Showing posts with label வைணவம். Show all posts
Showing posts with label வைணவம். Show all posts

Wednesday, 18 December 2019

ஆந்திரா கோவில்களில் தமிழ்






















ஆந்திரா கோவில்களில் தமிழ்

 "திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி பாடக் கூடாது" என்று தீட்சிதர்கள் கூறியதை நியாயப்படி சாதிப் பிரச்சனை ஆக்காமல்
 அப்படியே திசைதிருப்பி "தமிழை நீசபாசை என்றுவிட்டான் பார்ப்பான்" என்று மொழிப் பிரச்சனை ஆக்கி பொய்ப் பிரச்சாரம் செய்தே அரசியல் செய்தனர் வந்தேறிகள்.

 இதன்மூலம் தினமும் தமிழில் ஓதும் தில்லை அந்தணர்களான தீட்சிதர்களை தமிழுக்கு எதிரானவர்களாக காட்டிவிட்டனர்.

 ஆனால்
 தமிழர் பகுதியாக இருந்து ஆந்திராவுக்கு போய்விட்ட எல்லை மாவட்டங்களில்
 தமிழர்களால் கட்டப்பட்டு தெலுங்கர் கைக்கு போய் முழுக்க சமஸ்கிருத மயமாகிவிட்ட வைணவக் கோவில்களில்
 இன்றும் விடாமல் தமிழில் ஓதிவரும் பார்ப்பனர் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?


 திருப்பதி உட்பட
அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர கோவில்,
 நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில்,
 தாலப்பாக்கம் சென்னகேசவ சுவாமி கோவில்,
 தேவுணிகடப்பா சித்தீஸ்வர கோவில் மற்றும் லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஜம்மலமகுடு வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 பித்தாபுரம் பத்மாவதி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஆகிய 10 கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாதம் ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் எழுதிய தமிழ்ப் பாசுரங்கள் ஓதப்படும்.

 தெலுங்கர் வருகைக்கு முன் தாய்லாந்து சென்ற பார்ப்பனர்கள் இன்றுவரை தமிழில்தான் ஓதுகின்றனர்.

 தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினப் பார்ப்பனர் தமிழுக்கு எதிரி இல்லை!

 படம் உதவி: Karthikeyan Rathinavelu

Wednesday, 6 November 2019

குறளை

குறளை

குறள் வேறு! குறளை வேறு!

கோதை (அதாவது ஆண்டாள்) "திருக்குறள் ஓதமாட்டோம்" என்று சொல்ல நினைத்திருந்தால்

"தீக்குறளை ஓதோம்" என்று மட்டும் கூறியிருக்கலாம்.
அதென்ன 'சென்று' ஓதுவது?!

ஒருவேளை அக்காலத்து பாடசாலை படிப்பு சொல்லிக் கொடுக்கும்போது திருக்குறளையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் இல்லையா?!
அங்கு 'சென்று' ஓதமாட்டோம் என்று கூறியிருக்கலாம் இல்லையா?!

அப்படியே சொல்ல நினைத்திருந்தால் "தீக்குறளைச் சென்றோதோம்" என்று 'ச்' போட்டு சொல்லியிருக்க வேண்டும்.

என்றால் கோதை கூறிய பொருள் என்ன?!

அவள் கூறவந்ததோ "தீக்குறளையைச் சென்றோதோம்" என்றுதான்.

ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் கூறிவிட்டால் அதாவது 'யை' தொக்கிவிட்டது.
அதாவது மறைந்துவிட்டது.

குறளை என்றால் என்ன?!

"குறளை ஓதுதல்" என்றால் "கோல் மூட்டுதல்" அல்லது "புறம் பேசுதல்" என்று பொருள்.

ஒருவரிடம் கேட்டதை அவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் 'சென்று' கூறி கோள் மூட்டமாட்டோம் என்கிறாள் கோதை.

பொதுவாக புறங்கூறுதல் பெண்களின் குணம் என்பார்கள்.
கோதையும்
"நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்;
மலரிட்டுநாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளை சென்றோதோம்"
என்று பெண்கள் செய்வதை தொடர்ச்சியாகக் கூறும்போதுதான் இதையும் சொல்கிறாள்.

'குறளை' பற்றி பெருஞ்சித்திரனார் தனது "திருக்குறள் மெய்ப்பொருளுரை" யில் எழுதியுள்ளார்...

‘கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி'
- நாலடியார் 1891

‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென'
- மணிமேகலை 30:68

‘குறளையுள் நட்பளவு தோன்றும்’
- திரிகடுகம் 371

‘பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார்’
- ஆசாரக்கோவை 381

‘கடையாயார் முன்னின்று கூறும்
குறளை தெரிதலால்
பின்னின்னா பேதையார் நட்பு'
- பழமொழி நாற்பது 13.34

‘பொருளல்லார் கூறிய பொய்குறளை’
- பழமொழி நாற்பது 1471

‘காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை’
- பழமொழி நாற்பது 1932

‘குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது'
- முதுமொழிக்காஞ்சி 74

‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் நான்கும்
மறலையின் வாயின வாம்’
- ஏலாதி 28:3-4

'கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்'
- கந்த சஷ்டி கவசம்

குறள் என்றால் குறுகிய என்று பொருள் உண்டு.
திருக்குறள் குறுகத் தரித்ததால் அப்பெயர் பெற்றது.

குறளை என்பது வேறு!

"ஆண்டாள் ஒரு பாப்பாத்தி!
அவள் தமிழர் வேதமான திருக்குறளை ஓதமுடியாது என்று கூறிவிட்டாள்"
என்று ஒரு சிலர் பார்ப்பனரை தமிழர் இல்லை என்று திரித்துக் கூற முற்படுகின்றனர்.

அந்த சதிகாரர்கள் பேச்சை நம்பவேண்டாம்.

பார்ப்பனர் தமிழரே!

Friday, 27 July 2018

சோழர்கள் வடநாட்டு பிராமணரைக் குடியமர்த்தினரா?

இராசேந்திர சோழன் 1080 வடநாட்டு பிராமணர்களை இங்கு இறக்குமதி செய்து அவர்களுக்கு 57 ஊர்களை 'திரிபுவனதேவி சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் தானமாக வழங்கியதாக ஒரு கருத்து திராவிட இயக்க தத்துவவாதிகளால் பரப்பப்பட்டு நிலவுகிறது…..

இது உண்மைதானா என்று அறியவேண்டி “கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” என்ற சி.கோவிந்தராசன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தை இன்று ஒரு நண்பரிடம் ( காளிங்கன்) வாங்கிப் படித்தேன்…

அதில் இராசேந்திரச் சோழன் கி.பி.11ஆம் நூற்றாண்டில் தன் தாயான திரிபுவன மாதேவியின் பெயரில் 'திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்னும் பெயரிட்டு தானமாக வழங்கிய 57 ஊர்களை தானமாகப் பெற்ற 1080 அந்தனர்களின் பெயர்கள் 57 செப்பேடுகளில் முழுமையாக பட்டியல் இடப்பட்டுள்ளன.

அதில் 1080 பார்ப்பனர்கள் (எட்டு பேர் தவிர அனைவரும் வைணவர்கள்) எவரும் வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படவில்லை.
  ஒவ்வொருவரின் ஊர் மற்றும் கோத்திரம் சூத்திரம் தொடங்கி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலுள்ள ஊர் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாகவே உள்ளன.
அதிலுள்ள அந்தனர் பெயர்கள் பட்டன் என்னும் தமிழ்ப் பார்ப்பனர்களின் ஒரு பட்டப் பெயரிலேயே முடிகிறது.

அவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்து வரும் வளநாடு (அப்போது சோழ நாட்டின் தமிழகப் பகுதிகள் வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன), அதிலுள்ள ஊர், பிறகு கிராமம், பிறகு அவர்கள் கோத்திர சூத்திரப் பெயர்களுடன்( பல்லவர் காலத்தில் இருந்து தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு கோத்திரப் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது), இயற்கைப் பெயர், பின் பட்டப் பெயர்களுடன் அழைக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்த தமிழ் பார்ப்பனர்கள்தான்.
அவர்களையே இராசேந்திர சோழன் திரிபுவன சதுர்வேதி மங்கலத்தின் 57 ஊர்களில் குடியேற்றி நிலங்களை வழங்கியுள்ளான்.
இந்த 57 ஊர்களுக்கும் தலைமை ஊர் தான் கரந்தை.

அந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டுள்ள சில பார்ப்பனர்களின் பெயர்கள் (எடுத்துக் காட்டாக சிலப் பெயர்கள் மட்டும்)....

1.”ராஜேந்திரசிம்ம வளநாட்டு தனியூர் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்து பரத்வாஜ கோத்திரத்து ஆஸ்வலாயன சூத்திரத்து இறையானரை சூர் மதிசூதன் யக்ஞப் பிரிய பட்டனுக்குப் பங்கொன்று”
என்று ஒரு அந்தனனுக்கு வழங்கப்பட்ட விபரங்களுடன் தொடங்குகிறது.
அதாவது,
'ராஜேந்திரசிம்ம' என்ற வளநாட்டின்
'தனியூரில்' உள்ள
'வீரநாராயண சதுர்வேதி மங்கலம்' என்னும் ஊரைச் சேர்ந்த
'இறையானரை சூர் மதிசூதன்' என்ற இயற்பெயரையும்
'யக்ஞப் பிரியப் பட்டன்' எனும் பட்டப்பெயரைக் கொண்டவனுக்கு ஒரு பங்கு நிலமும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த 7 முதல் 10 நபர்களின் பெயர்கள் என 1080 பார்ப்பனர்களின் பெயர்கள் உள்ளன.

அவர்கள் வாழ்ந்த தமிழக ஊர்கள் மற்றும் அந்தப் பார்ப்பனர்களின் பெயர்களில் சில….
2. நாலூர் நாராயணன்
3.வேலங்குடி நீலகண்டன்
3. இடையாற்று மங்கலத்து நந்தி நாராயணப் பட்டன்.
4. முடபுரத்து பய்யகுட்டி
5.திருவெண்காட்டடிகள் பட்டனம் பிதச புரியன்
6. பொன்னம்புரத்து பவக்ருதன்
7.அட்டாம்புரத்து வெண்ணையன்
8. திருவேழ்விக்குடி தஸ்புரியன்
9. அரணைபுரத்து நாராயணன்
10.ஒலிக்கொன்றை ஐயன் பெருமான் சிவன பட்டன்
11.காராம்பிச் செட்டுத்துரை அந்திக்குமரன்
12.பதம்புரத்து கபோதீஸ்வரன்
13.உறுப்புட்டூர்க் கேசவன்
14.கதறு முண்டூர் அக்குமரன்
15.திருமங்கலத்து நந்தியாலன்
16.பேரூர் நாராயணப் பட்டன்
17.தென்குன்றத்து எழுவடியான்
18.வேற்புரத்து நாராயணன்
19.குரவசரி நீலசிவன்
20.திருவெண்காடன் திருவரங்க தேவபட்டன்
21.இருங்கண்டி கிருஷ்ணன் கோவிந்த பட்டன்
22.திருமாலிருஞ்சோலை ஸகஸ்ரயன்
23.பெருமருதூர் பதபதி நாராயணப் பட்டன்
24.ஆதனூர் நக்கன் சோலைப் பிரான்
25.சிறுகொட்டையூர் நீலகண்டன்…

இது போல 1080 பேர்கள் வாழ்ந்த ஊர்களும் தமிழக ஊர்களே!
இவ்வாறிருக்க இவர்கள் வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிராமணர்கள் என திராவிட இயக்க தத்துவவாதிகள் கூறுவது ஏன்?

இங்குள்ள பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல வடவர் என்று பொய் பரப்புரை செய்வதற்காகத் தானே?!

திராவிடப் பொய்களைத் தோலுரிப்போம்

நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி

Sunday, 8 July 2018

திருப்பதி தலைமை அர்ச்சகரின் அடுக்கடுக்கான புகார்கள்

உண்மையான காணொளி

திருப்பதி தலைமை அர்ச்சகர் வெறுப்பில் கூறியதை வெட்டி ஒட்டி டப்பிங் செய்து பரவ விட்டுள்ளனர்.

பார்ப்பனர் மீது பழி போட்டால் அது உண்மையா பொய்யா கொஞ்சமும் யோசிக்காமல் அப்படியே நம்பும் அளவு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளோம்.

இதோ அவர் பேசிய முதல் பகுதி.
பணம் கொடுத்து சாமி கும்பிடும் விஐபிக்களுக்கு பெருமாள் அருள் கிடைக்காது என்கிறார்.
அதிகாரிகளும் ஊழியர்களும் அரச்சகர்களைக் கட்டாயப்படுத்தவதாக்க் கூறுகிறார்.
சரியான காணொளியைப் பார்த்துவிட்டு பிறகு பரப்பப்பட்ட காணொளியை மீண்டும் பாருங்கள்.
அவர் கூறும் வஞ்சப்புகழ்ச்சி தொனி புரியும்.

முழு காணொளி:
திருப்பதி கோயிலின் பிரசாத அடுப்புக்கு அடியில் புதையல் - sunnews (youtube)

(திருப்பதியில் அதிகாரிகள் என்னவெல்லாம் அட்டூழியம் செய்கிறார்கள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என 44 ஆண்டுகளாக அர்ச்சகராக இருக்கும் ரமண தீட்சிதர் அடுக்கடுக்கான புகார்களைக் கூறும் முக்கியமான காணொளிக்கு இட்ட தலைப்பைப் பாருங்களேன்.
கட்டாயம் சன் குழுமம் தான் இதை வெட்டி ஒட்டி பரப்பியிருக்க வேண்டும்)

நன்றி: உமாமகேஷ்வரன் அதங்குடியான்

Tuesday, 15 May 2018

சிவனடியாரும் போற்றும் இராமன்!

சிவனடியாரும் போற்றும் இராமன்!

இராவணன் சிறந்த சிவ பக்தன் என்று பலரும் கூறுகிறார்கள்.
ஆனால் சைவ அடியார்களோ இராமனையே போற்றியுள்ளனர்.

சங்க இலக்கியச் சான்றுகளுடன் ஏற்கனவே வெளியிட்ட "இராமனும் தமிழனே" எனும் பதிவினை அனைவரும் படித்திருப்பீர்கள்.

மேலதிக சான்றுகளாக இப்பதிவில் பிற்காலத்து இலக்கியங்களான சைவ மதத்தின் பக்தி இலக்கியங்களைப் பார்ப்போம்.

முதலில் திருநாவுக்கரசர் தேவாரம்,
திருவலம்புறப்பதிகம்....

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ

என்று பாடுகிறது.

அதாவது சிவந்த கண்களையுடைய திருமால் வில்லை ஏந்திக் குரங்கு சேனையோடு
சேதுக் கடலில் அணைகட்டி (இலங்கை) சென்றடைந்து
மேம்பட்ட பலபோர்கள் செய்து வென்றழித்த அரக்கனுடைய (இராவணனுடைய) நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழ்ந்தன.

மேலும் நாவுக்கரசர் இராமேச்சுரப் பதிகத்திலும்....

வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே

என்று பாடுகிறார்.

அதாவது, வன்மையை காட்டும் கண்களை உடைய அரக்கர்கள் வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாராய்த் துன்புறுத்தும் இயல்பினராய் நின்று போர்களைச் செய்ய,
அவரை அழித்துச் சிவந்த கண்களை உடைய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தம் கண்ணால் தரிசிக்க முடிந்தவர்கள் தலைவன் (அதாவது இறைவனாகிய சிவன்) பக்கத்திலிலேயே தங்கும் வாய்ப்பினைப் பெறுவர்.
--------
அடுத்து திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை....

தேவியை வவ்விய
தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல்
நண்ணும் இராமேச் சுரத்தாரை

என்று பாடுகிறது.

அதாவது, சீதையைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனின் (இராவணனின்) வலிமையை அழித்து,
அம்பு எய்யும் வில்லேந்திய இராமன் வழிபட்ட திருஇராமமேச்சுரம்

மேலும் ஞானசம்பந்தர் திருமறைக்காட்டுப் பதிகத்திலும்...

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே

என்று (இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில்) சிவன் தன் கால் விரலால்  அழுத்தியதைக் கூறி 'இரக்கம் இல்லையா எம்பெருமானே' என்று சிவனை செல்லமாகக் கடிந்துகொள்கிறார்.

அதோடு நில்லாது நமது ஞானசம்பந்தர் கோளறு பதிகத்திலும்...

ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா

என்று ஒரு வரியைக் கூறுகிறார்

அதாவது, ஏழு கடல்களால் சூழப்பட்ட இலங்கை அரசன் (இராவணன்) போன்ற அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது என்று பாடுகிறார்.

-------- 
அருணகிரிநாதர் முருகன் மீது பாடிய திருப்புகழ் இராமனைப் புகழ்வதையும் இங்கு கூறலாம்.

சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு மருமகப் பரிவோனே

தன்னுடைய சமத்தினால் (சாமர்த்தியத்தால்) புகழுக்குரிய சானகியை (சீதையை) துன்பத்துக்கு ஆளாக்கி திருடிச்சென்ற அரக்கனுடைய (ராவணனுடைய) உடலைத் துண்டாக்கி,
வெற்றியுடன் (சயத்து) அயோத்தி நகருக்குத் திரும்பி வந்த அரியின் (திருமாலின்) அழகிய மருமகனே!
-------
இராமனை ஆரியன் என்று திரிக்கும் திராவிடவாதிகள் காட்டிய தவறான வழியில் சென்று
தமிழ் இலக்கியங்கள் போற்றும் தமிழனான இராமனை வடவருக்கு தாரைவார்த்துவிட்டு
"நாங்கள் இராவணனின் பிள்ளைகள்" என்று பிதற்றும் இளைய தலைமுறையினர் சற்று உணர்ச்சிவசப்படாமல் உண்மையை அறிய முற்படவேண்டும்.

Monday, 25 July 2016

மாண்டியாவும் தமிழும் மாலியமும்

மாண்டியாவும் தமிழும் மாலியமும்

தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பார்,

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் "மேல்கோட்டை" எனும் ஊரில் உள்ள "செல்லப்பிள்ளை" கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்றுவரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்துகொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,
செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி,
சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்தபெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்தபோது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத்தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.
ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்கவேண்டாம்.
நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.
அதாவது வைணவ பார்ப்பனர்கள்.
அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.
பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப்போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

Wednesday, 23 March 2016

திருப்பதி முருகனுடையது வலுவான சான்று

திருப்பதி முருகனுடையது
வலுவான சான்று

வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை
-வெற்றி (பொருந்திய) *வேலி*னையுடைய திரையனது வேங்கடமெனும் நீண்ட மலையில்...
(அகநானூறு 199)

Sunday, 7 February 2016

பறையும் ஆண்டாளின் இறைவனும்

பறையும் ஆண்டாளின் இறைவனும்

---------------------------------------------------------
1. நாராயணனே நமக்கே "பறை " தருவான்
(தி:1 - மார்கழித் திங்கள்)

2. பாவாய் எழுந்திராய், பாடிப் "பறை " கொண்டு
(தி:8 - கீழ்வானம் வெள்ளென்று)

3. போற்றப் "பறை " தரும் புண்ணியனால்
(தி:10 - நோற்றுச் சுவர்க்கம்)

4. அறை "பறை " மாயன் மணிவண்ணன்
(தி:16 - நாயகனாய் நின்று)

5. வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் "பறை " கொள்வாம்
(தி:24 - அன்று இவ்வுலகம்)

6. உன்னை அருத்தித்து வந்தோம் "பறை " தருதியாகில்
(தி:25 - ஒருத்தி மகனாய்)

7. சாலப்பெரும் "பறை "யே பல்லாண்டு இசைப்பாரே
(தி:26 - மாலே மணிவண்ணா)

8. பாடிப் "பறை "கொண்டு யாம்பெறும் சம்மானம்
(தி:27 - கூடாரை வெல்லும்சீர்)

9. இறைவா நீ தாராய் "பறை "யேலோ ரெம்பாவாய்
(தி:28 - கறவைகள் பின்சென்று)

10. இற்றைப் "பறை " கொள்வாம், அன்று காண்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
(தி:29 - சிற்றஞ் சிறுகாலே)

11. அங்கு அப்"பறை " கொண்ட ஆற்றை,
பட்டர்பிரான் கோதை சொன்ன
(தி:30 - வங்கக் கடல்கடைந்த)

நன்றி: ஆண்டாள் எனும் "பறை"ச்சி (மாதவிப் பந்தல்)

Thursday, 31 December 2015

திருப்பதி: சைவ, வைணவ மோதலால் தமிழன் இழந்த மண்

திருப்பதி: சைவ, வைணவ மோதலால் தமிழன் இழந்த மண்

"திருப்பதி முருகன் கோவில் இல்லை அது திருமாலின் உறைவிடம்" என்போர் காட்டும் ஒரு வலுவான சான்று சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் வரும்,

ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் *கையி னேந்தி*
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

என்ற பாடலைத்தான்,
அதாவது காவிரிக்கரையில் (திருவரங்கம்?!) கிடந்தவண்ணம் இருக்கும் இறைவன் வேங்கடத்தில் சக்கரமும் சங்கும் கையில் ஏந்தி வேங்கடத்தில் நிற்கிறான் என்று இதிலிருந்து அறியமுடிகிறது.

இதுதான் முறியடிக்கவியலாத வலுவான சான்று.
ஆனால் இதை வலுவிழக்கச் செய்யமுடியும்.

திருப்பதி சிலையில் சங்கும் சக்கரமும் கையிலா ஏந்தப்பட்டுள்ளது??????

இல்லை. தோளில்தான் ஒட்டப்பட்டுள்ளது!

வேங்கடத்தைக் குறிக்கும்போது மறக்காமல் குறிப்பிடப்படும் பெரிய அருவி இன்று இல்லை.
அதேபோல ஆயிரம் தலையுடைய பாம்பின்மேல் அரங்கன் படுத்திருக்கவும் இல்லை.

சரி, சங்கும் சக்கரமும் திருமாலுக்கு மட்டுமே உரியதா?

இதே சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதைக்கு அடுத்துவருவது வேட்டுவ வரி அதில்,

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த
கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்

தனது சடைமுடியில் கங்கையை அணிந்துள்ள, நெற்றியில் கண்ணை உடையவனின் (சிவன்?!) திருமேனியிலே மறைகள் போற்றும் பாதி பெண்ணுருவமான நீ,
உன் தாமரை போன்ற கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தி சினத்தால் சிவந்தகண்ணுடைய சிங்கத்தின் மேலேறி நிற்பது என்ன மாயமோ?!
என்று இதற்குப் பொருள்.
கொற்றவை கூட சங்கு சக்கரம் ஏந்தியுள்ளாள்!

பால்வெண் சங்கம் என்று வந்துள்ளது. திருமாலுக்கு பிடித்தது சாளக்கிராமம் என்ற கருப்பு சங்கு.
சிவனுக்கு பிடித்தது அதிவெண்மையான வலம்புரி சங்கு.

அழகாபுத்தூர் சிவன் ஆலயத்தில் முருகன் சங்கும் சக்கரமும் ஏந்தியுள்ளான்.

சரி நெடியோன் என்பது திருமாலுக்கு மட்டுமே உரிய பெயரா?

சிலப்பதிகாரம் மற்றொரு இடத்திலும் 'நீலமேனி நெடியோன் கோயிலைப்' பற்றிக் கூறுகிறது.

அகநானூறு (149) நெடியோன் என்று விளிப்பது திருப்பரங்குன்றத்து தலைவனை அதாவது முருகனை!!!

"வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்" என்று புறநானூறு (241) கூறுகிறது. வச்சிரம் வைத்திருப்பவன் இந்திரன்.

மதுரைக் காஞ்சி தேவர்தலைவனை (இந்திரனை) 'மழுவாள் நெடியோன்' (453 - 467) என்கிறது.

பெரும்பாணாற்றுப்படை (402) கூறும் நெடியோன் கரிய நிறத்திலும் தொப்புள்கொடியில் நான்முகனைக் கொண்டவனாகவும் திருமாலுடன் ஒத்துபோகும் உருவத்துடன் உள்ளான்.

குமரிக்கண்டத்தில் ஆட்சி செலுத்திய பாண்டியமன்னன் பெயர் நெடியோன்தான் (மதுரைக்காஞ்சி 764).

சிலப்பதிகாரமே அழற்படுகாதையில் (56-61) பல அரசர்களை தோற்கடித்து நான்குவகை நிலங்களை கைப்பற்றிய மன்னனை 'உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன' என்று உவமை கூறுகிறது.
நடுகற்காதையில் பகைவரை வென்ற சேரனான செங்குட்டுவனை 'நிலந்தரு திருவின் நெடியோன்' என்று குறித்தலைக் காணலாம்.

நெடியோன் என்பது பொதுப்பெயர்.
உயர்ந்தவன் அல்லது உயரமானவன் என்று பொருள்படும்.
இது மன்னருக்கும் கடவுளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சரி கிடந்தநிலை திருமாலுக்கு மட்டுமே உரியதா?

திருப்பதிக்கு அருகே சுட்டபள்ளியில் உள்ள சிவனும் குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முருகனும் கூட கிடந்தநிலையில்தான் உள்ளனர்.
சிறுதெய்வங்களிலும் சில தெய்வங்கள் கிடந்தநிலையில் உண்டு. சிறந்த எடுத்துக்காட்டு வண்டிமறிச்சம்மன்.

சிலப்பதிகாரத்தில் வரும் தெய்வங்களின் அடையாளங்கள் இன்றைய சிவன், திருமால், முருகன், துருக்கை ஆகிய தெய்வங்களுடன் ஒத்துப்போனாலும்
அப்போது சைவமோ வைணவமோ இந்துமதமோ இருந்திருக்கவில்லை.

மாயோனை திருமாலாக்கி வைணவம் எடுத்துக்கொண்டது.
சேயோனை முருகனாக்கி சைவம் எடுத்துக்கொண்டது.

மாயோன்தான் திருமால் என்று பழந்தமிழ் இலக்கியம் எங்கும் கூறவில்லை.

மாயோன் அன்ன மால் என்கிறதுதான் நற்றினை (37:1) கூறுகிறது.

மால் மாயோன் ஆகியோர் கடவுளரா?

கலித்தொகையில் தலைவன் மாலுக்கும் (104:35) மாயோனுக்கும் (109:17) ஒப்பானவனாக புகழப்படுகிறான்.

புறநானூறு பாண்டிய மன்னின் புகழ் மாயோனின் புகழுக்கு ஒப்பானது என்கிறது (57:1)

ஆக மால், மாயோன் ஆகியோர் ஏற்கனவே புகழ்பெற்றிருந்த *மனிதர்கள்* என்று கருதமுடியும்.

சங்க நூல்களிலே வேங்கடமும், அதனைச் சூழ்ந்த நாட்டிற்கும் தலைவரென விளங்கிய
புல்லி (அகம் 61, 83, 209, 393-புறம் 385),
திரையன் (அகம் 85),
ஆதன் உங்கன் (புறம் 389) என்போரும் புகழ்பெற்ற மன்னர்கள்.

மலைபடுகடாம் பாடும் நன்னன் வேண்மான், வேல் உடையவனாகவும் திருவார் மார்பன் என்றும் புகழப்படுகிறான்.
வேல் முருகனுடன் தொடர்புடையது, திருவாழமார்பன் என்பது மார்பில் திருமகளைக் கொண்ட திருமாலைக்குறிப்பது.
மதுரைக்காஞ்சி (611) முருகனை நன்னன் என்றே அழைக்கிறது.

மேலும் ஒரு சான்று தரவா?

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் *திருமலை*மேல் எந்தைக்கு,
இரண்டுருவும் *ஒன்றாய் இணைந்து*
- பேயாழ்வர், (மூன்றாம் திருவந்தாதி 63)

அதாவது சடை, மழு, சூழரவு இவை சிவனின் அடையாளங்கள்,
நீள்முடி, சக்கரம், பொன்னாண் இவை திருமாலின் அடையாளங்கள்,
இரண்டும் கலந்த உருவம்தான் திருப்பதியில் உள்ளது என்று பொருள்.

திருப்பதியில் நடக்கும் வில்வ அர்ச்சனை, பாலாஜி என்பதில் பாலா என்ற  வேலைக் குறிக்கும் வடசொல் என பல சான்றுகள் சைவத்தின் தொடர்புக்கு வலுசேர்க்கின்றன.

என்றால் திருமால் என்ற சொல் அப்போது இருந்ததில்லையா?
இருந்துள்ளது.
காடுகாண் காதையிலேயே
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்

*திருமால்*குன்றம் மலையின் மேலே
புண்ணிய*சரவணம்* என்ற  பொய்கை இருந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார் இளங்கோவடிகள்.
அதுதான் இன்றைய அழகர் மலை.
பழைய பெயர் 'திருமாலிருஞ்சோலை'.
மலைக்கு மேலே சுனையும் உண்டு.
இதனை சிலம்பாறு (சிலம்பு!) என்றும் கூறுவர்.

ஆனால் இவ்விரண்டிற்கும் நடுவில் இருக்கும் பழமுதிர்சோலை பற்றி எந்த குறிப்பும் இல்லை.
அழகர்தான் முருகரோ என்ற ஐயம் தோன்றுகிறது.
காரணம் முருகனைத்தான் அழகன் என்று கூறுவர்.
இளங்கோவடிகள் திருமால் என்று முருகனைக் குறிப்பிட்டுள்ளார் என்றுகூடச் சொல்லலாம்.

சரவண என்பது முருகருடன் தொடர்புடையதா?
ஆம். குன்றக்குரவையில்
'சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான்
திருக் கை வேல்' என்று வருகிறது.
அதாவது ஆறுகுழந்தையாகப் பிறந்து சரவணப் பொய்கையில் ஆறு (கார்த்திகைப்) பெண்களிடம் தாய்ப்பால் குடித்த முருகன் கையில் இருக்கும் வேல் என்பதிலிருந்து இதை அறியலாம்.

அழகர் ஆற்றிலிறங்குவது நாயக்கர்கள் காலத்தில்தான் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
காலங்காலமாக அழகர் மலையில் இருந்து அலங்காநல்லூர் வழியாக தேனூரில் வைகையாற்றிலிறங்கிய அழகரை, நாயக்கர்கள் இறங்கவிடாது தடுத்து முறையை மாற்றி மதுரையிலேயே இறக்குகின்றனர்.

மேலேயிருந்த சிலம்பாற்றில் 'ராக்காயி' அம்மனை உட்காரவைத்தனர்.
கள்ளழகர் நகைகள் தெலுங்கு குடும்பத்தின் பொறுப்பில்தான் உள்ளது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாயக்கர்களால் முருகனின் படைவீடான பழமுதிர்சோலையே மறைக்கப்பட்டது.
அதை வெளிக்கொணர்ந்து இப்போது தற்காலக் கோவிலான சோலைமுருகன் கோவிலை 1950களில் நிறுவியவர் அண்ணல் கி.பழனியப்பனார்.

நான் ஏற்கனவே போட்ட இந்த பதிவிலும் சில சான்றுகளைத் தந்துள்ளேன்.
( vaettoli.blogspot.in/2014/09/blog-post_20.html?m=1 )

அப்பதிவு தமிழர் மண்மீட்பை அடிப்படையாகக் கொண்டது.
அதாவது நாயக்கர்காலத்தில் வைணவ ஆதரவும் தெலுங்கு ஆதரவும் தமிழர் பகுதியான திருப்பதியை பறித்து தெலுங்கு வைணவரிடம் கொடுத்துவிட்டன.

திருமால் பக்தரோ முருக பக்தரோ தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளாமல் திருப்பதியை மீட்டுவந்தால் போதும்.