Thursday, 13 October 2016

தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர்துறந்த சங்கரலிங்கனார்

தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர்துறந்த சங்கரலிங்கனார்

சங்கரலிங்கனார் விருதுநகரில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போராடிய தலைவர் ஆவார்.

1914 ஆம் ஆண்டு  பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் என்பவருடன் இணைந்து செயல்பட்டார்.

பெண்கள் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகளை சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலாக எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இறுதி காலத்தில் தனக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த
ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்து அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார்.

பெருந்தலைவர் காமராசர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியானதாகும்!

1950களில் அண்டை மாநிலங்கள் தாராளமாக தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்து தமது தாய்நிலத்தினை அமைத்துக்கொண்டன.
ஹைதரபாத் மாகாணம் ஆந்திராவானது.
திருவிதாங்கூர் கேரளவானது.
மைசூர் மாகாணம் கர்நாடகாவானது.
ஆனால் சென்னை மாகாணமோ தமிழ்நாடு ஆகவில்லை.


திராவிட அரசியல்வாதிகள் தமிழர்போல வேடமிட்டனரே தவிர தமிழருக்கான மண் பறிபோனதைத் தடுக்கவோ தமிழருக்கான மாநிலம் அமைக்கவோ முயற்சிக்கவில்லை.

அப்போது எல்லையைக் காக்க போராடியோர் ம.பொ.சியும் நேசமணியும் மட்டுமே.

29.11.1955இல் தமிழரசு கழகக் செயற்குழு கூட்டத்தில் முதன் முதலில் ம.பொ.சிவஞானம் அவர்களால்
"தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கின்றது,
மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும்"
என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு முன்பே தமிழ்நாடு பெயர்மாற்றம் குறித்து 1953இல் ம.பொ.சி சட்டமன்ற மேலவையில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு 19.1.1956இல் ஜி.உமாபதி இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு தாலுக்காக்களை கோரியும், தட்சிணா ராஜ்ஜியத் திட்டத்தை எதிர்த்தும், சென்னை ராஜ்ஜியத்திற்கு தமிழ்நாடு பெயரிடக் கோரியும் 20.2.1956இல் முழு கடை யடைப்பு நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் ம.பொ.சி. அண்ணாதுரை, பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், சீவானந்தம், சி.பா.ஆதித்தனார் ஆகியோர் பங்கேற்றனர்.
அதன்படி பிப்.20ஆம் நாளன்று தமிழகமெங்கும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தேறியது.

28.3.1956இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மாநில புனரமைப்பு மசோதா கொண்டு வரப்பட்டது.
அம்மசோதா விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.சீவானந்தம் பங்கேற்று தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.
அன்றைய காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசோ சென்னை என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்று கூறி பெயர் மாற்றக் கோரிக்கையைப் புறக்கணித்தது.
 
காங்கிரஸ் கட்சியில் இருந்த காந்தியவாதியான சங்கரலிங்கனார் தம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; தமிழ்"நாடு" என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார்.

பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் கீழ்க்கண்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார்.

1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்

2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.

3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.

4. வெளிநாட்டு விருந்தினர்களுகாகு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.

5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.

6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்.

7. தேர்தல் முறையில் மாறுதல் செய்தல் வேண்டும்.

8. தொழிற் கல்வி அளிக்கப்படவேண்டும்.

9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.

10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.

11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.

12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும்.

அண்ணாதுரை, ம.பொ.சிவஞானம், கக்கன், ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் உண்ணா நோன்பினைக் கைவிடுமாறு சங்கரலிங்கனாரிடம் கேட்டுக் கொண்டார்கள்.
ஆனால், சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார்.

சங்கரலிங்கனாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து கொண்டுவந்தது.

காமராசரோ சிறிதும் இனவுணர்ச்சி இல்லாமல் செய்தியாளர்களிடம், "இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை.
இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற சமாச்சாரம்.
அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது"
பதிலளித்தார்.

உண்ணாநிலைப் போர் 60 நாட்களைத் தாண்டியும் காமராசரின் கல்மனம் கரையவில்லை.
அப்போது பொதுவுடைமை கொள்கை இதழான ஜனசக்தியின் துணையாசிரியர் தியாகி ஐ.மாயாண்டி பாரதிக்கு அந்த ஈகி தனது கடைசி கடிதத்தை எழுதினார்.

அதில், "காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது.
காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது.
துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ விருப்பமில்லை"
என்று மனம் வெதும்பி எழுதியிருந்தார்.

சங்கரலிங்கனாரின் போராட்டத்திற்கு அவர் வாழ்நாள் முழுதும் உழைத்த காங்கிரஸ் கட்சி ஆதரவு தரவில்லை.
ஆனால் ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது.
எனவே தான் இறந்த பிறகு அக்கட்சியினரிடமே உடலை ஒப்படைக்கும் படி சங்கரலிங்கனார் இறுதியாக வேண்டிக் கொண்டார்.

தனது கடைசி கடிதத்தில் "என் சடலத்தை காந்தி தங்கிய ஆத்துக்கரை மண்மெட்டில், நான் தங்கியிருந்த இடத்துக்கு முன்னால் இரண்டு வேப்பமரத்துக்கு அடியில் குழியில் போடுங்கள்.
அந்த இடத்தில் அடக்கம் செய்ய சர்க்கார் மறுத்தால் திரு.வெ.நா.பு.ராமசாமி நாடார் அவர்கள் நந்தவனத்துக்கு முன்பு குண்டும் குழியுமாக உள்ள இடத்தின் மத்தியில் மேடையில் அடக்கம் செய்யுங்கள்" என்று எழுதியிருந்தார்.

அவரின் இறுதி விருப்பத்தைக் கூட பொதுவுடைமைக் கட்சி மதிக்கவில்லை.
கமதத்தனேரி சுடுகாட்டில் ௧ம்யூனிஸ்டு கட்சியினர் அவர் உடலை எரியூட்டினர்.
அதுமட்டுமில்லாமல் கம்யூனிஸ்டு கட்சி இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சி "தமிழ்மாநிலக் குழு" என்று அழைக்கப்படுகிறதே தவிர ,
மார்க்சிஸ்ட் கட்சி "தமிழ்நாடு குழு " என்று அழைக்கப்படுவதில்லை.
காங்கிரசைப் போலவே கம்யூனிஸ்ட்டு கட்சியும் சங்கரலிங்கனாருக்கு துரோகம் செய்துவிட்டது.

இதே போல சென்னையைத் தலைநகராகக் கொண்ட 'விசாலா ஆந்திரா' கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர் பொட்டி சிறிராமுலு.

அவருக்கு தெலுங்கர் செய்த நன்றிக்கடனை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழர்கள் கூனிக்குறுகும் நிலை வரும்.

பொட்டி சிறிராமுலுவின் மரணத்தை அறிந்த தெலுங்கர்கள் ஆந்திராவில் தமிழர் மீது மூன்று நாள் கலவரம் நடத்தினர்.
தமிழ் பகுதிகளான நெல்லூர், சித்தூர் மாவட்டங்களை ஆக்கிரமித்துக்கொண்டு ஆந்திரா எனும் பெயரில் தனி மாகாணம் கண்டனர்.

காங்கிரசு, கம்யூனிஸ்டு துரோகத்தாலும் திராவிட கட்சிகள் ஏற்படுத்திய 'திராவிட நாடு' குழப்பத்தாலும் தமிழர்களிடையே சங்கலிங்கனாரின் மரணம் பெரியதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆந்திர அரசு ஹைதரபாத்தில் 'பொட்டி சிறிராமுலு தெலுங்கு கழகம்' நிறுவியும்,
அவர் நினைவாக நெல்லூர் மாவட்டத்தை 'பொட்டி சிறிராமுலு' மாவட்டம் என்றும் பெயர் மாற்றமும் செய்துள்ளது.

மத்திய அரசு பொட்டி சிறிராமுலுவிற்கு அஞ்சல் தலையையே வெளியிட்டு விட்டது.

இதை விடப் பெரிய கொடுமை என்னவெனில், "சென்னை இல்லாத ஆந்திரம் தலையில்லாத முண்டம்" என்று பேசிய பொட்டி சிறிராமுலுவிற்கு சென்னையிலேயே திராவிட ஆதரவுடன் தெலுங்கர்கள் நினைவுச் சின்னத்தை எழுப்பியும் விட்டனர்.

பொட்டி சிறிராமுலுவின் ஈகத்திற்கு எந்த விதத்திலும் சங்ரலிங்கனாரின் ஈகம் குறைந்ததல்ல.

ஆனால் அவரை தமிழர்களாகிய நாம் என்றாவது கொண்டாடி இருக்கிறோமா?
இல்லையே?
அவரது மரணத்திற்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்தே சென்னை மாகாணம் தமிழ்நாடு ஆனது.

அவர் மறைந்து 57 ஆண்டுகள் கழித்து விருதுநகரில் ஓராண்டுக்கு முன்னர்தான் தான் அதுவும் ஒப்புக்காக செயலலிதா அரசு நினைவுச் சின்னம் திறந்துள்ளது.

அதுவும் அந்த அம்மையார் காணொளி மூலம்தான் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு என்ற பெயருக்குப் பின்னால் அணு அணுவாக தன் உயிரை கொடுத்த ஒரு மாமனிதனின் ஈகம் உள்ளது என்பதை தமிழர்கள் என்றும் மறக்கக்கூடாது.

நன்றி:கதிர் நிலவன்.
நன்றி: அ.பெரியார் எழுதிய "தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும்".
நன்றி: செ.பிரபாகரன்.

படம்: சங்கரலிங்கனாரின் ஒரே ஒரு பழைய படம்தான் உள்ளது.
அதை முடிந்த அளவு திருத்தி வரைந்துள்ளேன்.

No comments:

Post a Comment