Showing posts with label இராசராசன். Show all posts
Showing posts with label இராசராசன். Show all posts

Sunday, 9 October 2022

தமிழ்நாட்டான் இராசராசன்

தமிழ்நாட்டான் இராசராசன்

புது சங்கி:- ராஜராஜ சோழன் காலத்தில் தமிழ்நாடே கிடையாது !

பழைய சங்கி:- சும்மா இருடா! வாங்குன வர போதும்!

தமிழன்:- அப்பவும் தமிழ்நாடு இருந்தது! இராசராசன் பெருமைகளைச் சொல்லும் (மெய்கீர்த்தி) அவனது ஆட்சிக்காலத்து கல்வெட்டில்  இராசராசனை தமிழ்நாடன் என்று கூறிய சான்று உள்ளது.

"..தண்டமிழ் நாடன் சண்ட பராக்கிரமன் திண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான் செந்திரு
மடந்தை மன் ஸரீராச ராசன்.."

இடம் : வீரட்டானேசுவரர் கோவில், திருக்கோயிலூர் வட்டம், கீழுர். 
கல்வெட்டு எண்: (No.863. S.I.I. Vol. VII.)

Tuesday, 21 January 2020

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

தஞ்சை பெரியக்கோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழன் கல்வெட்டு, தேவாரம் பயிற்றுவித்த ஆசிரியருக்கு தந்த குருதட்சணையை விவரிக்கிறது.

இது அவரது 19 ஆட்சியாண்டில் அதாவது கி பி 1031 இல் வெட்டப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் " திருமன்னி வளர " என்று தொடங்கும் நெடிய மெய்க்கீர்த்தி தொடரில் இந்த செய்தியும் இடம்பெறுகிறது .

இராசேந்திர சோழன் தனது 19 வது ஆட்சியாண்டில் 242 ம் நாளில் இந்த கொடை உத்தரவை பிறப்பித்தார்.
அதில் கங்கைகொண்ட சோழபுரத்து கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் முடிகொண்ட சோழன் திருமாளிகையின் வடபக்கத்தில் தேவாரம் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்று இயங்கியதும்
அக்கல்லூரியில் அரசர்களின் புதல்வர்கள், அமைச்சர், படைத்தலைவர் போன்ற அதிகாரிகளின் புதல்வர்களும் இன்னிசை கருவிகளுடன் அமைதியாக தேவாரம் கற்றுக்கொண்டதும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேவாரத்தை பயிற்றுவித்த ஆசிரியரான குரு சர்வசிவ பண்டிதருக்கும்
அவரின் சீடர்களாக இருந்த ஆரிய தேசம், மத்திய தேசம், கௌட தேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும்
நிறைந்த அளவான ஆடல்வல்லான் எனும் மரக்காலால் ஆண்டுதோறும் 2000 கல நெல்லை தட்சணையாக க் கொடுத்தார் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது .

இந்த உத்தரவானது சூரிய சந்திரர் உள்ள அளவும் நிலை பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்த கல்வெட்டை செம்பியன் விழுப்பத்தரையன் என்பவன் எழுதியிருக்கிறான்.

இதில் சுவையான செய்தி அந்தக் கல்லூரியில் தேவாரம் பயிற்றுவித்த சர்வசிவ பண்டிதர் தமிழ் நாட்டை சேர்ந்தவராகத் தெரியவில்லை.
அவரது சீடர்களும் வட புலத்தை சேர்ந்தவராகவே உள்ளனர்.

இடைக்காலச் சோழர் காலத்திய சைவம் பாசுபதம், காளாமுகம், ஆகிய பல பிரிவுகளுடன் படர்ந்து இருந்தது தெரியவருகிறது .

சோழ நாட்டுடன் அன்றைய இந்தியாவின் பல வட மாநிலங்களும் ஆன்மீக ரீதியில் தொடர்புடன் விளங்கியது தெரியவருகிறது.
வட மாநிலத்தவரும் நமது தேவாரம் முதலியவற்றை பயிற்றுவிக்கும் விதத்தில் அவைகளை நன்கு பயின்றிருந்தனர் என்பதும் தெரிகிறது .

[கல்வெட்டு செய்தி:
முனைவர் ஜெகதீசன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டு இயல் கூறுகள்
பக்கம் 89]

பதிவர்: Annamalai Sugumaran

Saturday, 27 July 2019

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை - வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை
- வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

** ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாச்சேரி என்றும் பறைச்சேரி எனவும் தனித்தனியாக குறிக்கப்படுள்ளது **

** விஜயநகர காலத்திற்கு பின்புதான் (நாயக்கர் ஆட்சியில்) பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டனர் **

**  சோழர் வழங்கிய நிலதானங்களில் 20% தான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது **

---------------

வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார் அவர்கள்,
""பிறகாலச் சோழர் கால வாழ்வியல்",
"சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்",
"தமிழகத் தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும்"
உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.

ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் மே.து.ராசுகுமார்.

சமீபத்தில் "சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம் நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான்"
என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.

இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.

"ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ,
அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள்.
அதனை நாம் மறுத்துவிட முடியாது.
எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்கவேண்டும்.
அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது.

வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது.
அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது.
இதன் மூலமாக உற்பத்தி பெருகியது.

உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது.
உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது.

ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின்,
இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது"
என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.

பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார்,

"தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. 
ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால் பறையர்கள் தீண்டப்படாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்?
எனவே பறையர்கள் அந்த காலத்தில் தீண்டப்படாதவர்களாக இல்லை எனலாம்.

அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டப்படாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம்.
அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக இருந்திருக்கலாம்.

விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு" என்கிறார்.

மேலும்,
"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன.
பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார்.
அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது.

அதில்,
'சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில்
வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்'
என்று கூறியுள்ளார்.

பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை.
பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் "
என்று கூறும் ராசுக்குமார் மேலும் விளக்குறார்....

"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் முழு உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை.
பங்குதான் தரப்பட்டது.
அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது.

இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கெனவே இருந்த  குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல்.

சரி.
இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும்.
'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல.
வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது,
யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'.
அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள்.
இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

மற்றொருவகை 'குடிநீங்கா பிரமதேயம்'.
ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.

குடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள்.
ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை"
என்ற மே.து.ராசுக்குமார்,

ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை மேலும் விவரிக்கிறார்...

"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.
அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை.

அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்."
என்கிறார் ராசுக்குமார்.

நன்றி:
ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி
- மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்
11 ஜூன் 2019

Friday, 26 July 2019

தெலுங்கரின் எமன்

தெலுங்கரின் எமன்

இராசராசனுக்கு "தெலுங்கரின் எமன்" என்று பொருள்படும் வகையில் "தெலுங்கு குல காலன்" என்கிற பட்டம் இருந்ததா?!

ஆம்!

புதுக்கோட்டை க்கு வடக்கே உள்ளது நார்த்தமலை.
  இங்குள்ள திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாதையில் உள்ள கல்வெட்டு குலோத்துங்க சோழனின் 27 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது.
இதில்,
'இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்துப் பள்ளிவயல்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

  கி.பி. 1431 ஆம் ஆண்டைச் சேர்ந்த இன்னொரு கல்வெட்டும் உண்டு.
இதிலும்,
"கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணம்" குறிக்கப்பட்டுள்ளது.

சோழர் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பு 'மாவட்டம்' என்பதைப் போன்று 'வளநாடு' என்ற பெயரால் வகை பிரிக்கப்பட்டு ஆளப்பட்டன.
அப்படியான "இரட்டைபாடி கொண்ட சோழவளநாடு" எனும் மாவட்டத்தில் "தெலுங்க குல கால புரம்" எனும் ஊர் இருந்துள்ளது.
இதுவே இன்றைய நார்த்தமலை.

இது குலோத்துங்கன் காலத்தில் "குலோத்துங்க சோழ பட்டணம்" என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது.

(சான்று நூல்: சமணமும் தமிழும்
நூலாசிரியர்: மயிலை.சீனி. வேங்கடசாமி )

தந்தை வழியில் சாளுக்கியனான குலோத்துங்கன்,
தெலுங்கரை சோழர் அழித்ததை விரும்பவில்லை போலும்!

முதலாம் கல்வெட்டில் "இரட்டைபாடி கொண்ட" என்று உள்ளது.
இப்பட்டம் இராசராச சோழனுக்கு உரியதாகும்.

இரண்டாம் கல்வெட்டில் "கடலடையாது இலங்கை கொண்ட" என்றும் உள்ளது.
இது இராசராசன் கடல் தாண்டாமல் தன் மகனை அனுப்பி ஈழத்தைக் கைப்பற்றியதைக் குறிப்பிடுகிறது.

ஆக இந்த "தெலுங்ககுல கால புரம்"  இராசராசன் புதியதாக நிறுவிய நகரமாக இருக்கலாம்.

Tuesday, 24 July 2018

இராசராச சோழன் சிலை போலி

இராசராச சோழன் சிலை போலி


 ஆம்.

இராசராசன் சிலை தமிழகம் மீண்டது எனும் செய்தி தரும் சிறு மகிழ்ச்சியாவது என் இனத்திற்குக் கிடைக்கட்டுமே என்று இதுவரை அமைதியாக இருந்தேன்.


 ஆனால், நம் அறிவு எங்கே செல்கிறது?!


 அனைவரும் ஜோசியத்தில் இறங்கிவிட்டோம்.


 சோழன் வந்துவிட்டான்.

காவிரி வத்துவிட்டது.

2000 ஆண்டுகள் முன் கரிகாலன்.

1000 ஆண்டுகள் முன் ராசராசன்.

 இப்போது சோழன் மறுபடி வருவான் என்றெல்லாம் ஆருடம் நீள்கிறது.


 நாம் பழமை பேசிக் கெட்ட இனம் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த உண்மையை இப்போது போட்டுடைக்கிறேன்.


 ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை பெரியகோவிலின் ஶ்ரீகார்யமாக 'பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்' என்பவர் இருந்தார்.


 இவர் 1010-ல் ராஜராஜ சோழனுக்கு 74 செ.மீ [2.43 அடி] உயரத்திலும்

 மற்றும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கு 53 செ.மீ. [1.74 அடி] உயரத்திலும் செப்புச் சிலைகளை செய்துள்ளார்.


 ராஜராஜனும் தேவியும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம்.


 ஆனால், இப்போது மீட்கப்பட்டுள்ள சிலைகளின் உயரமோ மாறுபடுகிறது. 


 ராசராசனின் சிலையினுடைய உயரமோ 1 செ.மீ குறைகிறது.

 உலகமாதேவி சிலை உயரமோ 2 செ.மீ வரை குறைகிறது அத்துடன் வணங்கிய நிலையிலும் இல்லை.


 சிலைகள் மட்டுமின்றி ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்துள்ளார் ஶ்ரீகார்யம்.


 இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன்றைக்கும் பேசுகிறது. 


 தற்போது மீட்கப்பட்ட சிலை ராசராசன் சிலை என்பதற்கு நாகசாமியின் புத்தகத்தை ஆதாரமாகக் காட்டுவோர்,

 ஏற்கனவே குஜராத் சென்ற தமிழகத்தின் குழு அப்போதைய முதலமைச்சர் மோடியிடம் கேட்டு சிலையைப் பெறும் கடைசி நேரத்தில் அக்குழுவில் ஒருவராக இருந்த நாகசாமி உயரத்தை அளந்து பார்த்துவிட்டு இந்த சிலை இல்லை என பல்டி அடித்தார் என்பதை மறக்கவேண்டாம்.

 

(தகவல்களுக்கு நன்றி: சிலை சிலையாம் காரணமாம் - 22 

- தி ஹிந்து 05.08.2016)


 நாம் பழமையில் மூழ்கி இன்றைய இழிநிலையை மறக்கமுயல்கிறோம்.

 

 நாம் பழைய வரலாற்றில் பெரிய சாதனைகள் செய்தோம்தான்.

 ஆனால் நாம் மட்டுமே பெரிய பிடுங்கி இல்லை.


 பாரோ மன்னர்கள் கட்டிய பிரமீடு முன்பு இராசராசன் கட்டிய பெரியகோவில் ஒன்றுமேயில்லை.


 சைருஸ் எழுப்பிய பாரசீகப் பேரரசுக்கு முன் சோழப் பேரரசு ஒன்றுமேயில்லை.


 நம்மை காக்க சோழனும் வரப்போவதில்லை எவனும் வரப்போவதில்லை.


வரலாறு அறிக!

அத்துடன் நடைமுறையும் உணர்க!

தமிழ் இனமாக எழுக!

Tuesday, 25 October 2016

தேவரடியாரும் தேவதாசிகளும்!


தேவரடியாரும் தேவதாசிகளும்!

-சில கல்வெட்டுச் சான்றுகள்
ம.செந்தமிழன்

இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட, விஜயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.

இன்றைக்குத் தமிழகத்தில் வாழும் சாதி வழிப்பட்ட ஆந்திர, கன்னட மூதாதையர்களின் குலத்தவரைக் குறிக்கவில்லை. அவர்களை ‘திராவிடர்’ என அழைப்பது தவறானதும், வரலாற்று நோக்கம் அற்றதும் என்பது என் கருத்து.

தமிழகத்தில் அக்கால திராவிட குலத்தவர் படையெடுப்பு நடத்தியபோது, பல்வேறு காரணங்களுக்காகக் ஆந்திர, கன்னடப் பகுதிகளில் இருந்து குடியமர்த்தப்பட்ட பொதுமக்களை இன்றைக்கும் திராவிடர் என வகைப்பிரிப்பது தவறு.

எந்தச் சமூகத்திலும் படையெடுப்பு நிகழும்போது இவ்வாறான குடியேற்றங்களும், இனக்கலப்பும் ஏற்படத்தான் செய்யும். ஆக, இக்கட்டுரை, ‘திராவிடர்; எனக் குறிப்பிடுவது, வரலாற்று நோக்கில், அவ்வரலாறு நிகழ்ந்த காலத்தைய அயல் குலத்தவரைத்தானே அன்றி, நிகழ்காலத்தவரை அல்ல!


தேவரடியாரும் தேவதாசிகளும்


தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17)


தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

’தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334)

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

’கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது’

(கர். கல் VAK 105)

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19)

இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர். மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை,ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.
இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;

’கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22)

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.


பெண்களின் நிலை:

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்
நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?





லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.

’கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.

கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே!
இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழியப் பணிகளைச் செய்தார்.