Wednesday, 16 March 2016

நாயக்கர் கால நரபலி

நாயக்கர் கால நரபலி

விழுப்புரம் மாவட்டம் அய்யூர் அகரம் பெருமாள் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர பேரரசர் காலத்தைச் சேர்ந்த செப்பேட்டில் உள்ள தகவல்கள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ரமேஷ் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டம், அய்யூர் அகரம் பெருமாள் கோயிலில் புதிய செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் கி.பி. 1301-ல் விஜயநகர பேரரசர் காலத்தில் நரபலி கொடுக்கப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செப்பேட்டில் இருபுறமும் 107 வரிகள் தமிழிலும்,
சில இடங்களில் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது.

செப்பேட்டின் காலம் சக வருடம் 1222 என்றும் கலியுகாதி ஆண்டு 4402 என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு சரியான ஆங்கில ஆண்டு கி.பி.1301 என்பதாகக் கொள்ளலாம்.
அவற்றின் எழுத்து அமைவு கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகர காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது.

முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை பிற்காலத்தில் செப்பேட்டில் எழுதும் போது இவ்வாறு மாறுபடுகிறது.

இந்தச் செப்பேடு வலங்கை, இடங்கை ஜாதி பிரிவினர் குறித்துத் தெரிவிக்கிறது.
சோழர் காலத்தில் பிராமணர்கள், வெள்ளாளர்கள் ஆகியோர் அல்லாத பிற ஜாதிகளில் பாகுபாடு தோன்றியது.
அதுவே வலங்கை, இடங்கை என்ற இரு ஜாதி பிரிவுகள் ஆகும்.

இந்த இரு பிரிவினரிடையே நடந்த வினோதமான மோதல் குறித்து இந்தச் செப்பேடு தெரிவிக்கிறது.

இடங்கை பிரிவினர் கூடி காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர் ஆகிய மூவருக்கும் மூன்று வெண்கலத் தேர் செய்த நிலையில், அந்தத் தேரை ஓட்ட முடியாமல் வலங்கை பிரிவினர் செய்து விட்டனர்.

இந்நிலையில் இடங்கை பிரிவினர் தேரோட்டதை நடத்தி வைக்குமாறு பல தேசங்களுக்கும் ஓலை எழுதி அனுப்பினர்.
அப்போது கேரளத்தில் உள்ள கோச்சி இடங்கைப் பிரிவினர் மலையாளத்தரசர் ஏகோந்தராஜாவிடம் கூறினர்.

ராஜா தனது அமைச்சர் எகிலியா ராமசாமி நாயக்கரிடத்தில் தேரை ஓட்டி வைக்கும்படி கூறி,
வேண்டிய வெகுமானங்களைக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
எகிலியா ராமசாமி நாயக்கர் தன்னுடன் மனைவி ஆவல்சீத்தாம்மாள், அவருடைய தங்கை, மகன் ஆகிய மூவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் வந்தார்.

பிறகு தேரை பார்த்து இந்த தேர் ஓடாமல் இருப்பதுக்கு காரணத்தை அஞ்சன மை போட்டுப் பார்த்தார்.
அப்போது 3 தேரிலிருக்கும் காமாட்சியம்மன், ஏகம்பரநாதர், கச்சபேஸ்வரர் ஆகியோரின் வாய்கட்டி இருப்பதை அறிந்து அவற்றுக்கு 3 பேரை நரபலி கொடுத்தால் தேர் நகரும் எனக் கூறினார்.
இதற்கு இடங்கையினர் பின் வாங்கினர்.

அப்போது அமைச்சர், நான் ஓரு தேசத்தின் அமைச்சராக உள்ளதால், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என கூறி,
தனது மனைவி ஆவல்சீத்தம்மாளை பார்த்து நரபலிக்கு ஓப்புக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

அதற்கு அவர், 21 தலைமுறைக்கும் என்னை கொலை தெய்வமாக நினைக்கிறதாக சத்தியம் செய்து கொடுத்தால் நரபலிக்கு ஓப்புக் கொள்வதாகக் கூறினார்.
அதன்படி, மனைவி,அவரது தங்கை, மகன் ஆகிய 3 பேரின் தலையையும் வெட்டி 3 தேருக்கும் வைத்து விட்டு,
உடலை பூதங்களுக்கு எறிந்து தடையை விடுவித்து தேரை நான்கு வீதிகளிலும் இழுத்து வந்து தடயத்தில் அமைச்சர் நிறுத்தினார்.

அப்போது அமைச்சருக்கு சிம்பு அனுமந்தன் எனப் பெயர் சூட்டி பல விருதுகள் வழங்கினர்.

அப்போது என்ன வேண்டும் என அமைச்சரிடம் கேட்ட போது,
பணம் வேண்டாம்.
சூரியர், சந்திரர் உள்ள வரை செப்புப் பட்டயம் செய்து கொடுத்தால் போதும் என்றார்.

திருமணத்துக்குக் காணிக்கை:
வன்னியர், செங்குந்தர், விஸ்வபிரம்மா, வைசியர், தேவேந்திர பள்ளர் போன்ற பல ஜாதிகள் தங்கள் தலைக்கட்டுக்கு கல்யாணத்துக்கு அரிசி, வேட்டி, வெற்றிலை, பாக்கு, ஆடு, கோழி போன்றவற்றைத் தரவேண்டும் என்றும் செப்பேடு குறிப்பிடுகிறது.

மேலும் இந்த செப்பேட்டைப் பாதுகாக்காமல் போனால் கங்கைக்கரையில் கறம்பை பசுவை கொன்ற தோஷத்திலேயும்,
தன் மாதா, பிதவை கொன்ற தோஷத்திலேயும்,
சிசுவதை செய்த செய்தவர்கள் தோஷத்திலேயும் போவார்கள்.

இதை அறிந்து நடத்தினால் ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி, மூங்கில் போல் கதமம் முசியாமல் வாழ்ந்து இருப்பீர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்பேட்டில் குறிப்பிட்ட ஜாதியினர் சத்திர வன்னியன் கையெழுத்து,
கிருஷ்ணவன்னியன் கையெழுத்து,
பிரம்மவன்னியன் கையெழுத்து, தில்லை கீழ்புரம் சம்புவன்னியன் கையெழுத்து,
விஸ்வபிரம்மன் கையெழுத்து,
வைசியர் கையெழுத்து,
செங்குந்தமர் கையெழுத்து,
தேவேந்திர பள்ளர் ஜாதி கையெழுத்து
என்று குறிப்பிடுகிறது.

இறுதியில், இந்த நிகழ்ச்சியின் கருத்து படமும் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செப்பேடு தமிழக வரலாற்றுக்கு புது வரவாகும்.
இப்போதும் இச்செய்தியைக் கூறி,
அந்த நரபலி பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஓரு முறை காசு கேட்க காஞ்சிபுரத்தில் இருந்து,
திண்டிவனம் பகுதிக்கு வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் கூறுவது இந்தச் செப்பேட்டுக்கு பொருத்தமாக உள்ளது என்றார்.

நன்றி: www. dinamani. com/ tamilnadu/ article1351075.ece?service=print
------------------------
தெலுங்கு நாயக்கரின் ஆட்சியில் மூடநம்பிக்கைகள் உச்சத்தில் இருந்துள்ளன.
நடக்காத கொடுமைகள் இல்லை.
தெருவில் ஓடியவரால் மன்னர் மேல் தூசி பட்டதால் அவருக்கு மரணதண்டனை அளித்துள்ளனர்.

அதை தப்பு தப்பாக தமிழில் கல்வெட்டும் பொறித்துள்ளனர்.

No comments:

Post a Comment