Showing posts with label நாம் தமிழர். Show all posts
Showing posts with label நாம் தமிழர். Show all posts

Sunday, 14 December 2025

செங்கோட்டை சபிக்

 செங்கோட்டை சபிக் 

 செங்கோட்டை யில் கன்னட கொடியுடன் வலம் வந்த வண்டியை மறித்து கொடியை அகற்ற வைத்த நாம் தமிழர் மூத்த நிர்வாகி அண்ணன் முகமது சபிக் அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டார்.

 தென்காசி பொறுப்பாளர் வின்சென்ட் அவர்கள் பிணை எடுக்க ஆவன செய்துள்ளார்.
 இவ்வழக்கில் மேலும் சேர்க்கப்பட்டவர்கள் செங்கோட்டை பகுதி நிர்வாகிகள் காமராசு மற்றும் ஜெயசெல்வன் ஆகியோர் ஆவர்.
 (அதாவது ஒரு இசுலாமியர், ஒரு தேவேந்திரர், ஒரு கிறித்தவ நாடார்) 
 
 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் செங்கோட்டை பகுதி  பொறுப்பாளர்கள் மற்றும் கடையநல்லூர் நிர்வாகிகள் என 8 பேர் அண்ணன் சபிக் அவர்களது இல்லம் சென்று சிறிதளவு நிதி உதவி செய்துவிட்டு நாளை மறுநாள் பிணை கிடைத்துவிடும் என்று தைரியம் சொல்லிவிட்டு வந்தோம்.
 பிணையும் கிடைத்துவிட்டது.
 
 பி.கு: சமூக வலைகளில் இச்செய்தி பரவியதே கைதுக்கு காரணம் என்பதால் இச்செய்தி ஒரு வாரம் தாமதமாக பகிரப்படுகிறது 

 


 

Friday, 17 October 2025

சீமானை சோதிக்காதீர்கள்

 சீமானை சோதிக்காதீர்கள்

 சீமான் ஸ்டைல் அரசியலை புரிந்து கொள்ள முயல்வோம்!
சீமானிடம் இருப்பதெல்லாம் கொள்கைதான்! 
ஆனால் கொள்கையை வைத்தே பணபலமும் அதிகார வலுவும் கிளப்ப முடியாத சூறாவளியை அவரால் கிளப்ப முடியும்!
 அவருக்கு எப்போது தேவையோ அப்போது ஊடகத்தையும் மக்களின் கவனத்தையும் தன் மீது திருப்ப முடியும்!

 ஒரு தளபதி சூழ்நிலைக்கு தகுந்தபடி கனரக ஆயுதங்களை களத்தில் இறக்குவது போல அண்ணன் கொள்கைகளில் மாற்றம் அல்லது தீவிரம் என்று நிலைப்பாடு எடுப்பார்!
 இப்படித்தான் பாஜக வின் அடிப்படையைத் தகர்த்த 'முப்பாட்டன் முருகன்' நிலைப்பாடு!
 இப்படித்தான் புயலைக் கிளப்பிய 'ராஜீவ் காந்தியை கொன்றோம்' என்ற நிலைப்பாடு!
 இப்படித்தான் 'ஆடு மாடு மேய்த்தல் அரசுவேலை' நிலைப்பாடு!
 இப்படித்தான் 15 ஆண்டுகள் காத்திருந்து அடித்த 'ஈ.வே.ரா பிம்பம்' மீதான அடி!
இப்படித்தான் கள் இறக்கும் போராட்டம்! 
இப்படித்தான் மாடு, மலை, தண்ணீர் மாநாடு!

 கொள்கை மட்டுமல்ல சில வார்த்தைகளைப் போட்டு அதிர்வை கிளப்புவதும் உண்டு! 
இப்படித்தான் 'ஆமைக்கறி'...!
இப்படித்தான் 'ஏகே74'..!
இப்படித்தான் 'டேய் ஸ்டாலின்'..!
 இப்படித்தான் 'சாத்தானின் பிள்ளைகள்'..!
 இப்படித்தான் 'எம்ஜிஆர் சனியன்'...!
இப்படித்தான் 'டீவிக்க...! தலைவிதி'...!"
இப்படித்தான் 'அண்ணனை முறைச்சா அடிப்பேன்'..!

 இனி வரும் காலங்களிலும் அண்ணாயிசம், எம்ஜியாரிசம், திருமாயிசம், அம்பேத்கரிசம் என எல்லா இசங்களும் நொறுக்கப்படும்! 

 அண்ணனிடம் இருப்பதெல்லாம் உடலும் அறிவும் தான்!
அதாவது மக்களைப் பற்றிய ஆழமான புரிதலும் மணிக்கணக்காக பேசும் திறனும் சுற்றுப்பயணத்திலேயே இருக்கும் கடின உழைப்பும் கொள்கைகளின் பலம் பற்றிய புரிதலும்தான்!
 அதனால்தான் உயிர் போகும் அளவு ரிஸ்க் எடுக்கும் கதாநாயகன் போல 'தனித்து' என்கிற தற்கொலை முடிவில் உறுதியாக இருக்கிறார்!
 ஏனென்றால் அதுதான் அவரது அடையாளம்! 
அதுதான் அவர் அரசியலின் உயிர்நாடி!
 ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக கவலைக்கிடமான நிலையில் இருந்தபோது யாராவது எடப்பாடி பழனிச்சாமியிடம் திமுகவுடன் கூட்டணி அமைக்க கோரினார்களா?!
இரு கட்சிகளும் இணைந்தால் தமிழகத்தை யாராலும் அசைக்க முடியாதே?! 
 ஏன் அது மட்டும் நடக்கவே நடக்காது?!
ஏனென்றால் அதுதான் அவர்களின் அடையாளம்! 
சீமானின் அடையாளமும் அத்தகையதே! 

 
 ஒரு நொடி ஆகாது...  'மக்களாவது மண்ணாவது' என்று தூக்கியெறிந்து விட்டு அதிமுக வுடன் கூட்டணி போட்டு பதவி பணம் அதிகாரம் என கைப்பற்றி தன் குடும்பத்தையும் கட்சியின் மேல்மட்டத்தையும் வளப்படுத்தி கொள்ள ஒரு நொடி ஆகாது!
 அதன்பிறகும் கூட 50 ஆண்டுகள் அரசியல் செய்ய முடியும்!
 விசிக போல மானங்கெட்டு போகாமல் பாமக போல கௌரவமாக அமர்ந்து மிதமான அரசியல் செய்ய முடியும்!
 தமிழர் அல்லாதோருக்கு எதிராக சிவசேனா பாணி கலவர அரசியலைச் செய்ய முடியும்! 
 அல்லது 'கன்னட ரக்சின வேதிகே' போல அரசியலுக்கு வெளியே இருந்தே கூட அரசியலை ஆட்டுவிக்க முடியும்! 
 ஆனால் அண்ணனோ 'தலைகீழாகத்தான் குதிப்பேன்' என்கிறார்!
 எங்கள் இலக்கு ஆழமானது!
  முத்து எடுக்க தலைகுப்புற விழுந்து மூச்சை அடக்கித்தான் ஆக வேண்டும்.

 அண்ணன் இந்த இறுமாப்பாலேயே எல்லா ஆதரவையும் இழந்துவிட்டார்!
இன்று அண்ணனுக்கு ஆதரவாக இருப்பது மாற்றத்தை விரும்பும் தம்பிகள்! அவர்கள் திரட்டும் சிறிய அளவு நிதி! அதைவிட அண்ணனின் சர்வாதிகாரத்தை சகித்துக் கொள்ளும் தம்பிகளின் அசாத்திய பொறுமை! 
 எதிர்கட்சி ஆட்களையும் பாராமுகம் காட்டும் மக்களையும் மண்ணையும் மரத்தையும் கூட மரியாதையாக பேசும் அண்ணன் தம்பிகளை மட்டும்தான் 'இருந்தா இருடா பிசிறு! இல்லாட்டி போய்ட்டே இரு!' என்று எடுத்தெறிந்து பேசுவார்!
 அண்ணன் தவறு செய்யும் போது கேள்வி கேட்கும் உரிமை இருந்தாலும் நாங்கள் பலமுறை மௌனமாகவே கடந்து செல்கிறோம்!
அண்ணனின் இந்த அலட்சிய போக்கு பல முறை எங்களை காயப்படுத்தி இருக்கிறது! 
 கரூர் சம்பவத்திற்கு பிறகு அவரது சர்வாதிகாரம் இல்லாவிட்டால் நாங்களும் அப்படியான ஒரு கும்பலாகத்தான் ஆகியிருப்போம் என்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம்!
 மாடுகளைத் திரட்டி மாநாடும் ஊர்வலமும் நடத்தியபோது கூட சிறு கீறல் இல்லை என்றால் அதுதான் சீமான் உருவாக்கிய கட்டுப்பாடு!

 என்ன செய்வது அண்ணனை எங்களால் கைவிட முடியாதே?!
 ஆம்! உங்கள் குருட்டு கண்களுக்கு தெரிகிறதா?!
சீமானுக்கும் 60 வயதாகிவிட்டது! 
தம்பிகளும் இளமைக் காலத்தை தொலைத்துவிட்டு 40களில் அதாவது முதுமைக்கு வந்துவிட்டனர்! 
 தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நல்ல அரசியல்வாதிக்கு மரணவலி கொடுக்கின்றனர்.
இப்படித்தான் வ.உ.சி!
இப்படித்தான் பாரதியார்!
இப்படித்தான் ஜீவானந்தம்!
இப்படித்தான் மபொசி!
இப்படித்தான் பாரதிதாசன்!
இப்படித்தான் நல்லகண்ணு! 
இப்படித்தான் தமிழரசன்! 
இப்படித்தான் கலியபெருமாள்! 
இப்படித்தான் நம்மாழ்வார்!

 தமிழக வாக்காள பெருமக்களுக்கு ஏதோ தாம் பெரிய சிவபெருமான் என்றும் ஓட்டுக் கேட்டு நிற்பவன் தன் பக்தன் என்றும் எண்ணிக்கொண்டு உயிர் போகும் அளவு சோதிக்கின்றனர்.
 அவன் உங்களை காப்பாற்றத்தான் உங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான் மக்களே!
 இதுவே சீமான் ஒரு வந்தேறியாக இருந்திருக்க வேண்டுமே?! 
 அன்று வைகோவுக்கும் விஜயகாந்துக்கும் இன்று கமலஹாசனுக்கும் விஜய்க்கும் அளித்த ஆதரவைக் கூட சீமானுக்கு அளிக்கவில்லை இந்த கேடுகெட்ட தமிழினம்! 
 வடவரில் கொஞ்சம் அறிவுள்ள டெல்லி மக்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே பாஜக- காங்கிரஸ் இரண்டும் ஒன்றே என்று அறிந்து கேஜரிவால் கைகளில் ஆட்சியைக் கொடுத்து இன்று பஞ்சாபை அவர்கள் வென்று நல்லாட்சி நடத்தவில்லையா?!
 ஒன்றில்லை ரெண்டில்லை 16 ஆண்டுகள் சீமானை சோதித்துவிட்டீர்கள்! 
வேறொரு இனமென்றால் இந்நேரம் சீமானை வைத்து தனிநாடே வாங்கியிருக்கும்!
 1971 இல் ஒரு 16 வயது சிறுவனை 13 ஆண்டுகள் சோதித்த ஈழத் தமிழினம் 1983 இல் அவரை தலைவனாக ஏற்றுக்கொண்டது!
சீமானும் அப்படியானவரே!
அவர் பாதையில் சறுக்கி இருக்கலாம் ஆனால் தடம் மாறவில்லை! 
 ஆனால் தமிழகத்தில் ஆண்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் பெண்கள் ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் ஓட்டு விபச்சாரம் செய்வதே அரசியல் என்று நினைக்கின்றனர்!
 பலமுறை 'ஒருவேளை கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூட ஆரம்பத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வந்து இவர்களின் புத்தி தெரிந்து கெட்டவர்களாக மாறிவிட்டார்களோ!' என்று எண்ணத் தோன்றுகிறது!
 நான் சீமானாக இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கருணாநிதியாக மாறியிருப்பேன்!
  சீமான் சமரசம் செய்யாமல் இருப்பதால் தான் இங்கே தமிழ்தேசியம் உயிரோடு இருக்கிறது!
 இல்லையென்றால் அவர் இடத்தில் வைகோ இருந்திருப்பார்!
 அந்த பிழைப்பு பிழைக்க எங்களுக்கு மனம் வரவில்லை!
ஆனால் சமரசம் செய்து கொண்டவர்களை புத்திசாலிகள் என்று கருதும் சிலர் உண்டு
அந்த வகையில் 'இப்படி இருந்தால் வெல்ல முடியாது!
இது திமுகவுக்கே சாதகமாக முடியும்!'
என்றெல்லாம் 'நடைமுறை' யில் நின்று பேசும் அதிமேதாவிகள்  நிதானமாக சிந்திக்கவும்!
 முதலில் ஒரு சிந்தனை வலுவாக நிற்காமல் அது நடைமுறையை மாற்ற முடியாது!
 அசாத்திய கனவுகள்தான் சாத்தியக் கூறுகளை மாற்றி அமைத்து நடைமுறையாக மாறுகின்றன!
 மன்னராட்சி காலத்தில் மக்களாட்சியே பெரும் கனவுதான்! 
 சரி சித்தாந்தங்களை விடுவோம்! எளிமையாக புரியும்படி சொல்கிறேன்!
 நீங்கள் சொல்வது போல திமுக அத்தனை பெரிய அரக்கன் என்றால் ஏன் மேற்குவங்க கம்யூனிஸ்ட்கள் போல தொடர்ந்து 30 ஆண்டுகள் வெல்ல முடிவதில்லை! 
அடுத்த பெரிய கட்சி அதிமுக என்றால் ஏன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் கூட ஆட்சியில் இல்லை?! 
 ஒரு தேர்தலில் அமோக வெற்றி அடுத்த தேர்தலில் படுதோல்வி என்று மாறி மாறி சந்திக்கிறார்களே அது யாரால்?! 
 என்னதான் பெரிய கட்சி, என்னதான் தொண்டர் பலம், என்னதான் கட்டமைப்பு, என்னதான் பணபலம் இருந்தாலும் சூழ்நிலை பொறுத்து தன் வாக்கை மாற்றிப்போடும் மக்களை விலைக்கு வாங்க முடியாது!
 திமுக வின் வாக்கு வங்கி அப்படியே இருக்கும்!
அதிமுக வின் வாக்குவங்கியும் அப்படியே இருக்கும்!
இருபுறமும் சாராத மக்கள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றனர்.
 இவர்கள் நாம் தமிழர் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருக்கின்றனர்.
 இவர்களே சீமான் வாங்கிய 35 லட்சம் வாக்கு!
இவர்கள் நினைத்தால் அடுத்த தேர்தலிலேயே நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்!
 சீமானின் இலக்கு இவர்கள்தான்! 
சீமான் முன்வைக்கும் பெருங்கனவு மாநில ஆட்சி அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டது!
 அவர் 10 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்து முழு சர்வாதிகாரியாக நடந்தால்தான் அவர் விரும்பும் மாற்றத்தில் கால்வாசியையாவது கொண்டுவர முடியும்!
 அத்தகைய மனிதனை கேவலம் அதிமுக வுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கரித்து கொட்டுவது எத்தனை பெரிய மூடத்தனம்!
 கட்சியே பிழைக்காது சின்னமே கிடைக்காது என்ற நிலையில் கூட உறுதியாக இருந்து அங்கீகாரத்தையும் சின்னத்தையும் பெற்றுவிட்டோம்!
  தனித்து தன் கால்களில் தன்மானத்தோடு நிற்கும் எங்களை குறைசொல்லும் நீங்கள் யார்?!
கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போல எல்லாரும் எவனுக்கு வாக்களிக்கிறானோ அவனுக்கே வாக்களித்துவிட்டு ஏதோ முதலமைச்சரை தான் ஒருவனே கைப்பிடித்து அரியாசனத்தில் அமர்த்தியது போல ஒரு திமிரோடு திரிபவர்கள்!
  சிலர் ஒருமுறை நாதக வுக்கு வாக்கு போட்டு அவர்கள் தோற்றதும் ஏதோ தன் அப்பன் தந்த சொத்து வீணாகிவிட்டது போல புலம்பல்!
 நாதக சின்னத்தில் நோகாமல் ஒரு ஓட்டு குத்திய உங்களுக்கே அது வெல்லாத போது இவ்வளவு கோபம் வருகிறதே!
 உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இறைக்கும் நாதக தம்பிகளுக்கு எப்படி இருக்கும்?!
 குடும்ப மானம் வரை குதறப்பட்ட அண்ணனுக்கு எப்படி இருக்கும்?!  

 'நடைமுறை' நாயகர்களே! 
 அப்படியே யோசித்தாலும் எடப்பாடியார் என்ன பெரிய தமிழ்தேசிய நடவடிக்கை செய்தார்?!
 ஜெயலலிதா வை சீமான் ஆதரித்த போது அதிமுக தலைமை எத்தனை உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தது?!
 மத்திய அரசு நடுநடுங்கும் படி செயல்பட்டாரே?!
 எடப்பாடியின் நான்காண்டு ஆட்சி அத்தகையதா?!
 சீமான் ஏன் அவருடன் சேரவேண்டும்?! 
 மராத்தான் ஓட தகுதியும் வலுவும் பொறுமையும் உள்ள ஒருவன் ஏன் ஸ்லோசைக்கிள் ஓட்டுபவனுடன் இணைய வேண்டும்?!
 உங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பிடிக்கும் என்றால் ஆதரியுங்கள் ஆனால் அதுதான் தமிழ்தேசியம் என்றும் அதுதான் நடைமுறைச் சாத்தியம் என்றும் நாம் தமிழர் தம்பிகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம்!
 டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், நீட் 7.5% இடவொதுக்கீடு, தமிழ்நாடு நாள் அறிவிப்பு என எடப்பாடியாரின் தமிழ்தேசிய நடவடிக்கைகள் என்று நீங்கள் தரும் பட்டியலை விட கொஞ்சம் பெரிய பட்டியல் திமுக விடமும் உள்ளது!
 முதன்மைக் கொள்கை என்ன?!
தமிழினத்தின் தலையாய பிரச்சனைகளான காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு நீர் பங்கீடு, மீனவர் தாக்குதல், கல்வி மத்திய அரசு பட்டியலில் இருப்பது அதனால் நீட் ,வரிக்கொள்ளை, சாராய விற்பனை, மலைகள் அழிப்பு என ஒவ்வொரு தமிழனின் மூச்சையும் ரத்தத்தையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு அதிமுக முன்வைக்கும் தீர்வு என்ன?
 மாநிலம் அதிகாரம் தாண்டிய நடவடிக்கை என்ன?! 
 'திமுக வை விட பரவாயில்லை' என்பதைத் தவிர அதிமுக வின் தகுதி என்ன?!
 அப்படியே பார்த்தாலும் திமுக, அதிமுக வை விட நாதக பரவாயில்லை என்று எங்கள் பக்கம்தானே வரவேண்டும்! 
 நீங்கள் ஏற்காவிட்டாலும் எங்கள் தகுதி தமிழ்நாட்டை ஆள்வதற்கும் மேலானது! இந்திய இனங்களுக்கே முன்மாதிரி கட்சி நாங்கள்!
 எங்கள் இலக்கு மிகப் பெரியது!
'வெற்றி அல்லது வீர மரணம்' என்று கூட இல்லை 'வீர மரணம் அல்லது வெற்றி' என்கிற நிலைப்பாடு தான் தம்பிகளின் நிலைப்பாடு!
 சீமான் இதிலிருந்து பின்வாங்கினாலும் தம்பிகள் பின்வாங்க விடமாட்டார்கள்! 
 அத்தனை உறுதியும் பொறுமையும் இல்லாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி எதிரிக் கட்சிகளிடமே தஞ்சம் புகுந்துவிட்டனர்.
 இதில் அதிமுக விடம் தஞ்சமடைந்தவர்கள் மட்டும் புனிதமாகி விடுவார்களா?! 
 திராவிடம் இரட்டைத் தலை பாம்பு ! திமுக அதிமுக இரண்டிற்கும் தலைகள் வேறு வேறாக தெரியலாம் ஆனால் உடல் ஒன்றுதான்!
 இங்கே இருப்பவன் அங்கே போவான்! 
அங்கே இருப்பவன் இங்கே வருவான்! 
அங்கிருந்து பணம் இங்கு வரும்!
 இங்கிருந்து ஒப்பந்தங்கள் அங்கு போகும்! 
 இவன் துப்பாக்கிச்சூடு நடத்துவான் அவன் தண்டனை வழங்காமல் பதவியுயர்வு வழங்குவான்! 
 இவன் நீட் கொண்டுவர கையெழுத்து போடுவான்!  அவன் அதை நடைமுறைப் படுத்துவான்! 
 இவன் சாராயம் தயாரிப்பான் அவன் அதை விற்பான்! 
 தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் இருவரும் பங்காளிகள்! 
 இவர்களிடமா நாங்கள் மண்டியிட வேண்டும்?! 

 ஆதித்தனார் முதல் தவாக வேல்முருகன் வரை செய்து தோற்ற ஒரு அரசியல் நகர்வையே சீமானையும் செய்யச் சொன்னால் எப்படி செய்வார்?!
 திருந்த வேண்டியது மக்கள் தான்!
நாம் தமிழர் ஆட்சியில் அமராத ஒவ்வொரு நாளும் தமிழினத்துக்கு இழப்புதான்! 

 ஒன்று சீமானின் நல்லாட்சி அல்லது பீகார் போலக் கூட இல்லை சோமாலியா போல ஆகும் தமிழ்நாடு!
 
 இனத்தின் கடைசி வாய்ப்பு சீமான்! 
மங்குனி மக்களே! சீக்கிரமாகத் திருந்தித் தொலையுங்கள்! 
 ஒரு முதலாளி, பரம்பரைத் திருடன் என்று தெரிந்த ஒருவனை வேலைக்கு வைப்பாரா அல்லது நல்லவனா கெட்டவனா என்று தெரியாத ஒரு புது ஆளை வேலைக்கு வைப்பாரா?! 
 அப்படி திமுக அதிமுக ஊழல் கட்சிகள் என்று தெரிந்த பின்னும் அவர்களுக்கே வாக்களிக்காமல் சீமான் திருடனா இல்லையா என்று வாய்ப்பு வழங்கி முடிவு செய்யலாமே?! 
 பிற இனங்கள் நல்லாட்சியே கொடுத்தாலும் தொடர்ந்து ஒருவனை அதிகாரத்தில் நீடிக்கவிடுவதில்லை இதைவிட நல்லவன் ஒருவன் இருப்பானோ என்று புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவர்.
 காட்டாட்சி வழங்கி அதிமுக கேடுகெட்ட ஆட்சி வழங்கிய திமுக இவர்களையே மாறி மாறி தேர்ந்தெடுப்பது ஏன்?!
 தமிழர்கள் என்ன இவர்களுக்கு அடிமை சாசனம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளோமா?!

 இந்த தேர்தலில் தோல்வி என்றால் சீமான் தாங்கிக்கொள்வாரா தெரியாது ஆனால் அடுத்த தேர்தலிலும் தோல்வி என்றால் சீமானால் சத்தியமாகத் தாங்க முடியாது! 

 ஒரு தலைவன் உயிரோடு இருக்கும்போது ஏறெடுத்து கூட பார்க்காமல் அவன் செத்த பிறகு சாமியாக்கி கும்பிடுவது தான் நமக்கு வழக்கம்!
 இந்த முறையும் அதுதான் உங்கள் முடிவா?! 

 சீமான் ஸ்டைலில் சொல்கிறேன்!
மக்களே! காதல் வந்தால் சொல்லி அனுப்புங்கள்!
உயிரோடு இருந்தால் சீமான் வருவான்! 
 
 
 
 

Saturday, 1 February 2025

ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!

 ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!

 நீங்கள் ஒரு நொடி சிந்திப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் பெரும்பான்மையான துன்பங்கள் தீரும் என்பதை அறிவீர்களா?!
 உங்கள் வாழ்வில் பெரும்பாலான துன்பங்கள் தவறான வேட்பாளருக்கு வாக்களித்ததினால் மட்டுமே வந்தடைந்தன என்பது தெரியுமா?
  நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 கடந்த பல ஆண்டுகளாக மக்களை ஆண்டு வரும் கட்சிகள் மாறி மாறி கொள்ளையடித்ததை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதை குழந்தை கூட அறியும்!
 ஜனநாயக மணிமகுடம் ஆள்பவர் தலையிலிருந்து தேர்தல் காலத்தில் சில நாட்கள் மட்டும் வாக்காளர் தலைக்கு மாறிவிடுகிறது.
 இப்போது கிரீடம் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் தலையில் அமர்ந்துள்ளது.
 நீங்கள் வாக்களித்த மறுநொடி அதுவும் அதன் சக்தியும் கைமாறிவிடும்.
 பிறகு தலைக்கு வர சில ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆள்பவன் செருப்பு உங்கள் தலையை அழுத்தியபடி இருக்கும்.

எனவே வாக்களிக்கும் முன் ஒரு நொடி சிந்தியுங்கள்!
உங்களுடைய மற்றும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அதாவது கல்வி, வருமானம், வாழ்க்கைத் தரம், பிற வசதிகள் என அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான முடிவு இது!

 அதுவரை நீங்கள் ஜனநாயக குடிமகனாக பல தவறுகள் செய்திருக்கலாம்! லஞ்சம் கொடுத்திருக்கலாம், வரி ஏய்ப்பு செய்திருக்கலாம், சாலை விதிகளை மீறியிருக்கலாம், ஓட்டுக்குப் பணம் வாங்கியிருக்கலாம்! 
பரவாயில்லை! போனது போகட்டும்!

 வேட்பாளர் பட்டியலைப் பாருங்கள்! அதில் நல்லவர் அல்லது குறைந்தபட்ச கெட்டவரைத் தேர்ந்தெடுங்கள்! அவர் கண்டிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வேட்பாளராக நிச்சயம் இருக்கமாட்டார்! ஒன்று சுயேட்சையாக இருப்பார்! அல்லது நாதக போன்ற சிறிய கட்சி வேட்பாளராக இருப்பார்.
 
 உங்களுக்கு முதல்வன் அர்ஜுன் போன்றோ, சர்கார் விஜய் போன்றோ, ஆய்த எழுத்து சூர்யா மாதிரியோ எவரும் வரப்போவதில்லை. இருப்பதில் சிறந்தவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பரவாயில்லை.
 100% திருடன் என்று தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை விட இவன் திருடனா இல்லையா என்று சந்தேகம் இருக்கும் ஒருவருக்கு வாக்களியுங்கள்.
 ஓட்டு வீணாகும் என்று நினைக்க வேண்டாம். இந்த ஒரு தவறான சிந்தனைதான் நாடே நாசமாக காரணம். எல்லாரும் இப்படி நினைத்துதான் நாட்டை வீணாக்கி வைத்துள்ளாம். நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு ஓட்டு வீணாவது பெரிய இழப்பில்லை.

 ஒரு உண்மையைக் கூறவா? மக்கள் மாற்று சக்திகளுக்கு வாக்களித்தே வந்துள்ளனர்! ஆனால் அது குறைத்து காட்டப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் எது நேர்மையாக நடக்கிறது? தேர்தல் முடிவுகள் மட்டும் நேர்மையாக வெளிவருமா? இருந்தாலும் பெரும்பாலான வாக்குகள் கட்சிமாறினால் அதை மறைக்க முடியாது. 

 நான் நா.த.க அடிப்படை உறுப்பினர். நாம் தமிழர் வந்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறமாட்டேன். அவர்கள் வந்தால் இந்த அளவுக்கு மோசமாக இருக்கமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. நீங்களும் அப்படியே நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நான் சீமான் அவர்களுக்கு வாக்களிக்கத் தொடங்கியதில் இருந்து நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டால்  'இதற்கு நான் காரணமில்லை' என்கிற ஆறுதல் கிடைத்துவிட்டது. நீங்கள் வாக்களித்தால் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்கலாம் என்று கருதுகிறேன். வேட்பாளர் நல்லவர் ஆனால் கட்சித் தலைமை சரியில்லை என்றாலும் அவரைத் தேர்ந்தெடுக்க  வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனால் நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்ப்பது சரியாக இருக்கும் என்பது என் பரிந்துரை. இதை யோசித்துப் பார்ப்பது உங்கள் விருப்பம்.

 வாக்களிக்கும் முன் நீங்கள் மதம், சாதி, இனம், கட்சி, பாலினம், பொருளாதாரம் என எந்த பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அந்த நொடி உங்கள் தலையில் ஜனநாயக கிரீடம் இருக்கும் போதே உடனடியாக உங்கள் மனசாட்சியை செயல்பட விடுங்கள்! உங்கள் முடிவு பல லட்சம் பேர் வருங்காலத்தை ஏன் பல ஆயிரம் உயிர்களை பாதிக்கும் முடிவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

 கொள்கை, கோட்பாடு என்று கூட சிந்திக்க வேண்டாம். இதுவரை பிரதான கட்சிகள் கடந்து வந்த பாதையை நினைத்துப் பாருங்கள். வேட்பாளர் பட்டியலில் உள்ளவரில் கெட்டவர் என்று நன்கு தெரிந்தவரை விட்டுவிட்டு பிறருக்கு வாக்களியுங்கள்.
 நோட்டாவை அழுத்துவதால் பலன் எதுவும் இல்லை.  எல்லா ஓட்டும் நோட்டாவுக்கு விழுந்து ஒரே ஒரு ஓட்டு ஒருவருக்கு விழுந்தாலும் அதைப் பெற்றவர் வெற்றி பெறுவார். அந்த முட்டாள்த் தனத்துக்கு வாக்களிக்காதீர்கள். அதற்கு பேசாமல் வீட்டிலியே இருக்கலாம்.
 
 வாக்காளர் என்றில்லை வேட்பாளர்களுக்கும் இதைக் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கே வாக்களிக்கு முன்  உங்கள் மனசாட்சியை ஒருமுறை கேளுங்கள். உங்களை விட சிறந்த வேட்பாளர் ஒருவர் இருந்தால் அவருக்கு ஓட்டு போடுங்கள்.  

 ஒரு வேட்பாளர் ஏற்கனவே  பதவியில் இருந்தவர் என்றால் செய்த நன்மைகள் தீமைகளைப் பட்டியலிட்டு நன்மைகள் அதிகம் இருப்பவரைத் தேர்ந்தெடுங்கள். தீமைகள் அதிகம் என்றால் அவர் எவ்வளவு நெருக்கமானவர் என்றாலும் விட்டுவிடுங்கள். 

 கெட்டவர்கள் செய்த சில நன்மைகளை நினைத்துப் பார்ப்பது அறிவாளித்தனம் இல்லை. சிலரது ஒப்பீடு மிகவும் தவறு. பீகாரை விட நாம் முன்னேறியிருக்கிறோம் என்றால் சோமாலியாவை விட பீகார் முன்னேறி இருக்கிறது!
 இது எப்படி இருக்கிறது என்றால் "நான் நினைத்தால் உன்னை அதிகம் சீரழித்திருப்பேன். குறைவாக சீரழித்தமைக்காக எனக்கு மறுபடி வாய்ப்பு கொடு" என்று மிரட்டி கேட்பது போல இருக்கிறது.

 வெள்ளைக்காரன் காலத்திலேயே நாம் அதிக வரி கட்டி வந்த முன்னேறிய மாநிலம். நாம் முன்னேறியிருக்க  பொதுமக்களாகிய நாமே காரணம்.
 காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என இதுவரை ஆண்ட அனைவரும் நாம் உழைத்து முன்னேறுவதைத் தடுத்து கொள்ளையடித்தே வந்துள்ளனர்.
 எல்லா கட்சிகாரர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து விட்டனர். பத்து தலைமுறைக்கு சேர்த்துவிட்டு பதினொராவது தலைமுறைக்கு தற்போது வியாபாரத்தைத் தொடங்கிவிட்டனர். 
 அவர்களிடமிருந்து ஒரு பைசாவை கூட நம்மால் திருப்பி வாங்க முடியாது என்பதே உண்மை.
 எனவே அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை விட்டுவிட்டு மூன்றாவது நபருக்கு வாய்ப்பு கொடுக்கும் தருணத்தில் இருக்கிறோம்.

 இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஒருமுறை வாய்ப்பு கேட்டு அமர்ந்தவர்கள்தான். ஒருமுறை பதவியில் அமர்ந்தவர்களை நம்மால் அசைக்க முடியாது. ஒருமுறை தேர்ந்தெடுத்தவர் சரியில்லை என்றால் வேறொருவரை மாற்றுவதே புத்திசாலித்தனம். அப்படிப் பார்த்தால் திமுக, அதிமுக கட்சிகளை நாம் என்றைக்கோ மாற்றியிருக்க வேண்டும். அந்த வகையில் நாம் அடிமுட்டாள்களாக இருந்துள்ளோம். இனியாவது அறிவாளிகளாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்! 

 ஒருவருக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு தனிப்பட்ட நன்மை கிடைக்கலாம். ஆனால் வாக்களிக்கும் அந்த நொடி சுயநலத்தை விடுத்து மனசாட்சியை தட்டிக் கேளுங்கள்!  
 மேலே சொன்ன எல்லா கணக்குகளையும் மனசாட்சி ஒரு நொடியில் போட்டு விடையைக் கூறிவிடும்.

 ஒரு நொடி உங்கள் மனசாட்சிக்கு அதிகாரம் கொடுங்கள். அது யாரைச் சொல்கிறதோ கண்ணை மூடிக்கொண்டு அழுத்திவிடுங்கள்!  இதுவே புரட்சி! ஒவ்வொருவரும் தத்தமது கடமையை சரியாக செய்துவிட்டால் பெரிய புரட்சியெல்லாம் தேவைப்படாது என்பது தலைவர் பிரபாகரன் கூறியது! தவறான நபர்களைப் பதவியில் அமர்த்தி விட்டு பிறகு அதிகாரத்திற்கு எதிராக திரைப்படங்களில் கதாநாயகர்கள் செய்யும் புரட்சியை ரசிப்பது வேடிக்கையானது!  மாற்றி சிந்திப்பதே புரட்சி! இந்த தைரியமான முடிவு ஆயுதப் புரட்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல! ஜனநாயக மாற்றம் வராதபோதுதானே ஆயுதப் புரட்சி அவசியம்! அதை முன்னரே அதாவது இப்போதே செய்துவிட்டால்...

முடிவை மாற்றுங்கள்!
மனசாட்சியைக் கேட்போம்!
மாற்றிப் பார்ப்போம்! 

19.02.2023 
 

Friday, 29 November 2024

ஈழத்தில் நாம் தமிழர்

ஈழத்தில் நாம் தமிழர்

 ஈழத்தின் பழைய தமிழ் தலைமைகள் ஈழத் தமிழர்களால் ஏறத்தாழ நிராகரிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் நாம் தமிழர் கட்சி யை அங்கே தொடங்கலாமே?!
சீமான் அண்ணன் நேரடியாக இல்லாவிட்டாலும் வேறு நம்பகமான ஒருவர் மூலம் இதே பெயரில் கட்சி தொடங்கி இணைந்து செயல்படலாமே?!
 இது பற்றி ஏன் யாருமே சிந்திக்கவில்லை?!

Saturday, 20 July 2024

தொண்டனின் மனநிலை

தொண்டனின் மனநிலை 

 இல்ல புரியல!
 காளி அக்கா எந்த வகையில் அண்ணனுக்கு இடைஞ்சல்?!
 ஒன்னு அவர் கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி மாதிரி அண்ணனுக்கு அடுத்த நிலைக்கு உயர்ந்து இருக்கணும்!
 அல்லது அண்ணனோடும் முரண்பட்டு கட்சி கொள்கைகளை அல்லது அண்ணனை விமர்சித்து இருக்கணும்!
 அப்படி எதுவுமே நடக்கலையே!?
 எந்த வகையிலுமே லாஜிக் செட் ஆகலையே?!
 ஆடியோ உருவாக்கியவன் சாட்டை அல்லது இடும்பன் பேர சொல்லி இருக்கலாம்.
நத்தம் சிவசங்கரன் கூட கட்சி தொண்டர்களுக்கு சரியான மரியாதை இல்லை என்று விமர்சித்தவர்தான்!
 அது உண்மையும் கூட!
ஏறெடுத்துப் பார்க்காத பொதுமக்களையும் விசத்தைக் கக்கும் எதிர்க் கட்சியினரையும் மரியாதையாக பேசும் நா.த.க உயர்மட்டம் தொண்டர்களை ஏதோ அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவன் போலத்தான் நடத்துகிறது!
 இருந்தா இரு இல்லனா போ! நீ அவசியமே இல்ல!
 அண்ணனில் இந்த வார்த்தை அப்படியே ஒரு நகர கிளையில் கூட தொண்டனின் காதில் விழுகிறது!
 அன்று அடிவாங்கி செத்த அல்லது இந்த வாரத்தில் வெட்டுபட்டு செத்த தொண்டர்களுக்கு கூட உரிய மரியாதை தரப்படவில்லை என்பதில் இருந்து இதை உணரலாம்!
 பிற கட்சிகள் தவறு செய்தவன் தன் கட்சிக்காரன் என்று தெரிந்தாலும் ஆதரவாக நிற்கும்.
நா.த.க அப்படி இல்லை!
 அதற்காக இனத்தின் கடைசி வாய்ப்பைத் தவறவிட நாதக தம்பிகள் அத்தனை அரசியல் முட்டாள்கள் இல்லை! 
 சிலுவைகளைச் சுமந்தபடி சாட்டையடி வாங்கிக்கொண்டு கழுமர மேடையை நோக்கி அவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
 நாலு வார்த்தை ஆடியோ இதை குலைத்துவிடாது!
இனத்தில் புகுந்துள்ள வடுக கேன்சர் செல்கள் அடுத்தமுறை நம்பும் வகையில் தயாரிக்கவும்!
பி.டி.ஆர் ஆடியோ நம்பப்பட்டது என்றால் அதில் பி.டி.ஆர் மட்டுமே தெரிவிக்க முடிந்த புள்ளிவிபரம் இருந்தது!
 இருக்கும் கொஞ்சம் மூளையையும் நன்கு கசக்கி அடுத்த முறை நல்ல ஆடியோ உருவாக்கவும்!

Thursday, 6 June 2024

அண்ணாமலை vs சீமான் சவால்கள்

அண்ணாமலை vs சீமான்  சவால்கள்

2016 இல் பாமக தனித்து நின்று 5.3% வாக்குகளைப் பெற்றது.
2021 இல் அமமுக தனித்து நின்று 2.3% வாக்குகளைப் பெற்றது.
இந்த முறை இவை பாஜக வுடன் சேர்ந்து 11.1% என்றால் பாஜக 3.5% என்று பொருள்.
பாஜக தனித்து நின்றிருந்தாலும் 4% தாண்டியிருக்காது.
தனித்து நின்று தன்னை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கிக்காட்ட சீமான் சவால் விட்டார்.
சீமான் 8% வாங்கியுள்ளார்!
 இந்த சவாலில் சீமான் வெற்றி பெற்றார் என்று சொல்லலாம்.

 சீமானின் சவாலுக்கு அண்ணாமலை பதிலளிக்கும் பேட்டியில் (கூட்டணிக்கு ஒதுக்கியது போக) பாஜக போட்டியிடும் 23 இடங்களில் தாங்கள் வாங்குவது போல 50% வாக்குகளாவது நாதக வாங்கிக்காட்டுமாறு சவால் விட்டார்.

 இதில் சீமான் வெற்றி பெற்றாரா என்று பார்ப்போம்

திருவள்ளூர் 
நாதக- 8.50  பாஜக- 15.86  (வெற்றி)

வடசென்னை 
நாதக-  10.63 பாஜக- 12.52  (வெற்றி)

தென்சென்னை 
நாதக-   7.64 பாஜக- 26.44 (தோல்வி)

மத்திய சென்னை 
நாதக- 6.30   பாஜக- 23.16  (தோல்வி)

வேலூர் 
நாதக- 4.72  பாஜக- 31.25 (தோல்வி)

கிருஷ்ணகிரி 
நாதக- 9.18 பாஜக- 18.36 (வெற்றி)

திருவண்ணாமலை 
நாதக-  7.32  பாஜக- 13.67 (வெற்றி)

நாமக்கல் 
நாதக-  8.34 பாஜக-  9.13 (வெற்றி)

திருப்பூர் 
நாதக-  8.38 பாஜக- 16.22 (வெற்றி)

நீலகிரி 
நாதக- 5.77  பாஜக- 22.83  (தோல்வி)

கோயம்புத்தூர் 
நாதக-  6.02 பாஜக- 32.79 (தோல்வி)

பொள்ளாச்சி 
நாதக- 5.17  பாஜக- 19.84  (தோல்வி)

கரூர் 
நாதக- 7.73  பாஜக- 9.05  (வெற்றி)

பெரம்பலூர் 
நாதக- 10.02  பாஜக-  14.33 (வெற்றி)

சிதம்பரம் 
நாதக-  5.62 பாஜக- 14.44 (தோல்வி)

நாகப்பட்டினம் 
நாதக- 13.49  பாஜக- 10.5 (வெற்றி)

தஞ்சாவூர் 
நாதக- 11.69  பாஜக- 16.59 (வெற்றி)

சிவகங்கை 
நாதக- 15.51  பாஜக- 18.59  (வெற்றி)

மதுரை 
நாதக- 9.41  பாஜக- 22.38 (தோல்வி)

விருதுநகர் 
நாதக- 7.25 பாஜக- 15.66 (தோல்வி)

தென்காசி 
நாதக- 12.54 பாஜக-  20.10 (வெற்றி)

திருநெல்வேலி 
நாதக- 8.21 பாஜக- 31.54 (தோல்வி)

கன்னியாகுமரி 
நாதக- 5.12  பாஜக-  35.6 (தோல்வி)
 
மொத்தம் 12 வெற்றிகள் 11 தோல்விகள்.
இதன்படி மயிரிழையில் சீமான் வென்றார்.
மொத்தமாக 23 தொகுதிகளையும் பார்த்தால் சராசரியாக நாதக - 8.45  பாஜக 19.60.
இதன்படி அண்ணாமலை தனது சவாலில் மாபெரும் வெற்றி பெற்றார்.

 முதலில் கூறியது போல பாஜக பெற்ற 11.1% வாங்குகளில் பாஜக வின் பங்களிப்பு 4% தான் எனவே அண்ணாமலை அதில் 50% உரிமை கோருவது சரி இல்லை.
 ஆனாலும் 23 இல் 22 தொகுதிகளில் பாஜக நாதக வை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
 
 எனவே இவ்விருவரையும் ஒப்பிடுகையில் சீமான் ஒரு படி முன்னேறி இருக்கிறார்.
 
 ஆனாலும் நாதக வை விட இரு மடங்குக்கும் மேல் வாக்குகள் பெற்றிருப்பது கூட்டணிகளால் மட்டும் சாத்தியம் அல்ல.
தென்தமிழகத்தை உற்று நோக்கினால் இது புரியும்.
இது பாஜக வின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

 பாஜக வையும் அண்ணாமலையையும் குறைத்து எடை போடக்கூடாது என்பதை நாதக வினர் புரிந்துகொள்ள வேண்டும்.

Sunday, 1 December 2019

15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்

15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்

2004 லேயே சீமான் அண்ணன் புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

புலிகளுக்காக அவர் அளித்த பேட்டியை இங்கே இணைத்துள்ளேன்.

ஆம்.

தமிழினத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு
புலிகள் நடத்திவந்த "நிதர்சனம்" தொலைக்காட்சி 2 மணிநேரம் நீளமுள்ள ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டது.
(அதன் தலைப்பு "தலைநிமிர்வு" என்பது.
இணையத்தில் அது Prabhakaran undying symbol of tamil resistance என்ற பெயரில் இருந்தது.
தற்போது நீக்கப்பட்டுவிட்டது.
ஆனால் என்னிடம் உள்ளது.)

இந்த ஆவணப் படம் பல அரிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம்
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றையும்
தலைவரது வாழ்க்கை வரலாற்றையும்
எடுத்துரைக்கிறது.

அப்போது புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து போர் ஓய்ந்திருந்த காலம்.

புலிகள் இலங்கை அரசுக்கு சமமான பலத்துடன் உலக நாடுகள் ஏறத்தாழ அங்கீகரித்துவிட்ட ஒரு அரசாங்கத்தை நடத்தி வந்தனர்.

அப்போது வெளியிடப்பட்ட இந்த ஆவணப் படத்தில் தலைவரை வாழ்த்தி 2 சிங்களவர் உட்பட 36 பேர் பேசியிருக்கின்றனர்.
அதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அண்ணன் சீமானும் அதில் பேசியிருக்கிறார்.

இந்த 13 பேரில் தலைவரை ஈழத்திற்கு சென்று நேரடியாகச் சந்தித்தோர் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகிய நால்வர் மட்டுமே!

அதில் பேட்டி அளித்தோர் முழுப் பட்டியல் வருமாறு

1. மறவன்புலவு திரு.சச்சிதானந்தம் (தமிழகம்)

2. திருமதி. தாமரைச் செல்வி
எழுத்தாளர்

3. திரு. மருசலீன்
மாவீரர் லெப்.கேணல் விக்டரின் தந்தை

4. ஜனாப். சலீம்
பத்திரிக்கையாளர்

5. திரு. தர்மலிங்கம்
மூத்த பத்திரிக்கையாளர்

6. திரு. காசி ஆனந்தன்
உணர்ச்சிக் கவிஞர்

7. திரு. புகழேந்தி
கவிஞர் (தமிழகம்)

8. திரு.வேணுகோபால்
ஆசிரியர்

9. திரு.வை.கோபாலசாமி
பொதுச் செயலாளர் - ம.தி.மு.க (தமிழகம்)

10. திரு.முல்லைமணி
எழுத்தாளர்

11. திரு.சதாசிவம்
மாவீரர் லெப். அருச்சுனாவின் தந்தை

12. இன்குலாப்
கவிஞர் (தமிழகம்)

13. திரு.சீமான்
திரைப்பட இயக்குனர் (தமிழகம்)

14. வைத்தியர். ஜெயகுலராசா
வைத்திய அதிகாரி

15.திரு.கனகரவி
ஊடகவியலாளர்

16. திருமதி. மனோன்மணி சண்முகதாஸ்
விரிவுரையாளர் - யாழ் பல்கலை

17. திரு. சூரியதீபன்
(தமிழகம்)

18. மோகனதாஸ்
துணைவேந்தர் - யாழ் பல்கலை

19. திருமதி. யோகம்மா

20. திரு. சித்தி.அமரசிங்கம்
எழுத்தாளர்

21. திரு. அறிவுமதி
கவிஞர் (தமிழகம்)

22. ஜனாப். அப்துல் சயான்

23. திரு. டி.சிவராம்
இராணுவ ஆய்வாளர்

24. திரு. சுப. வீரபாண்டியன்
தமிழ் தமிழர் தேசிய இயக்கம் (தமிழகம்)

25. திரு. கலாநிதி விக்கிரபாகு குணரட்ண

26. திரு. தணிகாசலம்
கவிஞர்

27. ஆண்டகை. இராயப்புஜோசப்
ஆயர். மன்னார்

28. பாஷண அபேய குணவர்த்தன
பத்திரிக்கை ஆசிரியர்

29. திரு.தியாகு
தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)

30. திரு. திலகவதி
எழுத்தாளர்

31. திரு. சந்திரசேகரன்

32.திரு. மனோ கணேசன்

33. திரு. பழ.நெடுமாறன்
தலைவர் - தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)

34. திரு. ராமதாஸ்
தலைவர். பா.ம.க (தமிழகம்)

35. திரு. திருமாவளவன்
தலைவர் வி.சி. (தமிழகம்)

36. திரு. மணியரசன்
தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி (தமிழகம்)

இதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து 2008 இல் புலிகள் திரைப்படம் எடுத்த போது சீமான் அங்கு சென்றார்.
அப்போது தலைவரையும் சந்தித்தார்.

புலிகளின் முப்படையில் ஒன்றான கடற்படையின் தலைவர் திரு. சூசை அவர்கள் கடைசி குரல்பதிவில் "சீமானை முன்னெடுக்க சொல்லு" என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு இப்போது ஏனென்றால்
சீமான் பற்றி புலிகளுக்கு எதுவுமே தெரியாது என்றும்
  அவர் ஏதோ கேமரா பிடிக்க போனபோது தற்செயலாக தலைவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது போலவும் பதிவுகள் வருகின்றன.

சீமான் அண்ணனை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்
வெறும் நக்கல் நையாண்டி செய்தே வீழ்த்திவிடலாம் என்கிற எண்ணத்தில் சிலர் அலைகின்றனர்.

சீமான் மீது வைக்கப்படும் உருப்படியான விமர்சனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் மற்றபடி எல்லாமே நக்கல் நையாண்டி பதிவுகள்தான்.

அவர்களுக்கு உரைக்கவே இந்த பதிவு.

சீமான் புலிகளின் ஆள்தான்!

https://m.facebook.com/story.php?story_fbid=2024288354341474&id=100002809860739

Thursday, 14 March 2019

நாம் தமிழருக்கே ஆதரவு

நாம் தமிழருக்கே ஆதரவு!

நாம்-தமிழர் எத்தனையோ குறைகளைக் கொண்டிருந்தாலும்
பிற கட்சிகளுடன் ஒப்பிடும்போது நூறு மடங்கு அதிகம் தமிழருக்கு நன்மை பயக்கும் என்றே தோன்றுகிறது.

ஒரு மாற்றத்தைக் கொண்டுவர இரண்டு செயல்பாடுகளைச் செய்யவேண்டும்.

முதலாவது குறைசொல்லுதல்!
இரண்டாவது தீர்வு சொல்லுதல்!

முதலாவதை பலரும் சிறப்பாகச் செய்கின்றனர்.
தோலுரிக்கச் சொன்னால் துகிலுரித்து விடுகின்றனர்.

  குறை சொல்வதை அதாவது விமர்சிப்பதை பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளரும், சமூக வலைத்தள பதிவர்களும் ஏன் திரைத்துறையினரும் கூட திறம்பட செய்கின்றனர்.

ஆனால் தீர்வு சொல்ல எவராலும் முடிகிறதா என்றால் கட்டாயம் இல்லை.
ஏனென்றால் முதலாவது எளிது.
இரண்டாவது கடினம்.

திரைத்துறையினர் இதற்கு முயற்சித்துள்ளனர்.
சர்கார், எல்.கே.ஜி என இவர்களால் நன்றாக துகிலுரிக்க முடிந்ததே தவிர சரியான தீர்வு சொல்ல முடியவில்லை.

ஆனால் நாம்தமிழர் அப்படியில்லை,
வசைபாடுவதோடு நிறுத்திக்கொள்ளமல் தீர்வையும் சேர்த்தேதான் பேசுகிறார்கள்.
அதில் நடைமுறைச் சிக்கல்கள் வரலாம்தான்.
அதற்காக அத்தீர்வுகளை முன்வைக்கும் இளைஞர்களின் கனவை புறந்தள்ள முடியாது.

என்னைக் கேட்டால் நாம்தமிழரின் தனித்துவம் இதுதான் என்று கூறுவேன்.

நாம்தமிழர் முதலில் நோட்டா வாக்குகளை தம் பக்கம் மாற்றவேண்டும்.

எவனோ "நோட்டா அதிகம் விழுந்தால் மத்திய அரசே ஆடிவிடும்" என்று பரப்பிய வதந்தி இன்று வரை வேலை செய்கிறது.
49-O மற்றும் 49-P ஆகியன எதற்குமே உதவாதவை என்கிற உண்மையை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

மற்றபடி பா.ம.க "மாதிரி அமைச்சரவை",  "மாதிரி நிதிநிலை அறிக்கை" என மாற்று தீர்வுகளை முன்வைத்த செயல்பாட்டை வைத்து அவர்களை நாம்தமிழரின் முன்னோடியாகக் கூறலாம்.

பா.ம.க தாக்குப்பிடிக்க முடியாமல் சோரம்போய்விட்ட இன்றைய நிலையில் நாம்தமிழரை ஆதரிக்கவேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் இருக்கிறோம்.
இல்லையென்றால் நா.த.க இன்னொரு பா.ம.க ஆகிவிடும்.

"சீமானை எனக்கு பிடிக்காது , அவ்வளவுதான்" என்று ஒரு வரியில் விவாத்தை முடிக்கும் மேதாவிகளுக்கு இரண்டாம் வாய்ப்பாக இருக்கவே இருக்கிறார்  தினகரன்.

Wednesday, 13 June 2018

நாம் தமிழர் கைது படலம்

நாம் தமிழர் கைது படலம்

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக....

* கடந்த 10-04-2018 அன்று ஐபில் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் உட்பட 21 நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை முயற்சி (307) உள்ளிட்ட 8 பிரிவுகளில் 3 வழக்குகள்

* ஐபில் போட்டியினுள் காலணி வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த
1. பிரபாகரன்,
2. ஐயனார்,
3. பொன்னுவேல்,
4. மகேந்திரன்,
5. ராஜ்குமார்,
6. பிரகாஷ்
7. வாகைவேந்தன்,
8. சுகுமார்,
9. ஆல்பர்ட்,
10. ஏகாம்பரம்,
11. மார்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன.

* 10-04-2018 அன்று மாலை 04 மணியளவில் போராட்டத்தில் பங்கெடுக்கச் சேப்பாக்கம் தொடர்வண்டி நிலையம் வந்திறங்கிய ஆவடி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த
1. ராஜேஷ்,
2. ஜெரால்ட்,
3. தனசேகர்,
4. நந்தகுமார்,
5. கார்த்திக்,
6. சரத்குமார்,
7. மணிகண்டன்,
8. சிவா,
9. சரவணக்குமார்,
10.பிரதீப்
ஆகியோர் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் காலையில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கொலைமுயற்சி உட்பட 10 பிரிவுகளின் கீழ் பொய்வழக்கு பதியப்பட்டது.
அனைவரும் 15 நாள் தடுப்புக்காவலில் சிறையிலடைக்கப்பட்டனர்.

* 10-04-2018 அன்று மாலை கடலூரில் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கர்நாடக பேருந்தை மறித்துப் போராடிய
1.கடல்தீபன்,
2.கு.சாமிரவி,
3.சுரைன்குமார்,
4.நாராயணசாமி,
5.நாராயணன்,
6.தனசேகரன் ஆகியோரை கைதுசெய்தனர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கடல்தீபன் மீது கடுஞ்சட்டமான குண்டர்சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

* ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மைலாப்பூர் தொகுதி பொறுப்பாளர் ஸ்டாலின் அவர்களை 14-04-2018 அன்று நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது.
மேலும்  ரூபன்,வினோத்,  சாரதி, சுபாகரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு 10-04-2018யில் போடப்பட்ட கொலைமுயற்சி முதல் தகவல் அறிக்கையில் இணைத்து சிறையிலடைத்தனர்.

* 40 நாள் கழித்து 21-05-2018 அன்று சென்னை ஐபிஎல் வழக்கில் காவலரை தாக்கியதாக அம்பத்தூர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த கதிர்வேலனை காவல்துறை கைதுசெய்தது.

* பிறகு 31-05-2018 அன்று ஐபில் போராட்டத்தில் வன்முறையில் இடுபட்டதாகத் தேடப்பட்டுவந்த மதன்குமார் சரணடைய வந்தபோது அவரை தாமே பிடித்ததாகக் கூறி அவர்மீது சங்கிலி பறித்ததாக வழக்குப் பதிவுசெய்து சிறைப்படுத்தி கையை உடைத்துள்ளனர்.
கழிவறையில் வழுக்கி விழுந்து கை உடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார்.

* ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 9-06-2018 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை பொறுப்பாளர் சிவராசன் கைது செய்யப்பட்டார்.
அவர்மீதும் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
---------------------

மோடிக்கான எதிர்ப்பு...

* 12-04-2018 பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11-04-2018 அன்று நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியினர்
1. அன்புதென்னரசன்,
2. எஸ்.கே சிவக்குமார்,
3. விக்னேஷ்
4.ராஜாராமகிருஷ்ணன்,
5. கணேசன்,
6. ராம்ராஜ்,
7. சிவக்குமார்,
8. ஞானசேகரன்,
9. சத்தியமூர்த்தி,
10. கோகுலகிருஷ்ணன்,
11. ஜீவா,
12. சீமான் சுரேஷ்,
13. இராயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக 15 நாள் தடுப்புக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அனைவரின் மீதும் பொய்வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

* பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி 12-04-2018 அன்று, சென்னை விமான நிலையம் அருகே கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்ட சீமானை விடுவிக்க பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தின் முன்பு கூடியோர் மீது தடியடி நடத்தி  நடிகர் மன்சூர் அலிகான் உட்பட கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது போன்ற பொய் வழக்குகள் புனையப்பட்டன.
அன்று கைதானோர்
1. வீரபாண்டியன்,
2. சரவணன்,
3. ரூபன்,
4. ஆகாஷ்,
5. பாபுராசன்,
6. ரங்கசாமி,
7. சீனிவாசன்,
8. அருண்கண்ணன்,
9. முரளி,
10. பொன்குமார்
அனைவரையும் 15 நாள் தடுப்புக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
-----------------

நெய்வேலி மின்சாரத்தை தடுக்க...

* 7-05-2018 அன்று பிணையில் விடுதலைப் பெற்றிருக்கவேண்டிய கடல்தீபன் மீது திட்டமிட்டு நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசியதற்காகத் தேச துரோக வழக்கு (124A) பதியப்பட்டு மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார்.
------------

இனப்படுகோலை நாளன்று...

* 18-05-2018 மே18 இனஎழுச்சி பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைப்பெற்றது.
அந்த நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை மாநிலச்செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத அவர் மீது கைது செய்யும் பொழுது காவல் அதிகாரிகளைத் தாக்கியதாகப் பொய்வழக்குகளைப் புனைந்து குண்டர்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியுள்ளனர்.
----------

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து...

* 19-05-2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஹைட்ரொகார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் நூறாவது நாள் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கும்போது முன்பாகவே அதே விமானத்தில் வந்திருந்த வைகோ அவர்களை வரவேற்க வந்திருந்த ம.தி.மு.க. தொண்டர்கள் காத்திருந்து நாம்தமிழர் கட்சியரைத் தாக்கினர்.
சீமான் தலைமையில் ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்டதாக
1.வினோத்(எ)அலக்சாண்டர்,
2.மதியழகன்,
3.நாகேந்திரன்,
4.சதிஷ்குமார்,
5.மணிகண்டன்,
6.சஜில்,
7.குணா
ஆகியோர் மீது பொய்வழக்குகளைப் பதிவுசெய்து காவல்துறை சிறைப்படுத்தியது.
மேலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 8 பேர் மேல் காவல் அதிகாரி வண்டியை சேதப்படுத்தியதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டது.

* இதையும் மீறி கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான் அண்ணன் உள்ளிட்ட 26 பேர் வழக்குப் பதியப்பட்டது.

* இரண்டு நாள் கழித்து 21-5-18 அன்று
1.ராசா ஆனந்து,
2.தினேஷ்குமார்,
3.பிரதிப் ஆகியோரை கைது செய்து இந்தப் பொய்வழக்கில் இணைத்து சிறைப்படுத்தப்பட்டனர்.
----------

காடழித்து வரும் பசுமைச்சாலைக்கு எதிராக...

* 27-05-2018 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் சேலம் பசுமைவழி சாலை அமைக்கக்கூடாது என்று மனு கொடுக்கச் சென்ற
1.கந்தன்,
2.மோகன்ராஜ்,
3.ராமன்,
4.பிரகாஷ்,
5.சிவமுத்து,
6.வெங்கடேசன்,
7.மோகன்,
8.சதிஸ்குமார்,
9.தேசிகன்,
10.கேசவன்,
11.ஜெயச்சந்திரன்,
12.வடிவேல்,
13.கெளதமன்,
14.குரு,சாய்குமார்,
15.பெருமாள்,
16.துரைமுருகன்,
17.ஐயப்பன்,
18.பிரபு,
19.குமார்,
20.பாலாஜி,
21.அமீன்முகமது,
22.விஜயகுமார்,
23.சார்லஸ்,
24.தனபால்,
25.மாணிக்கம்,
26.பிரகலதா ஆகியவர்களைக் காவல்துறை கைதுசெய்து அனுமதியின்றிப் பேரணி வந்ததாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்து 15 நாள் சிறையிலடைத்தனர்.
இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.

* 08-06-2018 அன்று சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிராகக் கூட்டத்திற்கு அனுமதி கேட்ட கட்சி பொறுப்பாளர் மாரி அவர்கள் போராட்டத்தைத் துண்டுகிறார், பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினார், அரசுக்கு எதிராகச் சதித்திட்டத்தில் ஈடுபடுகிறார் என்று பொய்யான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார்.
------------

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக...

* 22-05-2018 துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்ட பொதுமக்களின் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் தான் இப்போராட்டத்திற்கு மக்களைத் திரட்டியதாகப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டது.
30-05-2018 அன்று நாம் தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பளர்களில் ஒருவரான வியனரசு அவர்கள் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீதும் பத்திற்கும் மேற்ப்பட்ட பிரிவுகளின் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்கு அவர் தான் ஸ்டர்லைட் பணியாளர்கள் குடியிருப்பைக் கொளுத்தினார் என்று வழக்கு போடப்பட்டுள்ளது.

*  10-6-2018 அன்று தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தூத்துக்குடி நாம் தமிழர் பொறுப்பாளர் இசக்கித்துரை கலவரத்தில் ஈடுபட்டதாகப் பொய்வழக்குகள் பதிவுசெய்து அதிகாலையில் மூன்று மணிக்குக் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார்.
-------------

மேலும்....

வேலூர் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கூறி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த
1.விஜி,
2.சிவா,
3.விக்னேஷ் ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாகப் பொய்வழக்குகள் போடப்பட்டுத் தொடர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

வேறு எந்த கட்சி மீதும் இப்படியான அடக்குமுறை இருந்ததில்லை