Sunday 26 August 2018

மாரியம்மனைப் புகழ்ந்த மதார்சா ராவுத்தர்

மாரியம்மனைப் புகழ்ந்த மதார்சா ராவுத்தர்

கழுகுமலை முருகன் மீது காவடிச்சிந்து பாடிய காதர் பாட்சா பற்றியும்
புதுச்சேரியில் முருகனுக்கு கோவில் கட்டி நிர்வகித்துவரும் முகமது கௌஸ் குடும்பம் பற்றியும் ஏற்கனவே பார்த்தோம்.

இப்போது மாரியம்மனைப் பாடிய மதார்சா இராவுத்தர் எனும் இசுலாமியர் பற்றி அறிவோம்.

-------------------------
கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் சூலக்கல் என்ற ஊரின் மாரியம்மன் கோவில் புகழ்பெற்றதாகும்.

இந்த மாரியம்மன் மீது பொள்ளாச்சி வட்டம் அம்பாரம்பாளையம் ஊரைச் சேர்ந்த மதார்சா ராவுத்தர் எனும் புலவர் அம்மானை, கும்மி, காரணச்சிந்து என மூன்றும் பாடி அவை அச்சில் வெளிவந்தன.

1909 இல் அச்சிட்டு முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து 1919 இல் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளன.
அச்சிட்டது பொள்ளாச்சி 'கோபாலவிலாச அச்சுக்கூடம்' என்று உள்ளது.

ஒரு இடத்தில் 'செந்தமிழ் பாடும்படி செப்பினாள் மாரியம்மன்' என்று கூறும் அப்புலவர்,
'ஜாதிபேதம் பாராமல் தாயாரே காக்கவேண்டும்' என்று மாரியாத்தாளை வேண்டுகிறார்.
(இசுலாமியர் ஒரு சாதியாம்!)

சூலக்கல் பற்றி கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்,

'பூமலரும் தீங்கனியும் பொலிந்து நிறைந்தோங்கும்
பைங்காவும் செந்நெல்களும் பருத்தகன்னல் கழனிகளும்
வாழை கமுகுபலா மஞ்சள் இஞ்சி ஏலங்களும்
பொன்மேலும் ஓங்கும் விதமான பண்ணைகளும்
பொன்னி நதியென்னப் புகழ்பெற்ற நதிவளமும்
சூழ்ந்துசெல் வம்திகழும் சூலக்கல்'

தன்னைப் பற்றி கூறுகையில்,

"ஆம்பராவதி நதிசூழ் அம்பராம் பாளையத்தில்
ஜமால்ரா வுத்தன்பெற்ற தவோபல புத்திரனாம்
அங்காள பரமேசுவரி அம்புயப் பதங்களையும்
மதுரைவீரன் உபய வனசமலர்த் தாளிணையும்
பக்தியுடன் நாளுடம் பரவித் துதிசெய்வோன்
மாடன் முதலான மற்றுமுள்ள பேய்களையும்
ஓட்டிக் கருவறுத்த உத்தமனாம் மதார்சா"
என்று பாடுகிறார்.

இதோ ஒரு கும்மிப்பாட்டு எடுத்துக்காட்டுக்காக,
"கணித சக்கரம் உள்ளவளாம் மாரி
கம்பீரமான பரஞ்சோதி
பணிதி அணிந்திடும் மாரியம்மன்
பாடிக்கும்மி அடியுங்கடி"

ஆனைமலை என்.ஏ.சிவசூரியம்பிள்ளை இயற்றிய கவியில்,
"மதார்சா ராவுத்தர் மாரியம்மன் பேரால்
எதார்த்த விதமாக எண்ணி பதார்த்தமது
இன்னதெனக் கேரா எளியர் சுபமடைய
சொன்னதமிழ்ப் பாவே சுகம்'
என்று பாராட்டிப் பாடியுள்ளார்.

புரவிபாளையம் ஜமீன் சமஸ்தானப் புலவர் முத்துசாமிப்பிள்ளை தனது கவிதையில் இவரை 'தெளிந்த தமிழ் அறிஞன்' என்று பாராட்டுகிறார்.

[நன்றி: கொங்கு ஆய்வுகள் (நூல்)
ஆசிரியர்: செ.இராசு]

(மேற்கண்ட நூலில் 'கொங்குநாட்டு இசுலாமியப் புலவர்கள்' எனும் தலைப்பில் ஐயாவு ராவுத்தர், மதார்சா ராவுத்தர், ஜம்பை காசிம், கா.அப்துல் சுகூர், முகம்மது யாக்கூபு, கா.நயினார் முகம்மது, இ.கமாலுதீன் ஆகிய புலவர்கள் பற்றி உள்ளது)
--------------------------

இன்று கோயம்புத்தூர் இந்து மதவெறிக் கும்பல்களின் தலைநகரம் போல ஆகிவிட்டது.

வணிகச் சமூகமான இசுலாமியரை ஒடுக்கி வணிகத்தைக் கைப்பற்ற வடயிந்திய வணிகர்களான மார்வாடிகள் தலைமையில் இந்த மதவெறி கருத்தியல் செயல்படுத்தப் படுகிறது.

தமிழகத்தின் வரலாற்றில் எல்லா மதத்தாரும் அனைத்து மத தெய்வங்களையுமே வணங்கி வந்துள்ளனர்.
சைவ அடியார்கள் இராமனையும் வைணவ அடியார்கள் சிவனையும் பாடியுள்ளனர்.
சோழர்கள் சைவர்களாக இருந்த போதும் வைணவருக்கு நிலமும் கோவிலுக்கு நிவந்தங்களும் அளித்துள்ளனர்.
நாகப்பட்டிணம் புத்த கோவில் கூட சோழர்களால் பராமரிக்கப்பட்டுள்ளது.
பாண்டியர்கள் சைவத்திற்கு மாறிய பிறகும் சமணருக்கு கல்படுக்கை அமைத்து கொடுத்துள்ளனர்.

அன்று பல்வேறு மதங்கள் இருந்துள்ளன.
தமிழ் மன்னர்கள் அனைத்து மதங்களையும் அரவணைத்து சமயப்பொறையுடன் ஆட்சி நடத்தியுள்ளனர்.

  நூறாண்டுகள் முன்புகூட ஒரு இசுலாமியர் மாரியம்மனைப் பாடியதும் அதைப் பிற புலவர்கள் பாராட்டியதும் அன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையைக் காட்டுகிறது.

இப்போதும் கூட தமிழக பொதுமக்கள் அனைவரும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கின்றனர்.

ஆனால் சமீபகாலமாக 'நேற்று வந்தவர்கள்' இதை மாற்றியமைக்க முயல்கின்றனர்.

இந்த சூழ்ச்சிக்கு கொங்கு தமிழர்கள் இரையாக வேண்டாம்.

தமிழர் ஒற்றுமை ஓங்குக!

No comments:

Post a Comment