Friday, 18 July 2025

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

*1920 இல் காங்கிரஸ் கட்சி 'அமையவுள்ள தங்களது ஆட்சியில் மொழி உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்' என்று உறுதியளித்து அதற்கு முன்மாதிரியாக கட்சி கட்டமைப்பை மொழிவாரி கிளைகளாக மாற்றி அமைத்தது.
 அப்படி அமைந்ததே 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி' எனும் கிளை (அதாவது தமிழ்நாடு என்பதே மக்கள் இயல்பாக பயன்படுத்திய சொல்.
 மக்கள் ஆதரவைப் பெற இதைச் செய்த அதே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு மொழிவாரி உரிமைகளை தர மறுத்தது).

*  1920 இல் காங்கிரசின் இந்த கொள்கையை ஏற்று தீவிர காந்தி பக்தரான வரதராஜுலு நாயுடு "தமிழ்நாடு" எனும் காங்கிரஸ் ஆதரவுப் பத்திரிக்கையைத் தொடங்கி 1931 வரை நடத்தினார் (1925 இல் தமிழ்நாடு காங்கிரசுக்கு இவர் தலைவரானார்).

*1942 இல் 'தமிழ் ராஜ்யம்' என்ற பெயரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனர் நூல் ஒன்று வெளியிட்டார்.
 அதில் இருந்த வரைபடத்தில் அன்றைய மதாராஸ் மாகாண தமிழர் பெரும்பான்மை மாவட்டங்கள், பாண்டிச்சேரி காரைக்கால், திருவனந்தபுரம் உள்ளடக்கிய குமரி, இலங்கையின் வடபகுதி எல்லாம் இருந்தது (பார்க்க: படம்).

* குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய போராளிகளை 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில்' சேர்க்க முடியாது என்று காமராஜர் துரத்திவிட்டார்.
 இதையடுத்து 1945 இல் குமரித் தமிழர்கள் சாம் நத்தானியேல் நாடார் தலைமையில் காங்கிரசில் இருந்து பிரிந்து தொடங்கிய கட்சி  1946 இல் 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்று பெயர்மாற்றப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயரில் இருந்த முதல்  கட்சி இதுவே (தமிழ்நாடு என்பதே இயல்பான பெயராக அப்போதும் விளங்கியது).

* 1947 இல் தமிழர் கழகம் எனும் கட்சி தொடங்கி 'தமிழர் நாடு' எனும் பெயரில் பத்திரிகையும் தொடங்கினார்  'முத்தமிழ் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை 

 *1953 இல் மதராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட மேலவையில் முதன்முதலாகப் பேசினார் ம.பொ.சி  (ஆனால் 1953 இல் 'ஆந்திர ராஜ்யம்' உருவாகிவிட்டது. 1956 இல் 'ஆந்திர பிரதேசம்' ஆனது).

* 1955 இல் ம.பொ.சி தனது தமிழரசுக் கழக செயற்குழு கூட்டத்தில் தமிழர் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்மொழிந்தார்.

 * 1955 இல் சட்டசபையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "தமிழ் ராஜ்யம்" என்று பெயரிடுமாறு குரல் கொடுத்தார்.
தனது பத்திரிக்கையிலும் தொடர்ந்து எழுதினார்.

* 1956 இல் 'மதராஸ் மாகாணம்' அதே பெயரால் 'மதராஸ் மாநிலம்' ஆனது.
'மதராஸ்' என்ற பெயருக்கு பதிலாக 'தமிழ்நாடு' என்று பெயரிட சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்தார்.

* காமராசர் பாராமுகமாக இருக்க 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபரில் அவர் இறந்தார்.
அதற்குப் பிறகு 42 நாட்கள் கழித்து சட்டமன்றத்தில் பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காமராசர் அதைத் தள்ளுபடி செய்தார்.

* 1960 இல் ம.பொ.சி தலைமையில் மீண்டும் பெயர்மாற்றத்திற்கான மக்கள் திரள் போராட்டம் நடந்தது.
இதில் அண்ணாதுரை கலந்துகொண்டதோடு சரி.

* 1961 இல் சின்னதுரை கொண்டுவந்த தீர்மானத்தில் மதராஸ் மாகாணம் தமிழில் எழுதும்போது 'தமிழ்நாடு' எனவும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் எழுதப்படும் என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை 'தமிழ்நாடடின் நிதிநிலை அறிக்கை' என்ற பெயரிலேயே தாக்கல் செய்து வாசித்தார்.

அதாவது பாதி வெற்றி அடைந்த இந்த நிலையில்தான் அதுவரை வேடிக்கை பார்த்த ('திராவிட நாடு' பத்திரிக்கை நடத்திவந்த) அண்ணாதுரை இதில் நுழைகிறார்.

இதற்குக் காரணம் அண்ணாதுரை 1962 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தான் பிறந்த மண்ணான காஞ்சிபுரத்திலேயே மண்ணைக் கவ்வினார்.

அப்போது மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்திற்கு இருக்கும் பரவலான ஆதரவை கவனித்து மக்கள் கவனத்தைப் பெற இந்த விடயத்தில் பங்கெடுக்கிறார் அண்ணாதுரை.

* 1962 இல் காமராசர் ஆட்சியில் பெயர்மாற்றத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது.

* 1963 இல் இந்திய பாராளுமன்றத்தில் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு குரல்கொடுத்து தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவர் இப்பெயர்மாற்ற போராட்டத்தில் செய்த குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு ஆகும்.

* பிறகு 1964 இல் பக்தவச்சலம் ஆட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு மீண்டும் நிறைவேறாமல் போனது.

* அதற்கடுத்த இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில காங்கிரஸ் அரசுகள் செய்த அடக்குமுறைகள் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி 1967 ஏப்ரலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க காரணமானது.

(இந்தியெதிர்ப்பு போராட்டமும் இவ்வாறே!
அதாவது சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்று நடத்தியதே.
அண்ணாதுரை பங்கு அதிலும் பெரிதாக ஏதுமில்லை.
ஈவேரா ஒரு படி மேலே போய் போராடும் மாணவர்களை சுடச்சொல்லி எழுதிவந்தார்)

* ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கழித்து 18.7.1967 அன்று சட்டமன்றத்தில் அண்ணாதுரை பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அது ஏகமனதாக நிறைவேறியது.
 அன்று அண்ணாதுரை பேசியதைக் கவனிப்போம்...
"மதிப்பு மிக்க திரு. ம.பொ.சி அவர்கள் இதிலே மிகுந்த மன எழுச்சி பெற்றது இயற்கையானதாகும். அவர்கள் பல ஆண்டுகளாக 'தமிழ் நாடு' என்ற பெயர் இந்த நாட்டுக்கு இடப்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு பாடுபட்டவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே “திராவிட” என்பதை நினைத்துக் கொண்டிருப்பதாலே "தமிழ்நாடு" என்பதிலே அக்கரை இல்லாமல் போய்விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் ‘தமிழ்நாடு' என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திக்கொண்டு வந்திருக்கிறோம்."

அதாவது ம.பொ.சி பாடுபட்டார், திமுக வலியுறுத்தியது.
 இதிலிருந்து இது யாருடைய போராட்டம் என்பது தெளிவாகப் புரிகிறது அல்லவா?! 

* ஓராண்டு கழித்து 1968 ஆண்டுக் கடைசியில் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

* 14.01.1969 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் அண்ணாதுரை புகையிலைக் குதப்பும் பழக்கத்தால் வந்த புற்றுநோயினால் உயிரிழந்தார்.

ஏதோ அண்ணாதுரை சாகும்வரை போராடி பெயர்மாற்றம் கொண்டுவந்தது போல புனைக்கதைகள் எழுதப்படும் அதே வேளையில்
"தமிழ்நாடு" என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்க நாடாரை 'பெயர்மாற்ற விழா' அன்று நினைவுகூர்ந்ததோடு சரி அதன்பிறகு இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

  தமிழ்நாடு என்ற பெயரை முன்மொழிந்து போராட்டம் நடத்தி சாதித்துக் காட்டிய ம.பொ.சி கூட பிற்பாடு மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்.

 இன்று தமிழ்நாடு என்ற பெயரை உருவாக்கியதே அண்ணாதுரைதான் என்றும் அவர் இல்லாவிட்டால் நாம் 'மதராசி'களாக இருந்திருப்போம் என்றும் திராவிடவாதிகள் பேசுவதைப் பார்க்கிறோம்.

அண்ணாதுரைக்குப் பிறகும் இவர்களின் லட்சணம் (செயலழகு) எவ்வாறு என்றால்,

* கால் நூற்றாண்டு கழித்துதான் 1996 இல் மதராஸ் சென்னை ஆனது.

* (பிற மாநிலங்கள் போல அல்லாமல்) தமிழகத்தின் உயர்நீதி மன்றம் தமிழில் "சென்னை உயர்நீதிமன்றம்" ஆங்கிலத்தில் "மதராஸ் ஹைகோர்ட்" என்றே இன்றுவரை உள்ளது.
"தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம்" என்று இல்லை

* பிற மாநிலங்கள் தமது மாநிலத்தின் பெயரிலேயே தலைமைப் பல்கலைக்கழகம் வைத்துள்ளன.
ஆனால் இன்றுவரை தமிழகத்தின் தலைமைப் பல்கலைக்கழகம் "அண்ணா பல்கலைக்கழகம்" என்றே உள்ளது. 
"தமிழ்நாடு பல்கலைக் கழகம்" என்று இல்லை.
 இதிலும் ஒரு சதி 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' என்பதை சுருக்கி 'அண்ணா பல்கலை' என்று அண்ணாதுரையைக் குறிக்கும் வகையில் திரிக்கின்றனர். 

 அண்ணாதுரையும் தமிழுக்கோ தமிழருக்கோ செய்தது ஏதுமில்லை!  

(23.08.2018 மற்றும் 31.10.2021 பதிவுகள் இணைத்து மேலதிக தரவுகள் சேர்த்தது இப்பதிவு)

No comments:

Post a Comment