தேவரடியாரும் தேவதாசிகளும்!
-சில கல்வெட்டுச் சான்றுகள்
ம.செந்தமிழன்
இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட, விஜயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.
இன்றைக்குத் தமிழகத்தில் வாழும் சாதி வழிப்பட்ட ஆந்திர, கன்னட மூதாதையர்களின் குலத்தவரைக் குறிக்கவில்லை. அவர்களை ‘திராவிடர்’ என அழைப்பது தவறானதும், வரலாற்று நோக்கம் அற்றதும் என்பது என் கருத்து.
தமிழகத்தில் அக்கால திராவிட குலத்தவர் படையெடுப்பு நடத்தியபோது, பல்வேறு காரணங்களுக்காகக் ஆந்திர, கன்னடப் பகுதிகளில் இருந்து குடியமர்த்தப்பட்ட பொதுமக்களை இன்றைக்கும் திராவிடர் என வகைப்பிரிப்பது தவறு.
எந்தச் சமூகத்திலும் படையெடுப்பு நிகழும்போது இவ்வாறான குடியேற்றங்களும், இனக்கலப்பும் ஏற்படத்தான் செய்யும். ஆக, இக்கட்டுரை, ‘திராவிடர்; எனக் குறிப்பிடுவது, வரலாற்று நோக்கில், அவ்வரலாறு நிகழ்ந்த காலத்தைய அயல் குலத்தவரைத்தானே அன்றி, நிகழ்காலத்தவரை அல்ல!
தேவரடியாரும் தேவதாசிகளும்
தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.
இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.
’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’
(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17)
தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.
சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.
தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.
தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.
குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.
’தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334)
பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.
’கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது’
(கர். கல் VAK 105)
(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19)
இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர். மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை,ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.
இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.
தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.
தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;
’கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22)
அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.
பெண்களின் நிலை:
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.
கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்
நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)
மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?
இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?
லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.
’கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.
கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.
விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.
கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே!
இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழியப் பணிகளைச் செய்தார்.
Tuesday, 25 October 2016
தேவரடியாரும் தேவதாசிகளும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment