Tuesday 7 April 2020

இலக்கியத்தில் எருமையூர்


இலக்கியத்தில் எருமையூர்
 
புராணங்களின் படி மகிஷாசுரனை மகிஷாசுரமர்த்தினி வதம் செய்த இடம் என்று கருதப்பட்டு மைசூருக்கு மகிஷாசுரமர்த்தினிபுரம் என்ற பெயர் இருந்ததாகவும் பிறகு சுருங்கி மகிஷபுரம் என்றாகி பிற்பாடு மைசூர் என்றானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இது பொருத்தமான வாதமாகத் தோன்றவில்லை.
உண்மையில் மகிஷாசுரமர்த்தினி பற்றி வட இந்தியாவிலேயே கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கர்நாடகத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சான்றே காணப்படுகிறது.
மைசூர் என்பது உண்மையில் எருமையூர் ஆகும்.
எருமைகள் மிகுந்த ஊர் என்று பொருள்கொள்ளலாம்.
கர்நாடகம் இன்று எருமை வளர்ப்பில் பின்தங்கிவிட்டாலும் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் உள்ளது.
நமக்கு சல்லிக்கட்டு போல கன்னடர்க்கு எருது போட்டி (மரபணு ஆய்வின் படி உலகிலேயே பழமையான எருது வகை இந்திய நீர் எருமைகள் தான்).
எருமை என்பதற்குச் சமற்கிருதச் சொல் மகிஷம்.
எருமையூர் என்பது மகிசூர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர்.

  ஆனால் எருமையூர் மையூர் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
மையூர் என்பதே மைசூர் என்று ஆகியிருக்கவேண்டும்.
இதுவே இயல்பான மாற்றமாகப் படுகிறது.
இதற்கு இலக்கியச் சான்றாக வேளிர் குடியைச் சேர்ந்த 'மையூர் கிழான்' என்பவர் சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்ததாக பதிற்றுப்பத்து கூறுகிறது (காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு).
மைசூர் நகரின் பெயராலே அம்மாநிலம் முழுவதும் 1980 வரை வழங்கப்பட்டது.
பிறகுதான் கர்நாடகா என்று மாற்றினர்.
எருமையூர் பற்றி இலக்கியங்களில் உள்ள குறிப்புகள்,
வடிகட்டப்பட்ட கள் கிடைக்கும் எருமையூர் எனுமாறு
"நார் அரி நறவின் எருமையூரன்" அகநானூறு (36) கூறுகிறது.
குடநாடு என்பது சேரநாட்டின் வடபகுதி.
இதில் நுண்வேலைப்பாடு நிறைந்த பூண் அணிந்த (கொம்புகளை உடைய) எருமை மாடுகள் நிறைந்திருந்தன என்பதை 'நுண்பூண் எருமை குடநாட்டன்ன' (அகநானூறு 115) எனும் வரிகள் உணர்த்தும்.
சேரநாட்டு வளத்தைக் கூறும் சிறுபாணாற்றுப்படை (41- 46) செங்கழுநீர்ப் பூக்களை எருமைகள் மிகுதியாக மேய்ந்துவிட்டு பலாமர நிழலில் உறங்கின என்று கூறுகிறது.
அதாவது சேரநாட்டிலும் அதையொட்டிய எருமைநாட்டிலும் எருமைகள் அதிகளவு இருந்தன.
ஆனால் அயிரி ஆறு (ஹரங்கி ஆறு) பாயுமிடத்தில் வடுகரின் எருமை நாடு இருந்தது எனுமாறு,
"வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாடு"
என்று அகநானூறு (253) கூறுகிறது.
இதில் கூறப்பட்டுள்ள
'வடுகர் பெருமகன் எருமை நன்னாடு' என்பதை
'வடுகப் பெருமான் ஆளும் எருமை நாடு'
என்று பொருள் கொண்டால் 'எருமைநாடு' என்பது வடுகரின் நாடு என்றாகிறது.
இதை கன்னடர் தமது தரப்பு சான்றாக வைக்கக்கூடும்.
ஆனால் 'வடுகனான எருமை என்பான் ஆளும் நாடு'
என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.
ஏனென்றால் இப்பாடல் வரிகள் முதலில் அவனது பண்புகளைக் கூறி அத்தகைய எருமையின் நாட்டில் அயிரியாறு பாய்கிறது என்று அவனைப் பற்றித்தான் கூறுகிறதே தவிர அவனது நாட்டைப் பற்றி கூறவில்லை.

எருமை என்பவன் இரவில் தாக்குபவன் என்றும்
மாடுகளை மேய்க்கும் போது கோவலர் எழுப்பும்  ஒலிகளைக் கற்றுக்கொண்டு அதுபோல் ஒலியெழுப்பி காளைகளையும் கன்றுடன் பசுக்களையும் கவர்ந்து சென்று தனது மண்டபம் நிறைய கட்டிவைத்திருப்பவன் என்றும்
வலிமையான தோள்களை உடையவன் என்றும் கூறி
அவனை வடுகர் பெருமகன் என்றும் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட குடியின் தலைவனை அக்குடிப் பெயருடன் 'பெருமகன்' என்று சேர்த்துக் கூறுவது வழக்கம்.
எ.கா: ஆவியர் பெருமகன் (பேகன்)
கள்வர் பெருமகன் (தென்னன்)
குறவர் பெருமகன் (ஏறைக்கோன்)
ஆக 'வடுகரின் தலைவனான எருமை' என்று பொருள்கொள்வதே சரி!
அயிரி ஆறு எனும் ஹரங்கி ஆறு காவிரி உற்பத்தி ஆகி சிறிது தூரம் ஓடியதும் அதில் வந்து கலக்கும் குறுகிய நீளமுள்ள ஆறு ஆகும் (717 கி.மீ).
அயிர் என்பது நுண்ணிய அல்லது மிகச்சிறிய என்ற பொருளைத் தரும்.
எனவே இந்த ஆறுக்கு இது பொருத்தமான பெயரே!
(இவ்வாறு பற்றி அகநானூறு 177 இலும் வருகிறது)
இந்த சிற்றாறு எருமை ஆண்ட நாட்டின் முக்கிய நதி என்று கூறுவதன் மூலம் அவனது நாடு மிகவும் சிறியது என்பதையும் ஊகிக்கலாம்.
என்றால் குடகு வரை சேரர் ஆண்டதும்.
அதற்கு வடக்கே வடுகரின் மொழிபெயர் தேயம் இருந்ததையும் ஊகிக்கலாம்.
அதாவது தற்போதைய கூர்க் மாவட்டம் பாதிவரை சேரநாட்டுடையது.
பிற்பாடு ஹொய்சள அரசர் சாசனத்திலும் எருமை என்னும் பெயரால் மைசூர் குறிக்கப்பட்டுள்ளது
(சான்று: Epigraphia Carnatica., Vol X c. w. 20).
எனவே மகிஷூர் என்பது மைசூரின் பழைய பெயர் இல்லை.
படம்: எருமைநாடு மற்றும் அதனருகில் வடுகர் நாடு


No comments:

Post a Comment