Sunday, 8 October 2017

சங்ககாலத்தில் புலையர் செய்த தொழில்கள்

சங்ககாலத்தில் புலையர் செய்த தொழில்கள்

'துடியெறியும் புலைய'
(புறநானூறு 287) என்று புலையர் துடி எனும் பறைவகையை முழக்குவோராகக் கூறுகிறது.

'போகிப் புலையன்
பெருந்துடி கறங்க'
(நற்றிணை 77)
புலையர் யானைமீது துடி முழக்கியதைக் கூறுகிறது.
[அதாவது படையை வழிநடத்த அல்லது மன்னன் வருவதை அறிவிக்க யானை மீது பெரும் சத்தத்தையும் அதிர்வையும் எழுப்பும் பறையை முழக்குவர்]

'புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு'
(புறநானூறு 360)
அதாவது புலையர் வேலையாட்களோடு ஈமச்சடங்கு செய்து சுடுகாட்டில் படையல் இட்டதைக் கூறுகிறது. 
[அதாவது ஈமச்சடங்கு செய்துதரும் பார்ப்பனர் தொழில் செய்ததாகக் கூறியுள்ளது]

' புலையன் பேழ்வாய்த் தண்ணுமை'
(நற்றிணை: 347)
என்று புலையர் வைத்திருந்த அகன்ற வாயினையுடைய மத்தளம் போன்ற இசைக்கருவி (தண்ணுமை) குறிக்கப்பட்டுள்ளது.

பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து
(கலித்தொகை 95)
புலையர் யாழ் மீட்டியது பற்றி கூறுகிறது.

புலையர் குலப் பெண் பற்றி கூறும்போது,

'உடை ஓர் பான்மையின் பெருங்கை தூவா வறன் இல் புலைத்தி'
(நற்றிணை 90)
அதாவது உடைகளை தரம்பிரித்து வெளுக்கும் வறுமை இல்லாத புலைத்தி என்று.

நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் (குறுந்தொகை 330)
இதன் பொருள் நல்ல குணங்களை உடைய புலைத்தி ஆடைகளுக்கு பசை தடவி திரியாக முறுக்கி குளத்தில் துவைத்தது பற்றி கூறுகிறது.

ஆடை கொண்டு ஒலிக்கும்
நின் புலைத்தி காட்டு என்றாளோ
(கலித்தொகை 72)
புலையர் பெண் துணி துவைக்கும் தொழில் செய்ததை கூறுகிறது.
[துணியை அடித்து துவைப்பதால் ஏற்படும் ஒலியதிர்வுதான் அழுக்கு துணியிலிருந்து பிரிய காரணம் ஆகும்.
இந்த அறிவியல் உண்மையை அறிந்திருந்த பழந்தமிழர் துவைப்பதை ஒலிப்பது என்றே கூறியுள்ளனர் !!!!]

பசை கொல் மெல் விரல்
பெருந் தோள் புலைத்தி
(அகநானூறு 34) என்று அகநானூறும் கிட்டத்தட்ட இதையே கூறுகிறது.

மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப் புட்டில் (கலித்தொகை 117)
என்று புலைத்தி பிண்ணிய கூடை பற்றி வருகிறது.

ஆக சங்ககாலத்தில் புலையர் ஆண்கள்
ஈமச்சடங்கு செய்பவராக, பறை முழக்குபவராக, இசைக் கலைஞராக என பல்வேறு தொழில்களைச் செய்தவராக இருந்துள்ளனர்.
ஆனால் புலையர் பெண்கள் சலவை  செய்பவராகவே அதிகம் குறிக்கப்படுகின்றனர்.
அத்துடன் கூடை பிண்ணும் தொழிலும் செய்துள்ளனர்.

[இன்று புலையர் என்று அறியப்படுவோர் பெரும்பாலும் மலையாளமே பேசுகின்றனர்]
--------------------
இலக்கிய தரவுகளுக்கு நன்றி : mytamil-rasikai.blogspot

No comments:

Post a Comment