Showing posts with label தமிழிசை. Show all posts
Showing posts with label தமிழிசை. Show all posts

Thursday, 6 November 2025

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

ஆந்திரம் பிரிந்து ஒரு மாதம் கடந்து விட்டது.
ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் தெலுங்கு மொழி இன்னும் நமது ராஜ்ய ரேடியோ நிலையத்திலிருந்து ஒழியவில்லை.
காலையில் எழுந்து ரேடியோவை திருகினால் நாம் கேட்கும் மொழி தெலுங்காகத்தான் இருக்கிறது.
தமிழில் பாடகர் பாடினாலும் இன்னார் இன்ன ராகம் இன்ன தாளத்தில் பாடுகிறார் என்பதை தெலுங்கில் தான் சொல்லுகிறார்கள்!
பாடகர்களிலும் பெரும்பாலோர் இன்னமும் தெலுங்கில் பாடுவதை விட்டதாக தெரியவில்லை.
ரேடியோ நிலைய அதிகாரிகள் வெறும் தமிழ் மட்டும் பாடுபவர்களை தரக்குறைவாக நடத்துகிறார்களாம்!
தெலுங்கிலும் பாடாவிட்டால் பாட அனுமதிக்க முடியாது என்று மிரட்டுகிறார்களாம்!
ஆந்திரம் பிரியும் முன்னர்  இந்த நிலையில் இருந்த்தை நாம் ஓரளவு சகித்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் ஆந்திரம் பிரிந்த பின்பும் அதே நிலை தான் என்றால் இப்படி ஒரு ரேடியோ நிலையம் அவசியம் தானா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் வேதனையுடன் தலைத் தூக்கி நிற்பது நியாயமே.
ஆந்திரர்களுக்கு விஜயவாடா ரேடியோ நிலையம் தனியாக இருக்கிறது.
செகந்திராபாத் ரேடியோ நிலையமும் முழுக்க ஆந்திர மயமே. அப்படி இருக்க தமிழ் ராஜ்ய ரேடியோ நிலையமும் தெலுங்கு மயமாகத்தான் இருக்க வேண்டுமா?!
விஜயவாடா ரேடியோ நிலையத்தில் தெலுங்கு பாடகர்கள் தமிழ் பாட்டுகளாக பாடிக் கொண்டிருந்தால் ஆந்திரர்கள் சும்மா இருப்பார்களா?!
தமிழர்கள் ஆந்திரர்களைப் போன்று வெறி பிடித்தவர்களாக இருக்க வேண்டாம் ஆனால் தங்கள் தாய்மொழி பற்றை கூடவா விட்டு விட வேண்டும்?!  சென்னை ரேடியோ நிலையத்தில் சினிமா ரிக்கார்டுகள் ஒளிபரப்பும் நேரத்தில் இந்தி ரெக்கார்டு போடுவதைப் போன்று தெலுங்கு ரெக்கார்டுகளையும் போட்டு தொலைத்து விட்டு போகட்டும்!
நாம் அக்கறைப்படவில்லை!
ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கால்வாசிக்கு மேல் தெலுங்கு மயமாக இருப்பதை உணர்ச்சி உள்ள தமிழர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை!
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும் இல்லை என்றால் 'தெலுங்கு ஒளிபரப்பு எதிர்ப்பு இயக்கம்' தமிழர்களால் தொடங்கப்பட நேரும்.
இதற்கு அறிகுறியாக இப்பொழுது தமிழ் ராஜ்யத்தில் ரேடியோ பெட்டி வைத்திருப்போர் தங்கள் தங்களின் அதிருப்தியை ரேடியோ நிலைய அதிகாரிகளுக்கும் மத்திய அரசாங்க மந்திரி அகர்வாலுக்கும் நமது ராஜ்ய மந்திரி சபை பிரச்சார இலக்காவிற்கும் மகஜர் மூலம் தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி பாகுபடற்ற முறையில் தமிழர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை நேரிய முறையில் ஆட்சியாளருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்!
தமிழகத்தில் எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் இது பற்றி தீர்மானம் நிறைவேற்றி ஆட்சி பீடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்!
தமிழ் ராஜ்யத்திலேயே தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதை தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க முற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
இசைத்தமிழ் தழைக்க, தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழகத் தலைவர்கள் பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறோம்.

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம்
01.11.1953

Sunday, 13 October 2019

2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!

2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!

 சமீபத்தில் நண்பருடன் நடந்த விவாதத்தில், Youtube இல் ஒரு பரதநாட்டிய காணொளியில் கன்னட நபர் ஒருவர் போட்டிருந்த கமெண்ட் ஒன்றை காட்டி என்னிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
 அந்த கன்னட நபரின் கமெண்ட்டானது,
'Just like karnataka shastriya sangeetha bharathanatya is from Deccan, after all root word bharatha or natya, neither is Dravidian terms, also it can't be preceeded without jathi or thala and neither got root in tamil.
May be tamils stole or carried it out'
 என்று இருந்தது.

 ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அறச்சலூர் கிராமம்.
 அங்கு நாகமலை என குறிப்பிடப்படும் நீண்ட மலைத்தொடரின் குன்று ஒன்றில் இசைத்தாளத்தில் அமைந்த தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
 ஐந்து வரிகளில் அமைந்த இந்த கல்வெட்டு
'த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த'
என்று வெட்டப்பட்டுள்ளது.
 இதை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் படிக்கலாம்.

 இந்த கல்வெட்டு கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்பது தொல்லியலாளர்கள் கருத்து.

 இதற்கு அருகிலேயே இன்னொரு கல்வெட்டு தமிழி (தமிழ் பிராமியி)லிருந்து வட்டெழுத்தாக மாற்றமடைந்த காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
 அதில்
'எழுத்தும் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன்'
என குறிப்பிடப்பட்டுள்ளது.
 அதாவது "மணிவண்ணக்கனான தேவன் சாத்தன் இங்கு கீறப்பட்ட இசை எழுத்துகளை சேர்த்தமைத்தான்" என்பது இதன் பொருளாகும்.

 இசை எழுத்துகள் பற்றி அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில் “பாலை” என்னும் படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் குறிப்பிடுகின்றார்.
 அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர் என திரு.துரை சுந்தரம் குறிப்பிடுகின்றார்.

அதோடுமட்டுமில்லாமல் இதனருகிலேயே இருவரின் நடன ஓவியங்கள் (Petroglyphs) கீறப்பட்டுள்ளன.
 அது நாட்டியத்தை காட்டுவதற்கானது தான் என்பதை குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை.
 பார்த்தாலே தெரியும்.

கிபி 300 க்கு பின் தான் கன்னடத்துக்கான எழுத்தே தோன்றியதாக கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
 அதுவும் பழங்கன்னடம் தமிழோடு நெருக்கமான வார்த்தைகளை கொண்டுள்ளது.
 அது கிளாசிக்கல் கன்னடமாக மாறியது கிபி 8 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தான்.
 ஏனெனில் அதன் பின்பு தான் கன்னடத்துக்கு இலக்கியமே படைக்கப்படுகிறது.
 இந்த மாதிரி எல்லாம் எதிர்காலத்தில் சிலர் அறிவற்று கேட்பார்கள் என்று தான் அனைத்தையும் பாறைகளிலும் பானை ஓட்டிலும் எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள் தமிழர்கள்.

 காவிரியையும் கோலாரையும் கண்ணெதிரில் சமீபத்தில் நம்பி கொடுத்து ஏமாந்தோம்.
 எங்களது உரிமைகளை கூட சட்ட ரீதியாக பெற முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்.
 வரலாற்றிலும் பலவற்றை ஏமாந்திருக்கிறோம்.
சில வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது.
அதில் இசையும் ஒன்று.

நன்றி: Vicky Kannan



Tuesday, 9 October 2018

வீரமணி ஐயரின் தமிழிசைத் தொண்டு

வீரமணி ஐயர் நினைவு நாள் இன்று (08 அக்டோபர்))

தமிழிசைக்குத் அளப்பரிய தொண்டு செய்த வீரமணி ஐயர் ஈழத்தின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன், நற்கதி அருள்வாயம்மா" போன்ற பல பாடல்களை எழுதி இசையமைத்தவர்.

72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார்.

பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும்.

கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணி ஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார்.

அன்னாரின் நினைவைப் போற்றுவோம்!

நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி

Sunday, 12 July 2015

கர்நாடக சங்கீதம் தமிழிசையே

கர்நாடக சங்கீதம் தமிழிசையே

நிறுவிய கிறித்தவரும்
ஆராய்ந்த இசுலாமியரும்

//தமிழிசையே இப்போது 'தென்னிந்திய இசை' என்றும்
'கர்நாடக சங்கீதம்' என்றும்
வழங்கப் படுகிறது//

//வட இந்திய இசை அல்லது 'ஹிந்துஸ்தானி இசை' இந்தத் தமிழிசையின் ஒரு 'வளர்ச்சி நிலையே' என்றும் தெரிய வருகிறது.//

//தமிழ்நாட்டு வரலாற்றை நாம் கூர்ந்து பார்க்க வேண்டும்.
கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டு வரை இங்கே களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது.
தொடர்ந்து 20 ம் நூற்றாண்டு வரை தமிழகம் மாறி மாறி பிறமொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.
இடைக் கால சோழர் ஆட்சியும் இடைக் கால பாண்டியர் ஆட்சியும் சிறு இடைவெளிகள் தான்//

// இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாக தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது.
பல்லவர்கள் வடமொழிக்கும், தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.
நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம்.
பிறகு மாரட்டியரின் காலகட்டம்.
இந்தக் கால கட்டங்களில் பொதுவாக தமிழ்க் கலைகளுக்கு சரிவும், தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன. //

// பிற மொழியினர் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் வடமொழியிலும், தெலுங்கிலும் எழுதினார்கள்.
வடமொழி என்பது இந்தியா முழுக்க தொடர்பு ஏற்படுத்தித் தரும் தொடர்புமொழியாக இருந்தது.
தெலுங்கு ஆட்சிமொழி.
இன்று ஆங்கிலம் நமக்குக் கவர்ச்சியான மொழியாக இருப்பது போல வடமொழியும், தெலுங்கும் உயர்குடி மொழியாகவும் கருதப்பட்டன//

//இசை முற்காலத்தில் அரச சபைகளையே பெரிதும் நம்பியிருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அரச சபை தெலுங்கிற்கும், வடமொழிக்கும் முக்கியத்துவம் தரும் போது பாடகர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் வேறு வழி இல்லை//

// சரி, இந்த இசையமைப்பு
தமிழ்நாட்டுக்கு உரியது என்பதற்கு என்ன
ஆதாரம்?//

// நமது பண்டைய இலக்கியங்களே முதல் ஆதாரங்கள்.
ஆபிரகாம் பண்டிதர் அதை விரிவாக நிறுவியிருக்கிறார்.
நான்கு வகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தது தமிழ் மரபு.
நான்கிற்கும் கருப்பொருள், உரிப் பொருள் வகுத்தது.
இது நமது கலை இலக்கியங்களுக்கெல்லாம்.பொதுவான இலக்கண.அடிப்படையாகும்.

நான்கு நிலத்திற்கும் தனியாக நான்கு பெரும் பண்கள் கூறப்பட்டுள்ளன.
நான்கு பெரும் பண்களும்.நான்கு சிறு பண்களும் வகுத்துக் கூறப்பட்டுள்ளன.

நான்கு நிலங்களும், பாலையாகத் திரிபு கொள்ளும் போது அதற்கும் பெரும் பண் சிறு பண் வகுக்கப்பட்டுள்ளது.

பண்கள் தான் இராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன//

//நான்கு
நிலத்திற்கும் உரிய பெரும்பண்களை பாலை
என்கிறோம்.//

//நமது பழந்தமிழ் இலக்கியங்களில் 'ஏழ்பெரும் பாலை' என்பது அடிக்கடி குறிப்பிடப் படுகிறது.
சிலம்பு (உரையாசிரியர்கள்) கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ் பெரும் பாலைகளை அமைத்து கூறியவர் பண்டிதரே.

ஏழ்பெரும் பாலைகளாவன:
1. செம்பாலை
2.அரும்பாலை
3.கோடிப்பாலை
4.மேற்செம்பாலை
5.படுமலைப்பாலை
6.செவ்வழி
7.விரிம்பாலை

இந்த ஏழு பண்களையும் வட்டப் பாலை முறையில் அமைத்துக் காட்டியவர் பண்டிதரே.
வட்டப் பாலை முறையில் ராகங்கள் எப்படி அமைகின்றன என்று கண்டடைந்து சொன்னதே பண்டிதருடைய முக்கியமான சாதனையாகும்//

//எல்லாருக்கும் புரிகிற,
தெரிந்த உதாரணம் சொல்கிறேனே.
சிலப்பதிகாரத்தில் 'ஆய்ச்சியர் குரவை' என்ற பாடல் பகுதி வருகிறது.
அது "முல்லைத் தீம்பாணி" என்று குறிப்பிடப் படுகிறது//
//‘சரிகபத ‘ என்பது அதன் சுரம்.
இந்த முல்லைத் தீம்பாணி தான் இன்றைய
"மோகனராகம்".//

// கர்நாடக இசை என்ற பெயர்
எப்படி வந்தது?//

// தியாகராஜர் சென்னையைத் தாண்டிப் போனதே இல்லை.
ஒருமுறை திருப்பதி போனதாக தகவல்.
அவர் பாடியதெல்லாம் இங்கே இருந்துதானே?
கர்நாடக இசை என்ற பெயரெல்லாம் பிற்பாடு வந்தது.
பெயர் மாறினால் என்ன?
ருக்மிணி தேவி அருண்டேல் சின்னமேளம் அல்லது சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார்.
பெயர் மாறினால் மரபு மாறுமா?
கேரளத்திலிருந்து திருவிழா ஜெய்சங்கரும்,
ஆந்திராவிலிருந்து லால்குடி ஜெயராமனும் ஒரே இசைதானே பாடுகிறார்கள்?  //

(தமிழிசைக்கு அகராதி எழுதிய அறிஞர்  நா.மம்மது அவர்களின் பேட்டியிலிருந்து
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403184&format=print&edition_id=20040318 )
========================
ஆபிரகாம் பண்டிதர் பற்றி,

//பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபிசையை,
தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்//
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக,
தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர்//

//சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார்.

இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார்.

இராகங்களை உண்டு பண்ணும் முறை,
பாடும் முறை ஆகியவற்றை
பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார்.
அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன//

// பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917இல் பெரும் இசை நூலாகக் 'கருணாமிர்த சாகரம்' என்ற பெயரில் வெளியிட்டார்.
1395 பக்கங்கள் உடையது இந்நூல்.
இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது//

https://ta.m.wikipedia.org/wiki/ஆபிரகாம்_பண்டிதர்