Wednesday 4 October 2017

குமரிக்கண்டக் கருத்தியல்

குமரிக்கண்டக் கருத்தியல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குமரி என்பது மலையா? கடலா? கண்டமா? தென்முனையா?

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்"
என்ற வரிகளுக்கு விளக்கம் தரும்  உரையாசிரியர்கள் குமரியை ஆறு என்றவாறே உரையெழுதியுள்ளனர்.

ஆனால் குமரி ஒரு ஆறு என்று எங்கும் வரவில்லை.

"வடவேங்கடம் தென்குமரி"
(தொல்காப்பியம் பாயிரம்)

"தென்குமரி வட பெருங்கடல்
குண குட கடலா எல்லை"
(புறநானூறு: 67)
போன்ற இடங்களில் குமரி என்று மட்டுமே வந்துள்ளது.

ஆனால்,
சிலப்பதிகாரத்தில் குமரியை கடல் என்றவாறு
"நெடியோன் குன்றமும்
தொடியோன் பௌவமும்"
குறித்திருப்பதைக் காணமுடிகிறது.

ஆனால் அதே சிலப்பதிகாரத்தில் மற்றொரு இடத்தில் குமரி எனும் மலையை கடல் கொண்ட செய்தி வருகிறது.

"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்று பஃறுளி ஆற்றோடு குமரி மலை கடலில் மூழ்கிய செய்தி வருகிறது.

இளங்கோவடிகள் கடலில் மூழ்கிய மலையை குமரி என்று கூறுவது அவரது வரலாற்று அறிவினால் ஆகும்.
அவரது காலத்தில் குமரி கடலில் மூழ்கி கடலுக்கு பெயராக இருந்திருக்கவேண்டும்.

பஃறுளியாற்றுடன் குமரி மலையும் கடல்கொண்டபிறகு
அந்த இழப்பினை ஈடுசெய்வதற்காக பாண்டிய மன்னன் ஒருவன் வடக்கே படையெடுத்துச் சென்று கங்கையையும், இமயத்தையும் தன் உடைமையாக்கிக் கொண்டவரலாற்றையே இளங்கோவடிகள்
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்"
என்று கூறுகின்றார்.

பஃறுளியாறு நெடியோன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பகுதி என
"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
என்ற புறநானூறு மூலம் அறியலாம்.

[இதற்கு அடுத்தும் ஒரு கடற்கோள் ஏற்பட்டு தமிழ்ச் சங்கம் (இடை) இருந்த கபாடபுரம் வரை கடலில் மூழ்கியுள்ளது.
இது இளங்கோவடிகள் காலத்திற்கு முன்பே நடந்திருந்தாலும் அவர் அதை ஏனோ வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

ஆனால் "மலி திரையூர்ந்து தன் மண் கடல் வௌவலின்" என்று ஒரு கடற்கோளையும் (அந்த நில இழப்பை ஈடுகட்ட) பாண்டியன் சேர சோழரை வென்று தனதாக்கியதை "புலியோடு வில் நீங்கி" என்றும் முல்லைக் கலியில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்]

  இந்திய துணைக்கண்டம் பெரிய தீவாக கடலில் தனித்து இருந்தது.
பிறகு அத்தீவு ஆசியாவுடன் மோதி இணைந்தது.
அந்த மோதலால் உருவானதே இமயமலை.
அப்படி இணையும் முன்பு (அதோடு குமரிக்கண்டமும் சேர்ந்திருந்தது) நாம் அதில் வாழ்ந்திருந்தோம்.
அதற்கு நாவலன் தீவு என்று பெயரிட்டு அழைத்துவந்தோம்.
(மருதுபாண்டியரின் சுதந்திர பிரகடனத்தில் இந்தியாவை ஜம்புத்தீவு என்று குறிப்பிட்டுள்ளனர்)
அப்படிப் பார்த்தால் மூழ்கியுள்ள கண்டம் நாவலந்தீவு என்றுதான் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நாவலந்தீவின் தென்பாதியில் பெரும்பகுதியை குமரி மலை கொண்டிருக்கவேண்டும்.
மூழ்கிய பிறகும் பல காலம் அந்த மாமலையின் உச்சி வெளியே தெரிந்தபடி இருந்திருக்கவேண்டும்.
அதனால் நிலப்பரப்பின் பெயரை விட மலையின் பெயரே அக்கடல் பகுதிக்கு அமைந்திருக்கவேண்டும்.

மூழ்கிய அந்நிலத்தைப் பற்றி மேலைநாட்டார் விலங்கின ஆராய்ச்சியின் போது கண்டறிந்தனர்.
லெமுர் எனும் உயிரினம் இந்தியா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நிலப்பரப்பிலும் கடலை ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்வதை வைத்து முன்பு இம்மூன்றையும் தொட்டவாறு பெரிய கண்டம் இருந்திருக்கவேண்டும் என்று கணித்து அதற்கு லெமூரியா என்று பெயரிட்டனர்.

இதை அறிந்த தமிழறிஞர்கள் மேற்கொண்டு இலக்கியங்களை ஆராய்ந்து லெமுரியா என்பது 49 நாடுகள் இருந்த தமிழர் நிலமே என்று அறிவித்தனர்.

  இது பற்றி 20ம் நூற்றாண்டில் முதன்முதலாக ( அதாவது பல நூற்றாண்டுகளுக்கு பிறகு) 1903ல் எழுதியவர் பரிதிமாற் கலைஞர் (பார்ப்பனத் தமிழர்).
தமது 'தமிழ்மொழியின் வரலாறு ' எனும் நூலில் குமரிநாடு என்றே குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு அது 1930களில் குமரிக் கண்டம் என்று பெயர்பெற்றது.
(இப்பெயர் 15ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கந்த புராணத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறுவர்)

இதை பரப்புரை செய்து தமிழர் அனைவருக்கும் கொண்டுசென்று குமரிக்கண்டம் தமிழர் பிறப்பிடம் என்றும் இந்தியாவில் மூத்தகுடி தமிழரே என்றும் 'குமரிக்கண்ட கருத்தியலை' உருவாக்கியவர் ஈழத்தமிழரான கனகசபை ஆவார்.

அதன்பிறகு பாவாணர் மேலும் ஆராய்ந்து குமரிக்கண்ட மாந்தன் இந்தியா மட்டுமல்லாது உலகிலேயே தோன்றிய முதல் மாந்தன் என்று அக்கருத்தியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

அதற்காக 20 நூற்றாண்டுவரை தமிழர்கள் மூழ்கிய குமரியை மறந்துவிட்டதாகக் கூறமுடியாது.
ஈழத்தின் தென் பகுதி தமிழர் வசம் இல்லை.
ஆனால் அந்த கடல் பார்த்த தென்முனை தமிழகத்திடம் உள்ளது.
அந்த பகுதிக்கு தமிழ்மக்கள் குமரி என்றே பெயரிட்டு அழைத்தனர்.
ஆங்கிலேயர் அம்முனையை cape komarin என்றே குறித்துள்ளனர்.
மூழ்கிய குமரிநிலத்தின் நினைவாக குமரி அம்மன் கோவிலும் கட்டி வழிபட்டு வந்தனர்.
(மூழ்கிய முன்னோர் வழிபாடு தென்புலத்தார் வழிபாடு என்று பல காலம் பின்பற்றப்பட்டு தமிழர்களால் வந்தது)

1956ல் தமிழ் மாநிலம் அமைந்தபோது மலையாளிகள் கையில் இருந்த தென்முனையை பெரும்போராட்டம் நடத்தி  தமிழகத்துடன் சேர்த்த நேசமணி (கிறித்துவ நாடார்) அவர்கள்,
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை (வெள்ளாளர்) அவர்களின் கடைசி ஆசைப்படி அம்மாவட்டத்திற்கே 'கன்னியாகுமரி' என்று பெயர் வைத்தார்.

ஆக, குமரி என்ற பெயர்
முதலில் மலைக்கும்
பிறகு கடலுக்கும்
பிறகு மூழ்கிய கண்டத்திற்கும்
பிறகு தென்முனைக்கும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இமயமலை முதல் குமரிமலை வரை பரந்திருந்த ஒரு கண்டம் முழுவதும் வாழ்ந்த தமிழர் இன்று ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவரைப்போல வாழ்கிறோம்.

'இந்தியா முழுவதும் நமதே' என்பதற்கான சான்றுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் பிறரறியா வண்ணம் ஆக்கப்பட்டுவிட்டன.

ஆனால்,
மூழ்கிய குமரிக்கண்டம் நமது பழமையான நாகரீக சான்றுகளுடன் பாதுகாப்பாக கடலுக்குள் இருக்கிறது.

நம் வரவை, தனது மக்களின் வரவை எதிர்பார்த்து அது கடலுக்குள் காத்திருக்கிறது.

எனவே இந்தியாவில் உள்ள மூடர்களிடம் எஞ்சியுள்ள சான்றுகளை காட்டி
'தமிழ் மொழியை வெறும் 5000 ஆண்டுகள் பழமையானது என்றாவது ஏற்றுக்கொள்ளைங்கள்" என்று பேரம் பேசுவதில் குறியாக இருக்கும் நாம்,
இனியும் அந்த 'பாறையில் உழும்' முட்டாள்த்தனத்தைச் செய்யாமல்
கையில் இருக்கும் நிலத்தையாவது அரணமைத்து தனிநாடாக்கி
இனத்தை அழிவிலிருந்து காத்து
பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டும்.

அதன்பிறகு கடலில் இறங்கி (இன்று பாகிஸ்தானில் உள்ளதும் இந்திய கண்டத்திலேயே பழமையான நாகரீகமும் ஆன ) சிந்துசமவெளி நாகரீகத்தை விட பழமையான நமது குமரிக்கண்ட நாகரீகத்தை ஆராய்ந்து நமது பழமையை நாட்டுவதில் சிந்தையைச் செலுத்துவோம்.

தனிநாடு அமைத்து அதன்மூலம் அமையும் நமது பொருளாதாரம் மூலம்தான் கடலில் இறங்கி நமது பழமையை வெளிக்கொணரும் ஆற்றல் நமக்கு வரும்.
உலகத்தில் வாழும் எந்த இனத்தானும் நமக்காக இதைச் செய்யப்போவதில்லை.
நாம் தான் செய்யவேண்டும்.
அதன்பிறகுதான் தமிழரே மூத்தகுடி என்று உலகம் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ளும்.

நாம் அதைச் செய்யாததால் பாருங்கள் முழுக்க முழுக்க தமிழருக்கு மட்டுமே உரிமையான அந்த கடலை அதனடியில் இருக்கும் நிலத்தை எவனெவனெல்லாமோ சொந்தம் கொண்டாடுகிறான்.

(நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்தியாவின் பெயரில்) குமரிக்கடல் இன்று 'இந்தியப் பெருங்கடல்' என்று அழைக்கப்படுகிறது.

நேற்று பிறந்த இந்துத்துவவாதிகள் அதை 'இந்து மகா சமுத்திரம்' என்கின்றனர்.

நாம் தனிநாடு அமைத்ததும் அக்கடலுக்கு குமரிக்கடல் என்றே பெயரிட வேண்டும்.
பிறரை முந்திக்கொண்டு நாம் முதலில் கடலில் இறங்கி விரிவான ஆராய்ச்சி நடத்தவேண்டும்.

குமரிக்கண்டத்தை ஆராய்ந்தால் நாமே பூர்வகுடி எனும் சான்று கட்டாயம் கிடைக்கும்.
அதன் பழமையை நிறுவிவிட்டால் இந்தியாவையே நாம் கைப்பற்றி ஆண்டாலும் யாரும் கேள்விகேட்க முடியாது.

  பாவாணர் கூறிய படி
'குமரிக்கண்டமே மாந்தன் தோன்றிய இடம்'
'தமிழரே மூத்தகுடி'
'தமிழே மூத்தமொழி'
என்ற உண்மையை உலகம் அறியும்படி சான்றுகளுடன் அறிவிக்கவேண்டும்.

இதுதான் குமரிக்கண்டக் கருத்தியல்.

இதற்கு ஒரே வழி தமிழ்தேசியம்.

3 comments:

  1. அருமையான பதிவு 🙏🙏🙏 எனக்கு பயனுள்ளதாக அமைந்தது

    ReplyDelete