Showing posts with label பழமை. Show all posts
Showing posts with label பழமை. Show all posts

Sunday, 13 October 2019

2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!

2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!

 சமீபத்தில் நண்பருடன் நடந்த விவாதத்தில், Youtube இல் ஒரு பரதநாட்டிய காணொளியில் கன்னட நபர் ஒருவர் போட்டிருந்த கமெண்ட் ஒன்றை காட்டி என்னிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
 அந்த கன்னட நபரின் கமெண்ட்டானது,
'Just like karnataka shastriya sangeetha bharathanatya is from Deccan, after all root word bharatha or natya, neither is Dravidian terms, also it can't be preceeded without jathi or thala and neither got root in tamil.
May be tamils stole or carried it out'
 என்று இருந்தது.

 ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அறச்சலூர் கிராமம்.
 அங்கு நாகமலை என குறிப்பிடப்படும் நீண்ட மலைத்தொடரின் குன்று ஒன்றில் இசைத்தாளத்தில் அமைந்த தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
 ஐந்து வரிகளில் அமைந்த இந்த கல்வெட்டு
'த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த'
என்று வெட்டப்பட்டுள்ளது.
 இதை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் படிக்கலாம்.

 இந்த கல்வெட்டு கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்பது தொல்லியலாளர்கள் கருத்து.

 இதற்கு அருகிலேயே இன்னொரு கல்வெட்டு தமிழி (தமிழ் பிராமியி)லிருந்து வட்டெழுத்தாக மாற்றமடைந்த காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
 அதில்
'எழுத்தும் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன்'
என குறிப்பிடப்பட்டுள்ளது.
 அதாவது "மணிவண்ணக்கனான தேவன் சாத்தன் இங்கு கீறப்பட்ட இசை எழுத்துகளை சேர்த்தமைத்தான்" என்பது இதன் பொருளாகும்.

 இசை எழுத்துகள் பற்றி அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில் “பாலை” என்னும் படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் குறிப்பிடுகின்றார்.
 அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர் என திரு.துரை சுந்தரம் குறிப்பிடுகின்றார்.

அதோடுமட்டுமில்லாமல் இதனருகிலேயே இருவரின் நடன ஓவியங்கள் (Petroglyphs) கீறப்பட்டுள்ளன.
 அது நாட்டியத்தை காட்டுவதற்கானது தான் என்பதை குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை.
 பார்த்தாலே தெரியும்.

கிபி 300 க்கு பின் தான் கன்னடத்துக்கான எழுத்தே தோன்றியதாக கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
 அதுவும் பழங்கன்னடம் தமிழோடு நெருக்கமான வார்த்தைகளை கொண்டுள்ளது.
 அது கிளாசிக்கல் கன்னடமாக மாறியது கிபி 8 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தான்.
 ஏனெனில் அதன் பின்பு தான் கன்னடத்துக்கு இலக்கியமே படைக்கப்படுகிறது.
 இந்த மாதிரி எல்லாம் எதிர்காலத்தில் சிலர் அறிவற்று கேட்பார்கள் என்று தான் அனைத்தையும் பாறைகளிலும் பானை ஓட்டிலும் எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள் தமிழர்கள்.

 காவிரியையும் கோலாரையும் கண்ணெதிரில் சமீபத்தில் நம்பி கொடுத்து ஏமாந்தோம்.
 எங்களது உரிமைகளை கூட சட்ட ரீதியாக பெற முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்.
 வரலாற்றிலும் பலவற்றை ஏமாந்திருக்கிறோம்.
சில வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது.
அதில் இசையும் ஒன்று.

நன்றி: Vicky Kannan



Friday, 25 January 2019

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

வரலாற்று ஆய்வாளர் H.G.Wells என்பவர் உலகில் மாந்தர் பரவல் பற்றிய தமது கருத்தை கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறார்,

"For thousands of years, from 15,000 to 10,000 BC., such a heliolithic Neolithic culture and its brownish possessors may have been oozing round the globe through the warmer regions of the word, drifting by canoes often across wide stretches of sea"

"கி.மு 15,000 முதல் கி.மு. 10,000 வரையான புதிய கற்கால (அல்லது கதிரவக் கற்கால) காலகட்டத்தில் பழுப்பு மேனியுடையோர் சிறிய ரக படகுகள் மூலம் கடலில் துடுப்பாட்டியே வெப்பநாட்டிலிருந்து உலகெங்கும் பரவினார்கள்"

அத்தோடு நில்லாமல் இந்த பழுப்பு மனிதர்கள் இந்தியா முதல் எகிப்து மற்றும் ஸ்பெயின் வரை தொடர்ச்சியாக வாழ்ந்ததாக பிற ஆய்வாளரும் கருதுவதாகக் கூறியுள்ளார்,

"Wilfred scaven Blunt says that huxley had a long suspected a common origin of Egyptians and Dravidians of india, perhaps along belt of brown skinned men from india to spain in very early days"

Book: The outline of History
Page: 138 & 140

(கால்டுவெல் காலத்திற்கு முந்தைய ஆய்வாளர்கள் 'தமிழிய' என்று அழைத்தனர்.
அவர் காலத்திற்கு பிறகே 'திராவிட' எனும் பொருத்தமற்ற பெயர் நம்மீது திணிக்கப்பட்டு அதுவே மேலைநாட்டார் வழக்கத்திலும் உள்ளது)

நன்றி: பழந்தமிழர் பரவிய நாடுகள் - பழ.நெடுமாறன்

Wednesday, 1 August 2018

குறுக்கெண் புதிர் (சுடோகு) தமிழர் விளையாட்டு

குறுக்கெண் புதிர் (சுடோகு) தமிழர் விளையாட்டு

முந்நூறு ஆண்டுகள் முன்பே Sudoku விளையாடிய தமிழர்கள்.

ஆம். உண்மை.

பழனி மலையடிவார மண்டபம் ஒன்றில் 3×3 சுடோகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 350 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

இது பற்றி புதியதலைமுறை மற்றும் The news minute இதழும் ஏற்கனவே காட்டியுள்ளன.

தற்போதைய 9×9 குறுக்கெண் புதிர் 1984 ல் ஜப்பான் கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்டு 2004 ல் தான் செய்தித்தாள்களில் வெளியானதாம்.

ஆனால் தமிழர்கள் இதன் எளிய வடிவத்தை ஏற்கனவே பொழுதுபோக்கு விளையாட்டாக  பயன்படுத்தி வந்துள்ளது வியப்பின் உச்சம்.

(30.07.2018 அன்று மதியம் 3:11 க்கு முகநூல் பதிவாக இட்டது)

Sunday, 25 February 2018

நாகசாமிக்கு மறுப்பு - முனைவர் சொ. சாந்தலிங்கம் (நூல்)

"நாகசாமியின் நாசவேலை" எனும் புத்தகத்தில் பேரா.க.நெடுஞ்செழியன் ஊகித்தது போலவே தமிழின் பழைமையை குறைத்து இரா. நாகசாமி எழுதிய "MIRROR OF TAMIL AND SANSKRIT "என்ற நூலுக்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது.
நாகசாமியின் நூலுக்கு அவரது மாணவர் சாந்தலிங்கம் அவர்களின் சான்றுகளுடன் கூடிய மறுப்பு நூல்.
















Wednesday, 4 October 2017

குமரிக்கண்டக் கருத்தியல்

குமரிக்கண்டக் கருத்தியல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குமரி என்பது மலையா? கடலா? கண்டமா? தென்முனையா?

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்"
என்ற வரிகளுக்கு விளக்கம் தரும்  உரையாசிரியர்கள் குமரியை ஆறு என்றவாறே உரையெழுதியுள்ளனர்.

ஆனால் குமரி ஒரு ஆறு என்று எங்கும் வரவில்லை.

"வடவேங்கடம் தென்குமரி"
(தொல்காப்பியம் பாயிரம்)

"தென்குமரி வட பெருங்கடல்
குண குட கடலா எல்லை"
(புறநானூறு: 67)
போன்ற இடங்களில் குமரி என்று மட்டுமே வந்துள்ளது.

ஆனால்,
சிலப்பதிகாரத்தில் குமரியை கடல் என்றவாறு
"நெடியோன் குன்றமும்
தொடியோன் பௌவமும்"
குறித்திருப்பதைக் காணமுடிகிறது.

ஆனால் அதே சிலப்பதிகாரத்தில் மற்றொரு இடத்தில் குமரி எனும் மலையை கடல் கொண்ட செய்தி வருகிறது.

"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்று பஃறுளி ஆற்றோடு குமரி மலை கடலில் மூழ்கிய செய்தி வருகிறது.

இளங்கோவடிகள் கடலில் மூழ்கிய மலையை குமரி என்று கூறுவது அவரது வரலாற்று அறிவினால் ஆகும்.
அவரது காலத்தில் குமரி கடலில் மூழ்கி கடலுக்கு பெயராக இருந்திருக்கவேண்டும்.

பஃறுளியாற்றுடன் குமரி மலையும் கடல்கொண்டபிறகு
அந்த இழப்பினை ஈடுசெய்வதற்காக பாண்டிய மன்னன் ஒருவன் வடக்கே படையெடுத்துச் சென்று கங்கையையும், இமயத்தையும் தன் உடைமையாக்கிக் கொண்டவரலாற்றையே இளங்கோவடிகள்
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்"
என்று கூறுகின்றார்.

பஃறுளியாறு நெடியோன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பகுதி என
"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
என்ற புறநானூறு மூலம் அறியலாம்.

[இதற்கு அடுத்தும் ஒரு கடற்கோள் ஏற்பட்டு தமிழ்ச் சங்கம் (இடை) இருந்த கபாடபுரம் வரை கடலில் மூழ்கியுள்ளது.
இது இளங்கோவடிகள் காலத்திற்கு முன்பே நடந்திருந்தாலும் அவர் அதை ஏனோ வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

ஆனால் "மலி திரையூர்ந்து தன் மண் கடல் வௌவலின்" என்று ஒரு கடற்கோளையும் (அந்த நில இழப்பை ஈடுகட்ட) பாண்டியன் சேர சோழரை வென்று தனதாக்கியதை "புலியோடு வில் நீங்கி" என்றும் முல்லைக் கலியில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்]

  இந்திய துணைக்கண்டம் பெரிய தீவாக கடலில் தனித்து இருந்தது.
பிறகு அத்தீவு ஆசியாவுடன் மோதி இணைந்தது.
அந்த மோதலால் உருவானதே இமயமலை.
அப்படி இணையும் முன்பு (அதோடு குமரிக்கண்டமும் சேர்ந்திருந்தது) நாம் அதில் வாழ்ந்திருந்தோம்.
அதற்கு நாவலன் தீவு என்று பெயரிட்டு அழைத்துவந்தோம்.
(மருதுபாண்டியரின் சுதந்திர பிரகடனத்தில் இந்தியாவை ஜம்புத்தீவு என்று குறிப்பிட்டுள்ளனர்)
அப்படிப் பார்த்தால் மூழ்கியுள்ள கண்டம் நாவலந்தீவு என்றுதான் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நாவலந்தீவின் தென்பாதியில் பெரும்பகுதியை குமரி மலை கொண்டிருக்கவேண்டும்.
மூழ்கிய பிறகும் பல காலம் அந்த மாமலையின் உச்சி வெளியே தெரிந்தபடி இருந்திருக்கவேண்டும்.
அதனால் நிலப்பரப்பின் பெயரை விட மலையின் பெயரே அக்கடல் பகுதிக்கு அமைந்திருக்கவேண்டும்.

மூழ்கிய அந்நிலத்தைப் பற்றி மேலைநாட்டார் விலங்கின ஆராய்ச்சியின் போது கண்டறிந்தனர்.
லெமுர் எனும் உயிரினம் இந்தியா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நிலப்பரப்பிலும் கடலை ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்வதை வைத்து முன்பு இம்மூன்றையும் தொட்டவாறு பெரிய கண்டம் இருந்திருக்கவேண்டும் என்று கணித்து அதற்கு லெமூரியா என்று பெயரிட்டனர்.

இதை அறிந்த தமிழறிஞர்கள் மேற்கொண்டு இலக்கியங்களை ஆராய்ந்து லெமுரியா என்பது 49 நாடுகள் இருந்த தமிழர் நிலமே என்று அறிவித்தனர்.

  இது பற்றி 20ம் நூற்றாண்டில் முதன்முதலாக ( அதாவது பல நூற்றாண்டுகளுக்கு பிறகு) 1903ல் எழுதியவர் பரிதிமாற் கலைஞர் (பார்ப்பனத் தமிழர்).
தமது 'தமிழ்மொழியின் வரலாறு ' எனும் நூலில் குமரிநாடு என்றே குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு அது 1930களில் குமரிக் கண்டம் என்று பெயர்பெற்றது.
(இப்பெயர் 15ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கந்த புராணத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறுவர்)

இதை பரப்புரை செய்து தமிழர் அனைவருக்கும் கொண்டுசென்று குமரிக்கண்டம் தமிழர் பிறப்பிடம் என்றும் இந்தியாவில் மூத்தகுடி தமிழரே என்றும் 'குமரிக்கண்ட கருத்தியலை' உருவாக்கியவர் ஈழத்தமிழரான கனகசபை ஆவார்.

அதன்பிறகு பாவாணர் மேலும் ஆராய்ந்து குமரிக்கண்ட மாந்தன் இந்தியா மட்டுமல்லாது உலகிலேயே தோன்றிய முதல் மாந்தன் என்று அக்கருத்தியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

அதற்காக 20 நூற்றாண்டுவரை தமிழர்கள் மூழ்கிய குமரியை மறந்துவிட்டதாகக் கூறமுடியாது.
ஈழத்தின் தென் பகுதி தமிழர் வசம் இல்லை.
ஆனால் அந்த கடல் பார்த்த தென்முனை தமிழகத்திடம் உள்ளது.
அந்த பகுதிக்கு தமிழ்மக்கள் குமரி என்றே பெயரிட்டு அழைத்தனர்.
ஆங்கிலேயர் அம்முனையை cape komarin என்றே குறித்துள்ளனர்.
மூழ்கிய குமரிநிலத்தின் நினைவாக குமரி அம்மன் கோவிலும் கட்டி வழிபட்டு வந்தனர்.
(மூழ்கிய முன்னோர் வழிபாடு தென்புலத்தார் வழிபாடு என்று பல காலம் பின்பற்றப்பட்டு தமிழர்களால் வந்தது)

1956ல் தமிழ் மாநிலம் அமைந்தபோது மலையாளிகள் கையில் இருந்த தென்முனையை பெரும்போராட்டம் நடத்தி  தமிழகத்துடன் சேர்த்த நேசமணி (கிறித்துவ நாடார்) அவர்கள்,
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை (வெள்ளாளர்) அவர்களின் கடைசி ஆசைப்படி அம்மாவட்டத்திற்கே 'கன்னியாகுமரி' என்று பெயர் வைத்தார்.

ஆக, குமரி என்ற பெயர்
முதலில் மலைக்கும்
பிறகு கடலுக்கும்
பிறகு மூழ்கிய கண்டத்திற்கும்
பிறகு தென்முனைக்கும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இமயமலை முதல் குமரிமலை வரை பரந்திருந்த ஒரு கண்டம் முழுவதும் வாழ்ந்த தமிழர் இன்று ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவரைப்போல வாழ்கிறோம்.

'இந்தியா முழுவதும் நமதே' என்பதற்கான சான்றுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் பிறரறியா வண்ணம் ஆக்கப்பட்டுவிட்டன.

ஆனால்,
மூழ்கிய குமரிக்கண்டம் நமது பழமையான நாகரீக சான்றுகளுடன் பாதுகாப்பாக கடலுக்குள் இருக்கிறது.

நம் வரவை, தனது மக்களின் வரவை எதிர்பார்த்து அது கடலுக்குள் காத்திருக்கிறது.

எனவே இந்தியாவில் உள்ள மூடர்களிடம் எஞ்சியுள்ள சான்றுகளை காட்டி
'தமிழ் மொழியை வெறும் 5000 ஆண்டுகள் பழமையானது என்றாவது ஏற்றுக்கொள்ளைங்கள்" என்று பேரம் பேசுவதில் குறியாக இருக்கும் நாம்,
இனியும் அந்த 'பாறையில் உழும்' முட்டாள்த்தனத்தைச் செய்யாமல்
கையில் இருக்கும் நிலத்தையாவது அரணமைத்து தனிநாடாக்கி
இனத்தை அழிவிலிருந்து காத்து
பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டும்.

அதன்பிறகு கடலில் இறங்கி (இன்று பாகிஸ்தானில் உள்ளதும் இந்திய கண்டத்திலேயே பழமையான நாகரீகமும் ஆன ) சிந்துசமவெளி நாகரீகத்தை விட பழமையான நமது குமரிக்கண்ட நாகரீகத்தை ஆராய்ந்து நமது பழமையை நாட்டுவதில் சிந்தையைச் செலுத்துவோம்.

தனிநாடு அமைத்து அதன்மூலம் அமையும் நமது பொருளாதாரம் மூலம்தான் கடலில் இறங்கி நமது பழமையை வெளிக்கொணரும் ஆற்றல் நமக்கு வரும்.
உலகத்தில் வாழும் எந்த இனத்தானும் நமக்காக இதைச் செய்யப்போவதில்லை.
நாம் தான் செய்யவேண்டும்.
அதன்பிறகுதான் தமிழரே மூத்தகுடி என்று உலகம் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ளும்.

நாம் அதைச் செய்யாததால் பாருங்கள் முழுக்க முழுக்க தமிழருக்கு மட்டுமே உரிமையான அந்த கடலை அதனடியில் இருக்கும் நிலத்தை எவனெவனெல்லாமோ சொந்தம் கொண்டாடுகிறான்.

(நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்தியாவின் பெயரில்) குமரிக்கடல் இன்று 'இந்தியப் பெருங்கடல்' என்று அழைக்கப்படுகிறது.

நேற்று பிறந்த இந்துத்துவவாதிகள் அதை 'இந்து மகா சமுத்திரம்' என்கின்றனர்.

நாம் தனிநாடு அமைத்ததும் அக்கடலுக்கு குமரிக்கடல் என்றே பெயரிட வேண்டும்.
பிறரை முந்திக்கொண்டு நாம் முதலில் கடலில் இறங்கி விரிவான ஆராய்ச்சி நடத்தவேண்டும்.

குமரிக்கண்டத்தை ஆராய்ந்தால் நாமே பூர்வகுடி எனும் சான்று கட்டாயம் கிடைக்கும்.
அதன் பழமையை நிறுவிவிட்டால் இந்தியாவையே நாம் கைப்பற்றி ஆண்டாலும் யாரும் கேள்விகேட்க முடியாது.

  பாவாணர் கூறிய படி
'குமரிக்கண்டமே மாந்தன் தோன்றிய இடம்'
'தமிழரே மூத்தகுடி'
'தமிழே மூத்தமொழி'
என்ற உண்மையை உலகம் அறியும்படி சான்றுகளுடன் அறிவிக்கவேண்டும்.

இதுதான் குமரிக்கண்டக் கருத்தியல்.

இதற்கு ஒரே வழி தமிழ்தேசியம்.

Tuesday, 4 July 2017

2800 ஆண்டுகள் பழமையான கொற்கை பானையோடு மறைக்கப்படுவது ஏன்?

தற்போது வரை (2016 AD) கிடைத்திருக்கும் தமிழி எழுத்தில் மிகப்பழைய எழுத்துப்பொறிப்பு கொற்கையில் கிடைத்த 'ஆதன்' என பெயர் பொறித்த பானையோடு ஆகும்.

கரிமநாட்காட்டி படி இதன் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு (கி.மு. 755 ± 95).
இதை நடன காசிநாதன் போன்றோர் தன் நூல்களில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஆனால் இதை அதிகம் வெளிவரவிடாமல் செய்வதற்கும் இதை பரவலான ஏற்பை பெறாமல் இருக்க செய்வதற்கும் மத்திய தொல்லியல் துறையினரால் உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் தான் கீழுள்ளவர்கள்.

இவர்கள் வெளியிடும் தமிழருக்கு எதிரான கருத்துக்களை கீழே கொடுத்துள்ளேன்.

1. அமர்நாத் ராம்கிருஷ்ணா -
கீழடி தொல்லியல் ஆய்வாளர்.
பாண்டிமுனி கோயிலை பௌத்த கோயில் என்றது.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை மண்ணடுக்கும் அதன் கீழ் ஆற்றுப்படுகையும் வருகின்ற மாதிரி இருக்கும் கீழடியை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தவர்.
இதன் மூலம் அசோகருக்கு பின்னர் வந்த எழுத்துப்பொறிப்புகளை மட்டும் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

2. சுப்பராயலு -
கல்லணையை கரிகாலன் கட்டவில்லை என்று சொன்னவர். மறைமுகமாக களப்பிரர் கட்டினர் என கதை விட்டவர்.

3. பத்மாவதி அணையப்பன் -
களப்பிரர் காலத்தில் பாலாறும் தேனாறும் ஓடியதாக தொடர்ந்து கதையளப்பவர்.
காஞ்சிபுர ஐயனார் கோயிலை பௌத்த கோயில்னு புழுகித்தள்ளியவர்.

4. ஐராவத மகாதேவா -
அசோகப்பிராமிக்கு பின்னர் தமிழ் எழுத்துக்கள் வந்ததுன்னு தொடர்ந்து கதையளப்பவர்.
ஜைனர்களால் தமிழ் எழுத்துக்கள் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதுன்னு கதைவிட்டதும் அல்லாமல் அதை உலகளவில் பிரபலம் அடையச்செய்தவர்.

நாலவதாக சொல்லப்பட்ட மகாதேவாவின் கருத்து எளிதாக அடிபட்டு விட்டது.
அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டைவிட பழமையான எழுத்துக்கள் தமிழக்கதில் ஏற்கனவே கிடைத்திருந்தன.

நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கி.மு. எட்டாம் நூற்றாண்டு பானையோட்டை நோக்கி ஆய்வாளர்கள் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக தான் தமிழ் எழுத்துக்களை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு பழமையோடு தடுத்து நிறுத்த உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்டவர்களே மேலே நான் சொன்னவர்களும் இன்னும் பலரும். 
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஜைனம் பௌத்தம் போன்றவை வடக்கில் உருவாகி அவர்களே தமிழ்நாட்டுக்கு தமிழ் எழுத்துக்களை கொண்டுவந்தார்கள் என்ற கருத்தை நோக்கியே இதை வளர்த்துச்செல்வார்கள் இவர்கள்.

இவர்களிடம் நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கரிமநாட்காட்டி படி கி.மு. எட்டாம் நூற்றாண்டு அளவில் பழமையான கொற்கை பானையோட்டை பற்றி ஏன் நீங்கள் பேசுவதே இல்லை என கேட்டுப்பாருங்கள்.
இஞ்சி தின்ற குரங்குகள் போல விழிப்பார்கள்.
இல்லை சமாளிப்பு காரணங்கள் எதையாவது சொல்லி கடந்துவிடுவார்கள்.

எதனால் அப்படி?
கி.மு. எட்டாம் நூற்றாண்டுனா மகாவீரா, புத்தா போன்றவர்களை விட பழமையான காலமாக தமிழ் வந்துவிடும்.
அப்புறம் எப்படி ஜைனம் பௌத்தத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆரிய திராவிட தலித்திய நாரதப்பூச்சாண்டி அரசியலை செய்ய இயலும்?
அதனால் தான் கி.மு. எட்டாம் நூற்றாண்டு கொற்கை பானையோடு பற்றி அமர்நாதன்களும் பத்மாவதிகளும் பேசமாட்டார்கள்
- தென்காசி சுப்பிரமணியன் (கூர்ங்கோட்டவர்)
25 ஜூன்

Sunday, 11 June 2017

மொழிகளின் முதல் நூல்

மொழிகளின் முதல் நூல்

சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'சியபஸ்லகர' 1,000 ஆண்டுகள் பழமையானது.

தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நூல் 'மாபாரதம்' 1,000 ஆண்டுகள் பழமையானது.

கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'கவிராசமார்க்கம்' 1,170 ஆண்டுகள் பழமையானது.

தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் 'தொல்காப்பியம்' 4,100 ஆண்டுகள் பழமையானது.