Friday, 25 March 2016

பரிசம் - தமிழர் பெருமை

பரிசம் -தமிழர் பெருமை

திருமணச்சீர் அதாவது வரதட்சணை தமிழர் வழக்கமா?
ஆம். ஆனால் மணமகன் கொடுக்க மணமகள் வீட்டார் பொன்னும் பொருளும் வாங்குவதுதான் தமிழ்முறை.

அதாவது இன்றைய நிலைக்கு அப்படியே தலைகீழ்.

அதாவது மாப்பிள்ளை வீட்டார் பரிசம்(பரிசு) கொடுத்து பெண்ணை அழைத்து வருவதே தமிழர் பண்பாடு.

இதற்கு சான்றாக மூன்று பாடல்களைக் காட்டமுடியும்.

புறநானூறு 343

மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன,
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத்
தந்தையும் கொடாஅன்

இதன் எளிய பொருளாவது,
சேரமன்னன் (செங்)குட்டுவன் மக்களுக்கு பலவகைப் பொருட்களை வாரிவழங்குவது போல
பெருமளவு செல்வத்தை பணிவோடு வந்து கொடுத்தாலும்
தகுதியான ஒருவனைத் தவிர மற்றோரை இவள் ஏற்கமாட்டாள் அதனால்
இவளது தந்தையும் கட்டிக்கொடுக்க மாட்டான்.

இதில் பெண்ணின் விருப்பமே முதலில் சொல்லப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
----------------------------
கலித்தொகை,103; 71-73

சங்க இலக்கியமான கலித்தொகை  அதில் முல்லைக் கலி என்ற பகுதியில் ஏறு தழுவல் பற்றி அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதில்

"விலைவேண்டார் எம்இனத்து ஆயர் மகளிர் கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின் ஆங்கு"

இதன் பொருள் எம்மினத்து ஆயர் (இடையர்) பரிசம் வேண்ட மாட்டார்கள்.
ஆனால் கொல்லும் ஏற்றின் கொம்புகளைத்
தாம் காதலிக்கும் பெண்களின் கொங்கைகளைப் போலக் கருதி,
ஆர்வமுடன் பாய்ந்து தழுவினால் அவனையே தம் மகளுக்கு ஏற்றவனாகக் கருதுவார்கள்.

அதாவது மணமகன் ஏறுதழுவும் வீரனாயிருந்தால்
அவனிடம் சீர் வாங்கமலே பெண் தருவார்களாம் ஆயர் குலத் தாய்மார்கள்.
-----------------------------
அகநானூறு 90

கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
தறுநுதல் அரிவை பரிசிழை விலையே

இதன் எளிய பொருள்:
(கோசரின்) நிறைவான வருவாய் உடைய நியமம் எனும் ஊரையே (சீதனமாகத்) தந்தால்கூட,
பெண்ணின் தந்தை வாங்கிக் கொள்ள மாட்டாராம்.
அதற்கும் மேலே தந்தால்தான் சம்மதிப்பாராம்.
----------------------------------
ஆக மணமகளிடம் திருமணச்சீர் வாங்குதல் தமிழர் வழக்கம் இல்லை.

1 comment:

  1. சிறப்பான பதிவு! நன்றி!

    ReplyDelete