Monday 6 August 2018

சிசேரியன் பிரசவ மரணங்களைக் குறைத்ததா?

சிசேரியன் பிரசவ மரணங்களைக் குறைத்ததா?

1994 ல் இந்தியாவில் ஆன பிரசவங்களில் 61.6% பிரசவங்கள் வீட்டில் நடந்துள்ளன.
பிரசவமானோரில் டாக்டர் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டோர் 21.6 சதவீதம் மட்டுமே.[9]

பிரசவ மரணங்கள் (தாய் உயிரிழப்பு) அப்போது லட்சத்திற்கே 437 தான் இருந்தது.
அதாவது 'மொத்த பிரசவங்களின்' எண்ணிக்கையில் 'தாயின் மரணத்தில் முடிந்த பிரசவங்களின்' எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது 0.43% ஆகும்.
இந்த அரைசதவீத மரண வாய்ப்பும்  இந்தியாவின் நிலைதான்.[9]

பேறுகால கவனிப்பில் (Antenatal care) தமிழகம் அப்போது மூன்றாம் இடத்தில் இருந்தது.
அதாவது 94% தமிழக கர்ப்பிணிகள் பேறுகால கண்காணிப்பு மற்றும் கவனிப்பு பெற்றிருந்தனர்.
37% இந்திய கர்ப்பிணிகளின் மட்டுமே பிரசவ கால கண்கானிப்பு பெற்றிருந்தனர்.[9]

எனவே தமிழகத்தில் பிரசவ மரணங்கள் மூன்று மடங்கு குறைவாக இருந்திருக்க வேண்டும்.
அதாவது லட்சத்திற்கு 180 வரை இருந்திருக்கும் என அனுமானிக்கலாம்.
புரிந்துகொள்ளும் வகையில் கூறினால் பிரசவமான ஆயிரம் தாய்மார்களில் (தோராயமாக) இருவர் இறந்துள்ளனர்.

நியாயப்படி இந்த ஆயிரத்தில் இருவரைக் காப்பற்றத்தான் சிசேரியன் செய்யப்படவேண்டும்.

ஆனால் தற்போதைய நிலை என்ன?

அதிகரித்து வந்த சிசேரியன் கலாச்சாரத்தைக் கருத்தில் கொண்டு அதை நெறிப்படுத்தும் விதமாக World health organisation (WHO) 1985 இல் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதிலுள்ள பரிந்துரைப்பின்படி[1] பிரசவங்களில் சிசேரியனின் சதவீதம் 10-15% க்குள் இருக்கவேண்டும்.

ஆனால் 2005 லேயே தமிழ்நாட்டில் "பிரசவத்தில் சிசேரியன் சதவீதம்" 20% ஆகிவிட்டிருந்தது. [2]

2015 ல் இது 34% ஆக உயர்ந்து இந்தியாவில் நான்காம் இடத்தைப் பிடித்தது தமிழ்நாடு.[3]

2015 நிலவரப்படி தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆன பிரசவங்களில் 10 ல் 2 சிசேரியன் ஆகும்.
ஆனால் தமிழக தனியார் மருத்துவமனைகளில் 10 ல் 6 சிசேரியன் ஆகும்.[4]

ஆயிரத்தில் இரண்டு எங்கே?!
பத்தில் ஆறு எங்கே?!

(இத்தனைக்கும் தமிழகத்தின் தற்போதைய பிரசவ மரணங்கள் லட்சத்திற்கு 62)

மாவட்ட வாரியாகப் பார்த்தால் தமிழகத்தின் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் இந்திய அளவில் 2 வது மற்றும் 3 வது இடத்தில் உள்ளன.[4]

இதிலிருந்து சிசேரியன் பெரும்பாலும் தேவையற்றது என்பதும் அதில் தமிழகம் முன்னணியில் உள்ளதையும் அறிகிறோம்.

இதுமட்டுமல்லை,
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால் மிக முக்கியமானதாகும்.

தமிழகத்தில் 2015 ல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில்,
பிறந்த ஒருமணி நேரத்தில் பால் கொடுப்பெற்ற குழந்தைகள் 54.7% சதவீதம் ஆகும். [3]

இதற்கு முக்கிய காரணம் சிசேரியன்.

பிரசவத்தின்போது, தாயின் உடலில் சுரக்கும் திரவத்தில் இருக்கும் (நல்ல)பாக்டீரியாக்கள் குழந்தைக்கு போராடும் சக்தியையும் நோயெதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.
இந்த சக்தி ஓராண்டு வரை குழந்தை நோய்களிலிருந்து பிழைத்துவாழ உதவுகிறது.

ஆனால் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு இது கிடைப்பதில்லை.
எனவே அது விரைவில் நோயாளி ஆகிறது.
(மேலைநாடுகளில் இதை சமன் செய்ய தாயின் பிறப்புறுப்பில் சுரக்கும் திரவத்தை சிசேரியன் குழந்தைக்கு பூசும் vaginal seeding செய்கிறார்கள்.
ஆனால் இது தற்காலத் தீர்வுதான்). [10]

தொப்புள்கொடி அறுப்பதும் கூட உடனடியாகச் செய்யப்படுவதால் குழந்தைக்கு பிரசவத்திற்குப் பிறகு தொப்புள்கொடி மூலம் இறங்கவேண்டிய அந்த ஸ்டெம் செல்கள் நிறைந்த ரத்தம் கிடைப்பதில்லை.
(மேலை நாடுகளில் இதை சேமித்து பத்திரமாக வைக்கின்றனர்).

அதாவது சிசேரியன் குழந்தை நலனையும் பெறுமளவு பாதிக்கிறது.

தமிழகத்தில் நிலை மட்டும்தான் இப்படியா என்றால் இல்லை.

  உலகளாவிய கருத்துக்கணிப்பும் புள்ளிவிபரங்களும் சிசேரியன் பற்றி எச்சரிக்கின்றன.

பிரசவத்தின்போது அரிதாக நிகழும் தாயின் மரணத்தைக் காரணம் காட்டி பயமுறுத்தி பெரும்பான்மையான சிசேரியன்கள் தேவையில்லாமல் செய்யப்படுகின்றன.

சிசேரியன் மூலம் பிரசவ மரணங்கள் குறைந்தது என்பது முற்றிலும் தவறான கருத்து ஆகும்.

இந்த உண்மையை 2006 நவம்பரில் WHO வெளிப்படுத்தி உள்ளது.
119 நாடுகளில் 1991 முதல் 2003 வரையான தரவுகளைத் திரட்டி வெளியிடப்பட்ட ஆவணத்தில் சிசேரியனுக்கும் பிரசவ மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. [6]

2011 இலும் இதேபோல 193 நாடுகளில் 2000 - 2009 வரையான தரவுகளை வைத்து தேவையற்ற சிசேரியன்கள் அதிகரித்து வருவதை எச்சரித்தது. [8]

2015 இலும் இதேபோல 194 நாடுகளில் 2005 - 2012 வரையான தரவுகளை வைத்து சிசேரியன் செய்வது பிரசவ மரணங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்றும்
அது பெரும்பாலும் தேவையற்ற நிலையில் செய்யப்படுவதாகவும் அடித்துக் கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு (WHO). [7]

உலகளாவிய தரவுகளுடன் இந்த உண்மையை பல அறிஞர்களும் ஐ.நா நிறுவனஙகளும் சேர்ந்து 24.08.2015 அன்று உலகிற்கு அறிவித்துள்ளன. [5]

சிசேரியன் கலாச்சாரம் அதிகரித்து வருவதற்கு இன்றைய வாழ்க்கை முறை, பெண்களின் உடல்வலு குன்றியமை, தேவையற்ற பயம், கர்ப்பிணிகளின் கவனக்குறைவு என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கார்ப்பரேட் மயமான மருத்துவமனைகளின் லாபவெறி இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் ஆகும்.

எனவே கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உறவினர்கள் கூடுமானவரை சிசேரியனுக்கு மறுப்பு தெரிவித்து
சுகப்பிரசவத்தை எதிர்கொண்டு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. Robson classification, 1985

2. National family health survey 3 (2005 - 2006)

3. National family health survey 4 (2015 - 2016)

4. Live Mint 06.01.2016

5. Association between rates of caesarean section and maternal and neonatal mortality in the 21st century: a worldwide population based ecological study with longitudinal data.

6. Cesarean section rates and maternal and neonatal mortality in low-, medium-, and high-income countries: an ecological study.

7. Relationship Between Cesarean Delivery Rate and Maternal and Neonatal Mortality.

8. Correlation of Cesarean rates to maternal and infant mortality rates: an ecol

9. National family health survey 1 (1992 - 1993)

10. ஜேம்ஸ் காலகெர், பிபிசி - அறிவியல் மற்றும் சுகாதாரப் பிரிவு

No comments:

Post a Comment