Wednesday, 9 March 2016

தமிழியம் மனிதநேயத்திற்கு எதிரானதா?

தமிழியம் மனிதநேயத்திற்கு எதிரானதா?

தமிழர்கள் தோன்றிய வரலாறு பழமையானது
-மனிதன் தோன்றிய வரலாறு அதைவிட பழமையானது.

தமிழ் முதலில் தோன்றிய மொழி
-மனிதன் குரல் எழுப்பி வார்த்தைகளைப் பரிமாறிய ஒலிகள் அதைவிடப் பழமையானது.

தமிழர்கள் வீரம் மிக்கவர்கள்
-தமிழர்களை விடவும் வீரமானவர்கள் பல இனங்களில் தோன்றியுள்ளனர்.

தமிழர்கள் வல்லரசாகத் திகழ்ந்தவர்கள்
-மனித வரலாறு அதை விடவும் பெரிய பெரிய அரசுகளைப் பார்த்துள்ளது.

தமிழர்கள் அறிவாளிகள்
-மனித இனத்தில் தமிழரை விடவும் பல அறிவாளிகள் தோன்றியுள்ளனர்

தமிழர்கள் உலகம் முழுவதும் பரவிய இனம்
-மாந்த இனம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி உள்ளது.

என்றால் எல்லாமனிதனும் ஒரே இனம்தானே?

தமிழ் இனத்திற்கு மற்ற இனங்களிடம் இல்லாத சிறப்பு என்னதான் உள்ளது?

எவனாவது இப்படி வாதாடுவான் என்று நானும் பார்க்கிறேன்.
எவனுமே இல்லை.

அதாவது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக சர்வதேசியத்தை,
தமிழியத்திற்கு எதிராக மாந்தநேயத்தை நிறுத்துவது.

அப்படி நிறுத்தினால் நமது கொள்கைகள் தோற்றுப்போகுமா?

தமிழியம் என்பது அனைத்து வேறுபாடுகளையும் கடந்து மாந்தர் ஒன்றுபட தடைக்கல்லா?

இல்லை. உண்மையில் தமிழியம் உலக ஒற்றுமையின் முதல் படி ஆகும்.

தமிழினம் சிறந்த இனமென்றால் மற்ற இனங்கள் கீழானவையா?

இல்லை. தமிழினமும் மற்ற இனங்கள் அளவுக்கு தன்னகத்தே பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.

எனவே, நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று கூறவே எங்கள் பெருமைகளை வெளிக்கொணர்கிறோம்.

எந்த இனமும் கீழானதோ மேலானதோ கிடையாது.

இன்று உலகமே ஒரு சிற்றூர் எனுமளவுக்கு சுருங்கிவிட்டது.
தகவல்தொடர்பும் போக்குவரத்தும் தொழில்நுட்பமும் பல மடங்கு முன்னேறி இன்று மனிதர்கள் ஒரே இனமாகவும் உலகமே ஒரே நாடாகவும் ஆகும் சூழல் உருவாகிவருகிறது.

வரலாற்றுப்படி பார்த்தால் முதலில்
1)மாந்தன் தோன்றினான்.

2)பிறகு இனங்கள் தோன்றின.
(நாடு என்பது காலத்துக்கு காலம் மாறுவது)

3)பிறகு சாதி தோன்றியது.

4)பிறகு பொருளாதார ஏற்றத்தாழ்வு தோன்றியது.

5)பிறகு மதம் தோன்றியது.

6)கடைசியாக சாதிய உட்பிரிவுகள் தோன்றின.

இவ்வாறு பல பிளவுகள் தோன்றி தோன்றி எண்ணிலடங்கா பிரிவுகள் உண்டாகிவிட்டன.

மாந்த ஒருமைப்பாட்டை நிறுவ இதைத் தலைமாற்றிச் செய்யவேண்டும்.

முதலில் சாதிய உட்பிரிவுகளைக் கடந்து சாதியாக இணைதல்.

பிறகு மதங்களைக் கடத்தல்.

பிறகு சாதி, மதம் கடந்து இனமாக இணைதல்.
(இதைத்தான் தமிழியம் வலியுறுத்துகிறது)

பிறகு (தமக்கான அரசை நிறுவி) பொருளாதார வேறுபாட்டினை ஒழித்தல்.
(இது தமிழ்தேசியம் வலியுறுத்துவது)

அதன் பிறகு இனங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் ஓரினமாதல்.

இது கட்டாயம் நடந்தே தீரும்.
மனிதர்கள் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவர்கள்.
உலகில் எந்த மூலையில் பிறந்த ஆணும் எந்த மூலையில் பிறந்த பெண்ணும் இணைந்து குழந்தை பெற முடியும்.

ஒரு மனிதன் புன்னகைப்பது இன்னொரு மனிதனுக்குப் புரியும்.
எந்த ஒரு மனிதனாலும் எந்த ஒரு மனித மொழியையும் கற்றுக்கொள்ளமுடியும்.
மனிதருக்கான உணர்ச்சிகள் பொதுவானவை.
பிற இனம் கலவாத 100% தூய்மையான இனம் என்று எதுவும் கிடையாது.

உலக மாந்தர் தமக்குள்ளான வேறுபாடுகளைக் கடந்து
எந்த இனத்திலும் திருமணம் செய்யலாம்
எந்த நாட்டிலும் குடியேறலாம்
எந்த தொழிலையும் செய்யலாம்
எந்த வாழ்க்கை முறையையும் பின்பற்றலாம் என்ற நிலை உருவாகி
ஒரே மொழி, ஒரே நாடு என ஓரினமாக ஒன்றிணைதல் காலத்தின் கட்டாயம்.

தமிழினம் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமையமுடியும்.

இனிவரும் காலத்தில் சாதியை ஒழிப்பதுதான் எளிது
அதைக் காப்பாற்றுவதே கடினம்.

மனிதன், தான் ஒரு மாந்த இனம் என்ற வரையறைக்குப் பிறகு,
இனம் என்ற வரையறைக்குள் வருகிறான்.

இனம் என்பது இயற்கையான எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தாய்நிலத்தில்
பொதுவான மொழி,
பொதுவான பழக்கவழக்கங்கள் கொண்ட மக்களைக் குறிக்கிறது.

ஒரு இனம் தன் தாய்நிலத்தை (ராணுவ பலத்தால்) பாதுகாத்துக்கொள்வதும்
தமது நிலத்தின் வளங்களை (சரியான முறையில்) பயன்படுத்தி வாழ்ந்துகொள்வதும்
அடிப்படை உரிமை ஆகும்.

ஒரு இனத்திற்குள் இருக்கும் மக்கள் சாதி, மதம், பொருளாதாரநிலை ஆகியவற்றைக் கடந்து ஒரே அடையாளத்தை ஏற்பது மிக மிக எளிது.

உலகின் ஒரு மூலையில் இருக்கும் இனம் மற்றொரு மூலையில் இருக்கும் இனத்துடன் ஒரே அடையாளத்தின் கீழ் இணைவது சற்று கடினம்.

ஆனால் இரு இனங்கள் தத்தமது அடையாளத்துடன் ஒற்றுமையாக இருக்கமுடியும்.

இனங்களின் ஒற்றுமை நீடிக்க நீடிக்க அருகாமை இனங்களிடையே கலப்பும் பொதுமைத் தன்மையும் இயல்பாக ஏற்படும்.

தமிழியம் மாந்தவியத்தின் முதல்படியே ஆகும்.

முதல்படியில் ஏறி இரண்டாவது படியில் மனித ஒற்றுமையை அடைந்துவிடமுடியும்.

No comments:

Post a Comment