Sunday 13 October 2019

2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!

2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!

 சமீபத்தில் நண்பருடன் நடந்த விவாதத்தில், Youtube இல் ஒரு பரதநாட்டிய காணொளியில் கன்னட நபர் ஒருவர் போட்டிருந்த கமெண்ட் ஒன்றை காட்டி என்னிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
 அந்த கன்னட நபரின் கமெண்ட்டானது,
'Just like karnataka shastriya sangeetha bharathanatya is from Deccan, after all root word bharatha or natya, neither is Dravidian terms, also it can't be preceeded without jathi or thala and neither got root in tamil.
May be tamils stole or carried it out'
 என்று இருந்தது.

 ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அறச்சலூர் கிராமம்.
 அங்கு நாகமலை என குறிப்பிடப்படும் நீண்ட மலைத்தொடரின் குன்று ஒன்றில் இசைத்தாளத்தில் அமைந்த தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
 ஐந்து வரிகளில் அமைந்த இந்த கல்வெட்டு
'த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த'
என்று வெட்டப்பட்டுள்ளது.
 இதை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் படிக்கலாம்.

 இந்த கல்வெட்டு கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்பது தொல்லியலாளர்கள் கருத்து.

 இதற்கு அருகிலேயே இன்னொரு கல்வெட்டு தமிழி (தமிழ் பிராமியி)லிருந்து வட்டெழுத்தாக மாற்றமடைந்த காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
 அதில்
'எழுத்தும் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன்'
என குறிப்பிடப்பட்டுள்ளது.
 அதாவது "மணிவண்ணக்கனான தேவன் சாத்தன் இங்கு கீறப்பட்ட இசை எழுத்துகளை சேர்த்தமைத்தான்" என்பது இதன் பொருளாகும்.

 இசை எழுத்துகள் பற்றி அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில் “பாலை” என்னும் படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் குறிப்பிடுகின்றார்.
 அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர் என திரு.துரை சுந்தரம் குறிப்பிடுகின்றார்.

அதோடுமட்டுமில்லாமல் இதனருகிலேயே இருவரின் நடன ஓவியங்கள் (Petroglyphs) கீறப்பட்டுள்ளன.
 அது நாட்டியத்தை காட்டுவதற்கானது தான் என்பதை குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை.
 பார்த்தாலே தெரியும்.

கிபி 300 க்கு பின் தான் கன்னடத்துக்கான எழுத்தே தோன்றியதாக கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
 அதுவும் பழங்கன்னடம் தமிழோடு நெருக்கமான வார்த்தைகளை கொண்டுள்ளது.
 அது கிளாசிக்கல் கன்னடமாக மாறியது கிபி 8 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தான்.
 ஏனெனில் அதன் பின்பு தான் கன்னடத்துக்கு இலக்கியமே படைக்கப்படுகிறது.
 இந்த மாதிரி எல்லாம் எதிர்காலத்தில் சிலர் அறிவற்று கேட்பார்கள் என்று தான் அனைத்தையும் பாறைகளிலும் பானை ஓட்டிலும் எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள் தமிழர்கள்.

 காவிரியையும் கோலாரையும் கண்ணெதிரில் சமீபத்தில் நம்பி கொடுத்து ஏமாந்தோம்.
 எங்களது உரிமைகளை கூட சட்ட ரீதியாக பெற முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்.
 வரலாற்றிலும் பலவற்றை ஏமாந்திருக்கிறோம்.
சில வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது.
அதில் இசையும் ஒன்று.

நன்றி: Vicky Kannan



No comments:

Post a Comment