Showing posts with label பண்பாடு. Show all posts
Showing posts with label பண்பாடு. Show all posts

Thursday, 30 August 2018

பெறாத பெற்றோர்

பெறாத பெற்றோர்

நேற்று உறவினர்கள் கூடி  எங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று எங்கள் மகளுக்கு மொட்டை போட்டு தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தினோம்.
சர்க்கரைப் பொங்கலிட்டு அனைவருக்கும் அளித்து உண்டோம்.
தமிழர் பண்பாட்டில் காதுகுத்து சடங்கானது மிக முக்கியமான ஒன்றாகும்.

இது கிறித்துவர்களின் ஞானஸ்நானம் (baptism),
யூதர்களின் பிரிட் மிலா (brit milah) மற்றும்
சீனர்களின் காண் டீ (gan die) அல்லது கை மா (kai ma) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

அதாவது ஒரு குழுந்தைக்கு பெற்றோருக்கு அடுத்த நிலையில் ஒரு உறவை நியமிப்பது.
அவர் அந்த குழந்தையின் "பெறாத  பெற்றோர்" ஆவார்.

தமிழர் பண்பாட்டில் இந்த உறவு "தாய்மாமன்" ஆவார்.

பெற்றோருக்கு அடுத்து ஒரு குழந்தையைக் காக்கும் பொறுப்பு தாய்மாமனுடைது ஆகும்.

தாய்மாமனிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து சுற்றத்திற்கு அதனை அறிவிக்கும் சடங்குதான் தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தும் விழா.

கிறித்துவ நாடுகளில் குழந்தைக்கு ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு அளித்து குழந்தையின் god father ஆக ஒருவர் நியமிக்கப்படுவார். (பெண் என்றால் god mother).
இந்த ஞானத் தந்தை குடும்ப உறுப்பினராகவோ அல்லது குடும்ப நண்பராகவோ இருக்கலாம்.

யூத மத வழக்கத்தில் சன்டெக் (santek) என்று அழைக்கப்படும் "பெறாத பெற்றோர்" மடியில் வைத்து குழந்தையின் ஆணுறுப்பின் முன்தோல் அகற்றும் சடங்கு நடக்கிறது.

சீனரில் அனைத்து மதத்தினரும் பெறாத பெற்றோர் நியமிக்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.
ஆனால் பெரும்பாலும் தாத்தா பாட்டி அல்லது வயது முதிர்ந்தோரை நியமிக்கின்றனர்.

நமது வளைகாப்பு சடங்கு ஐரோப்பிய நாடுகளில் Baby shower எனும் சடங்குடன் ஒத்துப் போகிறது என்பது கூடுதல் தகவல்.

நகர்ப்புறங்களின் மறைந்துவரும் இத்தகைய சடங்குகளை அதன் முக்கியத்துவம் உணர்ந்து அழியாமல் காப்பது நமது கடமையாகும்.

Saturday, 14 July 2018

தாய்மாமன் கணவனாகலாமா?

தாய்மாமன் கணவனாகலாமா?

'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தில் அக்கா மகளை மணம் செய்ய மறுக்கும் கதாநாயகனின் குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால், அக்காவின் மகளைத் திருமணம் செய்வது தமிழரின் பண்பாடே இல்லை.

அவ்வாறு செய்தால் உறவுமுறை குழம்பிப் போகும்.

உறவுமுறையில் அத்தை அல்லது மாமன் முறையில் திருமணம் செய்வதுதான் தமிழரது பண்பாடு.

ஏனப்படி?!

நாம் பழமையான இனம்.
அப்போது மக்கட்தொகை மிகவும் குறைவு.
அதனால் உறவுமுறைக்குள் திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

ஒரு ஆண்குழந்தையும் ஒரு பெண்குழந்தையும் ஒன்றாக ஒரே வீட்டில் வளர்ந்தால் அவர்களுக்குள் அண்ணன்-தங்கை உணர்வுதான் ஏற்படும்.
இதுதான் இயற்கை விதி.
(மேற்கண்ட திரைப்படத்திலும் இதைக் கூறியுள்ளனர்).

ஒரு எடுத்துக்காட்டு கூற முடியும்.
மேலை நாட்டிலே தகப்பன் பெயரே தெரியாத ஒருத்தி தன் தந்தையையே காதலித்து பிறகு அந்த உண்மை தெரியப்பெற்று மனநல மருத்துவர்களிடம் செல்கிறாள்.
அவர்கள் அவ்விருவரையும் ஒரே வீட்டில் தந்தையும் மகளுமாக சில காலம் வாழச் சொல்கிறார்கள்.
இதன் மூலம் பிரச்சனை சரிசெய்யப்பட்டதை டிஸ்கவரியில் காட்டினர்.

தமிழரின் முறைப்படி அத்தையும் மாமியாரும் ஒரே முறை.
அங்கே சித்தியின் கணவருக்கும் தந்தையின் தம்பிக்குமே வெவ்வேறு உறவுமுறைப் பெயர்கள்.

வடக்கே அவ்வாறு கிடையாது.
மலையாளிகளிலும் அவ்வாறு கிடையாது.
(ஆனால் சிங்களவர் நமது முறையை பின்பற்றுகின்றனர்)

வடயிந்தியாவில் உறவுமுறைக்குள் திருமணம் செய்வது இல்லை.
அங்கே கோத்திரம் என்றொரு முறை உள்ளது.
அது தந்தை வழி வருவது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வதில்லை.
வெவ்வேறு கோத்திரம் என்றாலும் மணமக்கள் இருவரின் தாத்தா வரை ரத்தசொந்தம் இருக்கக்கூடாது என்பது விதி.
அதாவது அவர்கள் பழமையான இனம் இல்லை.
மக்கட்தொகை ஓரளவு பெருகிய நிலையில் உருவான இனம் ஆதலால் இப்படி செய்யமுடிகிறது.
(பிராமணர்கள் கோத்திர முறை அவர்களது பெண்ணெடுத்துப் பெண்கொடுக்கும் 'மாட்டுப்பெண்' அதாவது 'மாற்றுப்பெண்' முறையால் ஏற்பட்டிருக்கலாம்.
மேலும் சிறுபான்மை சாதி என்பதால் நெருங்கிய உறவினைத் தவிர்க்க கோத்திர முறையை ஏற்றிருக்கலாம்)

அரேபியர் போன்ற பாலைவன இனங்களில் மக்கட்தொகை மிகவும் குறைவு.
எனவே அங்கே சித்தப்பா பெரியப்பா மாமா என எந்த குடும்பத்திலும் மணம் செய்கிறார்கள்.

ஐரோப்பாவில் உறவுமுறைக்குள் திருமணம் செய்வது ஆங்காங்கே நடந்துள்ளது.
சிறந்த எடுத்துக்காட்டு ஹிட்லர் குடும்பம்.
அவரது தந்தை அவரது தாயின் தாய்மாமன் ஆவார்.

தமிழ்ப் பண்பாட்டில் தாய்மாமன் தந்தைக்கு அடுத்த நிலையை வகிக்கிறார்.

தமிழகத்தில் 50 ஆண்டுகள் முன்புவரை கூட பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களே இருந்தன.
அண்ணனும் தம்பியும் ஒரே வீட்டிலேயே இருந்தார்கள்.
அவர்களுடைய பிள்ளைகள் ஒன்றாகவே வளர்ந்தன.
அவர்களுக்குள் உடன்பிறப்பு என்கிற எண்ணமே மேலிடும்.

பெண்கள் பெரும்பாலும் வேறொரு வீட்டிற்கு வாழ்க்கைப் பட்டிருப்பர்.
அவளது குழந்தைகள் அவள் பிறந்த வீட்டிலிருந்து பிரிந்தே வளர்வதால் பிற்பாடு பிறந்த வீட்டுடன் சம்பந்தம் செய்துகொள்ளத் தடை இல்லை.

சரி சித்தி மற்றும் பெரியம்மா கூட வேறு ஊரில்தான் வாழ்க்கைப் பட்டிருப்பர்.
அவர்கள் பிள்ளைகளும் எப்படி உடன்பிறப்பு ஆயினர்?

அப்போது அக்கா-தங்கை இருவரும் ஒரே வீட்டில் அல்லது ஒரே ஆணுக்கு வாழ்க்கைப்பட்டது  பரவலாக நடந்தது.

அப்போதெல்லாம் ஆண்கள் மக்கட்தொகை குறைவு.
பெண்கள் அதிகம்.
(காரணம் அன்றைய ஆபத்து நிறைந்த வாழ்க்கை மற்றும் போர் போன்ற காரணங்களால் ஆண்கள் அடிக்கடி இறந்தனர்.
இன்றும்கூட ஆண்களுக்கே அதிகம் இதயவலி வருகிறது.
இன்றும் பெண்களின் சராசரி ஆயுளே ஆண்களை விட அதிகம்)
எனவே இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்வது சர்வசாதாரணம்.

எனவே அக்கா-தங்கை பெற்ற பிள்ளைகளும் ஒரே வீட்டில் வளர்ந்தனர்.

அதனால் பெரியவர்கள் திருமண விதிகளை வகுக்கும்போது உடன்பிறந்தோர் ஒரே பாலினம் என்றால் அவர்கள் சம்பந்தம் செய்துகொள்ள தடை விதித்தனர்.
அதுவே இன்றும் தொடர்கிறது.

தெலுங்கரில் பிராமணரும் தேவதாசிகளும் (தேவரடியார் அல்ல) கலந்து ஒரு சாதி தோன்றியது.

இவர்களின் தொழில் விபச்சாரம்.
இவர்கள் தமது குடும்ப்ப் பெண்கள் மூலம் பகலில் ஆடலும் இரவில் விபச்சாரமும் செய்துவந்தனர்.
இச்சாதியில் உறவுமுறை என்றெல்லாம் எதுவுமே கிடையாது.
முதலில் சகோதரியை வைத்து விபச்சாரத் தொழிலைத் தொடங்கும் ஆண்கள்  பிறகு அவளது மகளை வைத்து விபச்சாரம் செய்தனர்.
அதற்கு வசதியாக அவளைத் திருமணம் செய்துகொண்டனர்.
இப்படி ஏற்பட்டதே அக்கா மகளை மணமுடித்தல் முறை.
பிற்பாடு இவர்கள் பதவி, அதிகாரம், சொத்து என செல்வாக்கு பெற்றனர் (இன்றும் அவ்வாறே).

இவர்களைப் பார்த்து தமிழரும் முறை தவறி அக்கா மகளை மணமுடிக்கத் தொடங்கினர்.
(எல்லா சாதிகளும் செய்வதில்லை.
சில சாதிகளில் இது சமீப காலமாகத்தான் நடக்கிறது)

விஞ்ஞானம் வளரத் தொடங்கியபோது உறவுமுறையில் திருமணம் செய்வது சரியா தவறா என்ற விவாதம் உலகம் முழுவதும் எழுந்தது.
இன்றும் அமெரிக்க மாகாணங்களில் பாதி உறவுமுறைத் திருமணங்களை அங்கீகரித்தும் பாதி தடைசெய்தும் சட்டமியற்றியுள்ளன.

நெருங்கிய உறவில் திருமணம் செய்வது பலவீனமான சந்ததியைத் தோற்றுவிக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.

தமிழர்கள் தொடக்கத்திலிருந்தே உறவுமுறையில் திருமணம் செய்துவந்துள்ளனர்.
உறவுமுறையில் மணமுடிக்க இயலாத சூழலில்தான் வெளியே பெண் எடுக்கின்றனர்.
  தமிழர்களின் இந்த பண்பாடு ஒற்றுமையான, நிலைத்த, "குடும்பங்களின் கூட்டு அமைப்பிற்கு" ஆதாரமாக உள்ளது.
சொந்தம் விட்டுப் போகாமல் இருக்கவும் சொத்து கைமாறாமல் இருக்கவும் அடிப்படையாக உள்ளது.

ஏதேனும் ஒரு குறையுடன் இருந்தாலும் வாழ்க்கைத் துணை கிடைக்க நமது பண்பாடு இவ்வாறு வழிசெய்துள்ளது.

நமது பண்பாட்டில் முறைப்பெண் மீதான முதல் உரிமை ஒரு ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முறையுள்ள பெண்ணை (சில சமயம் ஆணை) தூக்கிச்சென்று மணம் செய்துகொள்வதும் தவறாகப் பார்க்கப்பட்டதில்லை.

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்வது குறைகளைத் தோற்றுவிக்கும் என்ற கருத்து உண்மை என்றால் மற்ற இனங்களை விட தமிழர்கள் பலவீனமாகவும் குறையுடனும் இருக்கவேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லை.

சொந்தத்தில் திருமணம் செய்வதால் பரம்பரை நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 5% (மட்டுமே) அதிகம் என்று தெரியவருகிறது.
(ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்).

எகிப்து மற்றும் ஐரோப்பாவில் தனது ரத்தம் தூய்மையாக இருக்கவேண்டும் என்று ஒரே குடும்பத்தில் உடன்பிறப்புகளையே திருமணம் செய்து செய்து ஊனமாகி மனநலம் குன்றி அழிந்துபோன அரச பரம்பரைகளும் உண்டு.

நமக்கான நாடு அமையும்போது நமது முறைப்படி உறவுமுறையில் திருமணம் செய்வது பற்றியும் விரிவாக ஆராயவேண்டும்.

பாதிப்பு ஏற்படும் என்றால் இப்பழங்கால முறையைக் கைவிடுவதோடு 'ஒன்றுவிட்ட முறைமக்களுக்கு' முதல் உரிமை வழங்கவேண்டும்.
திருமணம் செய்யும் உறவுமுறைகளைச் சட்டமாக்க வேண்டும்.

அதுவரை அனைவரும் சொந்த சகோதரியின் மகளை மணமுடிக்கும் முறைதவறிய செயலைத் தவிர்க்கவேண்டும்.

இசுலாமியத் தமிழரும் சித்தி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தில் சம்பந்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

Monday, 19 February 2018

அலகுமலையா? அலங்காநல்லூரா?

அலகுமலையா? அலங்காநல்லூரா?

580 காளைகள்
505 மாடுபிடிவீரர்கள்
லட்சக்கணக்கான பார்வையாளர்கள்
என திருப்பூர் அலகுமலையில் நேற்று (18.02.2018) பிரம்மாண்டமான சல்லிக்கட்டு திருவிழா நடத்திக்காட்டினர் கொங்கு மண்டலத் தமிழர்கள்.

(மிகவும் பிரபலமான அலங்காநல்லூரில் இந்த ஆண்டு 520 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது)

அலகுமலை ஏறுதழுவுதல் முதல் பரிசு விக்னேஷ் என்பவர் தட்டிச்சென்றார்.
மொத்தம் 10 காளைகளைப் பிடித்த இவர், 7 காளைகளை பிடித்தநிலையில் காயம்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து 3 காளைகளைப் பிடித்தது இங்கே குறிப்பிட்டத் தகுந்தது.
இவர் ஒரு எம்.எஸ்.சி பட்டதாரி.
நாட்டு மாடு வகைகள் அழியாமல் இருக்க ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்று இவர் பரிசு வாங்கும்போது பேசினார்.

அலகுமலை - இனி இன்னொரு அலங்காநல்லூர் !

Saturday, 13 February 2016

பழந்தமிழர் கொண்டாடாத காதலா?

பழந்தமிழர் கொண்டாடாத காதலா?

♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

மல்கிய துருத்தியுள் மகிழ்
துணைப் புணர்ந்து அவர்
வில்லவன் விழவினுள்
விளையாடும் பொழுது அன்றோ
(கலித்தொகை 35:13-14)

"யாரும் வந்துபோகாத ஆற்றுத்தீவில் (ஆற்று நடுவில் இருக்கும் மணல் திட்டு) காதலனுடன் இன்பமாகத் தழுவிக்கொண்டு விளையாடவேண்டிய விழா நாள்  அல்லவா இன்று?!" என காதலனைப் பிரிந்த காதலி ஏக்கத்துடன் தன் தோழியிடம் கூறுகிறாள்.

நாம் இல்லாப் புலம்பாயின்
நடுக்கம் செய் பொழுதாயின் காமவேள் விழவாயின்
கலங்குவள் பெரிதென ஏமுறுகடுந்திண்டேர்கடவி
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே
(கலித்தொகை 27:24-26)

காதலன் இல்லாத அவள் தனியளாய் நடுக்கத்துடன் இந்த (காமன்)விழா நாளில் கலங்கிப்போய் குழம்பிக்கொண்டு இருப்பாள் என்று
காதலன் தன் தேரை விரைவாகச் செலுத்தி அவளுடன் உடனிருக்க வந்துவிட்டானாம்.

நன்றி: சங்ககாலத்தில் காதலர் தினம் _sishri org

Wednesday, 15 July 2015

சங்ககாலத்தில் காதல்திருமணம்

சங்ககாலத்தில் காதல்திருமணம்.

<B<B<B<B<B<B<B<B<B

உடன்போக்கு என்பது காதலனும் காதலியும் தத்தமது பெற்றோர் தம்மை சேர்த்துவைக்க விரும்பாத நிலையில் வீட்டைவிட்டு வெளியேறுவது,

பழந்தமிழ் இலக்கியமான கலித்தொகையில்,
ஒருவரை ஒருவர் காதலிக்கும் தலைவனும் தலைவியும் உடன்சென்ற பின்னர்,
தேடிவரும் செவிலித்தாய்(வளர்ப்புத்தாய், சித்தி) முக்கோற்பகவர் எனப்படும் துறவியர்களைக் காண்கிறாள்.
அவர்களிடம் இவ்வழியே சென்ற தன் மகளையும் அவளது காதலனையும் கண்டீர்களா என வினவுகிறாள்.
அதற்கு அவர்கள்,

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்
ஆங்கு அனையளே.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்
செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்
செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

என்று பதிலுரைக்கிறார்கள்.
இதன் பொருள்,

சந்தனம் பூசிக்கொண்டவர்க்கு மணம் சேர்க்குமேயன்றி அது விளைந்த மலைக்கு அதனால் சிறப்புசெய்ய முடியுமா?
முத்து அணிந்து கொண்டவர்க்கு சிறப்பு செய்யுமேயன்றி அது தோன்றிய கடலுக்கு சிறப்பு செய்யமுடியுமா?
யாழிசை கேட்பவர்களுக்கு சிறப்பு செய்யுமேயன்றி யாழுக்கு சிறப்பு செய்யமுடியுமா?
அதுபோலத்தான் உன் மகள் தன் தலைவனுக்கு சிறப்பு செய்வாளேயன்றி உனக்கு சிறப்பு செய்யமாட்டாள்.

காதலர்களின் வாழ்க்கையை முடிவுசெய்வதில் பெற்றோர் தலையிடக்கூடாது என்று துறவிகளே கூறுகின்றனர்.

http://m.youtube.com/watch?v=_fiR_CPBYZY

தமிழ் மதமானால்...

தமிழ் மதமானால்...

தமிழர்கள் வல்லரசாக இருந்தபோது
வேற்றினத்தாரிடம் தமது கொள்கைகளையும் கருத்துக்களையும் திணித்திருந்தால்?

கைப்பற்றிய இடங்களிலெல்லாம் தமிழர்களைக் குடியேற்றியிருந்தால்,

இனக்கலப்பு நடத்தி தமது எண்ணிக்கையைப் பெருக்கி தமது பழக்கவழக்கங்களை திணித்திருந்தால்,

இன்று இந்திய துணைக்கண்டமும், கிழக்கு ஆசியா முழுதும், உலகில் ஆங்காங்கும்
.
.
.
.
மக்கள் பிள்ளைகளுக்கு மொட்டைபோட்டு தாய்மாமன் மடியில் வைத்து காது குத்துவார்கள்.

பொங்கல் உலகம் முழுவதும் அரசு விடுமுறையுடன் கொண்டாடப்படும்.

முருகன்கோவில்கள் எல்லாநாடுகளிலும் இருக்கும்.

காவடி தூக்குதல் அலகு குத்துதல் ஆகியவை உலகம் முழுவதும் நடக்கும்.

திருக்குறள் பல நாடுகளில் புனித நூலாக அறிவிக்கப்பட்டு,
பலதரப்பட்ட மக்கள் தமிழ்கற்று அதைப் படித்திருப்பார்கள். சட்டதிட்டங்கள் அதன்படி அமைக்கப்பட்டிருக்கும்

உலகம் முழுவதும் தமிழ்ப்பெயர்கள் வைக்கப்படும்.

தமிழ் நாள்காட்டி உலகம் முழுவதும் பின்பற்றப்படும்.

வேளாண்மை, கப்பல்துறை என இரண்டும் தமிழர்கள் இந்த உலகுக்கு அளித்த கொடை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.

தமிழ் எழுத்துகளும் எண்களும் உலகமொழிகளிலும் தொழில்நுட்பத்திலும் ஆதிக்கம் செலுத்தும்.

இராசராச சோழனின் வாழ்க்கையை உலகமே படிக்கும்.
அவரை இறைமகன் என்றிருப்பார்கள்.
உலகம் முழுவதும் அவருக்கு சிலை வைத்திருப்பார்கள்.

உலகம் முழுக்கத் தமிழர்களின் உடையமைப்பைப் பின்பற்றுபவர்கள் இருப்பார்கள்.

திருநீறு இடுவதும், வேல்சின்னத்தைக் கழுத்தில் அணிவதும் பரவலாகக் காணப்படும்.

மீனாட்சியம்மன் கோவில் தலைமைப் பூசாரி உலக அரசியலையே தன் கைக்குள் வைத்திருப்பார்.

தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயமாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

தமிழர்கள் மேல் சிறு கீறல் விழுந்தாலும் உலகமே பிரச்சனைக்கு உள்ளாகும்.

பிரபாகரனாருக்கும் வீரப்பனாருக்கும் பெரிய அளவில் ஆதரவாளர்கள் கிடைத்திருப்பார்கள்.

அகழ்வாராய்ச்சி நடந்து தமிழினப் பழமை நிறுவப்பட்டு தாமே மூத்தகுடி என்ற பெருமையுடன் தமிழர்கள் வலம் வருவார்கள்.

வரலாற்றில் பெரிய பெரிய வல்லரசுகள் தோன்றியிருக்கும் அவர்களால் பாதி உலகமாவது கைப்பற்றப்பட்டு தமிழுணர்வு உலகம் முழுவதும் பரப்பப்பட்டிருக்கும்.

தற்போது தமிழருக்கென்று பல்வேறு நாடுகள் இருந்திருக்கும்.

உலகில் தமிழ் பேசுவோரும் கற்போரும் கனிசமான அளவு இருந்திருப்பார்கள்.

உலகம் முழுவதும் முறைப்பெண்களை மணத்துகொள்ளும் வழக்கம் காணப்படும்.

சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் குறைகளைக் கண்டுபிடிக்கவே ஒரு கூட்டம் இருக்கும்.

உலகம் முழுவதுமிருந்து தமிழகத்துக்கு மக்கள் புனிதப்பயணம் மேற்கொள்வார்கள்.

தமிழர்களால் அடிமைப்படுத்தப்பட்டு தமது மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை இழந்த அதே மக்கள்
தமிழுக்காக தமிழருக்காக உயிரைவிடவும் ஆயத்தமாக இருப்பார்கள்.

தமிழின் பெயரால் பல போர்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடந்தபடி இருக்கும்.

தாய்மண் தமிழர்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்திருப்பார்கள்.

உலகின் தாய்மண்ணில் பல்வேறு பிரச்சனைகளால் அல்லல்படும் மக்கள் தமிழ் மதத்திற்கு மாறியபடி இருப்பார்கள்.

(கோடியில் ஒருவன்
இறைமறுப்பாளன்
https://m.facebook.com/photo.php?fbid=479366048833720&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

தமிழர் மதம்
https://m.facebook.com/photo.php?fbid=368994183204241&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 )

Monday, 13 July 2015

ஆண்களும் அணிந்த தாலி

ஆண்களும் அணிந்த தாலி

! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : !

தாலி என்பது கழுத்து நகையைக் குறிக்கும் பெயர்ச்சொல்.

இதை பழங்காலத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்தனர்.

ஒரு பெண் ஒரு ஆணை "நான் உன்னைக் கட்டிக்கொள்கிறேன்" என்று கூறுவது முரண்பாடான ஒன்று கிடையாது.
ஆணுக்கு பெண் தாலி அணிவிக்கும் வழக்கத்தையே குறிக்கிறது.
பிறகு இதுவே ஆணின் காலில் பெண் மெட்டி அணிவிக்கும் வழக்கம் வந்தது.
பிறகு அதுவும் பெண்களுக்கு போனது.

புலிப்பல் "தாலி" என்ற அணியைஆண், பெண்
இரு பாலாரும் அணிந்திருந்தனர்
என்பது பண்டைத்தமிழ் இலக்கியங்களில்
இருந்து தெரியவருகிறது .

ஆதிமனிதர் தாம் வேட்டையாடிய சில விலங்குகளின் எலும்புகள் , பற்கள் , நகங்கள் போன்றவற்றை அணிகலன்களாக்கி அணிந்தணர்.

குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேட்டுவர்கள் தமது பிள்ளைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவித்தது சங்க இலக்கியங்களிலிருந்தும் தெளிவாகிறது.
ஆனால், சிறுவரும், சிறுமியரும் புலிப்பல் தாலி அணிந்தமையால் மறக் குலத்தின் வழிவந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக  அணிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வழக்கமே பிற்காலத்தில் "ஐம்படைத் தாலியாக" வளர்ச்சியடைந்தது.
புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது ஆகும்.

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும்.
சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது .

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் "தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்" மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக,
"தாலி களைந்தன்று மிலனே"
என்று அவன் தாலியை இன்னும் களையாத சிறுவயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்துவிட்டே கால்களில் கழல் அணியும் வழக்கம் இருந்தது .

"தாலம்" என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது.
ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.

நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை,கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்துகொள்வது பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.
எனவே "தாலம்" என்ற சொல்லிலிருந்து காப்பு அணிகளைக் குறிக்கும் "தாலி".என்ற பொதுச் சொல் தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத்.தெரியவில்லை.

(பெரிய இடத்து இளைஞர்கள் புலிப்பல் போன்ற அமைப்பை சங்கிலியில் அணிவது காணப்படுகிறது.
இதை மைனர் செயின் என்கிறார்கள்)

மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது.

ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது.

யாழ்ப்பாணத்து நகைக்கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப்.பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும்.

இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு.
சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந்தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது (!!)

பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது.
பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர்.

குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் துடக்குக் கழிவுச் சடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது.

http://ta.m.wikipedia.org/wiki/புலிப்பல்_தாலி
http://ta.m.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி