Showing posts with label பெயர்மாற்றம். Show all posts
Showing posts with label பெயர்மாற்றம். Show all posts

Friday, 18 July 2025

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

*1920 இல் காங்கிரஸ் கட்சி 'அமையவுள்ள தங்களது ஆட்சியில் மொழி உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்' என்று உறுதியளித்து அதற்கு முன்மாதிரியாக கட்சி கட்டமைப்பை மொழிவாரி கிளைகளாக மாற்றி அமைத்தது.
 அப்படி அமைந்ததே 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி' எனும் கிளை (அதாவது தமிழ்நாடு என்பதே மக்கள் இயல்பாக பயன்படுத்திய சொல்.
 மக்கள் ஆதரவைப் பெற இதைச் செய்த அதே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு மொழிவாரி உரிமைகளை தர மறுத்தது).

*  1920 இல் காங்கிரசின் இந்த கொள்கையை ஏற்று தீவிர காந்தி பக்தரான வரதராஜுலு நாயுடு "தமிழ்நாடு" எனும் காங்கிரஸ் ஆதரவுப் பத்திரிக்கையைத் தொடங்கி 1931 வரை நடத்தினார் (1925 இல் தமிழ்நாடு காங்கிரசுக்கு இவர் தலைவரானார்).

*1942 இல் 'தமிழ் ராஜ்யம்' என்ற பெயரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனர் நூல் ஒன்று வெளியிட்டார்.
 அதில் இருந்த வரைபடத்தில் அன்றைய மதாராஸ் மாகாண தமிழர் பெரும்பான்மை மாவட்டங்கள், பாண்டிச்சேரி காரைக்கால், திருவனந்தபுரம் உள்ளடக்கிய குமரி, இலங்கையின் வடபகுதி எல்லாம் இருந்தது (பார்க்க: படம்).

* குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய போராளிகளை 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில்' சேர்க்க முடியாது என்று காமராஜர் துரத்திவிட்டார்.
 இதையடுத்து 1945 இல் குமரித் தமிழர்கள் சாம் நத்தானியேல் நாடார் தலைமையில் காங்கிரசில் இருந்து பிரிந்து தொடங்கிய கட்சி  1946 இல் 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்று பெயர்மாற்றப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயரில் இருந்த முதல்  கட்சி இதுவே (தமிழ்நாடு என்பதே இயல்பான பெயராக அப்போதும் விளங்கியது).

* 1947 இல் தமிழர் கழகம் எனும் கட்சி தொடங்கி 'தமிழர் நாடு' எனும் பெயரில் பத்திரிகையும் தொடங்கினார்  'முத்தமிழ் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை 

 *1953 இல் மதராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட மேலவையில் முதன்முதலாகப் பேசினார் ம.பொ.சி  (ஆனால் 1953 இல் 'ஆந்திர ராஜ்யம்' உருவாகிவிட்டது. 1956 இல் 'ஆந்திர பிரதேசம்' ஆனது).

* 1955 இல் ம.பொ.சி தனது தமிழரசுக் கழக செயற்குழு கூட்டத்தில் தமிழர் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்மொழிந்தார்.

 * 1955 இல் சட்டசபையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "தமிழ் ராஜ்யம்" என்று பெயரிடுமாறு குரல் கொடுத்தார்.
தனது பத்திரிக்கையிலும் தொடர்ந்து எழுதினார்.

* 1956 இல் 'மதராஸ் மாகாணம்' அதே பெயரால் 'மதராஸ் மாநிலம்' ஆனது.
'மதராஸ்' என்ற பெயருக்கு பதிலாக 'தமிழ்நாடு' என்று பெயரிட சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்தார்.

* காமராசர் பாராமுகமாக இருக்க 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபரில் அவர் இறந்தார்.
அதற்குப் பிறகு 42 நாட்கள் கழித்து சட்டமன்றத்தில் பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காமராசர் அதைத் தள்ளுபடி செய்தார்.

* 1960 இல் ம.பொ.சி தலைமையில் மீண்டும் பெயர்மாற்றத்திற்கான மக்கள் திரள் போராட்டம் நடந்தது.
இதில் அண்ணாதுரை கலந்துகொண்டதோடு சரி.

* 1961 இல் சின்னதுரை கொண்டுவந்த தீர்மானத்தில் மதராஸ் மாகாணம் தமிழில் எழுதும்போது 'தமிழ்நாடு' எனவும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் எழுதப்படும் என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை 'தமிழ்நாடடின் நிதிநிலை அறிக்கை' என்ற பெயரிலேயே தாக்கல் செய்து வாசித்தார்.

அதாவது பாதி வெற்றி அடைந்த இந்த நிலையில்தான் அதுவரை வேடிக்கை பார்த்த ('திராவிட நாடு' பத்திரிக்கை நடத்திவந்த) அண்ணாதுரை இதில் நுழைகிறார்.

இதற்குக் காரணம் அண்ணாதுரை 1962 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தான் பிறந்த மண்ணான காஞ்சிபுரத்திலேயே மண்ணைக் கவ்வினார்.

அப்போது மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்திற்கு இருக்கும் பரவலான ஆதரவை கவனித்து மக்கள் கவனத்தைப் பெற இந்த விடயத்தில் பங்கெடுக்கிறார் அண்ணாதுரை.

* 1962 இல் காமராசர் ஆட்சியில் பெயர்மாற்றத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது.

* 1963 இல் இந்திய பாராளுமன்றத்தில் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு குரல்கொடுத்து தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவர் இப்பெயர்மாற்ற போராட்டத்தில் செய்த குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு ஆகும்.

* பிறகு 1964 இல் பக்தவச்சலம் ஆட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு மீண்டும் நிறைவேறாமல் போனது.

* அதற்கடுத்த இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில காங்கிரஸ் அரசுகள் செய்த அடக்குமுறைகள் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி 1967 ஏப்ரலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க காரணமானது.

(இந்தியெதிர்ப்பு போராட்டமும் இவ்வாறே!
அதாவது சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்று நடத்தியதே.
அண்ணாதுரை பங்கு அதிலும் பெரிதாக ஏதுமில்லை.
ஈவேரா ஒரு படி மேலே போய் போராடும் மாணவர்களை சுடச்சொல்லி எழுதிவந்தார்)

* ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கழித்து 18.7.1967 அன்று சட்டமன்றத்தில் அண்ணாதுரை பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அது ஏகமனதாக நிறைவேறியது.
 அன்று அண்ணாதுரை பேசியதைக் கவனிப்போம்...
"மதிப்பு மிக்க திரு. ம.பொ.சி அவர்கள் இதிலே மிகுந்த மன எழுச்சி பெற்றது இயற்கையானதாகும். அவர்கள் பல ஆண்டுகளாக 'தமிழ் நாடு' என்ற பெயர் இந்த நாட்டுக்கு இடப்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு பாடுபட்டவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே “திராவிட” என்பதை நினைத்துக் கொண்டிருப்பதாலே "தமிழ்நாடு" என்பதிலே அக்கரை இல்லாமல் போய்விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் ‘தமிழ்நாடு' என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திக்கொண்டு வந்திருக்கிறோம்."

அதாவது ம.பொ.சி பாடுபட்டார், திமுக வலியுறுத்தியது.
 இதிலிருந்து இது யாருடைய போராட்டம் என்பது தெளிவாகப் புரிகிறது அல்லவா?! 

* ஓராண்டு கழித்து 1968 ஆண்டுக் கடைசியில் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

* 14.01.1969 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் அண்ணாதுரை புகையிலைக் குதப்பும் பழக்கத்தால் வந்த புற்றுநோயினால் உயிரிழந்தார்.

ஏதோ அண்ணாதுரை சாகும்வரை போராடி பெயர்மாற்றம் கொண்டுவந்தது போல புனைக்கதைகள் எழுதப்படும் அதே வேளையில்
"தமிழ்நாடு" என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்க நாடாரை 'பெயர்மாற்ற விழா' அன்று நினைவுகூர்ந்ததோடு சரி அதன்பிறகு இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

  தமிழ்நாடு என்ற பெயரை முன்மொழிந்து போராட்டம் நடத்தி சாதித்துக் காட்டிய ம.பொ.சி கூட பிற்பாடு மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்.

 இன்று தமிழ்நாடு என்ற பெயரை உருவாக்கியதே அண்ணாதுரைதான் என்றும் அவர் இல்லாவிட்டால் நாம் 'மதராசி'களாக இருந்திருப்போம் என்றும் திராவிடவாதிகள் பேசுவதைப் பார்க்கிறோம்.

அண்ணாதுரைக்குப் பிறகும் இவர்களின் லட்சணம் (செயலழகு) எவ்வாறு என்றால்,

* கால் நூற்றாண்டு கழித்துதான் 1996 இல் மதராஸ் சென்னை ஆனது.

* (பிற மாநிலங்கள் போல அல்லாமல்) தமிழகத்தின் உயர்நீதி மன்றம் தமிழில் "சென்னை உயர்நீதிமன்றம்" ஆங்கிலத்தில் "மதராஸ் ஹைகோர்ட்" என்றே இன்றுவரை உள்ளது.
"தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம்" என்று இல்லை

* பிற மாநிலங்கள் தமது மாநிலத்தின் பெயரிலேயே தலைமைப் பல்கலைக்கழகம் வைத்துள்ளன.
ஆனால் இன்றுவரை தமிழகத்தின் தலைமைப் பல்கலைக்கழகம் "அண்ணா பல்கலைக்கழகம்" என்றே உள்ளது. 
"தமிழ்நாடு பல்கலைக் கழகம்" என்று இல்லை.
 இதிலும் ஒரு சதி 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' என்பதை சுருக்கி 'அண்ணா பல்கலை' என்று அண்ணாதுரையைக் குறிக்கும் வகையில் திரிக்கின்றனர். 

 அண்ணாதுரையும் தமிழுக்கோ தமிழருக்கோ செய்தது ஏதுமில்லை!  

(23.08.2018 மற்றும் 31.10.2021 பதிவுகள் இணைத்து மேலதிக தரவுகள் சேர்த்தது இப்பதிவு)

Saturday, 16 March 2024

The TamBrahs

The TamBrahs

இன்று நாம் தமிழ்குடிகள் பிற வந்தேறிகளுடன் பொதுவான குடி அடையாளத்தில் அடைக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.
 இணைய யுகத்தில் இதை முதலில் தொடங்கியது பார்ப்பனர்கள் தான்.
  இன்று குலாலா அடையாளத்தில் இருந்து குயவர்களும்
 நரிக்குறவர் அடையாளத்தில் இருந்து குறவர்களும்
 யாதவர் அடையாளத்தில் இருந்து கோனார்களும் தமது இன அடையாளத்தை  மீட்க குரல் எழுப்புகிறோம்.

  இப்படி பொதுவான 'பிராமணர்' அடையாளத்தில் வெகுகாலமாக அடைக்கப்பட்டிருந்த பார்ப்பனர்கள் தம்மை தனிப்படுத்த  'தமிழ் பிராமணர்' அதாவது 'தம்பிராஸ்' என்ற நவீன பெயருடன் தமது இன அடையாளத்தை தனித்து காட்ட முற்பட்டனர்.

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதை (பெரும்பாலும்) அமெரிக்காவில் நன்கு செட்டில் ஆகிவிட்ட தமிழே தெரியாத மாடர்ன் பார்ப்பன பிள்ளைகள் செய்துள்ளனர்!
 உலகப் பார்ப்பனர் இதைப் பின்பற்றி ட்ரென்டிங் இல் வைத்துள்ளனர்.

 இது ஆதிக்க சாதிவெறி என்றால் அவர்கள் 'பிராமணர்' என்றாலே போதுமானது!
 தமிழ் என்கிற இன அடையாளத்தை அதில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை!
 ஆனாலும் இயல்பாகவே இது நடந்துள்ளது!
 
இயல்பானது இனம்!
பார்ப்பனர் தமிழரே!
 

Sunday, 31 October 2021

தமிழ்நாடு பெயர்மாற்றம் மீது அண்ணாதுரை பேச்சு

தமிழ்நாடு பெயர்மாற்றம் மீது அண்ணாதுரை பேச்சு 

படத்தில் இருப்பது மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அண்ணாதுரை அவர்கள் ஆற்றிய உரை.
 இதைக் கருத்தூன்றிப் படித்தால் தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு ம.பொ.சி அவர்கள்தான் முதற்காரணம் என்பதை அறியலாம்.

 ம.பொ.சி அவர்கள் காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடத்திய தமிழரசுக் கழகத்தின் சார்பாக உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த சங்கரலிங்க நாடார் அவர்களைக்கூட அண்ணாதுரை குறிப்பிடவில்லை.

 ம.பொ.சி அவர்கள் நவம்பர் 1 ஆம் தேதியைத் தான் விழாவாகக் கொண்டாட வலியுறுத்தினார்.

Friday, 17 April 2020

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

  ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழியினர் உரிமை கோர முதன்மையான தேவை இலக்கியச் சான்று ஆகும்.

 அப்படி இலக்கிய அடிப்படையில் தற்போதைய கேரளா மட்டுமல்லாது அதையும் தாண்டி கர்நாடகாவின் மைசூர், கூர்க் ஆகியவற்றுடன் சிக்கமகளூர் வரை நமக்குச் சொந்தமானது என்றாகிறது.

 மைசூர் எனும் எருமைநாடு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
 தற்போது மலைகள் பற்றி பார்ப்போம்.

நளிமலை :-

 நீலகிரி மாவட்டத்தில் ஒருபக்கத்தில் இருந்து கன்னடரும் இன்னொரு பக்கத்திலிருந்து மலையாளிகளும்  குடியேறி இன்று தமிழரை விட அதிகமாகிவிட்டனர்.
 இப்பகுதி அரசியல் தலைமைகளும் வேற்றினத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டது.

 நீலகிரி சங்ககாலத்தில் நளிமலை என்று அழைக்கப்பட்டது.
 நளி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
 தமிழர் நிலத்திலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் இதுவே!

 குளிர்ந்த நளிமலை பற்றியும் அதை ஆண்ட வேட்டுவ குலத்தைச் சேர்ந்த நள்ளி (முழுப் பெயர்:  கண்டீரக் கோப்பெருநள்ளி இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்) எனும் காட்டு அரசன் பற்றியும் புறநானூறு (148 - 150) கூறுகிறது.

 சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவன் 'நீலகிரி' வந்து தங்கியிருந்தது பற்றியும்
அப்போது மிக்கரிய நிறமுடைய 'கொங்கணக் கூத்தர்' மற்றும் 'கருநாடர்' ஆகியோர் தமக்கே உரிய தனிப்பட்ட கலாச்சாரத் தோற்றத்துடன் வந்து 'மாதர்ப் பாணி' எனும் காதல்கலந்த பாடலைப் பாடி ஆடினர் என்று குறிப்பு உள்ளது
(இதை கன்னடர் தமது சான்றாக முன்வைக்கலாம்).
 இதேபோல குடகர்களும் ஓவர்களும் வந்து ஆடிப்பாடி சேரனை மகிழ்வித்து பரிசு பெற்றுச் சென்றனர்.

 --------------

கண்டீரமலை :-

  நீலகிரி மலைகளில் ஒன்று கண்டல் மலை.
இதுவே சங்ககாலத்து கண்டீரமலை ஆகும் (ஈரம் துண்டுதுண்டாக அதாவது பனிக் கண்டுகள் கிடக்கும் மலை என்று பொருள்).
 புறநானூறு 151 இல் நள்ளியின் தம்பி கண்டீரக்கோன் பற்றி உள்ளது.
---------

தோட்டிமலை :-

 தொட்டபெட்டா சிகரம் தோட்டி என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தோட்டி என்பது யானையை செலுத்த பாகன் பயன்படுத்தும் கோலைக் குறிக்கும்.
 அதைப்போன்ற கூரிய வளைந்த தோற்றம் உடைய மலைச் சிகரம் என்கிற பொருள்படும்படி தோட்டிமலை என்று அழைக்கப்பட்டது.

 இந்த தோட்டி மலையை ஆயர் தலைவன் 'கழுவுள்' என்பவன் சேரனிடம் போரில் இழந்தான் என்று பதிற்றுப்பத்து (8 - 71) கூறுகிறது.

 பரிபாடல் (5-86) இம்மலையை இருந்தோட்டி என்று குறிப்பிடுகிறது.
------------

 குதிரைமலை :-

தற்போதைய சிக்கமகலூரு மாவட்டத்தில் உள்ள Kudremukh எனும் குதிரைமுக மலை பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
 குதிரை முகம் போன்ற அமைப்புடைய உயர்ந்த மலையை ஒட்டி போக்குவரத்துக்கான ஒரு கணவாய் இருந்துள்ளது.
  அது பற்றியும் அம்மலையை ஆண்ட பிட்டன் பற்றியும் அகநானூறு (143) கூறுகிறது.

 பிட்டனின் மகன் பிட்டங்கொற்றன் பற்றி புறநானூறு (168) கூறுகிறது.
 அதில் ஊராக் குதிரை என்று குறிப்பிடப்படுகிறது குதிரைமலை. அங்கு வாழ்ந்த குறவர் பற்றியும் விலங்குகள் பற்றியும் தாவரங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.

 நீண்ட பாதையைக் கொண்ட குதிரைமலையை ஆண்ட அஞ்சி என்ற அரசன் பற்றி அகநானூறு (372) கூறுகிறது.

 உயர்ந்த குதிரைமலையை ஆண்ட எழினி பற்றி புறநானூறு (158) கூறுகிறது.

 குதிரைமலையின் மக்கள் மழவர் ஆவர்.
 ஆறு மலைமுகடுகளை உடைய யானை போன்ற மலையான  பொதினி (பழனி) மலையின் அரசன் முருகனிடம் தோற்றனர் என்று அகநானூறு (1) கூறுகிறது.

 Kutremukh என்பதற்கு கன்னடத்திலும் குதிரை முகம் என்றே பொருள்.
 அதன் பெயர் குதிரைமுகம் போன்ற தோற்றத்தினால் ஏற்பட்டது என 1908 இல் வெளிவந்த Imperial Gazetteerof Mysore & coorg ல் பக்கம் 233 மற்றும் 109 ல் பதிவாகியுள்ளது.
---------

ஏழில்மலை :-

 ஏழு மலைமுகடுகளைக் கொண்ட மலை என்பதால் ஏழில் மலை என்றழைக்கப்பட்டது.
 இதனூடாகவும் ஒரு மலைப்பாதை இருந்துள்ளது.
 சமஸ்கிருதத்தில் இது சப்தகிரி என்று அழைஐக்கப்பட்டது.
 பத்தாம் நூற்றாண்டிலிருந்து எலிமலை என்று மாறிவிட்டது.
 பிற்கால ஐரோப்பியர் குறிப்பிலும் எலி எனும் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளது.
 (ஆனால் மலையாளத்தில் ezhi அதாவது எழி என்றே எழுதுகின்றனர்).

 இதை ஏழில்குன்றம் என்று குறிப்பிடும் நற்றிணை (391),
 கொங்காண அரசன் நன்னன் வளமான இம்மலையை ஆண்டு வந்தான் என்றும் கூறுகிறது.

[கொங்காண நாடு என்பது கொங்குநாட்டின் வடக்கே இருந்த நாடு.
 கொள் விளையும் காட்டுப் பகுதி என்று பொருள்.
 இன்றைய கர்நாடகத்தின் தென்மேற்கு பகுதியே இது.
 இங்கே எருமைகள் மிகுதி.
 கோவா மற்றும் அதைச் சுற்றி பேசப்படும் மொழி கொங்கணி ஆகும்.
 இவர்கள் கொங்கணர் என்கிற வேற்றினத்தவராக இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளனர்.
 இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
 கொங்காணத்தை ஆண்ட நன்னன் தமிழரான வேளிர் குலத்தவனே!
 இதற்குச் சான்றாக நன்னனை "வேண்மான்" என்று அகநானூறு (97) கூறுகிறது.
 "நன்னன் உதியன்" என்பவன் தொன்மையான வேளிர் குலத்தின் செல்வங்களை தன் பாழி நகரில் வைத்து பாதுகாத்தான் என்று அகநானூறு (258) கூறுகிறது]

 ஏழில் குன்றத்து கணவாய் பற்றியும் அங்கிருக்கும் யானைகள் பற்றியும் அகநானூறு (349) கூறுகிறது.

 யானைகளைப் பரிசாக அளிக்கும் வழக்கமுடைய நன்னனின் நாட்டில் மயில்கள் நிறைந்த ஏழில்மலை உள்ளதென்று அகநானூறு (152) கூறுகிறது.

 ஏழில்குன்றத்து பெண்கள் வேங்கைப் பூவைப்பிண்ணி இடையில் அணிவர் என்று அகநானூறு (345) கூறுகிறது.
--------

முதுமலை:-

 சங்ககாலத்தில் முதிரம் என்று அழைக்கப்பட்டது.
 மூங்கில்களும் பலாமரங்களும் குரங்குகளும் காய்கனிகளும் நிறைந்த இம்மலையை வள்ளலான குமணன் ஆண்டான் என்று புறநானூறு (158, 163) கூறுகிறது.
-----------

 குடகு மலை:-

 குடகு மலை தற்போது கொடகு என்றும் (ஆங்கிலத்தில் coorg அங்கே வாழும் இனத்தவர் கொடவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 குடகுமலையை குடமலை என்று குறிப்பிட்டு அங்கே காவிரி பிறக்கிறது என்று மலைபடுகடாம் (527) கூறுகிறது.

 குடமலையில் சந்தனமும் அகிலும் கிடைக்கும் என்று பட்டினப்பாலை (188) குறிக்கிறது.

 குடகுமலை உச்சியை (குடகக் கவடு) பிளந்து சோழன் காவிரியைக் கொண்டு வந்ததாக விக்கிரமசோழன் உலா (24) கூறுகிறது.

 காவிரி குடமலையில் பிறந்து கடலில் கலப்பதை சிலப்பதிகாரம் (10: 106) பாடுகிறது.

 குடமலையில் உள்ள மாங்காடு எனும் ஊரில் வாழ்ந்த அந்தணர் பற்றி சிலப்பதிகாரம் (11) கூறுகிறது.

 குடகுமலையை 'மேற்கில் இருக்கும் பொன்பதித்த மலை' எனுமாறு 'குடாஅது பொன்படு நெடுவரை' என்றழைத்து அங்கே காவிரி பிறப்பதாக புறநானூறு (166) கூறுகிறது.

 ஏற்கனவே கூறியதுபோல குடகர் சேரன் முன்பு நடனமாடி பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது.
 ஆனால் அதில் கொங்கணரும் கருநாடரும் தனித்த தோற்றத்துடன் இருந்ததைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள்,
 ஓவர் (ஓவியர்) மற்றும் குடகர் தனித்த தோற்றம் உடையவரென எதுவும் கூறவில்லை.
 என்றால் இவ்விருவரும் தமிழரில் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

 அதாவது சேரன் இமயமலைக்குச் செல்ல படையுடன் தனது தலைநகரிலிருந்து புறப்பட்டு நாட்டின் எல்லையான நீலகிரிக்கு வருகிறான்.
 அப்போது அருகாமை இனத்தவரான கருநாடரும் கொங்கணரும் சேரநாட்டுக்குள் வந்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
 சேரநாட்டின் எல்லைப்புறத்து மக்களான குடகரும் ஓவியரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

 இதன்பிறகு சேரனின் நட்புநாட்டவரான "நூற்றுவ கன்னர்" (சாதவாகனர்) மிக அதிகளவு பரிசுகளுடன் நூற்றுக்கணக்கான கூத்தாடிகளையும் சஞ்சயன் எனும் தூதுவன் தலைமையில் அனுப்பி
"ஒரு கல்லுக்காக ஏன் இமயம் போகிறீர்கள் நாங்களே எடுத்துக்கொண்டுவந்து தருகிறோம்" என்று செய்தி சொல்ல வைக்கின்றனர்.
 இது எதைக் காட்டுகிறது என்றால் சேரன் இன்னும் தனது எல்லையைவிட்டு படையுடன் வெளியேறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

 கன்னடர் மற்றும் மலையாளிகள் நாம் காட்டிய இலக்கியச் சான்றினை விட பழமையான தமது மொழியின் இலக்கியச் சான்றினைக் காட்டினாலொழிய நாம் மேற்கண்ட மலைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

Tuesday, 7 April 2020

இலக்கியத்தில் எருமையூர்


இலக்கியத்தில் எருமையூர்
 
புராணங்களின் படி மகிஷாசுரனை மகிஷாசுரமர்த்தினி வதம் செய்த இடம் என்று கருதப்பட்டு மைசூருக்கு மகிஷாசுரமர்த்தினிபுரம் என்ற பெயர் இருந்ததாகவும் பிறகு சுருங்கி மகிஷபுரம் என்றாகி பிற்பாடு மைசூர் என்றானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இது பொருத்தமான வாதமாகத் தோன்றவில்லை.
உண்மையில் மகிஷாசுரமர்த்தினி பற்றி வட இந்தியாவிலேயே கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கர்நாடகத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சான்றே காணப்படுகிறது.
மைசூர் என்பது உண்மையில் எருமையூர் ஆகும்.
எருமைகள் மிகுந்த ஊர் என்று பொருள்கொள்ளலாம்.
கர்நாடகம் இன்று எருமை வளர்ப்பில் பின்தங்கிவிட்டாலும் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் உள்ளது.
நமக்கு சல்லிக்கட்டு போல கன்னடர்க்கு எருது போட்டி (மரபணு ஆய்வின் படி உலகிலேயே பழமையான எருது வகை இந்திய நீர் எருமைகள் தான்).
எருமை என்பதற்குச் சமற்கிருதச் சொல் மகிஷம்.
எருமையூர் என்பது மகிசூர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர்.

  ஆனால் எருமையூர் மையூர் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
மையூர் என்பதே மைசூர் என்று ஆகியிருக்கவேண்டும்.
இதுவே இயல்பான மாற்றமாகப் படுகிறது.
இதற்கு இலக்கியச் சான்றாக வேளிர் குடியைச் சேர்ந்த 'மையூர் கிழான்' என்பவர் சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்ததாக பதிற்றுப்பத்து கூறுகிறது (காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு).
மைசூர் நகரின் பெயராலே அம்மாநிலம் முழுவதும் 1980 வரை வழங்கப்பட்டது.
பிறகுதான் கர்நாடகா என்று மாற்றினர்.
எருமையூர் பற்றி இலக்கியங்களில் உள்ள குறிப்புகள்,
வடிகட்டப்பட்ட கள் கிடைக்கும் எருமையூர் எனுமாறு
"நார் அரி நறவின் எருமையூரன்" அகநானூறு (36) கூறுகிறது.
குடநாடு என்பது சேரநாட்டின் வடபகுதி.
இதில் நுண்வேலைப்பாடு நிறைந்த பூண் அணிந்த (கொம்புகளை உடைய) எருமை மாடுகள் நிறைந்திருந்தன என்பதை 'நுண்பூண் எருமை குடநாட்டன்ன' (அகநானூறு 115) எனும் வரிகள் உணர்த்தும்.
சேரநாட்டு வளத்தைக் கூறும் சிறுபாணாற்றுப்படை (41- 46) செங்கழுநீர்ப் பூக்களை எருமைகள் மிகுதியாக மேய்ந்துவிட்டு பலாமர நிழலில் உறங்கின என்று கூறுகிறது.
அதாவது சேரநாட்டிலும் அதையொட்டிய எருமைநாட்டிலும் எருமைகள் அதிகளவு இருந்தன.
ஆனால் அயிரி ஆறு (ஹரங்கி ஆறு) பாயுமிடத்தில் வடுகரின் எருமை நாடு இருந்தது எனுமாறு,
"வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாடு"
என்று அகநானூறு (253) கூறுகிறது.
இதில் கூறப்பட்டுள்ள
'வடுகர் பெருமகன் எருமை நன்னாடு' என்பதை
'வடுகப் பெருமான் ஆளும் எருமை நாடு'
என்று பொருள் கொண்டால் 'எருமைநாடு' என்பது வடுகரின் நாடு என்றாகிறது.
இதை கன்னடர் தமது தரப்பு சான்றாக வைக்கக்கூடும்.
ஆனால் 'வடுகனான எருமை என்பான் ஆளும் நாடு'
என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.
ஏனென்றால் இப்பாடல் வரிகள் முதலில் அவனது பண்புகளைக் கூறி அத்தகைய எருமையின் நாட்டில் அயிரியாறு பாய்கிறது என்று அவனைப் பற்றித்தான் கூறுகிறதே தவிர அவனது நாட்டைப் பற்றி கூறவில்லை.

எருமை என்பவன் இரவில் தாக்குபவன் என்றும்
மாடுகளை மேய்க்கும் போது கோவலர் எழுப்பும்  ஒலிகளைக் கற்றுக்கொண்டு அதுபோல் ஒலியெழுப்பி காளைகளையும் கன்றுடன் பசுக்களையும் கவர்ந்து சென்று தனது மண்டபம் நிறைய கட்டிவைத்திருப்பவன் என்றும்
வலிமையான தோள்களை உடையவன் என்றும் கூறி
அவனை வடுகர் பெருமகன் என்றும் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட குடியின் தலைவனை அக்குடிப் பெயருடன் 'பெருமகன்' என்று சேர்த்துக் கூறுவது வழக்கம்.
எ.கா: ஆவியர் பெருமகன் (பேகன்)
கள்வர் பெருமகன் (தென்னன்)
குறவர் பெருமகன் (ஏறைக்கோன்)
ஆக 'வடுகரின் தலைவனான எருமை' என்று பொருள்கொள்வதே சரி!
அயிரி ஆறு எனும் ஹரங்கி ஆறு காவிரி உற்பத்தி ஆகி சிறிது தூரம் ஓடியதும் அதில் வந்து கலக்கும் குறுகிய நீளமுள்ள ஆறு ஆகும் (717 கி.மீ).
அயிர் என்பது நுண்ணிய அல்லது மிகச்சிறிய என்ற பொருளைத் தரும்.
எனவே இந்த ஆறுக்கு இது பொருத்தமான பெயரே!
(இவ்வாறு பற்றி அகநானூறு 177 இலும் வருகிறது)
இந்த சிற்றாறு எருமை ஆண்ட நாட்டின் முக்கிய நதி என்று கூறுவதன் மூலம் அவனது நாடு மிகவும் சிறியது என்பதையும் ஊகிக்கலாம்.
என்றால் குடகு வரை சேரர் ஆண்டதும்.
அதற்கு வடக்கே வடுகரின் மொழிபெயர் தேயம் இருந்ததையும் ஊகிக்கலாம்.
அதாவது தற்போதைய கூர்க் மாவட்டம் பாதிவரை சேரநாட்டுடையது.
பிற்பாடு ஹொய்சள அரசர் சாசனத்திலும் எருமை என்னும் பெயரால் மைசூர் குறிக்கப்பட்டுள்ளது
(சான்று: Epigraphia Carnatica., Vol X c. w. 20).
எனவே மகிஷூர் என்பது மைசூரின் பழைய பெயர் இல்லை.
படம்: எருமைநாடு மற்றும் அதனருகில் வடுகர் நாடு


Monday, 26 August 2019

பெங்களூர் எங்களூர் - 1

பெங்களூர் எங்களூர் -1
1981 இல் கர்நாடகாவில் வாழும் தமிழர் எண்ணிக்கை 90லட்சம் ஆகும் [1].
இன்று அது 1.5 கோடியைத் தாண்டும்.
இவர்கள் கன்னடர்களின் பார்வையில் வந்தேறிகள் என்று இருப்பதுகூட பரவாயில்லை
ஆனால், தமிழகத் தமிழர் சிலரும் இவர்களை 'அங்கு போய் குடியேறியவர்கள்' என்று கூறுவது மன்னிக்க முடியாத வரலாற்று அறியாமை ஆகும்.
1991 இல் ஏறத்தாழ ஒரு கோடித் தமிழர்கள் தமிழகத்தின் எல்லையை ஒட்டிய பெங்களூர், கோலார் தங்கவயல், குடகு, பெல்லாரி, கொள்ளேகால் போன்ற பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அப்பகுதிகளின் பூர்வ குடிகள்தாம்.
இவர்கள் தவிர பத்திராவதி, சிவமுகா, சித்திர துர்கம், சிக்கமளூர் போன்ற பகுதிகளிலும் தமிழர்கள் உண்டு.
இவர்கள்தான் பிறகு குடியேறியவர்கள்.
அதுவும் ஆங்கிலேயர்களால் இரும்புச் சுரங்களிலும், உருக்கு ஆலைகளிலும், தோட்டவேலைக்காகவும் கொண்டுசெல்லப்பட்டவர்கள்.
இவர்கள் இன்னமும் தமிழர் என்ற அடையாளத்துடன் கர்நாடக கடலில் பண்பாட்டுத் தீவுகளாக தனித்து வாழ்ந்துவருகின்றனர்.

மேற்கண்டவர்களையும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கூட்டங்கூட்டமாக வந்தேறி இன அடையாளத்தை மறைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழரை ஏமாற்றிவரும் தெலுங்கரையும் ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.

எடுத்துக்காட்டாக தமிழக எல்லையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள பெங்களூர் பற்றி அறிவோம்.
1891 இல் பெங்களூர் மைய நகர் (cantonment அல்லது civil and military பகுதி) தமிழர் 39%, கன்னடர் 6.7%, 
என்றவாறு வாழ்ந்து வந்தனர்
[மொத்தம் 100081 பேர், தமிழர் 39079, கன்னடர் 6746].
ஆனால் மைய நகருக்கு வெளியே பேட்டைப் பகுதியில் (pettah அல்லது city பகுதி)
தமிழர் 23%, கன்னடர் 31%
என வாழ்ந்துவந்தனர்
  [மொத்தம் 69447 பேர், தமிழர் 15755, கன்னடர் 21936].
அதாவது பெங்களூர் நகரை கட்டி அதில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தது தமிழரே!
கன்னடர் அந்நகருக்கு வெளிப்புறத்தில் குடியேறி தமிழரை விட சிறிது அதிகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இரண்டு பகுதிகளையும் சேர்த்து பார்த்தாலும் தமிழரே அதிகம்.
1911 இல் பெங்களூர் மொத்தமும் சேர்த்து பார்க்கும்போது தமிழர் 32%, கன்னடர் 17% என்றே வரும் (தெலுங்கர் 25%).
இந்த முக்கியமான பெருநகரத்தைத் தமிழகத்துடன் சேர்க்காமல் கன்னடருக்கு வாரிக் கொடுத்துவிட்டது ஹிந்திய அரசு.
மக்கட்தொகை அடிப்படையில் தமிழருக்கு வந்திருக்கவேண்டும்.
அல்லது இரண்டாவது பெரும்பான்மையான தெலுங்கருக்காவது போயிருக்கவேண்டும்.
வரலாற்று ரீதியில் ஆராய்ந்து அது கன்னடருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதுபற்றி ஆராய்வோம்.
பெங்களூர் மாவட்டத்தின் ஒசக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகள் கி.பி 997 இல் பல்லவரிடம் இருந்து சோழ அரசன் இராராசதேவனால் வெல்லப்பட்டது [2].
பெங்களூர் மாவட்டத்தின் மாகடி பட்டணத்தை 1139 ஆம் ஆண்டு நிறுவியது சோழர்களே! [3].

இன்று 'எலவங்கா' என்றழைக்கப்படும் பெங்களூர் பகுதி பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழரால் உருவாகப்பட்ட 'இராசேந்திர சோழவளநாட்டின்' பிரிவுகளில் ஒன்றான 'இலைப்பாக்க நாடு' ஆகும்.
இது ஒய்சளர் காலத்தில் 'எலவக்கா' என்றாகி 'எலவங்கா' என்று திரிந்தது [4].
பெங்களூர் மாவட்டத்தில் உள்ள 'தோட்டபல்லாபூர்' பண்டைநாளில் 'காடனூர் எழுபது' என்கிற பெயரில் வழங்கி வந்தது [5].
மைசூர் மாவட்டத்தின் 'தலைக்காடு' பகுதியை ஆண்டுவந்த கங்கர்கள் தமிழே பேசிவந்ததால் 'தமிழ்க் கங்கர்' எனப்பட்டனர் [6].
பெங்களூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அப்படி கிடைத்துள்ள ஊர்களாவன
அகரம்,
ஐகண்டபுரம்,
ஆவதி,
பைச்சபுரம்,
பேகூர்,
பிண்ணமங்கலா,
தொம்மளூர்,
கங்காவரம்,
அலசூர்,
அசிகலா,
எக்குண்டா,
ஒசக்கோட்டை,
கொண்டரள்ளி,
கூடலூர்,
குப்பேப்பள்ளி,
மாகடி,
மண்குண்டா,
மண்ணே,
நந்தகுடி,
நெலமங்கலா,
திருமலை,
ஓகட்டா,
வணக்கணள்ளி,
வரநாயக்கனள்ளி.

[மேற்கண்ட ஊர்களில் நூற்றுக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
எண்ணிக்கை அடிப்படையில் பாதியளவுகூட கன்னடக் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.
எல்லையோர மாவட்டங்கள் முழுவதுமே தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்து உள்ளன.
கிடைத்த இடங்களை வரைபடமாக ஏற்கனவே "பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)" எனும் பதிவாக இட்டுள்ளேன்.]

மேற்கண்ட ஊர்ப் பெயர்கள் தற்காலப் பெயர்கள்தாம். அதாவது திரிந்த தமிழ்ப் பெயர்கள்.
அதாவது,
அகரம் அருகேயுள்ள 'இப்பலூர்' உண்மையில் 'இருவுளியூர்' ஆகும் [7].
'ஐகண்டபுரம்' உண்மையில் 'ஐவர்கண்டபுரம்' ஆகும் [8].
'ஆவதி' உண்மையில் 'ஆகுதி' ஆகும் [9].
'பிண்ணமங்கலா' உண்மையில் 'விண்ணமங்கலம்' ஆகும் [10].
'தொம்மளூர்' உண்மையில் 'தும்பளூர்' ஆகும் [11].
'காண்கானள்ளி' உண்மையில் 'காணிக்காரன்பள்ளி'  [12].
'கூடலூர்' கல்வெட்டில் 'இராசராச சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது  [13].
'மாலூர் பட்டணம்' கல்வெட்டில் 'நிகரிலி சோழபுரம்' என்று குறிக்கப்பட்டுள்ளது  [14].
'மண்குண்டா' என்பது உண்மையில் 'மணலூர்'  [15].
'மண்ணே' என்பது 'மண்ணைநாடு'  [16].
'நந்தகுடி' என்பது 'நொந்தகுழி'  [17].
'மடவாளம்' என்பது 'மடவளாகம்',  'ஓகட்டா' என்பது 'ஓவட்டம்' அதேபோல்
'வணக்கனள்ளி' என்பது 'வண்ணக்கார பட்டணம்' [18].
பெங்களூர் பகுதி கல்வெட்டில் 'விக்கிரமசோழ மண்டலம்' என்ற பெயரில் குறித்துள்ளனர்  [19].
இன்றும் பெங்களூரில் 'கங்கைகொண்ட சோழனள்ளி' உண்டு.
பெங்களூருக்கு வடக்கே 'சோழநாயக்கனள்ளி' மற்றும் 'சோழதேவனள்ளி' ஆகிய பெயர்களுடைய பகுதிகள் உள்ளன.
இன்று கன்னடருக்கு ஆதரவாக
சோழர் கல்வெட்டுகளை விட பழமையான ஒரு கன்னட நடுகல் கல்வெட்டு மிகவும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்தது.
அதைவிடவும் பழமையான தமிழ்க் கல்வெட்டு கிடைக்காமல் இருந்திருக்காது.
அது மறைக்கப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
  மைசூரில் தென்னிந்திய கல்வெட்டுத் துறை தலைமைச் செயலகம் இருப்பதால் அங்கு பல தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த இனவெறிப் போக்கு பற்றி ஜூனியர் விகடன் (18.06.2006), விகடன் (02.05.2013), மற்றும் தினமலர் (04.02.2018) ஆகிய பத்திரிக்கைகள் கட்டுரைகளும் வெளியிட்டுள்ளன.
[1] தமிழும் தமிழரும், முனைவர் ந. கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1982, பக் 27.
[2 - 19] Mysore Gazetteer, Vol V, ed., C.Hayavadana Rao, 1930, pp 38-39, 342, 39, 369, 76-77, 86, 168, 94, 189, 194, 38-39, 202-03, 205, 239 land 39.
பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி,
நூல்: விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர்: குணா
காலகட்டம்: 1991

வரைபடம்: பெங்களூர்
காலகட்டம்: 1914
(காண: https://vaettoli.wordpress.com/2019/08/27/பெங்களூர்-எங்களூர்-1/ )
அடுத்த பகுதி விரைவில்...


Thursday, 23 August 2018

தமிழ்நாடு பெயர்மாற்றம் அண்ணாதுரையின் சாதனையா?

தமிழ்நாடு பெயர்மாற்றம் அண்ணாதுரையின் சாதனையா?

* 1955 இல் முதன்முதலாக ம.பொ.சி தனது தமிழரசுக் கழக செயற்குழு கூட்டத்தில் தமிழர் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்மொழிந்தார்.
(1953 லேயே மதராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட மேலவையில் பேசியுள்ளார்)

* 1956 இல் தமிழர்களின் எல்லையை அண்டை மூன்று மாநிலங்கள் தாராளமாக ஆக்கிரமித்து மிச்சம் வைத்த மதராஸ் மாகாணம் அதே பெயரல் ஒரு மதராஸ் மாநிலம் ஆனது.
'மதராஸ்' என்ற பெயருக்கு பதிலாக 'தமிழ்நாடு' என்று பெயரிட சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார்.

* காமராசர் பாராமுகமாக இருக்க 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அவர் இறந்தார்.
அதற்குப் பிறகு 42 நாட்கள் கழித்து சட்டமன்றத்தில் பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காமராசர் அதைத் தள்ளுபடி செய்தார்.

* இப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "தமிழ் ராஜ்யம்" என்று பெயரிடுமாறு குரல் கொடுத்தார்.
தனது பத்திரிக்கையிலும் எழுதினார்.

* 1960 இல் ம.பொ.சி தலைமையில் மீண்டும் பெயர்மாற்றத்திற்கான மக்கள் திரள் போராட்டம் நடந்தது.
இதில் அண்ணாதுரை கலந்துகொண்டதோடு சரி.

* 1961 இல் சின்னதுரை கொண்டுவந்த தீர்மானத்தில் மதராஸ் மாகாணம் தமிழில் எழுதும்போது 'தமிழ்நாடு' எனவும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் எழுதப்படும் என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை 'தமிழ்நாடடின் நிதிநிலை அறிக்கை' என்ற பெயரிலேயே தாக்கல் செய்து வாசித்தார்.

அதாவது பாதி வெற்றி அடைந்த இந்த நிலையில்தான் அதுவரை வேடிக்கை பார்த்த 'திராவிட நாடு' ஆசிரியரான அண்ணாதுரை இதில் நுழைகிறார்.

இதற்குக் காரணம் அண்ணா 1962 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தான் பிறந்த மண்ணான காஞ்சிபுரத்திலேயே மண்ணைக் கவ்வியதுதான்.

அப்போது மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்திற்கு இருக்கும் பரவலான ஆவலை கவனித்து மக்கள் ஆதரவைப் பெற இந்த விடயத்தில் பங்கெடுக்கிறார் அண்ணாதுரை.

* 1962 இல் காமராசர் ஆட்சியில் பெயர்மாற்றத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது.

* 1963 இல் அண்ணாதுரை இந்திய பாராளுமன்றத்தில் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு குரல்கொடுத்து தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவர் இப்பெயர்மாற்ற போராட்டத்தில் செய்த குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு

* பிறகு 1964 இல் பக்தவச்சலம் ஆட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது

* அதற்கடுத்த இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் மத்திய மாநில காங்கிரஸ் அரசுகள் செய்த அடக்குமுறைகள் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி 1967 ஏப்ரலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க காரணமானது.

(இந்தியெதிர்ப்பு போராட்டமும் சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்று நடத்தியதே.
அண்ணாதுரை பங்கு அதில் பெரிதாக ஏதுமில்லை.
ஈவேரா ஒரு படி மேலே போய் போராடும் மாணவர்களை சுடச்சொல்லி எழுதிவந்தார்)

* ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கழித்து சட்டமன்றத்தில் அண்ணாதுரை பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அது ஏகமனதாக நிறைவேறியது

* ஓராண்டு கழித்து 1968 ஆண்டுக் கடைசியில் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

* 14.01.1969 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயரே நடைமுறைக்கு வந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் அண்ணாதுரை புகையிலைக் குதப்பும் பழக்கத்தால் வந்த புற்றுநோயினால் உயிரிழந்தார்.

ஏதோ அண்ணாதுரை சாகும்வரை போராடி பெயர்மாற்றம் கொண்டுவந்தது போல புனைக்கதைகள் எழுதப்படும் அதே வேளையில்
"தமிழ்நாடு" என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரை பெயர்மாற்ற விழா அன்று நினைவுகூர்ந்ததோடு சரி அதன்பிறகு இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

தமிழ்நாடு என்ற சொல்லை உருவாக்கி முன்மொழிந்த ம.பொ.சி கூட இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்.

ஆனால் தமிழ்நாடு பெயர்மாற்றம் என்றாலே அண்ணாதுரை கொண்டுவந்தது என்றும் அவர் இல்லாவிட்டால் நாம் 'மெட்ராஸ் மக்களாக' இருந்திருப்போம் என்றும் திராவிடவாதிகள் பேசுவதைப் பார்க்கிறோம்.

இவர்களின் செயழகு எவ்வாறு என்றால்,

* கால் நூற்றாண்டு கழித்துதான் 1996 இல் மதராஸ் சென்னை ஆனது.

* தமிழகத்தின் உயர்நீதி மன்றம் இன்றும் "சென்னை உயர்நீதிமன்றம்" அல்லது "மதராஸ் ஹைகோர்ட்" என்றே இன்றுவரை உள்ளது.

* இன்றுவரை தமிழகத்தின் தலைமை பல்கலைக்கழகம் "அண்ணா பல்கலைக்கழகம்" என்றே உள்ளது.
"தமிழ்நாடு பல்கலைக் கழகம்" என்று இல்லை

Saturday, 10 June 2017

சாதிப்பெயர் வேண்டாமென முதன்முதலாகத் தீர்மானம் கொண்டுவந்த தமிழர்

சாதிப்பெயர் வேண்டாமென முதன்முதலாகத் தீர்மானம் கொண்டுவந்த தமிழர்

1929 பெப்ரவரி 17,18 ஆம் திகதிகளில் செங்கல்பட்டிலுள்ள தியாகராயநகர் பனகல் அரசர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில் சாதி பட்டங்களை பெயருடன் பயன்படுத்துவதை விட்டுவிடவேண்டும் என்றும் மத,சாதி அடையாளங்களை அணிந்துகொள்ளக்கூடாது எனவும் தீர்மானத்தை சிவகங்கை தாலுக்கா போர்டு தலைவர் ராமச்சந்திரன் சேர்வை கொண்டுவந்தார்.
நானும் இன்றிலிருந்து என் பெயரை வெறும் ராமச்சந்திரன் என்று மாத்திரம் வைத்துக்கொள்கிறேன் எனக் கூறி அதற்குச் சட்டத்தின்படி என்ன வழி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இவர் இன்றைய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாக்கியராசன் சேதுராமலிங்கத்தின்( Packiarajan Sethuramalingam ) தாத்தா ஆவார்.
இது குறித்து அவர் எழுதிய பதிவை ஒளிப்பிரதியாகக் காணலாம்.
இவ்வாறு பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக்கொள்ளக் கூடாது என்று சமத்துவ நோக்கத்தில் சிந்தித்தவர் ஒரு தமிழர்.
ஆனால் அதையும் இவர்கள் மறைத்து பிடுங்கி ஈ.வெ.ராமசாமிக்கு கொடுத்துவிட்டனர்.

சரி.இந்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டு 19 வருடங்களின் பின்னர் 1948 இல் நடந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பார்ப்போம்.
தனது 14 வயதில் அரசியலுக்கு வந்ததாக பெருமையடித்துக்கொள்ளும் கருணாநிதி அடைப்புக்குறிக்குள் தாயாளுவின் தந்தை பெயரை பிள்ளை என்ற பின் ஒட்டுடன் போட்டுள்ளார்.

சாதி ஒழிப்புப் போராளிகளில் ஒருவராக காட்டப்படும் கருணாநிதி தனது சின்னமேளம் சாதிக்கு இசைவேளாளர் என்று பெயரை மாற்றிய சாதனையாளர்.
ஒழிக்கிற சாதிக்கு ஏன் பெயரை மாற்றுவான்!
அது மட்டுமல்ல கருணாநிதியின் வீட்டில் நடந்த ஒழுங்குசெய்த திருமணங்கள் அனைத்தும் அவரின் சொந்தக் சாதிக்குள்ளேயே நடந்துள்ளன.

கருணாநிதியின் திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பியிருந்தவர் இளங்கோ சுப்பிரமணியன்( ElangoSubramanian SF

பதிவர்: Nadesapillai Sivendran

Thursday, 13 October 2016

தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர்துறந்த சங்கரலிங்கனார்

தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர்துறந்த சங்கரலிங்கனார்

சங்கரலிங்கனார் விருதுநகரில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போராடிய தலைவர் ஆவார்.

1914 ஆம் ஆண்டு  பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் என்பவருடன் இணைந்து செயல்பட்டார்.

பெண்கள் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகளை சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலாக எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இறுதி காலத்தில் தனக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த
ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்து அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார்.

பெருந்தலைவர் காமராசர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியானதாகும்!

1950களில் அண்டை மாநிலங்கள் தாராளமாக தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்து தமது தாய்நிலத்தினை அமைத்துக்கொண்டன.
ஹைதரபாத் மாகாணம் ஆந்திராவானது.
திருவிதாங்கூர் கேரளவானது.
மைசூர் மாகாணம் கர்நாடகாவானது.
ஆனால் சென்னை மாகாணமோ தமிழ்நாடு ஆகவில்லை.


திராவிட அரசியல்வாதிகள் தமிழர்போல வேடமிட்டனரே தவிர தமிழருக்கான மண் பறிபோனதைத் தடுக்கவோ தமிழருக்கான மாநிலம் அமைக்கவோ முயற்சிக்கவில்லை.

அப்போது எல்லையைக் காக்க போராடியோர் ம.பொ.சியும் நேசமணியும் மட்டுமே.

29.11.1955இல் தமிழரசு கழகக் செயற்குழு கூட்டத்தில் முதன் முதலில் ம.பொ.சிவஞானம் அவர்களால்
"தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கின்றது,
மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும்"
என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு முன்பே தமிழ்நாடு பெயர்மாற்றம் குறித்து 1953இல் ம.பொ.சி சட்டமன்ற மேலவையில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு 19.1.1956இல் ஜி.உமாபதி இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு தாலுக்காக்களை கோரியும், தட்சிணா ராஜ்ஜியத் திட்டத்தை எதிர்த்தும், சென்னை ராஜ்ஜியத்திற்கு தமிழ்நாடு பெயரிடக் கோரியும் 20.2.1956இல் முழு கடை யடைப்பு நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் ம.பொ.சி. அண்ணாதுரை, பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், சீவானந்தம், சி.பா.ஆதித்தனார் ஆகியோர் பங்கேற்றனர்.
அதன்படி பிப்.20ஆம் நாளன்று தமிழகமெங்கும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தேறியது.

28.3.1956இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மாநில புனரமைப்பு மசோதா கொண்டு வரப்பட்டது.
அம்மசோதா விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.சீவானந்தம் பங்கேற்று தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.
அன்றைய காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசோ சென்னை என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்று கூறி பெயர் மாற்றக் கோரிக்கையைப் புறக்கணித்தது.
 
காங்கிரஸ் கட்சியில் இருந்த காந்தியவாதியான சங்கரலிங்கனார் தம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; தமிழ்"நாடு" என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார்.

பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் கீழ்க்கண்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார்.

1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்

2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.

3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.

4. வெளிநாட்டு விருந்தினர்களுகாகு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.

5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.

6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்.

7. தேர்தல் முறையில் மாறுதல் செய்தல் வேண்டும்.

8. தொழிற் கல்வி அளிக்கப்படவேண்டும்.

9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.

10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.

11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.

12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும்.

அண்ணாதுரை, ம.பொ.சிவஞானம், கக்கன், ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் உண்ணா நோன்பினைக் கைவிடுமாறு சங்கரலிங்கனாரிடம் கேட்டுக் கொண்டார்கள்.
ஆனால், சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார்.

சங்கரலிங்கனாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து கொண்டுவந்தது.

காமராசரோ சிறிதும் இனவுணர்ச்சி இல்லாமல் செய்தியாளர்களிடம், "இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை.
இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற சமாச்சாரம்.
அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது"
பதிலளித்தார்.

உண்ணாநிலைப் போர் 60 நாட்களைத் தாண்டியும் காமராசரின் கல்மனம் கரையவில்லை.
அப்போது பொதுவுடைமை கொள்கை இதழான ஜனசக்தியின் துணையாசிரியர் தியாகி ஐ.மாயாண்டி பாரதிக்கு அந்த ஈகி தனது கடைசி கடிதத்தை எழுதினார்.

அதில், "காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது.
காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது.
துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ விருப்பமில்லை"
என்று மனம் வெதும்பி எழுதியிருந்தார்.

சங்கரலிங்கனாரின் போராட்டத்திற்கு அவர் வாழ்நாள் முழுதும் உழைத்த காங்கிரஸ் கட்சி ஆதரவு தரவில்லை.
ஆனால் ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது.
எனவே தான் இறந்த பிறகு அக்கட்சியினரிடமே உடலை ஒப்படைக்கும் படி சங்கரலிங்கனார் இறுதியாக வேண்டிக் கொண்டார்.

தனது கடைசி கடிதத்தில் "என் சடலத்தை காந்தி தங்கிய ஆத்துக்கரை மண்மெட்டில், நான் தங்கியிருந்த இடத்துக்கு முன்னால் இரண்டு வேப்பமரத்துக்கு அடியில் குழியில் போடுங்கள்.
அந்த இடத்தில் அடக்கம் செய்ய சர்க்கார் மறுத்தால் திரு.வெ.நா.பு.ராமசாமி நாடார் அவர்கள் நந்தவனத்துக்கு முன்பு குண்டும் குழியுமாக உள்ள இடத்தின் மத்தியில் மேடையில் அடக்கம் செய்யுங்கள்" என்று எழுதியிருந்தார்.

அவரின் இறுதி விருப்பத்தைக் கூட பொதுவுடைமைக் கட்சி மதிக்கவில்லை.
கமதத்தனேரி சுடுகாட்டில் ௧ம்யூனிஸ்டு கட்சியினர் அவர் உடலை எரியூட்டினர்.
அதுமட்டுமில்லாமல் கம்யூனிஸ்டு கட்சி இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சி "தமிழ்மாநிலக் குழு" என்று அழைக்கப்படுகிறதே தவிர ,
மார்க்சிஸ்ட் கட்சி "தமிழ்நாடு குழு " என்று அழைக்கப்படுவதில்லை.
காங்கிரசைப் போலவே கம்யூனிஸ்ட்டு கட்சியும் சங்கரலிங்கனாருக்கு துரோகம் செய்துவிட்டது.

இதே போல சென்னையைத் தலைநகராகக் கொண்ட 'விசாலா ஆந்திரா' கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர் பொட்டி சிறிராமுலு.

அவருக்கு தெலுங்கர் செய்த நன்றிக்கடனை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழர்கள் கூனிக்குறுகும் நிலை வரும்.

பொட்டி சிறிராமுலுவின் மரணத்தை அறிந்த தெலுங்கர்கள் ஆந்திராவில் தமிழர் மீது மூன்று நாள் கலவரம் நடத்தினர்.
தமிழ் பகுதிகளான நெல்லூர், சித்தூர் மாவட்டங்களை ஆக்கிரமித்துக்கொண்டு ஆந்திரா எனும் பெயரில் தனி மாகாணம் கண்டனர்.

காங்கிரசு, கம்யூனிஸ்டு துரோகத்தாலும் திராவிட கட்சிகள் ஏற்படுத்திய 'திராவிட நாடு' குழப்பத்தாலும் தமிழர்களிடையே சங்கலிங்கனாரின் மரணம் பெரியதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆந்திர அரசு ஹைதரபாத்தில் 'பொட்டி சிறிராமுலு தெலுங்கு கழகம்' நிறுவியும்,
அவர் நினைவாக நெல்லூர் மாவட்டத்தை 'பொட்டி சிறிராமுலு' மாவட்டம் என்றும் பெயர் மாற்றமும் செய்துள்ளது.

மத்திய அரசு பொட்டி சிறிராமுலுவிற்கு அஞ்சல் தலையையே வெளியிட்டு விட்டது.

இதை விடப் பெரிய கொடுமை என்னவெனில், "சென்னை இல்லாத ஆந்திரம் தலையில்லாத முண்டம்" என்று பேசிய பொட்டி சிறிராமுலுவிற்கு சென்னையிலேயே திராவிட ஆதரவுடன் தெலுங்கர்கள் நினைவுச் சின்னத்தை எழுப்பியும் விட்டனர்.

பொட்டி சிறிராமுலுவின் ஈகத்திற்கு எந்த விதத்திலும் சங்ரலிங்கனாரின் ஈகம் குறைந்ததல்ல.

ஆனால் அவரை தமிழர்களாகிய நாம் என்றாவது கொண்டாடி இருக்கிறோமா?
இல்லையே?
அவரது மரணத்திற்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்தே சென்னை மாகாணம் தமிழ்நாடு ஆனது.

அவர் மறைந்து 57 ஆண்டுகள் கழித்து விருதுநகரில் ஓராண்டுக்கு முன்னர்தான் தான் அதுவும் ஒப்புக்காக செயலலிதா அரசு நினைவுச் சின்னம் திறந்துள்ளது.

அதுவும் அந்த அம்மையார் காணொளி மூலம்தான் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு என்ற பெயருக்குப் பின்னால் அணு அணுவாக தன் உயிரை கொடுத்த ஒரு மாமனிதனின் ஈகம் உள்ளது என்பதை தமிழர்கள் என்றும் மறக்கக்கூடாது.

நன்றி:கதிர் நிலவன்.
நன்றி: அ.பெரியார் எழுதிய "தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும்".
நன்றி: செ.பிரபாகரன்.

படம்: சங்கரலிங்கனாரின் ஒரே ஒரு பழைய படம்தான் உள்ளது.
அதை முடிந்த அளவு திருத்தி வரைந்துள்ளேன்.