Showing posts with label கோடகர். Show all posts
Showing posts with label கோடகர். Show all posts

Friday, 17 April 2020

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

  ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழியினர் உரிமை கோர முதன்மையான தேவை இலக்கியச் சான்று ஆகும்.

 அப்படி இலக்கிய அடிப்படையில் தற்போதைய கேரளா மட்டுமல்லாது அதையும் தாண்டி கர்நாடகாவின் மைசூர், கூர்க் ஆகியவற்றுடன் சிக்கமகளூர் வரை நமக்குச் சொந்தமானது என்றாகிறது.

 மைசூர் எனும் எருமைநாடு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
 தற்போது மலைகள் பற்றி பார்ப்போம்.

நளிமலை :-

 நீலகிரி மாவட்டத்தில் ஒருபக்கத்தில் இருந்து கன்னடரும் இன்னொரு பக்கத்திலிருந்து மலையாளிகளும்  குடியேறி இன்று தமிழரை விட அதிகமாகிவிட்டனர்.
 இப்பகுதி அரசியல் தலைமைகளும் வேற்றினத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டது.

 நீலகிரி சங்ககாலத்தில் நளிமலை என்று அழைக்கப்பட்டது.
 நளி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
 தமிழர் நிலத்திலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் இதுவே!

 குளிர்ந்த நளிமலை பற்றியும் அதை ஆண்ட வேட்டுவ குலத்தைச் சேர்ந்த நள்ளி (முழுப் பெயர்:  கண்டீரக் கோப்பெருநள்ளி இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்) எனும் காட்டு அரசன் பற்றியும் புறநானூறு (148 - 150) கூறுகிறது.

 சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவன் 'நீலகிரி' வந்து தங்கியிருந்தது பற்றியும்
அப்போது மிக்கரிய நிறமுடைய 'கொங்கணக் கூத்தர்' மற்றும் 'கருநாடர்' ஆகியோர் தமக்கே உரிய தனிப்பட்ட கலாச்சாரத் தோற்றத்துடன் வந்து 'மாதர்ப் பாணி' எனும் காதல்கலந்த பாடலைப் பாடி ஆடினர் என்று குறிப்பு உள்ளது
(இதை கன்னடர் தமது சான்றாக முன்வைக்கலாம்).
 இதேபோல குடகர்களும் ஓவர்களும் வந்து ஆடிப்பாடி சேரனை மகிழ்வித்து பரிசு பெற்றுச் சென்றனர்.

 --------------

கண்டீரமலை :-

  நீலகிரி மலைகளில் ஒன்று கண்டல் மலை.
இதுவே சங்ககாலத்து கண்டீரமலை ஆகும் (ஈரம் துண்டுதுண்டாக அதாவது பனிக் கண்டுகள் கிடக்கும் மலை என்று பொருள்).
 புறநானூறு 151 இல் நள்ளியின் தம்பி கண்டீரக்கோன் பற்றி உள்ளது.
---------

தோட்டிமலை :-

 தொட்டபெட்டா சிகரம் தோட்டி என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தோட்டி என்பது யானையை செலுத்த பாகன் பயன்படுத்தும் கோலைக் குறிக்கும்.
 அதைப்போன்ற கூரிய வளைந்த தோற்றம் உடைய மலைச் சிகரம் என்கிற பொருள்படும்படி தோட்டிமலை என்று அழைக்கப்பட்டது.

 இந்த தோட்டி மலையை ஆயர் தலைவன் 'கழுவுள்' என்பவன் சேரனிடம் போரில் இழந்தான் என்று பதிற்றுப்பத்து (8 - 71) கூறுகிறது.

 பரிபாடல் (5-86) இம்மலையை இருந்தோட்டி என்று குறிப்பிடுகிறது.
------------

 குதிரைமலை :-

தற்போதைய சிக்கமகலூரு மாவட்டத்தில் உள்ள Kudremukh எனும் குதிரைமுக மலை பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
 குதிரை முகம் போன்ற அமைப்புடைய உயர்ந்த மலையை ஒட்டி போக்குவரத்துக்கான ஒரு கணவாய் இருந்துள்ளது.
  அது பற்றியும் அம்மலையை ஆண்ட பிட்டன் பற்றியும் அகநானூறு (143) கூறுகிறது.

 பிட்டனின் மகன் பிட்டங்கொற்றன் பற்றி புறநானூறு (168) கூறுகிறது.
 அதில் ஊராக் குதிரை என்று குறிப்பிடப்படுகிறது குதிரைமலை. அங்கு வாழ்ந்த குறவர் பற்றியும் விலங்குகள் பற்றியும் தாவரங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.

 நீண்ட பாதையைக் கொண்ட குதிரைமலையை ஆண்ட அஞ்சி என்ற அரசன் பற்றி அகநானூறு (372) கூறுகிறது.

 உயர்ந்த குதிரைமலையை ஆண்ட எழினி பற்றி புறநானூறு (158) கூறுகிறது.

 குதிரைமலையின் மக்கள் மழவர் ஆவர்.
 ஆறு மலைமுகடுகளை உடைய யானை போன்ற மலையான  பொதினி (பழனி) மலையின் அரசன் முருகனிடம் தோற்றனர் என்று அகநானூறு (1) கூறுகிறது.

 Kutremukh என்பதற்கு கன்னடத்திலும் குதிரை முகம் என்றே பொருள்.
 அதன் பெயர் குதிரைமுகம் போன்ற தோற்றத்தினால் ஏற்பட்டது என 1908 இல் வெளிவந்த Imperial Gazetteerof Mysore & coorg ல் பக்கம் 233 மற்றும் 109 ல் பதிவாகியுள்ளது.
---------

ஏழில்மலை :-

 ஏழு மலைமுகடுகளைக் கொண்ட மலை என்பதால் ஏழில் மலை என்றழைக்கப்பட்டது.
 இதனூடாகவும் ஒரு மலைப்பாதை இருந்துள்ளது.
 சமஸ்கிருதத்தில் இது சப்தகிரி என்று அழைஐக்கப்பட்டது.
 பத்தாம் நூற்றாண்டிலிருந்து எலிமலை என்று மாறிவிட்டது.
 பிற்கால ஐரோப்பியர் குறிப்பிலும் எலி எனும் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளது.
 (ஆனால் மலையாளத்தில் ezhi அதாவது எழி என்றே எழுதுகின்றனர்).

 இதை ஏழில்குன்றம் என்று குறிப்பிடும் நற்றிணை (391),
 கொங்காண அரசன் நன்னன் வளமான இம்மலையை ஆண்டு வந்தான் என்றும் கூறுகிறது.

[கொங்காண நாடு என்பது கொங்குநாட்டின் வடக்கே இருந்த நாடு.
 கொள் விளையும் காட்டுப் பகுதி என்று பொருள்.
 இன்றைய கர்நாடகத்தின் தென்மேற்கு பகுதியே இது.
 இங்கே எருமைகள் மிகுதி.
 கோவா மற்றும் அதைச் சுற்றி பேசப்படும் மொழி கொங்கணி ஆகும்.
 இவர்கள் கொங்கணர் என்கிற வேற்றினத்தவராக இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளனர்.
 இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
 கொங்காணத்தை ஆண்ட நன்னன் தமிழரான வேளிர் குலத்தவனே!
 இதற்குச் சான்றாக நன்னனை "வேண்மான்" என்று அகநானூறு (97) கூறுகிறது.
 "நன்னன் உதியன்" என்பவன் தொன்மையான வேளிர் குலத்தின் செல்வங்களை தன் பாழி நகரில் வைத்து பாதுகாத்தான் என்று அகநானூறு (258) கூறுகிறது]

 ஏழில் குன்றத்து கணவாய் பற்றியும் அங்கிருக்கும் யானைகள் பற்றியும் அகநானூறு (349) கூறுகிறது.

 யானைகளைப் பரிசாக அளிக்கும் வழக்கமுடைய நன்னனின் நாட்டில் மயில்கள் நிறைந்த ஏழில்மலை உள்ளதென்று அகநானூறு (152) கூறுகிறது.

 ஏழில்குன்றத்து பெண்கள் வேங்கைப் பூவைப்பிண்ணி இடையில் அணிவர் என்று அகநானூறு (345) கூறுகிறது.
--------

முதுமலை:-

 சங்ககாலத்தில் முதிரம் என்று அழைக்கப்பட்டது.
 மூங்கில்களும் பலாமரங்களும் குரங்குகளும் காய்கனிகளும் நிறைந்த இம்மலையை வள்ளலான குமணன் ஆண்டான் என்று புறநானூறு (158, 163) கூறுகிறது.
-----------

 குடகு மலை:-

 குடகு மலை தற்போது கொடகு என்றும் (ஆங்கிலத்தில் coorg அங்கே வாழும் இனத்தவர் கொடவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 குடகுமலையை குடமலை என்று குறிப்பிட்டு அங்கே காவிரி பிறக்கிறது என்று மலைபடுகடாம் (527) கூறுகிறது.

 குடமலையில் சந்தனமும் அகிலும் கிடைக்கும் என்று பட்டினப்பாலை (188) குறிக்கிறது.

 குடகுமலை உச்சியை (குடகக் கவடு) பிளந்து சோழன் காவிரியைக் கொண்டு வந்ததாக விக்கிரமசோழன் உலா (24) கூறுகிறது.

 காவிரி குடமலையில் பிறந்து கடலில் கலப்பதை சிலப்பதிகாரம் (10: 106) பாடுகிறது.

 குடமலையில் உள்ள மாங்காடு எனும் ஊரில் வாழ்ந்த அந்தணர் பற்றி சிலப்பதிகாரம் (11) கூறுகிறது.

 குடகுமலையை 'மேற்கில் இருக்கும் பொன்பதித்த மலை' எனுமாறு 'குடாஅது பொன்படு நெடுவரை' என்றழைத்து அங்கே காவிரி பிறப்பதாக புறநானூறு (166) கூறுகிறது.

 ஏற்கனவே கூறியதுபோல குடகர் சேரன் முன்பு நடனமாடி பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது.
 ஆனால் அதில் கொங்கணரும் கருநாடரும் தனித்த தோற்றத்துடன் இருந்ததைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள்,
 ஓவர் (ஓவியர்) மற்றும் குடகர் தனித்த தோற்றம் உடையவரென எதுவும் கூறவில்லை.
 என்றால் இவ்விருவரும் தமிழரில் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

 அதாவது சேரன் இமயமலைக்குச் செல்ல படையுடன் தனது தலைநகரிலிருந்து புறப்பட்டு நாட்டின் எல்லையான நீலகிரிக்கு வருகிறான்.
 அப்போது அருகாமை இனத்தவரான கருநாடரும் கொங்கணரும் சேரநாட்டுக்குள் வந்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
 சேரநாட்டின் எல்லைப்புறத்து மக்களான குடகரும் ஓவியரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

 இதன்பிறகு சேரனின் நட்புநாட்டவரான "நூற்றுவ கன்னர்" (சாதவாகனர்) மிக அதிகளவு பரிசுகளுடன் நூற்றுக்கணக்கான கூத்தாடிகளையும் சஞ்சயன் எனும் தூதுவன் தலைமையில் அனுப்பி
"ஒரு கல்லுக்காக ஏன் இமயம் போகிறீர்கள் நாங்களே எடுத்துக்கொண்டுவந்து தருகிறோம்" என்று செய்தி சொல்ல வைக்கின்றனர்.
 இது எதைக் காட்டுகிறது என்றால் சேரன் இன்னும் தனது எல்லையைவிட்டு படையுடன் வெளியேறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

 கன்னடர் மற்றும் மலையாளிகள் நாம் காட்டிய இலக்கியச் சான்றினை விட பழமையான தமது மொழியின் இலக்கியச் சான்றினைக் காட்டினாலொழிய நாம் மேற்கண்ட மலைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

Thursday, 29 March 2018

குடகு

62 ஆண்டுகள் முன்பு வரை கர்நாடகாவின் பாகமாக இராத பகுதி குடகு.

1956 ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்துடன் இணைய விரும்பிய பகுதி குடகு.

காவிரி உற்பத்தி ஆகும் இடமான தலைக்காவிரி இருக்கும் பகுதி குடகு.

கன்னடரை விட தனித்துவமான தேசிய இனமாக  இருந்தாலும் கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்டது குடகு.

காவிரிப் பிரச்சனைக்காக பதவியைத் தூக்கியெறிந்த அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அதற்கு தீ்ர்வாகக் கேட்டது தனி குடகு.

மொழியும் கலாச்சாரமும் அழிந்து கன்னடவர் குடியேற்றத்தையும் ஆதிக்கத்தையும் சந்திக்கும் பகுதி குடகு.

நாளைய தமிழர்நாட்டின் ஒரு மாநிலம் குடகு.

(படம் உதவி: Veera VK)

செய்தி: காவிரி நீர் கிடைக்க குடகு போராட்டததுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்
வியனரசு பேட்டி
நாம் தமிழர் கட்சி