வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்
தஞ்சை பெரியக்கோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழன் கல்வெட்டு, தேவாரம் பயிற்றுவித்த ஆசிரியருக்கு தந்த குருதட்சணையை விவரிக்கிறது.
இது அவரது 19 ஆட்சியாண்டில் அதாவது கி பி 1031 இல் வெட்டப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் " திருமன்னி வளர " என்று தொடங்கும் நெடிய மெய்க்கீர்த்தி தொடரில் இந்த செய்தியும் இடம்பெறுகிறது .
இராசேந்திர சோழன் தனது 19 வது ஆட்சியாண்டில் 242 ம் நாளில் இந்த கொடை உத்தரவை பிறப்பித்தார்.
அதில் கங்கைகொண்ட சோழபுரத்து கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் முடிகொண்ட சோழன் திருமாளிகையின் வடபக்கத்தில் தேவாரம் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்று இயங்கியதும்
அக்கல்லூரியில் அரசர்களின் புதல்வர்கள், அமைச்சர், படைத்தலைவர் போன்ற அதிகாரிகளின் புதல்வர்களும் இன்னிசை கருவிகளுடன் அமைதியாக தேவாரம் கற்றுக்கொண்டதும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தேவாரத்தை பயிற்றுவித்த ஆசிரியரான குரு சர்வசிவ பண்டிதருக்கும்
அவரின் சீடர்களாக இருந்த ஆரிய தேசம், மத்திய தேசம், கௌட தேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும்
நிறைந்த அளவான ஆடல்வல்லான் எனும் மரக்காலால் ஆண்டுதோறும் 2000 கல நெல்லை தட்சணையாக க் கொடுத்தார் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது .
இந்த உத்தரவானது சூரிய சந்திரர் உள்ள அளவும் நிலை பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்த கல்வெட்டை செம்பியன் விழுப்பத்தரையன் என்பவன் எழுதியிருக்கிறான்.
இதில் சுவையான செய்தி அந்தக் கல்லூரியில் தேவாரம் பயிற்றுவித்த சர்வசிவ பண்டிதர் தமிழ் நாட்டை சேர்ந்தவராகத் தெரியவில்லை.
அவரது சீடர்களும் வட புலத்தை சேர்ந்தவராகவே உள்ளனர்.
இடைக்காலச் சோழர் காலத்திய சைவம் பாசுபதம், காளாமுகம், ஆகிய பல பிரிவுகளுடன் படர்ந்து இருந்தது தெரியவருகிறது .
சோழ நாட்டுடன் அன்றைய இந்தியாவின் பல வட மாநிலங்களும் ஆன்மீக ரீதியில் தொடர்புடன் விளங்கியது தெரியவருகிறது.
வட மாநிலத்தவரும் நமது தேவாரம் முதலியவற்றை பயிற்றுவிக்கும் விதத்தில் அவைகளை நன்கு பயின்றிருந்தனர் என்பதும் தெரிகிறது .
[கல்வெட்டு செய்தி:
முனைவர் ஜெகதீசன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டு இயல் கூறுகள்
பக்கம் 89]
பதிவர்: Annamalai Sugumaran
No comments:
Post a Comment