சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம்
!
சிரியா பற்றிய தேடலில் கூகுளில் முதலிடம் பிடித்தது !
கடந்த ஏழு நாட்களில் சிரியா பற்றி அதிகம் தேடியது தமிழ்நாடு என்று புள்ளிவிபர செய்தி வந்துள்ளது.
குறிப்பாக ஆவடி உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
முதல் 50 இடங்களில் 90% இடங்கள் தமிழகத்தை சேர்ந்தது.
5 வது இடத்தில் சென்னையை சேர்ந்த காட்டாங்குளத்தூர் இருக்கிறது.
உலக அளவில் முதல் பத்து இடங்களில் 8,9,10 ஆகிய இடங்களில் நாகர் கோவில், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்கள் இருக்கிறது.
(மேற்கண்ட பகுதிகள் இசுலாமியப் பெரும்பான்மை கொண்டன அல்ல)
(நன்றி: oneindia
தலைப்பு: உலகிலேயே சிரியா போர் பற்றி அதிகம் தேடியது தமிழர்கள்தான்..
என்ன காரணம்?)
Tuesday, 27 February 2018
சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம் !
Thursday, 14 September 2017
ம.ஒ.மி
ம.ஒ.மி
வரலாற்றியல் எழுத்தாளர் மதன் அவர்கள் எழுதிய 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' என்ற நூலில் மனிதனுக்குள் இருக்கும் பல்வேறு வெறிகளைக் கூறும் அவர்.
ஒரு மனிதனின் இனப்பற்று/இனவெறி என்ற உணர்ச்சி மட்டும் எந்த நிலையிலும் மாறவே மாறாது என்பதை அடித்துக்கூறுகிறார்.
-------------
இது மனிதன் கூட்டமாக சேர்ந்து நாடோடி வாழ்க்கை வாழத்தொடங்கிய காலத்திலேயே ஏற்பட்ட ஒரு உணர்வு.
இது தற்காப்பு உணர்ச்சியின் வடிவம் ஆகும்.
(சாதி என்பதும் இனத்திற்குள் அதாவது தற்காப்பு அடுக்கிற்குள் மேலும் ஒரு தற்காப்பு அடுக்கு ஆகும்)
இது மனிதநேய உணர்ச்சியை விட மிக ஆழமானது மற்றும் அழுத்தமானது எனலாம்.
Saturday, 22 October 2016
எது குறுகிய வட்டம்?
எது குறுகிய வட்டம்?
தமிழ்தேசியம் குறுகிய வட்டமாம்.
மனிதநேயம்தான் அதைவிடப் பெரியதாம்.
அப்படியே பார்த்தாலும்,
பேரண்டத்துடன் ஒப்பிட்டால் உலகமே சிறியதுதான்.
கடுகளவு கூட கிடையாது.
என் உரிமையை நான் ஒரு நொடிக்கு எடுத்துக்கொண்டால் மறுநொடி இந்த உலகமே அழியும் என்ற நிலை வந்தாலும் கவலை இல்லை.
இவ்வுலகம் அடங்கிய சூரிய குடும்பத்தோடு பால்வெளி அண்டமே அழிந்துபோனாலும் பேரண்டம் பாதிப்பேதும் இல்லாமல் தொடர்ந்து இயங்கத்தான் போகிறது.
ஆக என் உரிமையை விட்டுக்கொடுக்க என்னால் முடியாது.
Tuesday, 19 July 2016
பகுத்துண்டு பல் உயிர் ஓம்புக
பகுத்துண்டு பல் உயிர் ஓம்புக
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
நானும் பார்க்கிறேன் சாலைகளில் தவளை, ஓணான், எலி, பாம்பு போன்ற சின்னஞ்சிறு உயிர்கள் நசுங்கி உயிர்விட்ட தடயங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
மழைக்காலங்களில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
இதை பார்க்கும்போது வேதனையாகவும் விருட்டென்று வாகனத்தில் பறக்கும் அவசர மனிதர்கள் மீது அடங்காத ஆத்திரமும் வருகிறது.
நாளை அமையவிருக்கும் நமது தமிழர் நாட்டில் சாலைகள் அமைக்கப்படும்போது சாலைகளின் கீழே சிறு சிறு உயிர்கள் கடந்து செல்ல வழிகள் ஏற்படுத்தியே சாலைகள் போடப்படவேண்டும்.
அவ்வழிகளுக்குள் வெளிச்சமும் மணலும் சின்னஞ்சிறு தாவரங்களும் இருக்கவேண்டும்.
அப்போதுதான் உயிர்கள் அதை இயற்கையான பாதைகள் என்று நினைக்கும்.
அது மட்டுமன்றி சாலையின் கரைகள் உயர்த்திக்கட்டப்படவேண்டும்.
மனிதர்களின் வாகனப் போக்குவரத்து யானைகள் போன்ற பெரிய உயிரினங்களுக்கும் இடைஞ்சலாக உள்ளன.
அத்தகைய பெரிய உயிரினங்கள் சாலையைக் கடக்க ஆங்காங்கே பெரிய பாலங்கள் அமைக்கப்பட்டு அதில் தாவரங்களும் மணலும் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
அந்த பாலங்களை மாந்தர் பயன்படுத்தக்கூடாது.
பூச்சிகள் அடிபடாமலிருக்க சாலை விளக்குகள் நன்கு உயரமாக அமைக்கப்படவேண்டும்.
இவை தவிர சாலையில் குறுக்கே எதாவது ஒரு விலங்கினம் வந்தால் அதை குறிப்பிட்ட தூரம் முன்னரே அறிவிக்கும் தொழில்நுட்பம் பொருத்தப்படவும் வேண்டும்.
( பாதுகாப்பான பாதை இருக்கையில் பாதுகாப்பின்றி சாலையைக் கடக்க விலங்குகள் அத்தனை முட்டாள்கள் கிடையாது என்றாலும்)
மேலும் வாகன இயக்கம் முடிந்தவரை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்கவேண்டும்.
நமக்கான நாடு அமையும் வரை,
நீங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு எடுக்குமுன் அதன் கீழேயும் சக்கரங்கள் அடியிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பிறகு எடுங்கள்.
மழைக்காலங்களிலும் குளிர்காலங்களிலும் இதனைக் கட்டாயம் செய்யுங்கள்.
சாலையில் எதிரில் மட்டும் பார்க்காமல் சாலையின் தரைத்தளத்தையும் பார்த்தவாறு ஓட்டுங்கள்.
இந்த உலகத்தைத் தமிழரைத் தவிர வேறு யாராலும் சக மனிதரிடமிருந்து காப்பாற்றமுடியாது.
Wednesday, 9 March 2016
தமிழியம் மனிதநேயத்திற்கு எதிரானதா?
தமிழியம் மனிதநேயத்திற்கு எதிரானதா?
தமிழர்கள் தோன்றிய வரலாறு பழமையானது
-மனிதன் தோன்றிய வரலாறு அதைவிட பழமையானது.
தமிழ் முதலில் தோன்றிய மொழி
-மனிதன் குரல் எழுப்பி வார்த்தைகளைப் பரிமாறிய ஒலிகள் அதைவிடப் பழமையானது.
தமிழர்கள் வீரம் மிக்கவர்கள்
-தமிழர்களை விடவும் வீரமானவர்கள் பல இனங்களில் தோன்றியுள்ளனர்.
தமிழர்கள் வல்லரசாகத் திகழ்ந்தவர்கள்
-மனித வரலாறு அதை விடவும் பெரிய பெரிய அரசுகளைப் பார்த்துள்ளது.
தமிழர்கள் அறிவாளிகள்
-மனித இனத்தில் தமிழரை விடவும் பல அறிவாளிகள் தோன்றியுள்ளனர்
தமிழர்கள் உலகம் முழுவதும் பரவிய இனம்
-மாந்த இனம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி உள்ளது.
என்றால் எல்லாமனிதனும் ஒரே இனம்தானே?
தமிழ் இனத்திற்கு மற்ற இனங்களிடம் இல்லாத சிறப்பு என்னதான் உள்ளது?
எவனாவது இப்படி வாதாடுவான் என்று நானும் பார்க்கிறேன்.
எவனுமே இல்லை.
அதாவது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக சர்வதேசியத்தை,
தமிழியத்திற்கு எதிராக மாந்தநேயத்தை நிறுத்துவது.
அப்படி நிறுத்தினால் நமது கொள்கைகள் தோற்றுப்போகுமா?
தமிழியம் என்பது அனைத்து வேறுபாடுகளையும் கடந்து மாந்தர் ஒன்றுபட தடைக்கல்லா?
இல்லை. உண்மையில் தமிழியம் உலக ஒற்றுமையின் முதல் படி ஆகும்.
தமிழினம் சிறந்த இனமென்றால் மற்ற இனங்கள் கீழானவையா?
இல்லை. தமிழினமும் மற்ற இனங்கள் அளவுக்கு தன்னகத்தே பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.
எனவே, நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று கூறவே எங்கள் பெருமைகளை வெளிக்கொணர்கிறோம்.
எந்த இனமும் கீழானதோ மேலானதோ கிடையாது.
இன்று உலகமே ஒரு சிற்றூர் எனுமளவுக்கு சுருங்கிவிட்டது.
தகவல்தொடர்பும் போக்குவரத்தும் தொழில்நுட்பமும் பல மடங்கு முன்னேறி இன்று மனிதர்கள் ஒரே இனமாகவும் உலகமே ஒரே நாடாகவும் ஆகும் சூழல் உருவாகிவருகிறது.
வரலாற்றுப்படி பார்த்தால் முதலில்
1)மாந்தன் தோன்றினான்.
2)பிறகு இனங்கள் தோன்றின.
(நாடு என்பது காலத்துக்கு காலம் மாறுவது)
3)பிறகு சாதி தோன்றியது.
4)பிறகு பொருளாதார ஏற்றத்தாழ்வு தோன்றியது.
5)பிறகு மதம் தோன்றியது.
6)கடைசியாக சாதிய உட்பிரிவுகள் தோன்றின.
இவ்வாறு பல பிளவுகள் தோன்றி தோன்றி எண்ணிலடங்கா பிரிவுகள் உண்டாகிவிட்டன.
மாந்த ஒருமைப்பாட்டை நிறுவ இதைத் தலைமாற்றிச் செய்யவேண்டும்.
முதலில் சாதிய உட்பிரிவுகளைக் கடந்து சாதியாக இணைதல்.
பிறகு மதங்களைக் கடத்தல்.
பிறகு சாதி, மதம் கடந்து இனமாக இணைதல்.
(இதைத்தான் தமிழியம் வலியுறுத்துகிறது)
பிறகு (தமக்கான அரசை நிறுவி) பொருளாதார வேறுபாட்டினை ஒழித்தல்.
(இது தமிழ்தேசியம் வலியுறுத்துவது)
அதன் பிறகு இனங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் ஓரினமாதல்.
இது கட்டாயம் நடந்தே தீரும்.
மனிதர்கள் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவர்கள்.
உலகில் எந்த மூலையில் பிறந்த ஆணும் எந்த மூலையில் பிறந்த பெண்ணும் இணைந்து குழந்தை பெற முடியும்.
ஒரு மனிதன் புன்னகைப்பது இன்னொரு மனிதனுக்குப் புரியும்.
எந்த ஒரு மனிதனாலும் எந்த ஒரு மனித மொழியையும் கற்றுக்கொள்ளமுடியும்.
மனிதருக்கான உணர்ச்சிகள் பொதுவானவை.
பிற இனம் கலவாத 100% தூய்மையான இனம் என்று எதுவும் கிடையாது.
உலக மாந்தர் தமக்குள்ளான வேறுபாடுகளைக் கடந்து
எந்த இனத்திலும் திருமணம் செய்யலாம்
எந்த நாட்டிலும் குடியேறலாம்
எந்த தொழிலையும் செய்யலாம்
எந்த வாழ்க்கை முறையையும் பின்பற்றலாம் என்ற நிலை உருவாகி
ஒரே மொழி, ஒரே நாடு என ஓரினமாக ஒன்றிணைதல் காலத்தின் கட்டாயம்.
தமிழினம் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமையமுடியும்.
இனிவரும் காலத்தில் சாதியை ஒழிப்பதுதான் எளிது
அதைக் காப்பாற்றுவதே கடினம்.
மனிதன், தான் ஒரு மாந்த இனம் என்ற வரையறைக்குப் பிறகு,
இனம் என்ற வரையறைக்குள் வருகிறான்.
இனம் என்பது இயற்கையான எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தாய்நிலத்தில்
பொதுவான மொழி,
பொதுவான பழக்கவழக்கங்கள் கொண்ட மக்களைக் குறிக்கிறது.
ஒரு இனம் தன் தாய்நிலத்தை (ராணுவ பலத்தால்) பாதுகாத்துக்கொள்வதும்
தமது நிலத்தின் வளங்களை (சரியான முறையில்) பயன்படுத்தி வாழ்ந்துகொள்வதும்
அடிப்படை உரிமை ஆகும்.
ஒரு இனத்திற்குள் இருக்கும் மக்கள் சாதி, மதம், பொருளாதாரநிலை ஆகியவற்றைக் கடந்து ஒரே அடையாளத்தை ஏற்பது மிக மிக எளிது.
உலகின் ஒரு மூலையில் இருக்கும் இனம் மற்றொரு மூலையில் இருக்கும் இனத்துடன் ஒரே அடையாளத்தின் கீழ் இணைவது சற்று கடினம்.
ஆனால் இரு இனங்கள் தத்தமது அடையாளத்துடன் ஒற்றுமையாக இருக்கமுடியும்.
இனங்களின் ஒற்றுமை நீடிக்க நீடிக்க அருகாமை இனங்களிடையே கலப்பும் பொதுமைத் தன்மையும் இயல்பாக ஏற்படும்.
தமிழியம் மாந்தவியத்தின் முதல்படியே ஆகும்.
முதல்படியில் ஏறி இரண்டாவது படியில் மனித ஒற்றுமையை அடைந்துவிடமுடியும்.
Friday, 4 December 2015
முதல் ஆளாக வந்துநிற்கும் முஸ்லீம்கள்
முதல் ஆளாக உதவும் முஸ்லீம்கள்
வெள்ளபாதிப்புக்கு மற்றவர்களை முந்திக்கொண்டு முதல் ஆளாகப் பள்ளிவாசல்களைத் திறந்துவிட்டு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தது தமிழ் இசுலாமியர்களே.
இது ஒன்றும் புதிதில்லை.
ஆன்டன் பாலசிங்கம் சென்னையில் தங்கியிருந்தபோது அவர் வீட்டில் குண்டு வெடித்தது.
அதனை அடுத்து அவருக்கு
வீடுகொடுக்க பலரும் தயங்கியபோது வீடு தந்து அடைக்கலம் கொடுத்தோர் ஒரு இசுலாமித் தமிழ்க் குடும்பம்தான்.
தமிழினத்திற்கு ஆபத்து என்றால் முதலில் பாய்ந்து வருவது அவர்கள்தான்.