Tuesday 7 January 2020

கதிர்காமம் நமதே














கதிர்காமம் நமதே!

 இலங்கையில் தென்கோடியில் முழுக்க சிங்களவர் நிறைந்திருக்கும் பகுதியில் தமிழீழ எல்லைக்கு சற்று அப்பால் இருக்கிறது கதிர்காமம்.

 இங்கே இருக்கும் முருகன் கோவில் உலகப்புகழ் பெற்றது.

 திருப்பதி, காளத்தி, சபரிமலை போல வேற்றினத்தார் குடியேறி தமிழரிடமிருந்து ஆக்கிரமித்துக் கொண்ட மற்றொரு புனித மண்.

 இலங்கையில் பௌத்த மதவெறி தலைதூக்கும் முன் சிங்களவரும் தமிழரும் தமது மதம் தாண்டி பிறமத தெய்வங்களையும் வணங்கியே வந்துள்ளனர்.
 இசுலாமியர் கூட கதிர்காமம் வந்து வணங்கியுள்ளனர்.
 50 ஆண்டுகள் முன்புவரை கூட தீமிதிக்கும் சடங்கில் பங்கெடுத்துள்ளனர்.
 கைவிடப்பட்ட சிறிய தர்கா ஒன்று கோவில் வளாகத்தினுள் இருக்கிறது.

 கதிர் என்றால் சூரிய ஒளி.
காமம் என்றால் ஊர்.

 கதிர்காமம் மிகப்பழமையான பின்னணியைக் கொண்டது.
 என்றாலும் சான்றுகளின் படி தமிழருக்கு சாதகமான ஆதாரங்களே சிங்களவர் முன்வைக்கும் சான்றுகளை விட பழமையானவை.

 கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் தாட்டியன் என்பவனின் கல்வெட்டு (Epigraphia Zeylonica, Vol 3, PP 216 - 219) கதிர்காமத்தில் உள்ளது.
 இதில் இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அளித்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

   இலங்கையில் முருகன் பற்றிய முதல் குறிப்பு, கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூளவம்சத்தில் வருகின்றது.
 அதாவது இரண்டாம் காசிபனின் (கி.பி 652 – 661) மகனான மானவர்மன், குமாரனை வழிபட்ட செய்தி அதில் உண்டு.

 கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் ஒரு முக்கிய சான்று.

 அதில்,
 கருங்குரங்குகள் பலா மரத்தின் சுளைகளைக் கீறி சண்டையிட்டு உண்டபடி,
 மாமரங்களிலும் வாழை மரங்களிலும் பாயும்
அத்தகைய அழகிய ஈழநாட்டில் திர்காமம் அமைந்திருக்கிறது.
 அந்தக் கதிர்காமம் மிகப்பழைமையான ஊர்.
 அதனருகே வடக்கிலிருந்து வந்து பாயும் அழகான ஆறு உள்ளது.
 அதன் அலைகள் கதிர்காமத்தில் வீசுகின்றன.
 அந்த ஆறு, மாணிக்கங்களை உருட்டியபடி சரிவாக ஓடிவருகின்றது.
 யானைகள் நிறைந்த மலையில் வள்ளியை மணந்த பெருமான், பொன்மாணிக்க வடிவில் கதிர்காமத்தில் அமர்ந்திருக்கிறான்.
 அவன் வேல் தரித்தவன். அவ்விறைவனை அனுமான் வணங்கியுள்ளான்.
 ஆயிரம் கோவில்கள் இருக்க, கோடி மலைகள் இருக்க அவற்றையெல்லாம் விடுத்து கதிர்காமத்தில்தான் அடியவர்க்கு இரங்கிய முருகன் வருகிறான்.
 என்றெல்லாம் பாடுகிறார் அருணகிரியார்.

 திருப்புகழில் கதிரகாமம், கதிர்காமம், கதிரகாம மாநகர், கதிரகாம மூதூர், கதிர்க்காமம், கதிரகாமக் கிரி, கதிரகாம வெற்பு என்றெல்லாம் இத்தலம் போற்றப்படுகிறது.

 மேலும் அருணகிரிநாதர்,
கதிர்காமக் கந்தன் “வனமுறை வேடர் அருளிய பூசையில்” மகிழ்ந்தவன் என்று சொல்கிறார்.
 வாய்கட்டிப்பூசை, திரைமறைத்த கருவறை, அருவ வழிபாடு முதலான இன்றைய வழிபாட்டு முறைகளை அவர் பாடவில்லை.
 பழங்குடிகளான வேடர்களின் வழிபாடு பற்றி கூறியுள்ளார்.

 ஆனால் கோவிலும் சிலையும் இருந்துள்ளதை அவர் பாடியுள்ளார்.
 “கனகமாணிக்க வடிவம் கொண்டவன்” என்றும்,
 “கதிர்காமத்தின் மத்தியிலுள்ள சோதி மண்டபத்தில், இந்திரநீல மாணிக்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் வள்ளி, தெய்வானை, வேல் என்பன அருகிருக்க கதிர்காம நாதர் வீற்றிருக்கிறார்” என்றும் பாடியுள்ளார்.

 ஆங்கிலேய ஆட்சியின்போது இக்கோவிலை அரசிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர் வலியுறுத்தியபோது சர். பொன்னம்பலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தடுக்கப்பட்டது.

 கதிர்காமத்துக்கு 1819இல் வருகை தந்த “சர் ஜோன் டேர்வி” எனும் ஆங்கிலேயர்,
 “கிளர்ச்சிக் காலத்தில் இங்கிருந்த விக்கிரகம் அகற்றப்பட்டு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
 எனினும் இன்றும் முன்பு போலவே கருவறையை மிகக் கடுமையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.”
 என்கிறார்.
 அவர் சொல்கின்ற கிளர்ச்சி 1818இல் இலங்கையையே உலுக்கிய ஊவா - வெல்லசை கலவரம் ஆகும்.

 இந்த கலவரத்தின்போது சிங்களவர்கள் கதிர்காம ஆலயத்தைக் கைப்பற்றினர்.
 தமிழ் அந்தணர்கள் கவர்னர் ராபர்ட் பிரவுன்ரிக் இடம் முறையிட்டதன் பேரில் சிங்களர்களை விரட்டிய ஆங்கிலேயர் மீண்டும் அந்தணர்களிடம் ஒப்படைத்து இராணுவ பாதுகாப்பு கொடுத்தனர்.

 சில காலம் கழித்து இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டதும் மீண்டும் சிங்களர் இதைக் கைப்பற்றினர்.

 இப்படித்தான் கதிர்காமம் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

 ஆங்கிலேயர் வெளியேறிய பிறகு சிங்களவர்கள் கோவிலுக்கு வரும் மலைப்பாதையை அடைத்து பிரச்சனை செய்தனர்.

 இதனால் தத்தாராமகிரி சுவாமிகள் என்பவரது தலைமையில் ஆலயத்தை மீட்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 1946 இல் அவர் தலைமையில் மலையேறிய தமிழர்கள் தாக்கி விரட்டப்பட்டனர்.

 1960 களில் அரசாங்கம் இப்பகுதியை அபிவிருத்தி பிரதேசம் என்று அறிவித்தது.

 அதன்பிறகு தத்தாராமகிரி இருப்பிடமான கொழும்பில் உள்ள இராமகிருஷ்ண மடத்தை பல முறை தாக்கிய சிங்களர்கள் 1970 இல் இராணுவத்தினர் ஆதரவுடன் முற்றிலுமாக கொள்ளையடித்தனர்.

 1972 இல் தத்தாராமகிரி கோவிலைச் சுற்றி கட்டியிருந்த கட்டிடங்கள் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டது.
 கோவிலைச் சுற்றி தத்தாராமகிரி வசம் இருந்த நிலங்களையும் பிக்குகள் அரச ஆதரவுடன் ஆக்கிரமித்தனர்.

 சிங்கள பௌத்த பேரினவாதம் தலைதூக்கிய பிறகு ஜே.ஆர். ஜெயவர்த்தனா தேர்தல் வாக்குறுதியில் தனது முதல் கையெழுத்தே கதிர்காமத்தை சிங்களருக்கு எழுதி கொடுத்து போடுவதாக இருக்கும் என்று வாக்களித்தார்.

 1978 இல் இது பற்றி வெளியான செய்தியில் கதிர்காமத்தைக் கைப்பற்றி பௌத்த விகாரையாக மாற்றிக் கொண்டிருந்த சிங்கள மடாதிபதிகளுக்கு அக்கோவில் மற்றும் அதைச்சார்ந்த 200 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுப்பதாகவும்
 அதுவும் தலைமை மடாதிபதி 'ரத்மலானே ஸ்ரீ சித்தார்த்த தேரோ' என்ற பிக்குவின் பெயருக்கு தனிச்சொத்தாக கொடுப்பதாகவும் இருந்தது.

 ஆனால் பெரும் முயற்சிசெய்து இதை நடைபெற விடாமல் தமிழ் அரசியல்வாதிகள் அடங்காத் தமிழர் சுந்தரலிங்கம் தலைமையில் செயல்பட்டு தடுத்துவிட்டனர்.

 முதலில் நுழைவாயிலில் இருந்த தமிழ் ஓம் அகற்றப்பட்டது.

 இன்று கதிர்காமம் கோவில் நுழைவாயிலில் கொட்டையான சிங்கள எழுத்துகளில் ருகுணு மகா கடரகம என்று எழுதப்பட்டிருக்கிறது.

 உள்ளே நுழைந்ததும் காணப்படும் பிள்ளையார் இப்போது கண தெய்யோ ஆகிவிட்டார்.

 விஷ்ணு சிலை அகற்றப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

 கோவிலின் பத்துநாள் திருவிழா ஒவ்வொரு முறையும் பல மாற்றங்களை சந்தித்துவருகிறது.

 சிங்களவர் இவ்வளவு தீவிரமாக உரிமை கொண்டாட என்ன காரணம்?

 கதிர்காமம் சிங்களவருக்கு சொந்தம் என்பதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள் இரண்டு.

 ஒன்று,
 எல்லாளனை வெல்வதற்காக உரோகண மன்னன் துட்டகைமுனு கதிர்காமக் கடவுளிடம் நேர்த்திக்கடன் வைத்து, வென்றபின் இக்கோவிலைக் கட்டியதாக 'கந்த உபாத' எனும் அண்மைய கால சிங்கள நூலில் சொல்லப்பட்ட கட்டுக் கதை.

 இன்னொன்று மகாசேன மன்னன் இறந்தபின்னர், இங்கு அவனுக்காக அமைக்கப்பட்ட நினைவாலயமே கதிர்காமம் என்கிற கட்டுக்கதை.

 இந்தக் கதைகள் எதுவும் பழைமையான நூல்கள் எதிலும் காணப்படவில்லை.

 கதிர்காமம் 'காஜரகாமம்' என்ற பெயரில் இரு தடவை மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 முதல் தடவை, சங்கமித்தை கொணர்ந்த வெள்ளரசுக் கிளையை நாட்டும் சடங்கில் காஜரகாம – சந்தனகாம சத்திரியர்கள் கலந்துகொண்டதைச் சொல்கின்றது.

 அடுத்தது தப்புல மன்னன், காஜரகாமத்தில் பௌத்த மடம் அமைத்தது பற்றிய செய்தி.

 [பௌத்தம் தமிழராலும் பின்பற்றப்பட்ட மதம்.
 மகாவம்சத்தில் சிங்களவர் பற்றி எதுவுமே இல்லை.
 அதில் வருவதெல்லாம் பௌத்தர் மற்றும் பிற சமயத்தினருக்குமான மோதல் மற்றும் பௌத்த சமயத்தின் இரு பிரிவுகளுக்கு இடையேயான மோதல் போன்றவையே.
 இதில் வரும் பௌத்தத்தை சிங்களமாக திரிக்கின்றனர்]

 கதிர்காமம் முழுக்க சிங்கள மயமாகிவிட்டாலும் இன்றும் அது முருகன் கோவில்தான்.

 அதில் வழிபாட்டு முறைகள் சிறிது திரிந்துவிட்டாலும் சிங்கள - பௌத்த பேரினவாத சக்தியால் அது முழுமையாக விழுங்கப்படவில்லை.

 மணிமேகலை காலம் முதல் ராஜராஜன் காலம் வரை பௌத்தத்தை பின்பற்றி வந்த தமிழர்கள் சைவ வைணவ எழுச்சிக்குப் பிறகு அம்மதத்தை முழுமையாக கைவிட்டபோது சிங்களவர்கள் அதைப் பற்றிக்கொண்டு பௌத்த வரலாற்றையே தமதாக்கிக் கொண்டனர்.

 கதிர்காம முருகனை தமதாக்கிக் கொண்டு முருகனாக ஏற்கவும் முடியாமல் பௌத்தமாக திரிக்கவும் முடியாமல் அல்லாடுகிறார்கள்.

 இதேபோல நம் கையைவிட்டுப்போன அனுராதபுரம் நம்முடையதுதான் என்பதற்கு அபயகிரி பௌத்த விகாரையில் காணப்படும் கிபி 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு ஒன்று சான்றாக உள்ளது.

 கதிர்காமத்தைப் பொறுத்தவரை அது தோன்றிய காலத்தைய பழமையான சான்று  இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை.

 கதிர்காமத்தை மீட்டு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தினால் கட்டாயம் ஒரு வலுவான சான்று நமக்குக் கிடைக்கும்.



No comments:

Post a Comment