Showing posts with label பழந்தமிழர். Show all posts
Showing posts with label பழந்தமிழர். Show all posts

Tuesday, 10 July 2018

இமயமே தமிழரின் எல்லை

இமயமே தமிழரின் எல்லை

இலக்கியம் என்பது ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு ஆகும்.

மண்மீட்பு நோக்கத்துடன் தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்தால் தமிழர்நாடு இமயமலை வரை பரவியிருந்தது என்பதற்கு பல சான்றுகள் கிடைக்கின்றன.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தெடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்
- காரிக்கிழார்,
புறநானூறு 6:1–4

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே
- குமட்டூர்க்  கண்ணனார்,
பதிற்றுப்பத்து 11:23–25

கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்
- பரணர்,
பதிற்றுப்பத்து 43 :6–8

தென்குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல
-குறுங்கோழியூர் கிழார்,
புறநானூறு 17:1-8

வடவேங்கடந் தென் குமரியாயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்து
- பனம்பாரனார்,
தொல்காப்பிய பாயிரம்

மேற்கண்டவை இமயம் நமது வடக்கெல்லை என்பதற்கான சான்று மட்டுமே.

இமயம் வரை அரசாண்ட தமிழ் மன்னர்கள் பற்றியும் மக்களுக்கு இமயத்துடன் இருந்த தொடர்பு பற்றியும் பார்ப்போம்.

மூவேந்தரும் இமயத்தில் தமது வெற்றிச் சின்னத்தைப் பொறித்ததை 'இமயநெற்றியில் விளங்கு வில்-புலி-கயல் பொறித்த நாள்' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

  இமயம் வரை வெற்றிகண்ட சேரலாதன் மற்றும் செங்குட்டுவன் பற்றி,
அகநானூறு 127,
புறநானூனு 39,
சிறுபாணாற்றுப்படை 48,
பதிற்றுப்பத்து பதிகம் 2,
பதிற்றுப்பத்து 2-11,
பதிற்றுப்பத்து 43,
சிலப்பதிகாரம் வாழ்த்துப்பாடல்
ஆகிய இடங்களில் வருகிறது.

கரிகாலன் இமயம் வரை வெற்றி கண்டது பற்றி,
கலிங்கத்துப்பரணியில் 'இமயத்தில் புலிக்கொடி' எனும் பகுதி,
சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதை 88-97, வஞ்சிக் காண்டம் 24 மற்றும் மதுரைக் காண்டம் 17,
பெரியபுராணத்தில் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செய்யுள் 85
மற்றும் அதே நூலில் எறிபத்தர் கதை ஆகிய கூறுகின்றன.

நெடியோன் பாண்டியன் இமயமலையையும் கங்கையையும் கைப்பற்றி ஆண்டதை சிலப்பதிகாரம் 11:17-22 கூறுகிறது.

ஏதோ பக்கத்து ஊர் குன்றினைக் குறிப்பிடுவது போல இமயமலையைச் சுட்டிக்காட்டும் குறிப்புகள் இலக்கியம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.

திருக்குறள் 969 இமயமலையில் வாழும் கவரிமா முடியை நீக்கினால் (குளிரில்) இறக்கும் என்று கூறுகிறது.

இமயமலையில் மூங்கில் மரங்கள், நெல்லிமரங்கள், கொன்றைமரங்கள் இருப்பது பற்றியும் இமயமலை மான்கள் வறட்சியின் போது நெல்லிக்காயைத் தின்னும் என அகநானூறு 399 கூறுகிறது.

நவ்வி மான்கள் அந்தணர் வளர்த்த தீயின் வெளிச்சத்தில் (கதகதப்பில்) வந்து உறங்கும் என்று புறநானூறு 2 கூறுகிறது.

சிவந்த கால்களுடன் வெண்ணிற அலகு கொண்ட பறவை இமயமலையில் ஏரிகளில் திரிவது பற்றி நற்றிணை 356 கூறுகிறது.

இமயமலை அருவிகள் கங்கை ஆற்றுடன் கலப்பதையும்
இமயமலையில் உள்ள ஞெமை மரங்கள் பற்றியும் மாலைவேளையில் கொக்குகளும் இதர பறவைகளும் கூட்டாகப் பறப்பதையும்
முல்லைகொடி மொட்டுகள் மலர்வதையும்
நற்றிணை 369 விவரிக்கிறது.

இமயமலையின் பறவைகள் பகலில் மேகங்களைக் கொத்துமளவு உயரப்பறந்து மாலை கூடடைவதை கலித்தொகை 92 கூறுகிறது.

இமயமலை மாலை நேரத்தில் பனியில் செவ்வானக் கதிர்கள் பட்டு தங்கம்போல மின்னும்.
இதனை தங்கம் என்று புறநானூறு 39 மற்றும் 369, அகநானூறு 398, மற்றும் பெரும்பாணாற்றுப்படை ஆகியன வர்ணிக்கின்றன.

இமயமலையின் இருக்கும் மூங்கில் மரங்கள் பற்றி புறநானூறு 166,
முருக்க மரங்களையும் நரந்தைப் புற்களையும் கவரிமான்களையும் பற்றி பதிற்றுப்பத்து 11,
மாமரங்களைப் பற்றி அகநானூறு 127 ஆகிய பாடல்கள் கூறுகின்றன.

இமயமலையின் தகர மரங்கள், எலுமிச்சை மணமுடைய நரந்தை புல், நீர்ச்சுனைகளில் மலர்ந்திருந்த குவளை மலர்கள், புல்லைத் தின்றுவிட்டு ஓய்வெடுக்கும் கவரிமா ஆகியன புறநானூறு 132 இல் குறிக்கப்படுகின்றன.

இமயமலையில் மேகங்கள் மோதி (கொண்டல்)மழை பொழியும் என்கிறது புறநானூறு 34.

இதுபோக இமயமலையை போகிறபோக்கில் குறிப்பிடுவதை புறநானூறு 166, குறுந்தொகை 158, கலித்தொகை 105, அகநானூறு 265, பரிபாடல் 8 ஆகியவற்றில் பார்க்கிறோம்.

எந்தவொரு மொழியிலும் இமயமலை பற்றி இத்தனை விரிவாக ஆவணங்கள் இல்லை.

"இமயம் எமது எல்லை" என்று எந்த இனமும் எழுதிவைக்கவும் இல்லை.

நியாயப்படி இலக்கியச் சான்றுகள் காட்டி தமிழர்களாகிய நாம் இமயமலைவரை திருப்பிக் கேட்டாலும் ஹிந்தியர் மறுகேள்வி கேட்காமல் தரவேண்டும்.

நன்றி:-
kalappal இணையம்,
திருத்தம் பொன்.சரவணன், மற்றும் விக்கிபீடியா

Monday, 16 October 2017

இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்

இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பனிகடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
- முல்லைப்பாட்டு 1-6

இப்பாடலில் மேகத்தின் இயக்கம் அறிவியல் முறையில் விளக்கப்பட்டுள்ளது.  
கடலில் நீர் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது நெடுந்தொலைவு பயணித்து மலையில் தங்கி பெருமழையை பொழிந்தது
------------------

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே
- அகநானுறு183

குளிர்ந்த கடலில் நீரை மேகங்கள் குடிப்பது பற்றி வருகிறது
-----------

இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
- நற்றிணை 329:11

கருமையான வானம் பெரும் சத்தத்துடன் இடி இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்துவரும் கார்காலம்.
(அதாவது மேகம் கடலில் இருந்து நீரை எடுத்து மழையாக பொழியும் மழைக்காலம்)
---------------

மின்னு வசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
- நற்றிணை 228:1

மின்னலுடன் முழங்கும் பெரும் சத்தத்துடன் நீர் நிறைந்த மேகம்  பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையை கண்தெரியாத இருளடைந்த நடு இரவில் பொழியும்.
--------------------

இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர்
- நற்றிணை 115:3

மேகங்கள் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு, எஞ்சிய கடலின் நீர் சிறிது என்னும்படி கொணர்ந்தன.

(இது கடல் நீரை மேகங்கள் கொள்வதை சற்று மிகைப்படுத்திக் கூறுகிறது.
அதாவது பாதிக்கும் மேல் உறிஞ்சிவிட்டதாம்!)
-----------

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே
- ஐங்குறுநூறு 492

மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை கூறுகிறது
-----------

மேகங்களின் நகர்வு பற்றியும் குறித்துள்ளனர்,

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்
- ஐங்குறுநூறு 469

பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ
- அகநானூறு 840

கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
- நற்றிணை 140

கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
- அகநானூறு 43

போன்ற பாடல்கள் கடலில் உருவான மழைமேகம் மேற்கு நோக்கி (வலப்பக்கமாக) நகர்வதாக குறித்துள்ளனர்.
அதாவது வடகிழக்குப் பருவக்காற்று பற்றி கூறப்பட்டுள்ளது.
--------------

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து
- நற்றிணை 289

கடல் நீரைக் குடித்து செறிவு (அடர்த்தி) அதிகமான மேகம் மழை பொழிவதாகக் கூறுகிறது இப்பாடல்
-------------

கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
- குறுந்தொகை - 287

அதாவது நிறைமாத சூலி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கி செல்கின்றன என்று கூறுகிறது.
----------

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
- நற்றிணை 261

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
- பதிற்றுப்பத்து 12

மேகங்கள் மலையில் மோதி மழைபொழிவதைக் கூறுகிறது
----------

பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
- அகநானுறு 217

பெய்து தீர்த்த மேகம் வெண்மையான மென்பஞ்சுபோல ஆகிவிடும் என்று கூறுகிறது.
-----------

மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சங்ககாலத்திலேயே தமிழர்கள் அனைவரும் மழை எவ்வாறு பொழிகிறது என்று அறிந்திருந்ததை உணரமுடிகிறது.

பெயிலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பிற் றுவலை கற்ப
- நெடுநெல்வாடை 20

மழை பெய்துவிட்ட வெண்மையான மேகம் மேலெழுந்து சாரலை ஏற்படுத்துவது பற்றி வருகிறது
-----------------------

மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,

பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
சிறு நுண் ணெறும்பின்
- புறநானூறு 173

எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்
-----------

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
- புறநானூறு 35:7

தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
- புறம் 117:2

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவில்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
- பட்டினப்பாலை 1-6

மேற்கண்டவை உணர்த்தும் பொருள் யாதெனில்,
வானத்தில் வெள்ளி கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும்
தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும்
(ஆனாலும் காவிரி பொயக்காது)
----------
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
- பதிற்றுப்பத்து 13:25

செவ்வாய்க் கோள் சென்ற வழியில் வெள்ளி கோள் செல்லாததால் மழை தேவையான இடங்களிலெல்லாம் உன் நாட்டில் மழை பெய்கிறது.
(அதாவது வானில் கோள்கள் நகர்வு மூலம் மழையை கணித்துள்ளனர்)
----------

பழமையான மொழியான தமிழில் அறிவியல் இல்லை என்று சில பிறமொழி வந்தேறிகள் பிதற்றுகின்றனர்.

மேலே உள்ள மழை பற்றிய குறிப்புகள் மட்டுமே.
இதேபோல பல்வேறு விடயங்களை தமிழ் இலக்கியம் அறிவியல் பார்வையுடன் பதிவுசெய்துள்ளது.

வேறு எந்த மொழியினது தொடக்ககால இலக்கியத்திலும் இத்தகைய அறிவியல் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.

Friday, 25 March 2016

பரிசம் - தமிழர் பெருமை

பரிசம் -தமிழர் பெருமை

திருமணச்சீர் அதாவது வரதட்சணை தமிழர் வழக்கமா?
ஆம். ஆனால் மணமகன் கொடுக்க மணமகள் வீட்டார் பொன்னும் பொருளும் வாங்குவதுதான் தமிழ்முறை.

அதாவது இன்றைய நிலைக்கு அப்படியே தலைகீழ்.

அதாவது மாப்பிள்ளை வீட்டார் பரிசம்(பரிசு) கொடுத்து பெண்ணை அழைத்து வருவதே தமிழர் பண்பாடு.

இதற்கு சான்றாக மூன்று பாடல்களைக் காட்டமுடியும்.

புறநானூறு 343

மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன,
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத்
தந்தையும் கொடாஅன்

இதன் எளிய பொருளாவது,
சேரமன்னன் (செங்)குட்டுவன் மக்களுக்கு பலவகைப் பொருட்களை வாரிவழங்குவது போல
பெருமளவு செல்வத்தை பணிவோடு வந்து கொடுத்தாலும்
தகுதியான ஒருவனைத் தவிர மற்றோரை இவள் ஏற்கமாட்டாள் அதனால்
இவளது தந்தையும் கட்டிக்கொடுக்க மாட்டான்.

இதில் பெண்ணின் விருப்பமே முதலில் சொல்லப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
----------------------------
கலித்தொகை,103; 71-73

சங்க இலக்கியமான கலித்தொகை  அதில் முல்லைக் கலி என்ற பகுதியில் ஏறு தழுவல் பற்றி அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதில்

"விலைவேண்டார் எம்இனத்து ஆயர் மகளிர் கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின் ஆங்கு"

இதன் பொருள் எம்மினத்து ஆயர் (இடையர்) பரிசம் வேண்ட மாட்டார்கள்.
ஆனால் கொல்லும் ஏற்றின் கொம்புகளைத்
தாம் காதலிக்கும் பெண்களின் கொங்கைகளைப் போலக் கருதி,
ஆர்வமுடன் பாய்ந்து தழுவினால் அவனையே தம் மகளுக்கு ஏற்றவனாகக் கருதுவார்கள்.

அதாவது மணமகன் ஏறுதழுவும் வீரனாயிருந்தால்
அவனிடம் சீர் வாங்கமலே பெண் தருவார்களாம் ஆயர் குலத் தாய்மார்கள்.
-----------------------------
அகநானூறு 90

கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
தறுநுதல் அரிவை பரிசிழை விலையே

இதன் எளிய பொருள்:
(கோசரின்) நிறைவான வருவாய் உடைய நியமம் எனும் ஊரையே (சீதனமாகத்) தந்தால்கூட,
பெண்ணின் தந்தை வாங்கிக் கொள்ள மாட்டாராம்.
அதற்கும் மேலே தந்தால்தான் சம்மதிப்பாராம்.
----------------------------------
ஆக மணமகளிடம் திருமணச்சீர் வாங்குதல் தமிழர் வழக்கம் இல்லை.