Tuesday 26 May 2020

இழுபறியில் கச்சத்தீவு!

இழுபறியில் கச்சத்தீவு!

 பாண்டியர் வாரிசுரிமைப் போரில் குலசேகர பாண்டியன் கை ஓங்கியிருந்தது.
 இதனால் பராக்கிரம பாண்டியன் சிங்கள மன்னன் பராக்கிரமபாகுவின் உதவியை நாடுகிறான்.
 பராக்கிரம பாண்டியனுக்கு ஆதரவாக இலங்கை படை லங்கபுர என்பவர் தலைமையில் 1170 இல் தமிழகத்தில் தரையிறங்குகிறது.
 அதற்குள் பராக்கிரம பாண்டியன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டு விடுகிறான்.

 இருந்தாலும் இறந்த அவனின் மகனான வீரபாண்டியனை அரியணையில் அமர்த்த சிங்கள மன்னர் உத்தரவிடுகிறார்.
 ஏற்கனவே உள்நாட்டுப் போரில் நிலைகுலைந்து கிடந்த பாண்டிய நாட்டின் மீது சிங்களப் படைகள் தாக்குதல் நடத்தி ராமநாதபுரத்திலிருந்து மதுரை வரை கைப்பற்றி வீரபாண்டியனை அரியணையில் அமர்த்துகின்றன.

 குலசேகர பாண்டியன் சோழர்கள் ஆதரவை நாடி மிகவும் போராடி மீண்டும் பாண்டிய நாட்டை மீட்கிறான்.
 ஆனாலும் குறுகிய காலத்திலேயே உயிரிழக்கிறான்.

 மீண்டும் சிங்களப் படை ஆதரவுடன் வீரபாண்டியன் தரப்பு கலகம் விளைவிக்க சோழ மன்னனான மூன்றாம் குலசேகரன் அவர்களை அடக்குகிறான்.
 சிங்கள தலையீட்டையும் முற்றாக ஒழிக்கிறான்.
 இறந்த குலசேகரனின் மகனை ஆட்சியில் அமர்த்துகிறான்.

 இவ்வாறாக தமிழகத்தில் சிங்களத் தலையீடு முடிவுக்கு வருகிறது.

 1170 முதல் 1184 வரை இந்த வாரிசுரிமைப் போர்கள் நடந்துள்ளன.

 இந்தக் காலத்தில் சோழர்கள் போரில் தலையிடும் வரை அதாவது 1178 வரை ராமநாதபுரம் பகுதியில் சிங்களர் தங்கியிருந்து நேரடி ஆட்சி செய்துள்ளனர்.

 அப்போது பொலன்னறுவை மன்னனான நிசங்க மல்லன் ராமநாதபுரம் கோவிலுக்கு கச்சத்தீவை தானமாகக் கொடுத்த கல்வெட்டு உள்ளது.

 இதுவே கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கைக்கு சாதகமாக இருக்கும் பழமையான சான்று ஆகும்.

 புத்த மதத்தை பின்பற்றினாலும் ராமநாதபுரம் கோயிலுக்கு சில திருப்பணிகள் செய்துள்ளான் இந்த சிங்கள மன்னன்.

 (அப்படிப் பார்த்தாலும் கச்சத்தீவு இராமநாதபும் கோவிலின் சொத்துதான்)

 1531-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு செப்பு பட்டயத்தில், ‘கச்சத் தீவு சேதுபதி மன்னர்களின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 1882 இல் ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான 8 தீவுகளை ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி குத்தகைக்கு எடுத்துள்ள ஆவணம் உள்ளது.

 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய "சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல்" எனும் ஆவணமும் கச்சத்தீவு இராமநாதபுரத்தின் பகுதி என்றே உள்ளது.

 அதன்பிறகு 1913 இல் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கச்சத்தீவு, மணலித் தீவு, குத்துக்கல் தீவு ஆகிய மூன்று தீவுகளை இராமநாதபுரம் (ஆங்கிலேயக்) கலெக்டரிடம் குத்தகைக்கு எடுத்த ஆவணமும் உள்ளது.
 இதில்தான் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமை உள்ளதாக இருக்கிறது.

 1915 இல் ஆங்கிலேயர் வெளியிடும் மாவட்டவாரி ஆவணங்களில்  "இராமநாதபுரம் மாவட்ட மேனுவல்" ஆவணத்தில் கச்சத்தீவு மதராஸ் மாகாணத்தின் பகுதி என்று உள்ளது.

 1921 இல் ஆங்கிலேயர் வகுத்த மீன்பிடி எல்லையில் கச்சத்தீவு பாதி மதராசுக்கும் பாதி இலங்கைக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

 இதன்பிறகு 1925 இல் ஒரு ஒப்பந்தம் மூலம் அப்போதைய மதராஸ் மாகாண மீன்வளத்துறை இலங்கை மீன்வளத்துறைக்கு கச்சத்தீவின் மீதான மீன்பிடி உரிமையைக் கொடுத்துள்ளது.

 அதன்பிறகு 1929 இல் இது மீண்டும் இராமநாதபுரத்திற்கு சொந்தமான பகுதி என இராமநாதபுரம் மாவட்ட மேனுவல் ஆவணத்தில் உள்ளது.
 இதை 1933 ஆண்டில் வெளிவந்த ராமநாதபுரம் மாவட்ட மேனுவல் புள்ளிவிபரங்களும் இடம்பெற்றுள்ளன.


 1939 இல் தொண்டி அருகே உள்ள நம்புதாளை என்ற ஊரை சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் கச்சத்தீவில்  "புனித அந்தோனியார் ஆலயத்தைக்" கட்டினார்.

 1947 இல் கச்சத் தீவை முகம்மது என்பவர் லீஸ் ஒப்பந்தம் மூலம் குத்தகைக்கு எடுத்துள்ளார்.
அந்த ஆவணம் எண் 278/1948 ஆக இராமேஸ்வரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கச்சத்தீவு இராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம் என்றிம் கச்சத்தீவின் சர்வே எண் 1250 என்றும் அரசாணை (G.O. No. 2009) 11.08.1949 ல் வெளியிடப்பட்டுள்ளது.

 அதாவது சான்றுகள் அடிப்படையில் அதிகமான சான்றுகள் தமிழகத்திற்கே ஆதரவாக உள்ளன.

 1974 வரை இலங்கை கச்சத்தீவு மீது உரிமை கோரவில்லை.
 அதன்பிறகு இந்திரா காந்தி காலத்தில் அணுகுண்டு பரிசோதனை செய்யப்பட்டபோது இந்தியாவிற்கு ஆதரவாக நிற்க இலங்கை கச்சத்தீவை பேரம் பேசி வாங்கியது.

 அதன்படி 28.06.1974 இல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்தது.
 இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தத்தில்,
தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளவும், வலைகளை உலரவைக்கவும் ஒய்வு எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
 இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.

 23.03.1976 இல் இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையேயான மேற்கண்ட ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு போடப்பட்ட சீராய்வு ஒப்பந்ததில் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமை கிடையாது என்று மாற்றிவிட்டனர்.

 இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசின் இந்த நயவஞ்சகத்தை அப்போது மட்டுமல்ல அதன்பிறகும் கூட எதிர்த்து பேசியதில்லை கருணாநிதி.

 அதன்பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் இதுபற்றி மூச்சுகூட விடவில்லை.
 எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் 1983 இல் இராமநாதபுரம் எல்லை மாற்றம் செய்யப்பட்டு கச்சத்தீவு தமிழக வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டது
(மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எண்: RCF 23-75/83).

 1983 கறுப்பு யூலை கலவரத்திற்குப் பின சிங்கள கடற்படை கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களைத் தாக்குவதும் சிறைபிடிப்பதும் கொலைசெய்வதும் அத்திகரித்தது.

 பல நூறு அப்பாவி மீனவர்கள் கொல்லப்பட்டு பல ஆயிரம் பேர் ஊனமாக்கப்பட்ட பிறகு இது தமிழகத்தின் முக்கியப் பிரச்சனை ஆனது.

 இதன்பிறகு இப்பிரச்சனையைக் கையிலெடுத்த ஜெயலலிதா குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் செய்தார்.

 1994 இல் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை குத்தகைக்காவது எடுக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.

 2004 இல் ஆட்சியில் இருந்தபோது பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

 ஆனால் 2008 எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதா தொடுத்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
 மேற்படி கச்சத் தீவு தாரை வார்ப்புக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளைக் கூட்டி ஒப்புதல் பெறப்படவில்லை அதனால் அவ்விரு ஒப்பந்தங்களும் செல்லாது என்றும் அவற்றை ரத்து செய்யவும் வழக்கு தொடுத்தார்.
  இதில் 1960-ல் மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கொடுக்க முயன்றபோது அதைத் தடுத்து உத்தரவிட்ட உச்ச நீதீமன்றத் தீர்ப்பை மேற்கோளும் காட்டியுள்ளார்.
 மேலும் CONVENTION OF LAW OF THE SEA ன் படி ஐ.நா. சபையின் முடிவுகளையும் முன்வைத்தார்.

 2011 இல் கச்சத்தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தங்களை ரத்துசெய்ய சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினார்.

 அதாவது ஜனநாயக முறைப்படி ஒரு மாநில முதல்வரால் என்ன செய்யமுடியுமோ அவற்றை செய்துள்ளார் ஜெயலலிதா.

 ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை.

 10.12.1984 இல் ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி என்பவர் இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட முதல் நபர்.
 அன்றிலிருந்து 09.10.2017 இல் இந்தி தெரியாததற்கு இந்திய கடற்படையே அக்கரைப்பேட்டை மீனவர் செந்தில்குமாரைச் சுட்டதுவரை சுமார் முவ்வாயிரத்திற்கும் அதிகமான கடற்படை தாக்குதல்களை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளனர்.

 தமிழக அரசின் அறிக்கைப்படி சுமார் 400 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்.
 ஆனால் பலி எண்ணிக்கை கணக்கு 800 வரை இருக்கும்.
 
 சிங்கள மீனவர்கள் ஹிந்திய கடற்படை ஆதரவுடன் சென்னை வரைவந்து மீன்பிடித்துச் செல்கின்றனர்.

 ஆனால் தமிழக மீனவர்கள் வெறும் 17 கி.மீ தூரத்தில் உள்ள கச்சத்தீவு வரை கூட போகமுடியாமல் தவிக்கின்றனர்.

 கச்சத்தீவின் நாற்புறமும் தமிழர் தாய்நிலமே!

 கச்சத்தீவுக்கு தொடர்பே இல்லாத சிங்களவரும் ஹிந்தியரும் தமிழர் நிலப்பகுதியைப் பறித்து தமிழர்களைக் கொலைசெய்வது எந்த விதத்தில் நியாயம்?!

 ஜனநாயகத்தில் தீர்வை எட்டமுடியாத நிலையில் வேறு எதைத்தான் நாம் கையிலெடுப்பது?!

Sunday 10 May 2020

பல்லவர் கட்டிய திருப்பதி



திருப்பதி கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கல்வெட்டு ஆய்வு 1920 இல் மஹந்த் ப்ரயாக்தாஸ் என்பவரால் தொடங்கப்பட்டது.
ஆனால் திருப்பதி வரலாறு என்றாலே நினைவுக்கு வந்து நிற்பவர் சாது சுப்பிரமணிய சாஸ்திரி ஆவார்.
1922 லிருந்து 1933 வரை திருப்பதி வட்டாரத்தில் 1,150 கல்வெட்டுகளை இவர் மொழிபெயர்த்துள்ளார்.
இதில் பெரும்பாலானவை தமிழ் மொழியில் உள்ளன.
அதற்கு அடுத்ததாக கன்னட கல்வெட்டுகள் உள்ளன.
தெலுங்கு கல்வெட்டுகள் சிலவையே!
கி.பி.830 ஆம் ஆண்டைச் சேர்ந்த பல்லவர் விஜயதந்தி வர்மன் என்பவரது கல்வெட்டே மிகப் பழமையானது.
மேற்கண்ட தகவல்கள் 2009 ஆம் ஆண்டு திருப்பதி முதல் பிரகாரத்தின் உட்பகுதி தங்கத் தகடுகளால் மூடப்பட இருந்தபோது 80 கல்வெட்டுகள் மறைக்கப்பட இருப்பதாக [தலைப்பு: Gold coat to hide Tirumala carvings (Sep 22, 2009)] டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் உள்ளவை ஆகும்.
கோவிலின் இதயப் பகுதியான இதில் இருக்கும் இந்த 80 கல்வெட்டுகளிலும் 55 தமிழ், 15 கன்னடம், 10 தெலுங்கு கல்வெட்டுகள் என தமிழே அதிகம்.
இதில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு பழமையான பல்லவர் கல்வெட்டும் மறைக்கப்பட்டது.
எதை மறைத்தாலும் சாது சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியுள்ள நூல்கள் இன்றும் திருப்பதி தமிழர்களுக்குச் சொந்தம் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன.
படம்: 1930 இல் S.Subrahmanya Sastri வெளியிட்ட Early inscriptions எனும் நூலில் இடம்பெற்றுள்ள பல்லவர்காலத் தமிழ்க் கல்வெட்டு பற்றிய பக்கம்