Showing posts with label வழிபாடு. Show all posts
Showing posts with label வழிபாடு. Show all posts

Sunday, 22 June 2025

அரசியலில் முருகன் சீமான் முதல் பாஜக வரை

அரசியலில் முருகன்
 சீமான் முதல் பாஜக வரை

 2015 இல் சீமான் வீரத் தமிழர் முன்னணி எனும் பாசறையைத் தோற்றுவித்து முப்பாட்டன் முருகன் என்று முருக வழிபாட்டை தமிழ்தேசிய விழாவாக ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கிறார்.

 திருமுருகப் பெருவிழா எனும் பெயரிட்டு நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த விழாக்கள்

2016 திருப்பரங்குன்றம்
2017 திருத்தணி
2018 திருச்செந்தூர்
2019 கோவை 
2020 சுவாமி மலை 
2021 திருப்போரூர்
(இவற்றில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டு 2021 தைப் பூசம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது)

2022 லிருந்து தொகுதி வாரியாக விழா நடக்கிறது.

2025 இல் திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்க மாபெரும் பொதுக்கூட்டம்!
 அதன் விளைவாக குடமுழுக்கு தமிழிலும் நடக்கும் என்று அறிவிப்பு! 

 இதெல்லாம் முடிந்த பிறகு இன்று பாஜக நடத்தும் "முருகன் மாநாடு" நடக்கிறது.

Friday, 6 September 2024

பிள்ளையார் தத்துவம்

பிள்ளையார் தத்துவம் 

 இயற்கையின் எல்லா அம்சங்களும் சேர்ந்தது சதுர்த்தி பிள்ளையார்.
 களிமண் மற்றும் நீர் சேர்த்த உருவம் மண்ணும் நீரும் வந்துவிட்டன.
 அதில் அருகம்புல் மாலையிட்டு அரச மரத்தின் அடியில் வைக்கவேண்டும் இங்கே சிறிய பெரிய தாவரங்கள் வந்துவிட்டன.
அரிசி மாவு கோலமிட்டு சாணி பிடித்து அதில் அரளி பூ வைக்கவேண்டும் இங்கே உரமும் பூவும் வந்துவிட்டன.
 மனித உடல் யானைத் தலை எலி வாகனம் என சிறிய நடுத்தர பெரிய உயிர்கள் வந்துவிட்டன (பிள்ளையார் எறும்பு கூட உண்டு).
உடைந்த தந்தம் எழுத்தாணி ஆகி கல்வியின் முக்கியத்துவம் குறிக்கப்பட்டு விட்டது. அதனாலேயே பிள்ளையார் சுழியிட்டு எழுதத் தொடங்குகிறோம்.
 கையில் அரிசி மாவு பருப்பு வெள்ளம் சேர்ந்த கொழுக்கட்டை இதில் உணவும் சுவையும் வந்துவிட்டன 
இந்த உருவத்தை ஆற்றில் கரைக்கிறோம் இது எல்லாமே நீரில் இருந்து பிறந்து நீரிலேயே கரைந்து விட்டன எனவே நீர்நிலை தான் உயிர்நாடி எனும் தத்துவமும் இங்கே உணர்த்தப்பட்டு விட்டது.
 ஏற்கனவே நான் கூறியபடி யானைகளை போரில் பயன்படுத்தி அவை பல ஆயிரக் கணக்கில் இறந்தபோது அதைத் தடுக்க "யானை வாழ்ந்தால் தான் எலி வாழும்" சான்றோர் உருவாக்கிய தத்துவம் நாளடைவில் இப்படி வெறும் வழிபாடு ஆகி நிற்கிறது. 
 காடுகளையும் யானைகளையும் அழிக்கிறோம்!நீர்நிலைகளில் பிள்ளையாருடன் சேர்த்து கழிவுகளையும் கரைக்கிறோம்!
 அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டோம்! 

Tuesday, 21 January 2020

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

தஞ்சை பெரியக்கோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழன் கல்வெட்டு, தேவாரம் பயிற்றுவித்த ஆசிரியருக்கு தந்த குருதட்சணையை விவரிக்கிறது.

இது அவரது 19 ஆட்சியாண்டில் அதாவது கி பி 1031 இல் வெட்டப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் " திருமன்னி வளர " என்று தொடங்கும் நெடிய மெய்க்கீர்த்தி தொடரில் இந்த செய்தியும் இடம்பெறுகிறது .

இராசேந்திர சோழன் தனது 19 வது ஆட்சியாண்டில் 242 ம் நாளில் இந்த கொடை உத்தரவை பிறப்பித்தார்.
அதில் கங்கைகொண்ட சோழபுரத்து கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் முடிகொண்ட சோழன் திருமாளிகையின் வடபக்கத்தில் தேவாரம் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்று இயங்கியதும்
அக்கல்லூரியில் அரசர்களின் புதல்வர்கள், அமைச்சர், படைத்தலைவர் போன்ற அதிகாரிகளின் புதல்வர்களும் இன்னிசை கருவிகளுடன் அமைதியாக தேவாரம் கற்றுக்கொண்டதும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேவாரத்தை பயிற்றுவித்த ஆசிரியரான குரு சர்வசிவ பண்டிதருக்கும்
அவரின் சீடர்களாக இருந்த ஆரிய தேசம், மத்திய தேசம், கௌட தேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும்
நிறைந்த அளவான ஆடல்வல்லான் எனும் மரக்காலால் ஆண்டுதோறும் 2000 கல நெல்லை தட்சணையாக க் கொடுத்தார் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது .

இந்த உத்தரவானது சூரிய சந்திரர் உள்ள அளவும் நிலை பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்த கல்வெட்டை செம்பியன் விழுப்பத்தரையன் என்பவன் எழுதியிருக்கிறான்.

இதில் சுவையான செய்தி அந்தக் கல்லூரியில் தேவாரம் பயிற்றுவித்த சர்வசிவ பண்டிதர் தமிழ் நாட்டை சேர்ந்தவராகத் தெரியவில்லை.
அவரது சீடர்களும் வட புலத்தை சேர்ந்தவராகவே உள்ளனர்.

இடைக்காலச் சோழர் காலத்திய சைவம் பாசுபதம், காளாமுகம், ஆகிய பல பிரிவுகளுடன் படர்ந்து இருந்தது தெரியவருகிறது .

சோழ நாட்டுடன் அன்றைய இந்தியாவின் பல வட மாநிலங்களும் ஆன்மீக ரீதியில் தொடர்புடன் விளங்கியது தெரியவருகிறது.
வட மாநிலத்தவரும் நமது தேவாரம் முதலியவற்றை பயிற்றுவிக்கும் விதத்தில் அவைகளை நன்கு பயின்றிருந்தனர் என்பதும் தெரிகிறது .

[கல்வெட்டு செய்தி:
முனைவர் ஜெகதீசன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டு இயல் கூறுகள்
பக்கம் 89]

பதிவர்: Annamalai Sugumaran

Wednesday, 18 December 2019

ஆந்திரா கோவில்களில் தமிழ்






















ஆந்திரா கோவில்களில் தமிழ்

 "திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி பாடக் கூடாது" என்று தீட்சிதர்கள் கூறியதை நியாயப்படி சாதிப் பிரச்சனை ஆக்காமல்
 அப்படியே திசைதிருப்பி "தமிழை நீசபாசை என்றுவிட்டான் பார்ப்பான்" என்று மொழிப் பிரச்சனை ஆக்கி பொய்ப் பிரச்சாரம் செய்தே அரசியல் செய்தனர் வந்தேறிகள்.

 இதன்மூலம் தினமும் தமிழில் ஓதும் தில்லை அந்தணர்களான தீட்சிதர்களை தமிழுக்கு எதிரானவர்களாக காட்டிவிட்டனர்.

 ஆனால்
 தமிழர் பகுதியாக இருந்து ஆந்திராவுக்கு போய்விட்ட எல்லை மாவட்டங்களில்
 தமிழர்களால் கட்டப்பட்டு தெலுங்கர் கைக்கு போய் முழுக்க சமஸ்கிருத மயமாகிவிட்ட வைணவக் கோவில்களில்
 இன்றும் விடாமல் தமிழில் ஓதிவரும் பார்ப்பனர் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?


 திருப்பதி உட்பட
அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர கோவில்,
 நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில்,
 தாலப்பாக்கம் சென்னகேசவ சுவாமி கோவில்,
 தேவுணிகடப்பா சித்தீஸ்வர கோவில் மற்றும் லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஜம்மலமகுடு வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 பித்தாபுரம் பத்மாவதி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஆகிய 10 கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாதம் ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் எழுதிய தமிழ்ப் பாசுரங்கள் ஓதப்படும்.

 தெலுங்கர் வருகைக்கு முன் தாய்லாந்து சென்ற பார்ப்பனர்கள் இன்றுவரை தமிழில்தான் ஓதுகின்றனர்.

 தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினப் பார்ப்பனர் தமிழுக்கு எதிரி இல்லை!

 படம் உதவி: Karthikeyan Rathinavelu

Thursday, 30 August 2018

பெறாத பெற்றோர்

பெறாத பெற்றோர்

நேற்று உறவினர்கள் கூடி  எங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று எங்கள் மகளுக்கு மொட்டை போட்டு தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தினோம்.
சர்க்கரைப் பொங்கலிட்டு அனைவருக்கும் அளித்து உண்டோம்.
தமிழர் பண்பாட்டில் காதுகுத்து சடங்கானது மிக முக்கியமான ஒன்றாகும்.

இது கிறித்துவர்களின் ஞானஸ்நானம் (baptism),
யூதர்களின் பிரிட் மிலா (brit milah) மற்றும்
சீனர்களின் காண் டீ (gan die) அல்லது கை மா (kai ma) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

அதாவது ஒரு குழுந்தைக்கு பெற்றோருக்கு அடுத்த நிலையில் ஒரு உறவை நியமிப்பது.
அவர் அந்த குழந்தையின் "பெறாத  பெற்றோர்" ஆவார்.

தமிழர் பண்பாட்டில் இந்த உறவு "தாய்மாமன்" ஆவார்.

பெற்றோருக்கு அடுத்து ஒரு குழந்தையைக் காக்கும் பொறுப்பு தாய்மாமனுடைது ஆகும்.

தாய்மாமனிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து சுற்றத்திற்கு அதனை அறிவிக்கும் சடங்குதான் தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தும் விழா.

கிறித்துவ நாடுகளில் குழந்தைக்கு ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு அளித்து குழந்தையின் god father ஆக ஒருவர் நியமிக்கப்படுவார். (பெண் என்றால் god mother).
இந்த ஞானத் தந்தை குடும்ப உறுப்பினராகவோ அல்லது குடும்ப நண்பராகவோ இருக்கலாம்.

யூத மத வழக்கத்தில் சன்டெக் (santek) என்று அழைக்கப்படும் "பெறாத பெற்றோர்" மடியில் வைத்து குழந்தையின் ஆணுறுப்பின் முன்தோல் அகற்றும் சடங்கு நடக்கிறது.

சீனரில் அனைத்து மதத்தினரும் பெறாத பெற்றோர் நியமிக்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.
ஆனால் பெரும்பாலும் தாத்தா பாட்டி அல்லது வயது முதிர்ந்தோரை நியமிக்கின்றனர்.

நமது வளைகாப்பு சடங்கு ஐரோப்பிய நாடுகளில் Baby shower எனும் சடங்குடன் ஒத்துப் போகிறது என்பது கூடுதல் தகவல்.

நகர்ப்புறங்களின் மறைந்துவரும் இத்தகைய சடங்குகளை அதன் முக்கியத்துவம் உணர்ந்து அழியாமல் காப்பது நமது கடமையாகும்.

Monday, 20 August 2018

வன்னியர் பறையர் இணைந்து வணங்கும் கொடைக்காரியம்மன்

வன்னியர் பறையர் இணைந்து வணங்கும் கொடைக்காரியம்மன்

தர்மபுரி , நாயக்கன்கொட்டாய் இளவரசன் திவ்யா காதல் திருமணத்திற்குப் பிறகு நடந்த கலவரங்கள் சம காலத்தில் தமிழகத்தை அதிரவைத்ததாகும்.

இரு சாதிகளிடையே முரண்பாடுகள் அதிகரித்த பின்னரான சூழலிலும் அங்குள்ள “கொடைகாரியம்மன்” திருவிழா பல இடர்ப்பாடுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் இன்றும் நடந்து வருகிறது.

இன்றும் அத்திருவிழா இணக்கமாக நடந்திடக் காரணமே அக்கோயிலின் தெய்வமான கொடைகாரியம்மன் பறையர்களுக்கும் வன்னியர்களுக்கும் பொதுவான குலசாமி என்பதாலேதான்.

அவ்வூர்களில் இரண்டு சாதிகளிலும் கொடைகாரி, கொடைகாரன் என்ற பெயர்களில் பலர் இருப்பதைக் காணலாம்.

நாய்க்கன்கொட்டாய் கலவரத்தைப் பற்றிய ஆய்வைச் செய்த திரு.ச.சிவலிங்கம் அவர்கள் கொடைகாரியம்மன் திருவிழாவைப் பற்றி பின் வருமாறு எழுதுகின்றார்….

“ஆண்டு தோறும் காணும் பொங்கல் தினத்தன்று கொடைகாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
நத்தம் காலனியிலிருந்து கொடைகாரியம்மனை கரகமாக அலங்காரித்து தலையில் சுமந்து செல்வார் பூசாரி (பறையர்).
முதலில் பறையர் சாதியினர் பூசை செய்து வழிபாடு செய்வார்கள்.
பின்னர் வன்னியர் சாதியினர் பூசை செய்து வழிபாடு செய்வார்கள் (அதே பறையர் சாதி பூசாரி மூலமாக).

கொடைகாரியம்மனின் ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக ஊர்மக்கள் (பறையர் சமூகம்) சார்பாக ஓர் ஆட்டுக்கிடா முதல் பலியாகக் கொடுக்கப்படும்.

பின்னர் பிரார்த்தனை செய்பவர்கள் பலி கொடுப்பார்கள்.
அதே போல் ஊர்வலம் கோயிலை அடைந்த பிறகும் ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படும்.
அவ்வூரைச் சேர்ந்த வன்னியர் மற்றும் பறையர் மக்கள் அவர்கள் எங்கு குடியேறி வாழ்ந்து வந்தாலும் அத்திருவிழாவிற்கு கூடிவிடுவார்கள்.
அவ்வாறு ஆயிரக்கணக்கான பறையர், வன்னியர் மக்கள் அங்கு கூடுவார்கள்.

அன்று அவ்விரு மக்களின் மனங்களில் எல்லையில்லா ஆனந்தம் கூத்தாடுவதைக் காணலாம்.
காலங்காலமாக மனவுணர்வைக் கிழித்துப் புண்ணாக்கியிருக்கும் சாதியிலிருந்து அந்த நாளில் கொடைகாரியம்மன் விடுதலையளித்துவிடும் அடையாளமாக அந்தத் திருவிழா நிறைவு பெறும்”

நன்றி :- காளிங்கன்

Thursday, 1 February 2018

வெறியாடும் முருகனுக்கு கிடாய் விருந்து

வெறியாடும் முருகனுக்கு கிடாய் விருந்து

சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ

[சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பரப்பி,
ஆட்டுக் கிடாயை அறுத்து,
கோழிக் கொடியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி]

ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்

[ஊர்தோறும் கொண்டாடப்படும் பெருமையுடைய விழாவிலும்,
அன்புடைய பக்தர்கள் வழிபட்டு போற்றும் பொருத்தமான இடத்திலும்]

வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்

[வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் 'வெறியாடு' களத்திலும், காட்டிலும், சோலையிலும், அழகான (தீவு போன்ற) ஆற்றிடைக்குறையிலும்,
ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும்]

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்

[நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும், மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியிலும், புதுமலர்களை உடைய கடம்பு மரத்தினடியிலும், ஊரின் நடுவில் உள்ள மரத்தினடியிலும், அம்பலத்திலும், கந்து நடப்பட்டுள்ள இடத்திலும்]

மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐதுஉரைத்து

[சிறப்பான முதன்மை பொருந்திய கோழிக் கொடியைப் பொருத்தமாக நிறுத்தி,
நெய்யுடன் வெண்மையான சிறு கடுகினைக் கலந்து அப்பி,
(முருகனின் பெயரை) மென்மையாக உரைத்து]

குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇ
செந்நூல் யாத்து வெண்பொறி சிதறி

[இரு கைகளையும் கூப்பி வணங்கி,
வளம் பொருந்திய செழுமையான மலர்களைத் தூவி,
வெவ்வேறு நிறமுடைய இரு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து,
கையில் சிவப்பு நூல் (காப்பு நூலாக) கட்டப்பெற்று,
வெண்மையான பொரியைத் தூவி]

மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ

[வலிமை வாய்ந்த ஆட்டு கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான பிரப்பு அரிசியை பலி அமுதாக பல இடங்களில் வைந்து]

சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி

[சிறு பசுமஞ்சளையும் நல்ல நறுமணப் பொருள்களையும் பல இடங்களில் தூவித் தெளித்து,
செவ்வரளி மலரால் ஆகிய மாலையை சீராக நறுக்கி கோயிலைச் சுற்றித் தொங்கவிட்டு]

நளிமலைச் சிலம்பில் நல்நகர் வர்த்திதம்
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க

[செறிவான மலைப் பக்கங்களிலுள்ள ஊர் வாசிகள் அனைவரும் (முருகனை) வாழ்த்திப் பாடுகின்றனர்,
மணப் புகையை எடுத்து ஆராதனை செய்கின்றனர்,
குறிஞ்சிப் பண்ணில் இயற்றப்பெற்ற பாடல்களைப் பாடுகின்றனர்,
மலை மீதிருந்து விழும் அருவியின் ஓசைக்கேற்ப இசைக் கருவிகளை ஒலிக்கின்றனர்]

உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினைப் பரப்பி குறமகள்
முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க
முருகுஆற்றுப்படுத்த உருகெழு வியல்நகர்

[பல்வேறு வடிவமுடைய அழகான பூக்களைத் தூவுகின்றனர்,
காண்பவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் இரத்தத்தோடு கலந்த தினை அரிசியைப் பரப்பி வைத்துள்ளனர்,
முருகனுக்கு விருப்பமான இசைக் கருவிகளைக் குறமகள் இயக்குகிறாள்,
மாறுபட்ட உள்ளம் உடையவர்களும் அஞ்சுமாறு அந்த சூழ்நிலை அமைகிறது,
இவ்வாறு இருந்தது அந்த அகன்ற ஊர்]

- திருமுருகாற்றுப்படை (218 - 244)

நன்றி: kaumaram .com

Tuesday, 8 August 2017

புதியதொரு தமிழர் மதம், பழமையில் இருந்து.

புதியதொரு தமிழர் மதம், பழமையில் இருந்து.

பாவாணர் எழுதிய 'தமிழர் மதம்' எனும் நூலின் முதல் பகுதி

சமயம் என்பதன் வேர்ச்சொல் சமைதல்.
அதாவது முதிர்ச்சி அடைதல், பருவமடைதல், பக்குவமடைதல்.

கடவுள் என்பதன் வேர்ச்சொல் கடத்தல். அதாவது அனைத்தையும் கடந்து நிற்பது.

மதம் என்பதன் வேர்ச்சொல் மதித்தல். மரியாதை செலுத்துதல்.

தெய்வம் என்பதன் வேர்ச்சொல் தீ.
அழிவை ஏற்படுத்துவது. கட்டுப்படுத்தினால் நன்மை விளைவிக்கும்.

நாகரிகமற்று மாந்தர் வாழ்ந்த நிலையில் கொல்லும் தன்மையுடைய எல்லாவற்றையும் உயிர் அச்சம் காரணமாக தெய்வமென கருதி அதற்கு படையலிட்டு வணங்கத் தொடங்கினர்.
இதுவே மதம் உருவாகும் தொடக்கமாகும்.
பிறகு தமக்கு நன்மை செய்வனவற்றை நன்றியுணர்வினால் வணங்கத் தொடங்கினர் (கதிரவன், திங்கள், மரங்கள், ஆறு).

தனது மக்களைக் காக்க  உயிர் துறந்த மறவர்களையும் பாராட்டும் விதமாக வழிபடத் தொடங்கினர் (நடுகல்)
பிறகு தம்மை பாதுகாத்து வழிநடத்திய தலைவனை வணங்கத் தொடங்கினர் (இந்திரன்).

கொள்ளைநோய், பஞ்சம், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற புரிந்துகொள்ள முடியாத அழிவுகளுக்கு கண்ணுக்குப் புலப்படாத தெய்வத்தை வணங்கத் தொடங்கினர்.

முதலில் குறிஞ்சியில் மட்டும் வாழ்ந்த மாந்தர் பிற திணைகளுக்கும் பரவினர்.
பிறகு திணைக்கு ஒரு தெய்வம் தோன்றியது. (மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை)

அதாவது பாவாணர் கூற்றுப்படி,
உயிர் அச்சம் காரணமாக கொல்லும் தன்மை உடையவற்றையும்
தான் உயிர்வாழ உதவுவற்றையும்
வணங்குவது படையல் செய்வது மூலம் தன்னை தற்காத்துக் கொள்தல் சிறுதெய்வ வணக்கமாகவும்

நன்றி உணர்வால் திணைத் தலைவர்கள் இறந்த பிறகும் அவர்களை மறவாமல் நினைவு கூறுதல் பெருந்தேவ மதமாகவும் உருவாயின

  புரிந்துகொள்ள முடியாத அழிவுகளையும் அற்புதங்களையும் நிகழ்த்தும் கண்ணுக்கு புலப்படாத ஆற்றல் ஏற்படுத்தும் பேரழிவின் மீதான அச்ச உணர்வால் தன் தனிப்பட்ட வாழ்க்கையை சீரமைத்து ஒழுக்கமாக வாழ்வது கடவுள் சமயமாகவும்

அதாவது தற்காப்பை அடிப்படையாகக் கொண்ட (1)சிறுதெய்வ வணக்கம்

(தலைமைக்கு) கீழ்படிதலை அடிப்படையாகக் கொண்ட (2)பெருந்தேவ மதம்

(கண்ணுக்கு புலப்படாததால் ஏற்பட்ட) புரியாமையை அடிப்படையாகக் கொண்ட (3)கடவுள் சமயம் என மூன்றுவகை வழிபாடுகளும் குமரிக்கண்ட காலத்திலேயே அனைத்து தமிழர்களாலும் கடைபிடிக்கப்பட்டன என்று பாவாணர் கூறுகிறார்.

இதில் பெருந்தேவ மதமான திணைத் தலைவர் வழிபாட்டில் இரண்டு நன்கு வளர்ச்சியடைந்து சைவமாகவும் வைணவமாகவும் சம காலத்தில் உருவானதாக பாவாணர் கூறுகிறார்.
மாயோன் திருமாலாகவும் சேயோன் சிவனாகவும் ஆகி இரண்டு மதங்கள் உருவாயின. (2:1 மற்றும் 2:2)
(இதில் வைணவமே சைவத்தை விட தமிழுக்கு நெருக்கமானது என்கிறார் பாவாணர்)

இந்த நூலில் மேற்கொண்டு மதங்களின் வளர்ச்சி மற்றும் திரிபு பற்றி விரிவாகக் கூறுகிறார்.
அதனால் முதல் பகுதியில் உள்ள பழமையான வழிபாட்டு முறைகள் பற்றிய முக்கியமான கருத்துகளை மட்டும் மேலே தெரிவித்துள்ளேன் .
இதிலிருந்து எனக்கு தோன்றுவதை இங்கே எழுதுகிறேன்.

(1) சிறுதெய்வ வணக்கம்
இது தனி மதம் கிடையாது. வணக்கம் மட்டுமே.
இது பேய், ஆவி, அணங்கு(மோகினி), பூதம் போன்ற மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
உயிரைக் காக்கும் இயற்கை அம்சங்களை வணங்குவதும் உண்டு.
(இதுவே பழமையான வழிபாட்டு முறை, நாகரிகம் வளராத காலகட்டம்)

(2) பெருந்தேவ மதம்
தலைமை தாங்கிய ஒருவர் இறந்த பின்னும் அவரை நினைவு கூர்ந்து அவர் காட்டிய வழியில் நடப்பது.
பத்தினி வழிபாடும் இதில் உள்ளது.
(இரண்டாவது வழிபாட்டு முறை திணைவழி நாகரிக காலகட்டம்)

(3) கடவுட் சமயம்
கண்ணுக்குத் தெரியாத ஒன்று தம்மை கண்கானிப்பதாகவும் உலகை இயக்குவதாகவும் நினைப்பது அதனால் தமது வாழ்க்கை முறையில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது.
(மூன்றாவது வழிபாட்டு முறை, நாகரிகம் நன்கு வளர்ந்துவிட்ட காலகட்டம், இன்றைய மதங்கள் பெரும்பாலும் இந்த சிந்தனையைத் தழுவியவையே.
தற்போது நாகரீகமும் அறிவியலும் பல மடங்கு வளர்ந்துள்ள நிலையில் அதற்குத் தகுந்த ஒரு சமயம் இன்னும் உருவாகவில்லை.
அதை நாம் உருவாக்கவேண்டும்.)

தமிழர்கள் இம்மூன்றையும் கடைபிடித்து இன்றும்கூட வருகின்றனர்,
ஆனால் ஒன்றோடு ஒன்றைக் குழப்பி.

முதல் வழிபாடான சிறுதெய்வ வணக்கம் பல பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் முக்கியமாக இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது
முதலாவது அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது (1:1)
இரண்டாவது நன்றியை அடிப்படையாகக் கொண்டது (1:2)

(1:1) பாம்பை வணங்குவது, தீயை வணங்குவது, ஆவி வரவழைத்து படையலிடுவது சிறுதெய்வ வணக்கம்.
அதாவது சிறுதெய்வ வணக்கத்தின் அச்சத்தின் மீதான அம்சம்.
குலதெய்வ வழிபாடும் இதிலிருந்து பிரிந்ததே.
(நடுகல் வழிபாடு குலதெய்வ வழிபாட்டுடன் குழப்பப்படுகிறது.
நடுகல் வழிபாடு இறந்தவரை அழைப்பதில்லை நினைவுகூர்தல் மட்டுமே)
ஆவிகளை கடவுளாக நினைப்பது அல்லது திணைத்தலைவராக உருவகப்படுத்துவதும் தவறு.

(1:2) ஆறு, மரம், கதிரவன் என உயிரைக் காக்கும் இயற்கை அம்சங்களை வணங்குவதும் இதிலிருந்தே வந்தது.
நடுகல் வழிபாடும் இதிலிருந்தே வந்தது.
காவல்மரம் ஒன்றை அரசன் பாதுகாத்தலும் இதிலிருந்து வந்ததே.
சிறுதெய்வ வணக்கத்தின் இந்த நன்றியுணர்வு அம்சம்தான் உண்மையில் பகுத்தறிவின் படி அமைந்துள்ளது.
அதாவது மரத்தை வணங்குவது, மாட்டை வணங்குவது, கதிரவனை வணங்குவது, நிலவை வணங்குவது போன்றவை.
(இதையே நாம் தனி மதமாக உருவாக்கவேண்டும்)

(2) கோவிலுக்குப் போவது சைவ படையல் படைப்பது பெருந்தேவ மதம் (அல்லது பெருந்தெய்வ வழிபாடு)
அந்த பெருந்தெய்வத்தை கடவுளாக நினைத்து இதுவே கடவுள் சமயம் என்று குழப்பப்படுகிறது.
திணைத் தலைவரான பெருந்தெய்வத்தை கடவுளாக நினைப்பதும் தவறு.
ஏனெனில் கடவுளுக்கு உருவம் கிடையாது.
திணைத் தலைவர் ஒரு கடந்த கால நினைவு மட்டுமே.
அவர் ஒரு வழிகாட்டி முன்மாதிரி அவ்வளவுதான்.
நிகழ்காலத்தில் அவர் ஆவியாக வருவதோ நிகழ்வுகளை வகுப்பதோ கிடையாது.

(3) தமிழரின் உண்மையான சமயம் கண்ணுக்குத் தெரியாத உருவமற்ற கடவுளை மனத்தில் வைத்து வணங்குவதே.
அது தம்மை கண்காணிப்பதாக நினைத்துக்கொண்டு ஒழுக்கமாக வாழ்வதே.

மேற்கண்ட மூன்று மதங்களும் ஒன்றுடன் ஒன்று குழம்பி இன்று எதுவுமே சரியாகக் கடைபிடிக்கப் படவில்லை.

அறிவியல் நன்கு வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றுக்கும் மேலே இருந்து ஒரு சக்தி நம்மை ஆட்டிவைப்பது இல்லை என்பது தெரிந்துவிட்டது.
பேரழிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதும்
உயிரினங்கள் எப்படி தோன்றி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டன.

ஆக நமது ஆதிகால வணக்கத்தில் அச்ச உணர்வினால் நாம் செய்த வழிபாடுகளை (பாம்பு வணக்கம், ஆவி வணக்கம், நெருப்பு வணக்கம்) தவிர்த்துவிட்டு
நன்றியுணர்வினால் நாம் செய்த வழிபாடுகளை (மரம், ஆறு, மலை, நடுகல் வணக்கம்) பின்பற்றி புதியதொரு மதத்தை உருவாக்க வேண்டும்.
அதாவது 1:1 ஐ விட்டுவிட்டு 1:2 ஐ பின்பற்றவேண்டும்.

நமக்கு உயிரளிக்கும் ஐம்பூதங்களையும் வணங்கவேண்டும்.

வணங்குதல் என்றால் வணக்கம் தெரிவித்தல் அதாவது மரியாதை செலுத்துதல்.
ஐம்பூதங்களை அதாவது இயற்கையை எப்படி மதிக்கலாம்?
அதை பாதுகாப்பதன் மூலம் அதற்கான மரியாதையைச் செலுதுதலாம்.

மக்களுக்காக வீரமரணம் அடைந்தோரை நடுகல் நட்டு வழிபடவேண்டும்.
வழிபடுதல் என்றால் அவர் காட்டிய வழி நடத்தல்.

மற்றபடி எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புகிற கடவுள் சமயமும் ஒரு மூடநம்பிக்கையே.
இறந்தவர் திரும்புவார் என்று நம்புதலும் மூடநம்பிக்கையே.
(இவ்விரண்டையும் தவிர்க்கும் வழிபாட்டினை நம்பா மதம் என்கிறார் பாவாணர்)
நாம் நம்பா மதத்திற்கு மாறி இத்தகைய மூடநம்பிக்கைகளைக் கைவிடுதல் வேண்டும்.
இறை அல்லது ஆவி மீது பக்தி செலுத்துவதன் மூலமும் காணிக்கை கொடுப்பதன் மூலமும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் நமக்கு சாதகமாக மாற்றலாம் என்ற எண்ணத்தையும் பேராசையையும் அடியோடு கைவிட வேண்டும்.

சுருங்கக்கூறின்,
கடவுள் வழிபாட்டிற்கு செய்யப்படும் அத்தனை செயல்களும் இயற்கையைக் காக்க செய்யப்படவேண்டும்

குலதெய்வ வழிபாடு என்று செய்யப்படுபவை நடுகல் நடப்பட்ட மாவீரருக்கு செய்யப்படவேண்டும்.

தம்மை கண்கானிக்க மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பி
அதன் மீதான அச்சத்தில் ஒழுக்கமாக வாழ்வதை விட தமது மனசாட்சி படி ஒழுக்கமாக வாழ்தல் வேண்டும்.

மேலும் அறிய,

தேடுக: தமிழருக்கு (மட்டும்) உரித்தான மதம் வேட்டொலி

தேடுக: பொங்கலும் இறைமறுப்பும் வேட்டொலி