Wednesday 5 October 2016

தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?

தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?

தில்லை அதாவது சிதம்பரம் சைவர்களின் இதயம்.
சிவனிய மதத்தின் தலைமை பீடம்.

மாலை ஆறுமணி.

கோவிலின் இரண்டு காண்டா மணிகள் கணீரென்று ஓசைகள் எழுப்பி சுற்றுப்புறத்தை ஒரு மைல் தூரம் அதிரவைக்கின்றன.

கோயிலை நெருங்கினால் காண்டா மணிகளின் ஓசையுடன் சிறுசிறு மணிகள் சேர்ந்துகொண்டு கிலுகிலுவென்று தம் பங்குக்கு ஒலியெழுப்புவதையும் கேட்க முடிகிறது.

இன்னும் நெருங்கினால் வேத முழக்கம் செய்யும் பார்ப்பனரின் குரலும் அந்தப் பேரோசையில் கலந்திருப்பது புலனாகிறது.

திடீரென்று அனைத்து ஓசைகளும் நின்றுவிடுகின்றன.
ஒரு பேரமைதி சூழ்கிறது.

ஒரு குரல் ஒலிக்கிறது.
பல ஆண்டுகள் பயிற்சி பெற்ற செம்மையான நடையில் பதிகங்களைப் பாடுகிறது.

என்ன மொழியில்?

ஆம், அது தமிழ்.

கோவிலின் உள்ளே நுழைகிறோம்.

பார்த்தால் தமிழில் பாடும் அந்த செம்மையான குரல் ஒரு பார்ப்பனப் பூசாரிகளில் ஒருவரின் குரல்.

ஆம். இப்பார்ப்பனர்கள்தாம் புகழ்பெற்ற தமிழ்ப் பார்ப்பனர்களான 'தில்லைவாழ் அந்தணர்கள்'.
அதாவது சோழியப் பார்ப்பனர்கள்.
தற்போது தீட்சிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
மொத்தமே 360 குடும்பம்தான் இருக்கும்.
அனைவரும் தில்லை கோவிலைச் சுற்றிய தேரடி வீதிகளிலேயே வாழ்கிறார்கள்.

சிறிது நேரத்தில் அப்பார்ப்பனரான் தமிழ் வேதமுழக்கத்துடன் மீண்டும் சிறுசிறு மணிகளும் காண்டா மணிகளும் மங்கள இசைக்கருவிகளும் சேர்ந்துகொள்கின்றன.

நாத்திகருக்கும் பரவசமூட்டும் அந்த இசை வழிபாடு உச்சகதிக்கு போய் அரைமணிநேரத்தில் முடிவடைகிறது.

தில்லை நடராசர் கோவிலுக்கு போனால் நாள்தோறும் மாலை ஆறுமணிக்கு, ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் இந்த பூசை நடக்கும்.

இதிலே பாடப்படும் தமிழ் மந்திரம் மற்ற எல்லா மனிதர்கள் காதிலும் விழும்.
ஆனால் 'பார்ப்பன வெறுப்பு' விசம் ஊட்டப்பட்ட அதிமுற்போக்கு மனிதர்களின் காதில் மட்டும் இது கேட்கவே கேட்காது.
பார்ப்பனர் தமிழ் ஓதினால் போதும் அதிமுற்போக்குவாதியின் காதுகள் சட்டென்று செவிடாகிவிடும்.

இவர்கள் காதுகள் வேறு எப்போதெல்லாம் செவிடாகும் தெரியுமா?

இரவு ஒன்பது மணிவாக்கில் நடக்கும் அர்த்த ஜாம பூஜையின் போது நடராஜரின் பாதுகைகளை பள்ளியறைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும்போதும் தீட்சிதர்கள் தமிழ் பதிகங்கள் பாடுவார்கள்.
அப்போது செவிடாகிவிடும்.

தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கொண்டுவரப்பட்டு அனைத்து சாதி பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்.
திருவெம்பாவை தமிழ்தான்.
அப்போதும் அதிமுற்போக்காளர் செவிடாகிவிடுவார்.

தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்.
இது சிதம்பர ரகசியம் அல்ல. வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு.
சிதம்பரத்தில் வாழும் யாரையும் கேட்டுப்பாருங்கள்.

ஆனால் அதிமுற்போக்காளரை அங்கே கொண்டு நிறுத்தி கேட்டாலும் அவர் மட்டும் மறுப்பார்.
ஏனென்றால் அவர் காதுதான் அப்போது அவிந்துபோய்விடுமே!

என்றால் சிதம்பரம் தீட்சிதர்கள், ஆறுமுகசாமி என்ற ஓதுவாரை தமிழில் பாட விடாமல் தடுத்தார்கள் என்று செய்தி வந்ததே?!

தமிழ் நீஷபாஷை என்று தீட்சிதர்கள் கூறியதாக கேள்விப்பட்டோமே?!

ஆம். அப்படியெல்லாம் பரப்புரை செய்பவர்கள் 'பார்ப்பன எதிர்ப்பு' விசத்தை வியாபரம் செய்பவர்கள்.

ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்ததற்குக் காரணம் அவர் கருவறை இருக்கும் மேடையான திருச்சிற்றம்பலத்தில் நின்று பாடுவேன் என்று அடம்பிடித்ததுதான்.

தீட்சிதர்கள் கருவறை இருக்கும் மண்டபத்தில் ஏறி பாட தடை எதுவும் கூறவில்லை.
அவர்கள் கூறுவது கருவறை மேடைக்கு வரக்கூடாது என்பதுதான்.

ஆக இங்கே பிரச்சனை தமிழ் இல்லை.
திருச்சிற்றம்பலத்தில் ஏறி நாள்தோறும் மாலை தமிழில்தான் தீட்சிதர் பாடுகிறார்.

இதை தமிழுக்கு ஏற்பட்ட இழிவாக ஏன் திரிக்கிறார்கள்?
அந்த திரிப்பு எப்படி எடுபடுகிறது?

திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் இது எடுபட வழிசெய்துள்ளது.

சாதிப் பெயர்கள் வைத்து எத்தனையோ கடைகள் உள்ளன.
ஆனால் 'ஐயர் கபே' என்று கடை வைத்தால் அந்த கடை முன்னே சென்று படுத்து உருண்டு பெயரை மாற்றச்செய்வார்கள்.

அரசியலுக்காக இதைச் செய்கிறார்கள்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்றபின் அவர் பையில் வைத்திருந்த சீட்டில் பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜை பஞ்சமன் என்று வடமொழி வடிவத்தில் எழுதிவிட்டார் (பஞ்ச்சம் = ஐந்தாவது) உடனே பார்ப்பான் வெள்ளைக்காரனைக் கூட கீழ்சாதியாகப் பார்க்கிறான் என்று ஆங்கில அடிவருடி கொள்கையையுடைய திராவிடவாதிகள் பரப்புரை செய்தனர்.

மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றைக் கூறுகிறேன்.

இராஜாஜி தன் ஆட்சிக்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் ஆசிரியரின் பணிநேரத்தை பல வகுப்பு மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார்.
ஆசிரியர் இல்லாத நேரத்தில் என்ன செய்யலாம் என்று பேட்டியில் கேட்டதற்கு "வீட்டிற்குச் சென்று பெற்றோருக்கு உதவிகள் செய்யலாம்" என்றார்.

அவ்வளவுதான்.
"பார்ப்பான் மனுதர்மப்படி குலத்தொழிலை செய்யச் சொல்லிவிட்டான்" என்று பொய்பிரச்சாரம் செய்து செய்தே அவரை பதிவியிலிருந்து இறங்கினார் அண்ணாதுரை.

இன்று அத்திட்டத்தின் பெயரே 'குலக்கல்வித் திட்டம்' என்றாகிவிட்டது.
ஆனால் அந்த திட்டம் இராசாசி போட்ட திட்டம் கிடையாது.
குலம் பற்றி அதில் எதுவுமே கூறப்படவில்லை.

இதுபோல பார்ப்பனர் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடைக்கமுடியும்.

ஆனால் பார்ப்பனர் தமிழர் என்று கூறினாலே காரணமே இல்லாமல் பல நல்லவர்களுக்கும் கூட கண் அவிந்து காது திருகி மூளை மழுங்கி போய்விடுகிறது.

ஆகவே தமிழரே, பார்ப்பனர் தமிழனத்தின் ஒரு குலத்தினரே.

தமிழ்ப் பார்ப்பனர்களை பிறமொழிப் பிராமணருடன் குழப்பவேண்டாம்.

தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாத்தோர் இந்த தில்லை சோழியப் பார்ப்பனர்கள்தான்.
இராசராசன் அவற்றை மீட்ட கதை தெரியும்தானே?

அந்நிய படையெடுப்பின்போது நடராசர் சிலையை பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று மறைத்து வைத்து பாதுகாத்ததும் இதே தில்லைவாழ் சோழியப் பார்ப்பனர்கள்தான்.
எத்தனையோ கொடுமைகளையும் கொலைகளையும் சந்தித்த பிறகும் அவர்கள் சிலைகளை மறைத்துவைத்த இடத்தைக் காட்டிக்கொடுக்கவில்லலை.

சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே எட்டு சிலைகள் இவ்வாறு மறைத்துவைக்கப்பட்டிருந்ததைப் பின்னர் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் (ஜோப் தாமஸ், ‘திருவெண்காடு ப்ரோன்ஸ்’ (Tiruvengadu Bronzes), க்ரியா, 1986).

மாலிக் கபூர் படையெடுப்பை ஒட்டிய குழப்பமான காலகட்டத்தில் உமாபதி சிவாச்சாரியர் என்பவர் சாதி எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் ‘பேதமற தீக்கை’ (பேதமற்ற தீட்சை) தந்து தீட்சிதர் ஆக்கினார்.
முதலில் அவரை எதிர்த்த தீட்சிதர் பிறகு மனம் மாறி உமாபதி சிவாச்சாரியாரை மீண்டும் திருக்கோயில் பூசனைகளுக்கு அழைத்தனர்.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (1400 - 1700) சிவன் கோயில்கள் புறக்கணிக்கப்பட்டன.
பல சைவ கோவில்கள் அரசு ஆதரவின்றி அழிந்துபோயின.
அப்போது தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயிலை தாமே பொறுப்பெடுத்துக் கவனித்துக்கொள்ளத் தொடங்கினர்.

கிறித்துவ மிஷனரிகளின் சூழ்ச்சியால் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாடார்களுக்கு ஆதரவாக தீட்சிதர்கள் சாட்சி கூறியதும் அதனால் (மிஷனரிக்கு ஆதரவான) பிரிட்டிஷ் நீதிபதிகளால் கடுமையான அவமதிப்புக்கும் ஆளானார்கள்.
(தோள்சீலைக் கலகம், ‘சிஷ்ரி’ (SISHRI), 2010)
நாடார்கள் லண்டன் வரை மேல்முறையீடு செய்தும் அநியாயமான தீர்ப்பே வந்தது.

எனவே தீட்சிதர்கள் எந்த அரசாங்கத்தையும் நம்புவதில்லை.
அதனால்தான் கோவிலை அறநிலையப் பொறுப்பில் ஒப்படைக்க மறுக்கிறார்கள்.

அதற்காக தீட்சிதர்கள் செய்வதெல்லாம் சரியென்று கூறமுடியாது.

தீட்சிதர்கள் மீது இன்னும் எவ்வளவோ விமர்சனங்கள் உண்டு.

அவர்கள் சைவ ஆகமத்தை பின்பற்றாது பதஞ்சலி முனிவர் வகுத்த முறையை பின்பற்றுகின்றனர்.

கோவில் நகைகள் காணாமல் போனது.

காசு கொடுத்தால் சிறப்பு பூசை.

மாத சந்தா கொடுத்துவிட்டால் கோவிலுக்கு வராமலே அர்ச்சனை செய்து பிரசாதம் பெறும் வசதி செய்து தருவது.

ஆண்களை சட்டையைக் கழற்றச் சொல்வது.

பிறமதத்தாரை உள்ளே விடாதது.

திருமணம் ஆனால்தான் தீட்சை பெற்று தீட்சிதர் ஆகும் தகுதி கிடைக்கும் என்பதால் இளவயது திருமணம் செய்வது.

என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் உள்ளன.

அதைப் பற்றி நான் இங்கே கூறவரவில்லை.

நான் கூறவருவது தீட்சிதர்கள் தமிழுக்கு எதிரானோர் இல்லை என்பதைத்தான்.

ஆகவே தமிழர்களே!
திராவிடத்தை எதிர்க்கும் அதே நேரத்தில் தமிழரல்லாத அந்த திராவிட வந்தேறிகள் ஊட்டிய பார்ப்பனருக்கு எதிரான சாதிவெறிக்கு நீங்கள் இரையாகி உள்ளீர்கள்.

இனியாவது அந்த விசத்தைக் கக்குங்கள்.

பார்ப்பனர் தரப்பு நியாயத்தை சிந்தியுங்கள்.

பார்ப்பனரை ஏறெடுத்துப் பாருங்கள்.

தகவல்களுக்கு நன்றி
mugamoodi. blogspot. in/2006/07/vs. html

No comments:

Post a Comment