Sunday 12 August 2018

தீவிரவாதத் தலைவர்

தீவிரவாதத் தலைவர்

நாள்: 05.07.2056
நேரம்: 17:10

"எல்லாம் உங்கள் விருப்பம்தான்.
பதவியில் இருப்பவர் நீங்கள்.
முடிவு உங்கள் கையில்"

"முடிவு எனதுதான்.
இருந்தாலும் நீங்கள் உங்களது விருப்பத்தைக் கூறுங்கள் தலைவர்"

சிறிது யோசனைக்குப் பிறகு...

"முடியாது என்று அறிவித்துவிடுங்கள்"

--------------
நேரம்: 17:30

உலகமே தனது ஊடக கண்களினால் பார்த்துக்கொண்டிருந்த அந்த மேடையில் அங்கீகரிக்கப்படாத அந்நாட்டின் ராணுவ நிழலரசின்  முப்படைத் தளபதிகளும் வீற்றிருந்தனர்.
அந்நாட்டின் அதிபர் இப்போது பாரம்பரிய உடையில் இருந்தார்.
குறித்த நேரத்தில் தனது உரையைத் தொடங்கினார்.

"அனைவருக்கும் வணக்கம்,

இங்கே கூடியிருக்கும் அனைத்துலக ஊடகவியலாளர்களை எமது தாய்நாட்டு மக்களின் சார்பாக வரவேற்கிறேன்.

இன்று நீங்கள் பெருந்திரளாக வந்துள்ளீர்கள்.
ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இங்கே விரல்விட்டு எண்ணுமளவே ஊடகவியலாளர்களைக் காணமுடிந்தது.

ஏனென்றால் அவர்கள் தனது உயிரைப் பணையம் வைத்துதான் இங்கே கடமையாற்றவேண்டிய சூழல் இருந்தது.

இப்போது அவர்களில் யாரையும் காணமுடியவில்லை.
போர் ஓய்ந்துவிட்ட இந்த மண்ணிலிருந்து அவர்கள் வேறொரு போர் மண்டலத்திற்கு கடமையாற்றச் சென்றிருக்கலாம்.

இன்று எந்த உயிர் பயமும் இல்லாமல் உலக ஊடகவியலாளர்கள் எம்மண்ணில் கூடியிருப்பது எமக்குப் பேருவகை தருகிறது.

எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தபடியும் கொடுத்தபடியும் முன்னேறிய எமது விடுதலைக்கான பயணம் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நாங்கள் எங்களது அண்டை இனங்களிடமிருந்தும்,
அதை ஆட்டுவித்த பிராந்திய வல்லரசிடமிருந்தும்,
அதையும் ஆட்டுவித்த உலக வல்லரசுகளிடமிருந்தும்
விடுதலை கோரிய நாட்கள் போய்

இன்று எமது அண்டையினங்கள் எம்மிடம் விடுதலை கேட்கும் நிலையும்,
அதை நலிந்துவிட்ட பிராந்திய வல்லரசு உதவிசெய்து ஊக்குவிக்கும் நிலையும்,
அதை அனைத்துலக வல்லரசுகள் வேடிக்கை பார்க்கும் நிலையும் உள்ளது.

எமது இனம் எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டு
ஜனநாயகப் போராட்டத்தில் முற்றிலும் தோற்று
நேர்மையான ஆயுதப் போராட்டத்திலும் இனப்படுகொலையைச் சந்தித்து
வேறுவழியே இல்லாமல் தற்காப்புக்காகத் தீவிரவாதப் போராட்டத்தை முன்னெடுத்தது.

அதிலே பெரும் வெற்றிபெற்று எமது தாய்நிலத்தை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எமக்கான குடியரசை நிறுவிக்கொண்டோம்.
அண்டையினங்கள் குடியேறி ஆக்கிரமித்த எல்லைப் பகுதிகளை மீட்கும் முயற்சியிலே வெற்றியடைந்துவிட்டோம்.
அதற்கு கடும் எதிர்ப்பு காட்டிய சில அண்டை இனங்களை முற்றிலும் அடக்க அவர்கள் முழு தாய்நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளோம்.

அடக்குமுறைக்கு உள்ளான எங்கள் இனம் இன்று அடக்குமுறையை செய்யும் இனமாக மாறி நிற்கிறது.

ஏனென்றால் வரலாற்றிலே எமது மூதாதையர் பெரிய மனதுடன் நடந்துகொண்டதே எங்களுக்கு கேடாக முடிந்தது.

நாங்கள் யாரைக் காத்துநின்றோமோ, யாரை வளர்த்துவிட்டோமோ, யாரை வாழவிட்டோமோ, யாரை மன்னித்து விட்டோமோ  அவர்களே எமக்கு எமனாக முடிந்தனர்.

எனவே எமது இனம் முழுமையாக வலுப்பெறும்வரை எதிர்க்கும் எவருக்கும் சிறு வாய்ப்பையும் தர நாங்கள் தயாராக இல்லை.

நாங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி வரலாற்று ஆதாரங்கள் அடிப்படையில் எமது இல்லை என்ற நிலையில் அந்த மக்கள் எமது அரசை விரும்பவில்லை என்றால் நாங்கள் அதைக் கட்டாயம் கைவிடுவோம்.

இன்று இந்த உலகம் எம்மோடு நடத்தும் பேரமானது எமது பேரெழுச்சிக்கு முன் சுருங்கிக்கொண்டேவந்து இன்று எமது தீவிரவாதத் தலைவரின் தண்டனையில் வந்து நிற்கிறது.

அவருக்கு மரணதண்டனை அளிக்க முதலில் கேட்டனர்.

பிறகு அனைத்துலக விசாரணை செய்து ஆயுள்சிறை அளிக்கக் கேட்டனர்.

பிறகு உள்நாட்டு விசாரணை செய்து ஓராண்டு சிறையும் பிறகு பொதுமன்னிப்பும் கொடுக்கச் சொல்லி கேட்டனர்.

பிறகு ஒரு மணிநேர விசாரணையும் ஒரு வார சிறையும் பிறகு விடுதலையும் கொடுக்கச் சொல்லி மன்றாடி நிற்கின்றனர்.

இதை மட்டும் செய்துவிட்டால் நமக்கு நாடு எனும் அங்கீகாரம் தந்துவிடுவதாக வாக்குறுதியும் அளித்துள்ளனர்.

இதோ அதற்கான பதில் கூறவே நான் இங்கே நிற்கிறேன்.

நான் உறுதியாகக் கூறுகிறேன்.
ஒரு நிமிடம் கூட எமது தலைவரை சிறைவைக்க எம்மால் முடியாது.
ஒரு கேள்வி கூட அவரிடம் நாம் கேட்கமாட்டோம்.

அவரைக் குற்றவாளி ஆக்கிதான் எமக்கு அங்கீகாரம் என்றால் அது எமக்குத் தேவையில்லை.

சிலர் அந்த அங்கீகாரம்தான் விடுதலை என்று தவறாக எண்ணுகின்றனர்.
அங்கீகாரம் கொண்டிருந்த நாடுகளே கூட ஏகாதிபத்திய வல்லரசுகளின் தாக்குதலுக்குத் தப்பவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

எமது நாட்டுத்தந்தையான தீவிரவாதத் தலைவர் கூறியதை நான் இங்கே நினைவுபடுத்துகிறேன்.
'நாடு என்பது ராணுவ வேலிபோட்ட நிலம்தானேயொழிய அனைத்துலக அங்கீகாரம் இல்லை'.
எனவே நாங்கள் எங்களது விடுதலை இயக்கத்தால் எங்களது தாய்நிலத்தை வேலிபோட்டு எங்களது நாட்டை நாங்களே அமைத்துக்கொண்டோம்.

அதற்கு மூல காரணமான எமது தலைவரைக் காக்கும் இந்த முடிவானது நன்றிமறவா எமது இனத்தின் ஒருமித்த முடிவு ஆகும்.

இதற்காக எத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக்கொள்ள யாம் தயாராக உள்ளோம்.

இதுவே எமது உறுதியான பதில்.

அனைவருக்கும் நன்றி"

கேள்விகளை அலட்சியம் செய்தபடி அதிபர் மேடையை விட்டு இறங்குகிறார்.

--------------------
நேரம்: 23:35

அதிபர் மாளிகைக்கு முன் பலத்த ஆயுதக் காவலுடன் நாட்டிலேயே விலையுயர்ந்த நான்கு மகிழுந்துகள் வந்து நின்றன.
அவர்கள் அனைவரும் வேறுவிதமான ராணுவ உடையில் இருந்தனர்.

அதில் ஒன்றிலிருந்து தீவிரவாதத் தலைவர் இறங்கி தனியே உள்ளே சென்றார்.
எந்த தடையும் இல்லாமல் அதிபர் மாளிகையின் நடுப்பகுதிக்கு வந்தார்.
அதிபரின் பெயர்சொல்லி அழைத்தபடி அவரது அலுவலறைக்குள்ளே நுழைந்தார்.

அவரைக் கண்டதும் அதிபர் வரவேற்று எழுந்துகொள்ள
அதிபரது இருக்கையில் தீவிரவாதத் தலைவர் அமர்ந்தார்.

அதிபர் எதிர்புற இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

"உங்கள் விருப்பப்படியே அறிவித்துவிட்டேன் தலைவர்"

"ம்... யாராவது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களா?"

"ஆமாம், மத்தியக் குழுவில் சரிபாதிபேர்"

"பிறகு ஏன் முடிவை மாற்றவில்லை?"

"பதவியில் இல்லாவிட்டாலும் அரசை நடத்துவது நீங்கள்தான்.
முக்கியமான முடிவுகள் உங்களைக் கேட்டபிறகே எடுக்கப்படுகின்றன.
இதுவரை அவை சரியாகவும் இருந்துள்ளன.
நீங்கள் இறுதி முடிவினை எடுக்கும் சுதந்திரம் அளித்திருந்தாலும் உங்கள் முடிவை மீற எனக்கு மனமில்லை"

"நீங்கள்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்.
என்னை விட ஐந்து வயது மூத்தவர். அனுபவம் உள்ளவர்.
நீங்கள் இப்படி ஒரு தனிமனிதனின் முடிவைக் குருட்டுத்தனமாக ஆதரிப்பது நல்லதில்லை.
அதில் தனிப்பட்ட சுயநலம் கலந்திருக்கலாமில்லையா?
நீங்கள் மத்தியக் குழுவில் வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும்"

"தலைவர்!
இத்தனை ஆண்டுகள் அறிந்திருந்தும் உங்கள் போக்கு எனக்குமே புரிவதில்லை.
நீங்கள் எப்போதும் கூறுவீர்களே,
'தீவிரவாதிகள் எந்த பாவத்தைச் செய்தேனும் நமது இனத்தின் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
அந்த செயலுக்கு நமது மக்களே நமக்கு தண்டனை கொடுத்தாலும் தயங்காமல் ஏற்கவேண்டும்.
அப்போதுதான் நம்மை ஆதரித்த களங்கத்திலிருந்து மக்களைத் தப்புவிக்க முடியும்' என்று.
ஆனால் உங்கள் தீவரவாத ராணுவத்திடம் நீங்கள் கூறிய கொள்கையை  நீங்களே பின்பற்றவில்லையே?!
நீங்களே இப்போது தண்டனையை ஏற்கத் தயாராக இல்லையே!?"

தலைவர் புன்னகைத்தார்.

"அது பொதுவாகச் சொன்னது.
என்னை தண்டித்துவிட்டால் என்னைப் போல ஒருவன் இனி உருவாகமாட்டான்.
என்னைப் போன்றவர்கள் உருவாகாமல் உலக இனங்களுக்கு விடுதலை கிடைக்காது.
நமது இனம் இன்று வலுவான நிலையில் உள்ளது.
இல்லையென்றால் நான் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டேன்.
ஒரு இனம் அதற்காக முழுமூச்சாகப் பாடுபட்ட ஒருவனை அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி, உலகமே திரண்டு வந்தாலும் விட்டுக் கொடுக்காது என்று எடுத்துக்காட்ட வேண்டும்.
அதனால்தான் அப்படி கூறச்சொன்னேன்.
இதன்மூலம் மிகப்பெரிய அழுத்தம் நம் இனத்தின் மீது வரும்.
அதையும் வெல்லும் உறுதி நமக்கு இருந்தால் பிராந்திய தலைமை நம் கைக்கு வரும்.
நாம் ஏற்கனவே தீட்டியுள்ள திட்டப்படி உலகளாவிய அழுத்தத்தைத் தாங்கியபடி நாம் ஆக்கிரமித்துள்ள பிற இனத்து பகுதிகளை ஐம்பது ஆண்டுகளுக்கு நல்லாட்சி செய்யவேண்டும்.
பிறகு அனைத்துலக மேற்பார்வையில் விடுதலைக்கான வாக்கெடுப்பு நடத்தி அவர்களே மனமுவந்து நம்மிடமிருந்து விடுதலை வேண்டாம் என்று கூறவைக்க வேண்டும்.
அப்படி நடந்தால் உலகத்தின் மாற்றுத்தலைமை நம் கைக்கு வரும்.
எப்போதுமே நாம் சரியா தவறா என்பது முக்கியமில்லை.
நாம் உறுதியாக இருந்தோமா இல்லையா என்பதே முக்கியம்"

அதிபர் தலைவரை பிரமிப்புடன் பார்த்தார்.
பின்புலத்தில் சுவரில் பெரிதாக "இலக்கு-வரைபடம்" இருந்தது.
கைப்பற்றப்பட்ட பகுதிகள் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு இருந்தன.
அவ்வண்ணம் அவ்வரைபடத்தில் எண்பது சதவீதம் இருந்தது.

No comments:

Post a Comment