Monday 16 October 2017

இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்

இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பனிகடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
- முல்லைப்பாட்டு 1-6

இப்பாடலில் மேகத்தின் இயக்கம் அறிவியல் முறையில் விளக்கப்பட்டுள்ளது.  
கடலில் நீர் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது நெடுந்தொலைவு பயணித்து மலையில் தங்கி பெருமழையை பொழிந்தது
------------------

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே
- அகநானுறு183

குளிர்ந்த கடலில் நீரை மேகங்கள் குடிப்பது பற்றி வருகிறது
-----------

இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
- நற்றிணை 329:11

கருமையான வானம் பெரும் சத்தத்துடன் இடி இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்துவரும் கார்காலம்.
(அதாவது மேகம் கடலில் இருந்து நீரை எடுத்து மழையாக பொழியும் மழைக்காலம்)
---------------

மின்னு வசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
- நற்றிணை 228:1

மின்னலுடன் முழங்கும் பெரும் சத்தத்துடன் நீர் நிறைந்த மேகம்  பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையை கண்தெரியாத இருளடைந்த நடு இரவில் பொழியும்.
--------------------

இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர்
- நற்றிணை 115:3

மேகங்கள் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு, எஞ்சிய கடலின் நீர் சிறிது என்னும்படி கொணர்ந்தன.

(இது கடல் நீரை மேகங்கள் கொள்வதை சற்று மிகைப்படுத்திக் கூறுகிறது.
அதாவது பாதிக்கும் மேல் உறிஞ்சிவிட்டதாம்!)
-----------

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே
- ஐங்குறுநூறு 492

மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை கூறுகிறது
-----------

மேகங்களின் நகர்வு பற்றியும் குறித்துள்ளனர்,

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்
- ஐங்குறுநூறு 469

பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ
- அகநானூறு 840

கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
- நற்றிணை 140

கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
- அகநானூறு 43

போன்ற பாடல்கள் கடலில் உருவான மழைமேகம் மேற்கு நோக்கி (வலப்பக்கமாக) நகர்வதாக குறித்துள்ளனர்.
அதாவது வடகிழக்குப் பருவக்காற்று பற்றி கூறப்பட்டுள்ளது.
--------------

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து
- நற்றிணை 289

கடல் நீரைக் குடித்து செறிவு (அடர்த்தி) அதிகமான மேகம் மழை பொழிவதாகக் கூறுகிறது இப்பாடல்
-------------

கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
- குறுந்தொகை - 287

அதாவது நிறைமாத சூலி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கி செல்கின்றன என்று கூறுகிறது.
----------

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
- நற்றிணை 261

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
- பதிற்றுப்பத்து 12

மேகங்கள் மலையில் மோதி மழைபொழிவதைக் கூறுகிறது
----------

பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
- அகநானுறு 217

பெய்து தீர்த்த மேகம் வெண்மையான மென்பஞ்சுபோல ஆகிவிடும் என்று கூறுகிறது.
-----------

மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சங்ககாலத்திலேயே தமிழர்கள் அனைவரும் மழை எவ்வாறு பொழிகிறது என்று அறிந்திருந்ததை உணரமுடிகிறது.

பெயிலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பிற் றுவலை கற்ப
- நெடுநெல்வாடை 20

மழை பெய்துவிட்ட வெண்மையான மேகம் மேலெழுந்து சாரலை ஏற்படுத்துவது பற்றி வருகிறது
-----------------------

மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,

பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
சிறு நுண் ணெறும்பின்
- புறநானூறு 173

எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்
-----------

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
- புறநானூறு 35:7

தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
- புறம் 117:2

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவில்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
- பட்டினப்பாலை 1-6

மேற்கண்டவை உணர்த்தும் பொருள் யாதெனில்,
வானத்தில் வெள்ளி கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும்
தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும்
(ஆனாலும் காவிரி பொயக்காது)
----------
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
- பதிற்றுப்பத்து 13:25

செவ்வாய்க் கோள் சென்ற வழியில் வெள்ளி கோள் செல்லாததால் மழை தேவையான இடங்களிலெல்லாம் உன் நாட்டில் மழை பெய்கிறது.
(அதாவது வானில் கோள்கள் நகர்வு மூலம் மழையை கணித்துள்ளனர்)
----------

பழமையான மொழியான தமிழில் அறிவியல் இல்லை என்று சில பிறமொழி வந்தேறிகள் பிதற்றுகின்றனர்.

மேலே உள்ள மழை பற்றிய குறிப்புகள் மட்டுமே.
இதேபோல பல்வேறு விடயங்களை தமிழ் இலக்கியம் அறிவியல் பார்வையுடன் பதிவுசெய்துள்ளது.

வேறு எந்த மொழியினது தொடக்ககால இலக்கியத்திலும் இத்தகைய அறிவியல் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment