954 அன்று மார்த்தாண்டம்(தொடுவெட்டி) பகுதியில் புதுக்கடை எனுமிடத்தில் பி.தாணுலிங்கம்(நாடார்) தலைமையில் 5000 மக்களுடன் மற்றொரு ஊர்வலம் தொடங்கியது.

"பட்டம் ஆட்சி ஒழிக"
"போலீஸ் அராஜகம் ஒழிக"
"ஐக்கிய தமிழகம் அமைத்தே தீருவோம்"
என முழங்கியபடி குமரித் தமிழர்கள் சென்றனர்.

ஊர்வலம் நகர நகர கூட்டம் 10,000ஐத் தாண்டிவிட்டது.

இதே நேரத்தில் மார்த்தாண்டம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பிலிருந்து வெளியேறி (விடுமுறை மறுக்கப்பட்டிருந்தது) ஓரணியில் திரண்டு ஊர்வலத்தோடு கலக்க வந்துகொண்டிருந்தனர்.

மலையாள காவல்துறை வழிமறித்து திரும்பி போகச் சொன்னது.
அந்த பள்ளி மாணவர்கள் மறுத்தனர்.
காவல்துறை அவர்களை கம்பால் அடித்து அவர்களுக்கு தலைமை தாங்கிய மாணவர் என்.செல்வராஜை கைதுசெய்தது.
மாணவர்கள் அவர்களை எதிர்த்து முழக்கமிட,
இதுதான் சமயம் என்று தயாராக இருந்த காவலர்கள் 9 வண்டிகளில் வந்திறங்கினர்.
திட்டமிட்டபடி ஐந்து குழுவாகப் பிரிந்து ஐந்து  இடங்களில் நின்று கொண்டு எந்த முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர்.

மக்கள் சிதறியோடினர்.
பிறகு பிணமாக வீழ்ந்தவர்களை அவசர அவசரமாக வண்டியில் தூக்கிப்போட்டனர்.
குற்றுயிராய்க் கீழே கிடந்தவர்களையும் தூக்கிப்போட்டனர்.
பல காயம்பட்டவர்களைப் பிடித்து வண்டியில் ஏற்றினர்.

அந்த குருதிபடித்த நெடுஞ்சாலையில் வண்டிகள் சென்று மறைந்தன.

பிற்காலத்தில் அக்காயம்பட்டவர்கள் குழித்துறை காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிகிறது.

அதன்பிறகு வீடு அவர்கள் திரும்பவேயில்லை.

(தொடரும்)
______________________________
குருதியில் நனைந்த குமரி -5
https://m.facebook.com/photo.php?fbid=642988709138119&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

Sunday 27 December 2015

வட்டார ஆதிக்கம்

தமிழர் ஆட்சியில்
சாதி ஆதிக்கமோ
மத ஆதிக்கமோ
பண ஆதிக்கமோ ஆளுமை செலுத்தும் வாய்ப்பு மிக மிகக் குறைவுதான்;

ஆனால் வட்டார ஆதிக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதாவது படை கட்டமைத்து அரசியலைக் கைப்பற்றி தமிழர் நாட்டை வழிநடத்தும் அத்தனைபேரும் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் பேசும் வட்டார வழக்கு உயர்ந்த மதிப்பைப் பெறும்.

குருதியில் நனைந்த குமரி -5

குருதியில் நனைந்த குமரி -5

1954 ஆகஸ்ட் 9.

நேசமணி உள்ளிட்ட முக்கிய தி.த.நா.க தலைவர்கள் 2நாட்கள் முன்பாக திடீரென்று விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனாலும் செய்தி காட்டுத்தீ போல பரவி அவர்களை வரவேற்க வழிநெடுக மக்கள் குவிந்துவிட்டனர்.
மக்களின் பாராட்டுமழையில் நனைந்துகொண்டே வீடுபோய் சேர இரவானது.

அதே நாள் தி.த.நா.கட்சியின் தலைவர் இராமசாமி(பிள்ளை) கவலையோடு அமர்ந்திருந்தார்.

அவர் கையில் நேரு எழுதிய இரண்டு கடிதங்கள் இருந்தன.
தி.த.நா.க ஏற்பாடு செய்த அத்தனை நிகழ்ச்சிகளையும் போராட்டங்களையும் கைவிடுமாறு எழுதியிருந்தது.

"எல்லாம் இந்த டெல்லியை ஆட்டிப்படைக்கும் மலையாள கூட்டத்தின் வேலையாகத்தான் இருக்கும். இல்லையென்றால் நேருவே நேரடியாக அடுத்தடுத்த நாட்களில் இரண்டு கடிதங்கள் எழுதுவாரா?"

மறுநாள் காலை 151 என்ற எண்ணை தொலைபேசியில் சுழற்றினார்.
அதுதான் நேசமணியின் எண்.

"ஐயா உங்கள் விடுதலையின்போது செய்ய திட்டமிட்டிருந்த நிகழ்வுகளை எப்படி செய்வது?
மக்களுக்கு அறிவித்தாயிற்றே?!"

"நிகழ்வுகள் நடத்ததான் வேண்டும். நேரில் வாருங்கள் இது பற்றி விரிவாக பேசலாம்"

கிளம்பி நேசமணி வீட்டுக்குப் போனார்.
அங்கே அவர் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
பேசிவிட்டு மகிழ்ச்சியுடன் வந்து அமர்ந்தார்.

"ஐயா! யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்?
அவரை நேரில் வரவும் சொன்னீர்களே?!"

"அதுவா நமது 'உயிரன்பன்' அழைத்திருந்தார்.
நாளைய கூட்டத்திற்கு அவர் வரவுள்ளார்"

"யார்? கம்யூனிஸ்ட் ஜீவா அவர்களா?"

"ஆமாம். அவரேதான். அவர்தான் தமிழில் உயிரன்பன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டுவிட்டார்"

"ஐயா வந்தவிடயத்தைக் கூறிவிடுகிறேன் நேரு நமது போராட்டங்களை கைவிடச்சொல்லி இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார்"

நேசமணி அதிர்ச்சியடைவார் என்று எதிர்பார்த்தார்.
அவரோ இதைத்தான் எதிர்பார்த்தவர் போல புன்னகை செய்தார்.

கடிதங்களை வாங்கி படித்தார்.

"மாநில புனரமைப்பு குழு வரும்வரை அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கிறார்.
அதுவரை தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று கூறியுள்ளார்"

"அதுதானே ஐயா புரியவில்லை.
நாம் அவரிடம் எந்த நடவிடிக்கையும் வேண்டவில்லையே?!"

"நாளை ஏதோ பெரிதாக நடக்கவுள்ளது.
அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இருக்காது.
இதைத்தான் உணர்த்துகிறது அவர் கடிதம்.
மலையாளிகள் தங்களால் முடியவில்லை என்று நேருவை இழுக்கிறார்கள்.
அவர் பின்னால் ஒளிந்துகொண்டால் மட்டும் நாம் விட்டுவிடுவோமா?
திட்டமிட்டபடி நிகழ்வுகளை நடத்துங்கள்.
நடப்பது நடக்கட்டும்"

"ஐயா பொறுமையாக முடிவெடுங்கள். அவர் நினைத்தால் நம்மை அப்படியே கேரளாவோடு இணைத்துவிட முடியும்.
அவர் கையில் அதிகாரம் உள்ளது.
நேரு கோபத்திற்கு ஆளாகவேண்டுமா என்று யோசித்து முடிவெடுங்கள்"

"அதற்காக மக்கள் எழுச்சியை ஆறப்போடுவதா?!
நேரு என்ன நேரு?! காமராசரே சொன்னாலும் நான் மக்கள் எழுச்சியை பயன்படுத்தாமல் விடப்போவதில்லை.
நாம் இலக்கை நெருங்கிவிட்டோம்.
இனி துணிந்து செயல்படவேண்டியதுதான்"
_________________________

1954 ஆகஸ்ட் 11

திட்டமிட்ட படி ஜீவானந்தத்துடன் நாகர்கோவிலில் நேசமணி தலைமையிலான முதல் ஊர்வலம் பேரெழுச்சியுடன் தொடங்கியது.
பொதுவுடைமைக் கட்சி எம்.எல்.ஏ ஜீவானந்தம் முன்னே நடக்க கூட்டம் பின் தொடர்ந்தது.
நேருவுக்கு பதிலளிக்கும் வகையில் நேசமணியின் பேச்சு அமைந்தது.
"நாங்கள் தனிநாடு கேட்கவில்லை.
தமிழகத்தோடு இணைவதைத்தான் கோருகிறோம்.
இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும்.
நாம் கோழைகளாக இருக்கக்கூடாது.
விடுதலை வீரர்களாக இருக்கவேண்டும்.
இது நாட்டுக்கான போராட்டம்"

ஜீவானந்தம் கையை உயர்த்தி "ஐக்கிய தமிழகம்..." என்று கூற

மக்கள் "அமைத்தே தீருவோம்" என்று முழங்கினர்.

பெரும் கரவொலியுடன் நிறைவடைந்தது.
_____________________________
காவலர் ஒருவர் அருகிலிருந்த தலைமைக் காவலரிடம் மலையாளத்தில் கேட்டார்.

"சுட்டுப் பொசுக்கிவிடலாமா?"

"இங்கே வேண்டாம். மேலிடம் மறுத்துள்ளது.
தமிழகத் தலைவர் வேறு வந்திருக்கிறார்.
இன்னும் இரண்டு கூட்டங்கள் இருக்கின்றன.
அங்கே வைத்துக்கொள்வோம் கச்சேரியை"

(தொடரும்)
-------------
குருதியில் நனைந்த குமரி -4
https://m.facebook.com/story.php?story_fbid=642139169223073&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.642139169223073%3Atl_objid.642139169223073%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1451635199%3A-2074443726823932652#footer_action_list