Showing posts with label திருமணமுறை. Show all posts
Showing posts with label திருமணமுறை. Show all posts

Monday, 17 April 2017

கரண் தப்பினால் மரணம்

'கரணம் தப்பினால் மரணம்'

இதில் கரணம் என்பது திருமணத்தைக் குறிக்கும்.

உலகில் திருமணம் என்ற சடங்கு தோன்றியிராத காலத்தில் (ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இருந்தது)
பெண்ணும் ஆணும் களவு நெறியில் ஈடுபடுவர். (தற்போதைய மேலைநாட்டு வழக்கமான டேட்டிங் போல) இதன் விளைவாக பெண் கருவுறுவாள்.
ஒருவேளை அந்த ஆண் அவளோடு வாழமாட்டேன் என்று கைவிட்டுவிட்டால் அந்தப்பெண் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இருந்தது.
இதுதான் கரணம் தப்பினால் மரணம் (கரண் = திருமணம்).
இத்தகைய தற்கொலைகள் அதிகமானதால் ஊரறிய திருமணம் செய்துகொள்வது விதியாக்கப்பட்டது.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரண் என்ப"
_தொல்காப்பியம்

Friday, 22 April 2016

சீமானின் தெலுங்கு மனைவி?!

ஆயிரம் தடவை கூறிவிட்டேன்.
தமிழர்கள் இனம் தாண்டி திருமணம் செய்யத் தடையேதும் இல்லை.
தமிழ்தேசியம் இனவெறிக் கொள்கை இல்லை.
சீமான் அண்ணனின் மாமியார் தெலுங்கு என்றே கொண்டாலும் சீமானின் மனைவி 50% தமிழர், சீமானின் பிள்ளைகள் 75% தமிழர்,
அப்பிள்ளைகள் தமிழரை மணந்து மீண்டும் தமிழினத்தில் முழுமையாக இணையமுடியும்.

இதைப்பற்றி தெலுங்கர்கள் பேசத் தேவையில்லை.


இரண்டாண்டு முன்பே விளக்கியாகிவிட்டது

https://m.facebook.com/photo.php?fbid=346073908829602&id=100002809860739&st=14&_rdr

Friday, 25 March 2016

பரிசம் - தமிழர் பெருமை

பரிசம் -தமிழர் பெருமை

திருமணச்சீர் அதாவது வரதட்சணை தமிழர் வழக்கமா?
ஆம். ஆனால் மணமகன் கொடுக்க மணமகள் வீட்டார் பொன்னும் பொருளும் வாங்குவதுதான் தமிழ்முறை.

அதாவது இன்றைய நிலைக்கு அப்படியே தலைகீழ்.

அதாவது மாப்பிள்ளை வீட்டார் பரிசம்(பரிசு) கொடுத்து பெண்ணை அழைத்து வருவதே தமிழர் பண்பாடு.

இதற்கு சான்றாக மூன்று பாடல்களைக் காட்டமுடியும்.

புறநானூறு 343

மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன,
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத்
தந்தையும் கொடாஅன்

இதன் எளிய பொருளாவது,
சேரமன்னன் (செங்)குட்டுவன் மக்களுக்கு பலவகைப் பொருட்களை வாரிவழங்குவது போல
பெருமளவு செல்வத்தை பணிவோடு வந்து கொடுத்தாலும்
தகுதியான ஒருவனைத் தவிர மற்றோரை இவள் ஏற்கமாட்டாள் அதனால்
இவளது தந்தையும் கட்டிக்கொடுக்க மாட்டான்.

இதில் பெண்ணின் விருப்பமே முதலில் சொல்லப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
----------------------------
கலித்தொகை,103; 71-73

சங்க இலக்கியமான கலித்தொகை  அதில் முல்லைக் கலி என்ற பகுதியில் ஏறு தழுவல் பற்றி அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதில்

"விலைவேண்டார் எம்இனத்து ஆயர் மகளிர் கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின் ஆங்கு"

இதன் பொருள் எம்மினத்து ஆயர் (இடையர்) பரிசம் வேண்ட மாட்டார்கள்.
ஆனால் கொல்லும் ஏற்றின் கொம்புகளைத்
தாம் காதலிக்கும் பெண்களின் கொங்கைகளைப் போலக் கருதி,
ஆர்வமுடன் பாய்ந்து தழுவினால் அவனையே தம் மகளுக்கு ஏற்றவனாகக் கருதுவார்கள்.

அதாவது மணமகன் ஏறுதழுவும் வீரனாயிருந்தால்
அவனிடம் சீர் வாங்கமலே பெண் தருவார்களாம் ஆயர் குலத் தாய்மார்கள்.
-----------------------------
அகநானூறு 90

கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
தறுநுதல் அரிவை பரிசிழை விலையே

இதன் எளிய பொருள்:
(கோசரின்) நிறைவான வருவாய் உடைய நியமம் எனும் ஊரையே (சீதனமாகத்) தந்தால்கூட,
பெண்ணின் தந்தை வாங்கிக் கொள்ள மாட்டாராம்.
அதற்கும் மேலே தந்தால்தான் சம்மதிப்பாராம்.
----------------------------------
ஆக மணமகளிடம் திருமணச்சீர் வாங்குதல் தமிழர் வழக்கம் இல்லை.

Saturday, 17 October 2015

பிராமணரை வென்ற சித்தூர் ஆசாரிகள்

பிராமணரை வென்ற சித்தூர் ஆசாரிகள்

ஆசாரிகள் பிராமணர் இல்லாமல் தங்கள் பெரியவர்களை வைத்தே திருமணம் செய்துகொள்வதில் வழக்காடி வெற்றிபெற்ற கதை தெரியுமா?

பழைய சித்தூர் ஜில்லாவில் சதுப்பேரி என்ற ஊரில் 1814 ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்று வரலாற்றில் மிகமுக்கியமானது.

அங்கே பண்டிதர் மார்க்கசகாயம் ஆசாரி என்பவர்தான் திருமணங்களை நடத்திவந்தார்.
ஒருமுறை திருமணக்கால் நடுதல் விழா நடக்கும்போது (விவாதஸ்தம்ப பிரதிஷ்டை)
அங்கே பஞ்சாங்க குண்டையன் என்பவர் ஒரு கூட்டத்துடன் வந்து பிராமணர்கள்தான் திருமணம் நடத்திவைக்கவேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார்.

வேத இதிகாசங்களை நன்கு கற்றவரான மார்க்க சகாயனார் அவரை விவாதத்தில் வென்றார்.
அதாவது புராணங்களில் முன்னுக்குப்பின் முரணாக பல தகவல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றில் எதுவுமே சரியில்லை என்று நிறுவியுள்ளார்.
( mannaivishwakarma.blogspot.in/2015/06/blog-post_13.html )
இந்த விவாதம் ஒரு பஞ்சாயத்து முன்னிலையில் நடந்தது.
தீர்ப்பு ஆசாரிகள் பக்கம் வழங்கப்பட்டது.
ஆனாலும் குண்டையன் ஒத்துக்கொள்ளாமல் தகராறு செய்யவே மார்க்கசகாயனார் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்தார்.

மாஜிஸ்திரேட் வழங்கிய தீர்ப்பில் குண்டையன் கூட்டத்தாருக்கு தண்டப்பணம் விதித்து திருமண நிகழ்வுக்கான இழப்பீடைப் பெற சிவில் கோர்ட்டில் வழக்குபோட ஆசாரிகளுக்கு உத்தரவிட்டார்.

1814ல் மார்க்கசகாயனார் முதலியோர் 'சித்தூர் ஜில்லா அதாலத்' கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

வாதிகள்:
வெள்ளை ஆசாரியார்
மார்க்கசகாயம் ஆசாரியார்
ருத்திர ஆசாரியார்
வெங்கிடாசல ஆசாரியார்
நல்லா ஆசாரியார்
குழந்தை ஆசாரியார்
சின்னக்கண்ணு ஆசாரி
அருணாசல ஆசாரியார்
மகாதேவ ஸ்தபதியார்
தக்ஷிணாமூர்த்தி ஸ்தபதியார்
வரத ஆச்சாரியார்

வக்கீல்- அப்துல் சாயபு

இவர்கள் முன்வைத்த ஆவணங்கள் a) எசுர் வேதம்
b) புருஷசூக்தம்
c) மூலஸ்தம்பம்
d) வச்சிரசூசி
e) வேமநபத்யம்
f) கபிலரகவல்
g) ஜில்லா மாஜிஸ்டிரேட் டைரி தாக்கல்.

பிரதிவாதிகள்:
பஞ்சாங்கக் குண்டையன்
அருணாசல ஐயன்
வெங்கடசப்பு சாஸ்திரி
விஸ்வதி சாஸ்தரி
தொட்டாசாரி
எக்கிய தீட்சிதர்
வியாச பட்டர்
சூரிய நாராயண சாஸ்திரி
ஜோசி சாஸ்திரி
வந்தவாசி சிரஸ்தாரய்யர்

வக்கீல் – அருணாசல முதலி

விசாரணை சாட்சிகள்:
ஆண்டியப்ப முதலி
சங்கரநாராயண செட்டி
கோபி செட்டி
அப்பாசாமி பிள்ளை
வெங்கடசுப்பு நாயக்கன்

(பெயர்களை வைத்து பார்த்தால் குண்டையன் தரப்பும் அவர்களுக்கு எதிரான ஆசாரிகளின் சாட்சிகளும் தமிழ் மொழி பேசுவோர் இல்லை என்பது என் யூகம்)

1818 டிசம்பர் 15 அன்று தீர்ப்பு வந்தது.
தீர்ப்பு ஆவணத்தில் நடந்த விவாதமும் உள்ளது.
(அவ்வாவணம் vishwakarmaviswass.com/?page_id=360
200 ஆண்டுகள் முந்தைய தமிழ் அதிகப்படியான சமக்கிருதம் கலந்துள்ளது.
என்னால் முடிந்த அளவு எளிமைப்படுத்தியுள்ளேன்.

வாதிகள்=ஆசாரிகள்
பிரதிவாதிகள்=பிராமணர்கள்
இதை நன்கு நினைவில் கொள்ளுங்கள்)

பஞ்சமுக பிரம்மா ஐந்து முகங்களிலிருந்து தோன்றிய முனிகளின்(ரிஷிகள்)வழி வந்தவரே விஸ்வகர்மாக்களே பிராமணர்கள் என்றும் வாதிகள் கூறினர்.

வாதிகள் பஞ்சமர் வழிவந்தோர் என்றும், ரிஷிகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்றும், அவர்கள் தொழிலும் பூஜைசெய்வது அல்ல என்றும், தாங்களே அந்த தொழிலைக்குரிய சுத்த பிராமணர் என்றும் பிரதிவாதிகள் கூறினர்.

வெவ்வேறு ரிஷிகளின் பிரம்மரூபங்கள், அவர்களுக்கான உலோகத் தொழில்கள் பற்றியும், தாங்கள் யாகம் செய்து தொழில் தொடங்குவதையும், பஞ்சாங்கத்தில் பிரம்மாக்கள் அருளியவற்றையும், அதனால் பஞ்சாங்கம் சொல்லிக்கொண்டு தாங்கள் சடங்குகளைச் செய்யலாமென்றும்
தங்கள் பிறப்பிலேயே பிராமணத்துவம் இருப்பதாகவும்

மேலும் பிரதிவாதிகள் பறையர், சக்கிலி முதலான நீசசாதியுடன் பிறந்தவர்கள் என்று மனுதர்மம் கூறுவதாகவும்,
கீழ்சாதி வயிற்றிலும் விலங்குகள் வயிற்றிலும் உயிரற்ற பொருட்களின் வயிற்றும் பிறந்த(??!) பல்வேறு ரிசிகள் பெயரைச் சொல்லி அவர்கள் வழிவந்தோரே குண்டையன் தரப்பினர் என்றும் ஆசாரிகள் வாதடினார்கள்.

நீதிமன்றத்தின் முடிவு:
வாதிகள் தாங்களே விஸ்வகர்ம பிராமணர்கள் பிரதிவாதிகளை சங்கர ஜாதி என்றும் கூறி புராண ஆவணங்களைக் காட்டுகின்றனர்.
பிரதிவாதிகளால் வாதிகள் பஞ்சமர்கள் என்று நிறுவமுடியவில்லை.
வாதிகள் கூறும் ரிஷிகள் தங்கள் மூதாதையர் அல்லர் என்றும் பிரதிவாதிகள் மறுக்கவும் இல்லை.
ரிஷிமூலத்தை சொல்லக்கூடாதென்று புராணக்கட்டுப்பாடு உள்ளது.
இந்த ரிசிகள் நால்வர்ணம் உருவான பிறகு தோன்றியவர்கள் அதனால்தான் அவர்களுக்கென்று தொழில்கள் இல்லை.
அதனால்தான் யாசகம் செய்து பிழைக்க விதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகள் பலகாலமாக சடங்குகளைச் செய்வித்துவந்தவர்கள் ஆனாலும் சாஸ்திரங்களில் அத்தொழில் அவர்களுக்கு உரியது என்று இல்லை.
ஆக இவர்கள் துரைகளையும் மூடத்தனமான மக்களையும் ஏமாற்றி ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

வாதிகள் கூறும் பஞ்சமுக பிரம்மாக்களில் ஐந்தொழிலும் வாதிகளின் ஐந்தொழிலும் ஒத்துப்போகின்றன.
இந்த தொழில்கள் கடவுள் போல உலகம் முழுவதும் பரவியுள்ளன பலருக்கும் நன்மை பயப்பதாக உள்ளன.
விதிக்கப்பட்ட தொழில்களை இவர்கள் செய்தும் வருகின்றனர்.
அதனால் இவர்களை பிராமணர் என்று நம்பலாம்.(?!)
மகாபாரதம் போன்ற கற்பனை புராணங்கள் விஸ்வபிரம்மாவை சிறிது தாழ்த்திக்கூறினாலும் புராணங்களுக்கு மூலமான ஆதிவேதங்கள் அவ்வாறு கூறவில்லை.

பிரதிவாதிகள் கல்யாண சடங்கில் தடங்கல் விளைவித்தது வாதிகள் அழைத்துவந்த சாட்சிகளான நாகோஜிராவ், சுப்பராய முதலி, வெங்கட்ராம நாயக்கன் ஆகியோர் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
பிரதிவாதிகள் ரூ.550 இழப்பீடு வாதிகளுக்கு வழங்குவதோடு அவர்கள் சடங்குகளைச் செய்துகொள்வதில் தலையிடக்கூடாது.

அதாவது ஆசாரிகள் புராண இதிகாசங்களில் வரும் உலோகத் தொழிலுக்கான கடவுளரை தங்களின் முன்னோர் என்று கூறியுள்ளனர்.
பிராமணர்கள் புராணங்களில் வரும் ரிஷிமுனிகளின் வழிவந்தவர்கள் என்று கூறியுள்ளனர்.
ரிக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களில் விஸ்வகர்ம கடவுளரை இழிவுபடுத்தி எந்த குறிப்பும் இல்லை.
ஆனால் ரிஷிமுனிகளைப் பற்றி பல புளுகுப் புராணங்கள் உள்ளன.
தவிர ரிஷிமுனிகளின் தொழில் பிச்சையெடுப்பதுதான் யாகம் செய்விப்பது கிடையாது.
மனுதர்மம் கூறுவது இதற்கு முரணானது.

செய்துவரும் தொழில் அடிப்படையில் உருவான சாதியை புளுகுப் புராணங்களுடன் தொடர்புபடுத்தி மாந்தருக்குள் ஏற்றத்தாழ்வை செய்யும் அரசியல் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது.

'சாதி அரசியல் அதிகாரம்' என்ற நூல் கௌதம சித்தார்த்தனால் எழுதப்பட்ட நூலும் இந்த தீர்ப்பு இடம்பெற்றுள்ளது.

பிராமணர்கள் உயர்ந்தவர்கள் அதற்கு வேதமே சான்று என பரப்புரை செய்துவந்தோருக்கு ஆசாரிகள் அப்புராணத்தைக் கொண்டே கொடுத்த பதிலடி இது.

மற்றபடி அப்போது ஆசாரிகள் தமது உரிமைக்காகப் போராடினரேயன்றி சமத்துவத்திற்காகப் போராடவில்லை என்பதையும் அறியமுடிகிறது.

இதன் மூலம் மேலும் அறியமுடிவது,

தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் நீதிமன்றம் தமிழில் இயங்கியுள்ளது. சித்தூர் தமிழர் மண்ணே.

200 ஆண்டுகளில் தமிழ் எழுத்துமுறை நன்கு மேம்பட்டுள்ளது.

பிராமணர்களை அழைத்து வேதமந்திரங்கள் ஓதி திருமணம் நடத்தும் முறை பரவலாக இருந்திருக்கவில்லை.
பெரியவர்கள்தான் அதற்கான சில சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

ஆசாரிகள் உட்பட பல சாதியினரும் சமஸ்கிருத வேதங்களைக் கற்றிருந்தனர்.

மேலும் பல.