Monday, 20 October 2025
தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்
Friday, 25 April 2025
போலி சங்கராச்சாரி
Wednesday, 16 October 2024
மகாவம்சம் நூலே இப்படித்தான் கூறுகிறது
Sunday, 1 September 2024
பெருந்தமிழர் தமிழரசன்
Tuesday, 9 July 2024
வேட்டொலி 10
Monday, 19 June 2023
மீண்டும் தனித் தமிழர்நாடு
Saturday, 27 July 2019
இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை - வரலாற்று ஆய்வாளர் விளக்கம்
இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை
- வரலாற்று ஆய்வாளர் விளக்கம்
** ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாச்சேரி என்றும் பறைச்சேரி எனவும் தனித்தனியாக குறிக்கப்படுள்ளது **
** விஜயநகர காலத்திற்கு பின்புதான் (நாயக்கர் ஆட்சியில்) பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டனர் **
** சோழர் வழங்கிய நிலதானங்களில் 20% தான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது **
---------------
வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார் அவர்கள்,
""பிறகாலச் சோழர் கால வாழ்வியல்",
"சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்",
"தமிழகத் தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும்"
உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.
ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் மே.து.ராசுகுமார்.
சமீபத்தில் "சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம் நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான்"
என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.
இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.
"ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ,
அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள்.
அதனை நாம் மறுத்துவிட முடியாது.
எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.
ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்கவேண்டும்.
அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது.
வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது.
அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது.
இதன் மூலமாக உற்பத்தி பெருகியது.
உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது.
உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது.
ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின்,
இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது"
என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.
பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார்,
"தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன.
ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால் பறையர்கள் தீண்டப்படாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்?
எனவே பறையர்கள் அந்த காலத்தில் தீண்டப்படாதவர்களாக இல்லை எனலாம்.
அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டப்படாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம்.
அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக இருந்திருக்கலாம்.
விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு" என்கிறார்.
மேலும்,
"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன.
பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.
40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார்.
அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது.
அதில்,
'சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில்
வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்'
என்று கூறியுள்ளார்.
பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை.
பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் "
என்று கூறும் ராசுக்குமார் மேலும் விளக்குறார்....
"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் முழு உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை.
பங்குதான் தரப்பட்டது.
அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது.
இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல்.
சரி.
இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும்.
'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல.
வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது,
யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'.
அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள்.
இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
மற்றொருவகை 'குடிநீங்கா பிரமதேயம்'.
ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.
குடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள்.
ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை"
என்ற மே.து.ராசுக்குமார்,
ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை மேலும் விவரிக்கிறார்...
"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.
அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை.
அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்."
என்கிறார் ராசுக்குமார்.
நன்றி:
ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி
- மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்
11 ஜூன் 2019
Friday, 15 February 2019
ஆதித்தனார் வெளியிட்ட தமிழர்நாடு வரைபடம்
ஆதித்தனாரின் தமிழ்தேசிய சிந்தனைகளைத் தொகுத்து "சி.பா.ஆதித்தனாரின் தமிழப் பேரரசு" எனும் நூலை வள்ளலார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இதில் மேற்கண்ட வரைபடம் உள்ளது.
இவ்வரைபடம் 1960 வாக்கில் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.
இதில் "முழுதும் தமிழர் வாழும் பகுதிகள்",
"முழுதும் தமிழர் வாழும் பகுதிகள் (துண்டுபட்டவை)" மற்றும்
"பாதிபேர் தமிழர் வாழும் பகுதிகள்" என மூன்று அடர்த்தியில் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.
இதில் துண்டுபட்டவை (அதாவது தமிழ்நாடு மாநிலத்துடன் சேராமல் போனவை) என்று திருப்பதி(1), பெங்களூர்(2), தேவிகுளம்(3), பீர்மேடு(4), திருவனந்தபுரம்(5) புதுச்சேரி(6), காரைக்கால்(7) ஆகியன குறிக்கப் பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநிலமும் ஈழமும் மற்றும் மேற்கண்ட 7 பகுதிகளும் சேர்ந்த "தமிழர் பெரும்பான்மைப் பகுதிகள்" தனிநாடாக "தமிழப் பேரரசு" என்கிற பெயரில் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று ஆதித்தனார் 1942 முதலே கூறிவந்துள்ளார்.
(பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிரதேசம் என்கிற பெயரில் டெல்லியில் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தமிழர் நிலம் ஆறு துண்டுகளாக சிதறிக் கிடப்பதாகவும் ஆதித்தனார் கவலையுடன் கூறுகிறார்)
இதுபோக பாதியளவு தமிழர் வாழும் பகுதிகளாக (அதாவது பாதி உரிமை கொண்ட) பகுதிகளென சித்தூர் மாவட்ட மேற்கும்
ஈழத்தின் அனுராதபுரம் நகரமும்
கொழும்பு வரை உள்ள கடற்கரை பகுதியும்
கண்டியுடன் கூடிய மத்திய பகுதியான மலையகமும்
தென்கோடி காலி பகுதியும் குறிக்கப்பட்டுள்ளன.
(இவற்றை ஆதித்தனார் தமிழர்நாட்டுடன் இணைக்கக் கோரவில்லை)
இவ்வரைபடமானது புலிகள் வெளியிட்ட ஈழ வரைபடம் மற்றும் ம.பொ.சி வெளியிட்ட தமிழ்நாடு வரைபடம் ஆகியவற்றுடன் ஒத்துப் போகிறது என்றாலும்
ஈழத்தின் தென் மேற்கு எல்லை நீண்டும் கொள்ளேகால் இல்லாமலும் உள்ளது.
மற்றபடி ஈழமும் தமிழகமும் ஒரே நாடு என்பது அதுவரை எவருக்குமே உரைக்காத உண்மையாகும்.
ஆதித்தனாருக்கு இந்த விடயத்தில் தமிழர்களாகிய நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
தகவல்களுக்கு நன்றி :- Rajokkiyam Thangaraj
(பிப்ரவரி 1 அன்று முகநூல் பதிவாக இட்டது)
Friday, 25 January 2019
பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்
பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்
வரலாற்று ஆய்வாளர் H.G.Wells என்பவர் உலகில் மாந்தர் பரவல் பற்றிய தமது கருத்தை கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறார்,
"For thousands of years, from 15,000 to 10,000 BC., such a heliolithic Neolithic culture and its brownish possessors may have been oozing round the globe through the warmer regions of the word, drifting by canoes often across wide stretches of sea"
"கி.மு 15,000 முதல் கி.மு. 10,000 வரையான புதிய கற்கால (அல்லது கதிரவக் கற்கால) காலகட்டத்தில் பழுப்பு மேனியுடையோர் சிறிய ரக படகுகள் மூலம் கடலில் துடுப்பாட்டியே வெப்பநாட்டிலிருந்து உலகெங்கும் பரவினார்கள்"
அத்தோடு நில்லாமல் இந்த பழுப்பு மனிதர்கள் இந்தியா முதல் எகிப்து மற்றும் ஸ்பெயின் வரை தொடர்ச்சியாக வாழ்ந்ததாக பிற ஆய்வாளரும் கருதுவதாகக் கூறியுள்ளார்,
"Wilfred scaven Blunt says that huxley had a long suspected a common origin of Egyptians and Dravidians of india, perhaps along belt of brown skinned men from india to spain in very early days"
Book: The outline of History
Page: 138 & 140
(கால்டுவெல் காலத்திற்கு முந்தைய ஆய்வாளர்கள் 'தமிழிய' என்று அழைத்தனர்.
அவர் காலத்திற்கு பிறகே 'திராவிட' எனும் பொருத்தமற்ற பெயர் நம்மீது திணிக்கப்பட்டு அதுவே மேலைநாட்டார் வழக்கத்திலும் உள்ளது)
நன்றி: பழந்தமிழர் பரவிய நாடுகள் - பழ.நெடுமாறன்
Thursday, 6 December 2018
1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை
1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை
1799 இல் பிரிட்டிஷ் ஆளுநர் நோக்ஸ் என்பவரது உதவியாளரான பேராசிரியர் கிளைக்கோர்ன் எனும் ஸ்காட்லாந்து இனத்தவர் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.
அது வருமாறு,
"இலங்கைத் தீவானது மிகப் பழங்காலந்தொட்டே இரு வெவ்வேறு தேசிய இனங்களால் உரிமை கொண்டாடப்பட்டது.
இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் மற்றும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் ஆறு வரையுமுள்ள மேற்கு பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகள் தமிழரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இரு நாட்டினங்களும் சமயத்தாலும், மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வேறுபட்டவை.
தமிழர் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்தனர் போலும்.
ஏனெனில் அக்கரையில் உள்ள அதே மொழி அதே பழக்க வழக்கங்கள் அதே சமயம் என்பனவற்றைக் கொண்டுள்ளனர்"
இக்குறிப்பில் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மத்திப் பகுதியும் தென் பகுதியும் சிங்களர் வாழ்விடமாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தெற்கே உள்ள வளவி ஆறு மேற்கில் இருப்பதாக தவறாக உள்ளது.
இவர் உதவியாளராக இருந்த முதல் பிரிட்டிஷ் ஆளுநர் நோக்ஸ் (knox) எழுதிய நூல் ஒன்று உள்ளது.
கண்டி சிறையிலிருந்து தப்பித்து மன்னார் நோக்கி செல்லும்போது மல்வத் (அருவி)ஆற்றைக் கடந்து அனுராதபுரம் வந்தடைந்தபோது அங்கே யாருக்குமே சிங்களம் தெரியவில்லை என்று அந்நூலில் எழுதியுள்ளார்.
ஆற்றின் பெயர் சிங்களத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து அருவியாறு அனுராதபுரம் அருகே வரும் இடம் வரை சிங்களவர் வாழ்ந்ததாக கொள்ளலாம்.
அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் (Alexander johnston) 1806 இல் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.
இவர் 1807 நம்பர் 4 இல் எழுதிய கையெழுத்து குறிப்பு ஒன்று கொழும்பு அருங்காட்சியம் பாதுகாத்து உள்ளது.
அது வருமாறு,
"வடமேற்கில் உள்ள புத்தளம் முதல் தென்கிழக்கே உள்ள குமணை ஆறு வரை உள்ள நிலப்பகுதி வரை தமிழரின் குடியிருப்பு ஆகும்.
மேற்கே சிலாபம் ஆற்றிலிருந்து தென்கிழக்கே உள்ள குமனை ஆறு வரை உள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பு ஆகும்"
இதிலும் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு எல்லையாக குமணை ஆறு குறிக்கப்பட்டுள்ளது.
இதுவே சரியான வரையறையாகும்.
குமனையாறு கடலில் கலக்கும் இதுவே தமிழரின் தென்கோடி எல்லை.
மேற்கண்ட விபரங்கள் ஜே.ஆர்.சின்னத்தம்பி எழுதி 1977 இல் சென்னையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட "தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்" எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டன.
நான் ஏற்கனவே வெளியிட்ட தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் இந்த எல்லைகளையே கொண்டிருந்தது.
(தேடுக: தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் வேட்டொலி)
புலிகள் பயன்படுத்திய ஈழ வரைபடம் தவறானது ஆகும்.
அவ்வரைபடத்தில் தெற்மேற்கு எல்லை சிலாவ ஆற்றையும் தாண்டி நீள்கிறது.
தவிர அவ்வரைபடத்தில் அனுராதபுரம் சேர்க்கப்படவும் இல்லை.
புலிகளின் வரைபடத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு மிக குறுகிய பகுதியாக உள்ளது.
புத்தளம் மாவனடம் வடக்குடன் இணையும் பகுதியும் குறுகலாக உள்ளது.
கிழக்கு பகுதியும் ஒடுங்கலாக வரையப்பட்டு இருந்தது.
ஆனால் புத்தளத்துக்கு வடக்கிலும்
கிழக்கு மாவட்டங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி அவர்களது வரைபடத்தில் உள்ளதை விடவும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தது.
பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" புத்தகத்தில் இருந்த புலிகள் ஆண்ட பகுதி வரைபடம் மூலமாக இது அறியக்கூடியதாக இருக்கிறது.
(தேடுக: புலிகள் கட்டுப்பாட்டு பகுதி வரைபடம் 2006 fbtamildata)
எனவே 1800 களில் எழுதப்பட்ட குறிப்புகளின் படி 1832 இல் வெளியிடப்பட்ட ஒரு வரைபடத்தில் எல்லைகளைக் குறித்து அன்றைய எல்லையை வரைந்துள்ளேன்.
Sunday, 26 August 2018
மாரியம்மனைப் புகழ்ந்த மதார்சா ராவுத்தர்
மாரியம்மனைப் புகழ்ந்த மதார்சா ராவுத்தர்
கழுகுமலை முருகன் மீது காவடிச்சிந்து பாடிய காதர் பாட்சா பற்றியும்
புதுச்சேரியில் முருகனுக்கு கோவில் கட்டி நிர்வகித்துவரும் முகமது கௌஸ் குடும்பம் பற்றியும் ஏற்கனவே பார்த்தோம்.
இப்போது மாரியம்மனைப் பாடிய மதார்சா இராவுத்தர் எனும் இசுலாமியர் பற்றி அறிவோம்.
-------------------------
கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் சூலக்கல் என்ற ஊரின் மாரியம்மன் கோவில் புகழ்பெற்றதாகும்.
இந்த மாரியம்மன் மீது பொள்ளாச்சி வட்டம் அம்பாரம்பாளையம் ஊரைச் சேர்ந்த மதார்சா ராவுத்தர் எனும் புலவர் அம்மானை, கும்மி, காரணச்சிந்து என மூன்றும் பாடி அவை அச்சில் வெளிவந்தன.
1909 இல் அச்சிட்டு முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து 1919 இல் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளன.
அச்சிட்டது பொள்ளாச்சி 'கோபாலவிலாச அச்சுக்கூடம்' என்று உள்ளது.
ஒரு இடத்தில் 'செந்தமிழ் பாடும்படி செப்பினாள் மாரியம்மன்' என்று கூறும் அப்புலவர்,
'ஜாதிபேதம் பாராமல் தாயாரே காக்கவேண்டும்' என்று மாரியாத்தாளை வேண்டுகிறார்.
(இசுலாமியர் ஒரு சாதியாம்!)
சூலக்கல் பற்றி கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்,
'பூமலரும் தீங்கனியும் பொலிந்து நிறைந்தோங்கும்
பைங்காவும் செந்நெல்களும் பருத்தகன்னல் கழனிகளும்
வாழை கமுகுபலா மஞ்சள் இஞ்சி ஏலங்களும்
பொன்மேலும் ஓங்கும் விதமான பண்ணைகளும்
பொன்னி நதியென்னப் புகழ்பெற்ற நதிவளமும்
சூழ்ந்துசெல் வம்திகழும் சூலக்கல்'
தன்னைப் பற்றி கூறுகையில்,
"ஆம்பராவதி நதிசூழ் அம்பராம் பாளையத்தில்
ஜமால்ரா வுத்தன்பெற்ற தவோபல புத்திரனாம்
அங்காள பரமேசுவரி அம்புயப் பதங்களையும்
மதுரைவீரன் உபய வனசமலர்த் தாளிணையும்
பக்தியுடன் நாளுடம் பரவித் துதிசெய்வோன்
மாடன் முதலான மற்றுமுள்ள பேய்களையும்
ஓட்டிக் கருவறுத்த உத்தமனாம் மதார்சா"
என்று பாடுகிறார்.
இதோ ஒரு கும்மிப்பாட்டு எடுத்துக்காட்டுக்காக,
"கணித சக்கரம் உள்ளவளாம் மாரி
கம்பீரமான பரஞ்சோதி
பணிதி அணிந்திடும் மாரியம்மன்
பாடிக்கும்மி அடியுங்கடி"
ஆனைமலை என்.ஏ.சிவசூரியம்பிள்ளை இயற்றிய கவியில்,
"மதார்சா ராவுத்தர் மாரியம்மன் பேரால்
எதார்த்த விதமாக எண்ணி பதார்த்தமது
இன்னதெனக் கேரா எளியர் சுபமடைய
சொன்னதமிழ்ப் பாவே சுகம்'
என்று பாராட்டிப் பாடியுள்ளார்.
புரவிபாளையம் ஜமீன் சமஸ்தானப் புலவர் முத்துசாமிப்பிள்ளை தனது கவிதையில் இவரை 'தெளிந்த தமிழ் அறிஞன்' என்று பாராட்டுகிறார்.
[நன்றி: கொங்கு ஆய்வுகள் (நூல்)
ஆசிரியர்: செ.இராசு]
(மேற்கண்ட நூலில் 'கொங்குநாட்டு இசுலாமியப் புலவர்கள்' எனும் தலைப்பில் ஐயாவு ராவுத்தர், மதார்சா ராவுத்தர், ஜம்பை காசிம், கா.அப்துல் சுகூர், முகம்மது யாக்கூபு, கா.நயினார் முகம்மது, இ.கமாலுதீன் ஆகிய புலவர்கள் பற்றி உள்ளது)
--------------------------
இன்று கோயம்புத்தூர் இந்து மதவெறிக் கும்பல்களின் தலைநகரம் போல ஆகிவிட்டது.
வணிகச் சமூகமான இசுலாமியரை ஒடுக்கி வணிகத்தைக் கைப்பற்ற வடயிந்திய வணிகர்களான மார்வாடிகள் தலைமையில் இந்த மதவெறி கருத்தியல் செயல்படுத்தப் படுகிறது.
தமிழகத்தின் வரலாற்றில் எல்லா மதத்தாரும் அனைத்து மத தெய்வங்களையுமே வணங்கி வந்துள்ளனர்.
சைவ அடியார்கள் இராமனையும் வைணவ அடியார்கள் சிவனையும் பாடியுள்ளனர்.
சோழர்கள் சைவர்களாக இருந்த போதும் வைணவருக்கு நிலமும் கோவிலுக்கு நிவந்தங்களும் அளித்துள்ளனர்.
நாகப்பட்டிணம் புத்த கோவில் கூட சோழர்களால் பராமரிக்கப்பட்டுள்ளது.
பாண்டியர்கள் சைவத்திற்கு மாறிய பிறகும் சமணருக்கு கல்படுக்கை அமைத்து கொடுத்துள்ளனர்.
அன்று பல்வேறு மதங்கள் இருந்துள்ளன.
தமிழ் மன்னர்கள் அனைத்து மதங்களையும் அரவணைத்து சமயப்பொறையுடன் ஆட்சி நடத்தியுள்ளனர்.
நூறாண்டுகள் முன்புகூட ஒரு இசுலாமியர் மாரியம்மனைப் பாடியதும் அதைப் பிற புலவர்கள் பாராட்டியதும் அன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையைக் காட்டுகிறது.
இப்போதும் கூட தமிழக பொதுமக்கள் அனைவரும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கின்றனர்.
ஆனால் சமீபகாலமாக 'நேற்று வந்தவர்கள்' இதை மாற்றியமைக்க முயல்கின்றனர்.
இந்த சூழ்ச்சிக்கு கொங்கு தமிழர்கள் இரையாக வேண்டாம்.
தமிழர் ஒற்றுமை ஓங்குக!
