Showing posts with label இல்லறம். Show all posts
Showing posts with label இல்லறம். Show all posts

Sunday, 22 June 2025

அன்றைய காதல்

அன்றைய காதல்  

 அந்த பெரிய வீட்டில் அந்த பகுதியில் அதிகம் வாழும் ஒரு சமூகத்தின் பெரியவர்கள் கூடியிருந்தார்கள்.
 வீட்டின் பின்புறம் இருந்த வெற்றிடத்தில் அசைவ உணவு ஆக்கிக் கொண்டிருந்தது அங்கு வீசிய நறுமணத்திலிருந்து தெரிந்தது.
 நாலு பேர் நாலு விதமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 வீட்டின் பின்பக்கம் பெண்கள் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள்.
 அந்த வீட்டின் பெரியவர் கூடத்தில் நடுவே அமர்ந்திருந்தார் அவரை சுற்றி பெரியவர்கள் அமர்ந்து அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
  அவர் அவற்றையெல்லாம் கேட்டு உள்வாங்கியது போல மௌனமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
 அப்போது பின் கட்டில் இருந்து அவரின் மனைவி கூடத்தின் வாசலுக்கு வந்து "என்னங்க..!" என்று அழைத்தார்.
  இவரும் போனார்.
 "என்னங்க அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்! இவ தான் வார்த்தையை விட்டிருக்கா! அதனாலதான் மாப்பிள்ளை கையை நீட்டிட்டார்!
 அவர் ஏடாகூடமான ஆள்!
 நீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க!" என்று கூறினார்.
  பெரியவர் கோபத்துடன் "அதுக்குன்னு இப்படி போட்டு அடிக்கலாமா?" என்று கேட்கவும் அங்கே வந்த இவர்களது இளைய மகன் "அவன் இன்னைக்கு வரட்டும்! ஒழுங்கா மன்னிப்பு கேட்கலைனா இங்கேயே அவனை வகுந்திடுவேன்" என்று கூறினான்!
 அந்த அம்மாளோ "கூறுகெட்டவனே! உனக்கு ஒன்னும் தெரியாது! நீ பேசாம இரு! அவர ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது! மீறி வாயத் தொறந்தே இனி வீட்டுக்குள்ள வரக்கூடாது" என்று சொன்னாள்.
 இதையெல்லாம் அங்கே ஓரமாக அமர்ந்திருந்த பெண் கேட்டுக் கொண்டிருந்தாள்.
 அந்த இளைஞன் அவளருகே போனான் "அக்கா அவன் உனக்கு சரிப்பட மாட்டான்! அவன் வந்ததும் நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுட்டு தாலிய கழட்டி எறிஞ்சிடு! எதாவது பண்ணுனான்னா நா பாத்துக்கிடுறேன்" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று வெளியே போனான்.
 அவள் எதுவும் பேசாமல் வாயை இருக்க மூடியபடி தலையை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள்.
 அவளது தோழி ஒருத்தி பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
 அவளுடைய அம்மா அருகே போனாள்.
 "ஏம்மா அத்துவிடுறதுன்னே முடிவு பண்ணிட்டியா கடைசிய ஒரு தடவ யோசிச்சு பாரேன்!" என்று கூறினாள்.
 அந்த பெண் எதுவும் பேசவில்லை!
"சரிம்மா! கோவம் மட்டும் படாத! மீதிய அப்பா பாத்துக்குவாரு!"
 இப்போது கூடத்துக்கு வந்த பெரியவர் அங்கிருந்த பெரியோர்களைப் பார்த்து "அவங்க வீட்டிலிருந்து யார்லாம் வாராங்கன்னு தெரியல! அவங்க கொஞ்சம் ஏறுமாறா பேசினாலும் நீங்க பொறுமையா பேசுங்க! பொண்ணு பிள்ள விசயம்! அத்துவிடுறதுனாலும் முடிஞ்ச அளவு சுமூகமா முடிக்க பாருங்க!" என்று சொன்னார்.
"சரிப்பா! அன்னைக்கு அவங்க வீட்டுக்கு சமாதானம்  பேசப் போனப்ப என்ன பேச்சு பேசுனாங்க! பரவால்லப்பா! எங்களுக்கு என்ன?! முடிவு உன்னோடது தான்! நாங்க ஒரு ஆதரவுக்காக தான் வந்தோம்! நீ பேசு! நாங்க இடைல எதுவும் பேசலை!" என்று சொன்னார்கள்.
 தூரத்தில் மோட்டார் பைக் வரும் சத்தம் கேட்டது.
 அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெண் பரபரத்தாள்!
 எழுந்து வாசலைப் பார்த்தாள்.
 ஆம் அது அவன்தான்!
 அந்த பெண் பின்வாங்கி ஓரமாக நின்றுகொண்டாள்.
 அவன் ஒற்றை ஆளாக வந்திருந்தான்!
நிதானமாக குடித்து இருந்தான்!
 அதனால் அதிகம் தள்ளாடாமல் நடந்தான்!
 சுற்றி இருந்தவர்களை பார்த்துக் கொண்டே அவர்களையெல்லாம் கடந்து நடுக்கூடத்திற்கு போனான்.
 நட்ட நடு கூடத்தில் நின்று கொண்டு அவள் பெயரைச் சொல்லி அழைத்தான்.
"சாந்தி! ஏ.. சாந்தி!" 
அந்தப் பெண் மெதுவாக மறுபடியும் எட்டிப் பார்த்தாள்.
 அவளைப் பார்த்தவுடன் அவன் உதடுகளில் ஒரு குறுநகை தென்பட்டது.
 "வா! நம்ம வீட்டுக்கு போலாம்" என்று சொன்னான்.
 அந்தப் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
 "என் சந்தனமில்ல! வா வீட்டுக்கு போலாம்! வா! வா! வா!" என்று அவன் வலது கையை அவளை நோக்கி நீட்டினான்.
 அந்தப் பெண் மெதுவாக நடந்து வந்து அவனுடைய கையில் தன்னுடைய கையை வைத்தாள்.
 அவன் திரும்பி புறப்பட எத்தனித்தான்.
 அவள் நகரவில்லை!
 அவன் திரும்பி அவளைப் பார்த்தான்!
அவள் அவளுடைய தந்தையை ஏறிட்டு பார்த்தாள்!
 அவருடைய தந்தையோ சரி போ என்பது போல் தலையை ஆட்டி விட்டு தலையை குனிந்து கொண்டார்.
 அவன் அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வாசல் வரை கொண்டு போய் நிறுத்தி வண்டியில் ஏறி அதை உதைத்து உறுமவிட்டான்.
 அவள் அதை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தாள்!
"ஏறுடி!" என்றான்!
 அவள் அவனுடைய தோளில் கைவைத்து ஏறி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.
எதிரே நான்கு நண்பர்களோடு நின்றுகொண்டிருந்த அவளது தம்பி முகத்தில் ஈயாடவில்லை!
 பைக் சத்தம் தூரமாகச் சென்று மறைந்தது.
 அங்கே இருந்த எல்லோரும் எதிர்பார்த்தது நடக்காதது போல கோபமாக அந்த பெரியவரை பார்த்தார்கள்.
 அந்த பெரியவர் கால்களை லேசாக ஆட்டிக்கொண்டே "சரி! வந்தது வந்துட்டீங்க! எல்லாரும் சாப்பிட்டு போங்க! ஏம்மா எலைய போடு" என்றபடி அங்கிருந்து எழுந்து விறுவிறுவென்று பின்பக்கம் போய்விட்டார்.

Friday, 23 May 2025

இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு

 கண்ணாடியைப் பார்த்து என் கூந்தலில் இருந்த சில நரைமுடிகளை நகவெட்டியை வைத்து வெட்டிப் போட்டேன்.
 அகவை நாற்பதைத் தொடவுள்ளது. இன்னும் சில காலம் தான். நாகரீகத்தின் ஆதித்தொழிலில் 40 வயதுக்கு மேல் வருமானம் குறைந்துவிடும்.
 அதன்பிறகு என்ன செய்வது என்று நான் சிந்திப்பதில்லை. ஏனென்றால் அதற்கான நேரமும் இல்லை துணிச்சலும் இல்லை.
 கதவு தட்டப்பட்டது. திறந்தேன்.  "அத்தை" தான்.
"ஏன்டி இவ்வளவு நேரம்?!"
"சீவி சிங்காரிக்க வேண்டாமா அத்தை?!"
"அத கேக்கல வர்றதுக்கு ஏன் இவ்வளவு நேரம்? எவனோடடி ஊர்சுத்திட்டு வர்ற?"
"கடைவீதிக்கு போய் மேக்கப் சாமான்கள் வாங்கப்போனேன்"
"ம்..! வாசனை பத்தலையே?! பூவும் வைக்கலையா?"
"அத்தர் பூசினேனே! போதும் போதும்!"
"ஆமா... வர்றவன் உன் வீட்டுக்காரன் பாரு மல்லிப்பூவோட வர்றதுக்கு?! இந்தா பூ"
"அத்தை பசிக்குது"
"சனியனே! மதியம் நல்லா சாப்டலயா நம்ம தொழில்ல மதியத்துக்கு பிறகு சாப்பிட முடியாதுனு உனக்கு தெரியாது! இரு சர்பத் அனுப்புறேன்"
 அத்தை போய்விட்டாள்.
இவளும் ஆண்களைப் போலத்தான். இளமை இருந்தபோது செல்லம், பட்டு என்று எவ்வளவு கொஞ்சுவாள் இப்போது நான் சனியன் ஆகிவிட்டேன்.
 சர்பத்தை குடித்துவிட்டு படுக்கையில் காத்திருந்தேன்.
 இந்த விலைமாதர் விடுதியில் பத்து ஆண்டுகள் ஓட்டிவிட்டேன். அனாதை! ஏமாற்றிய காதலன்! கற்பழிப்பு! பிச்சை! போலீஸ்! விபச்சாரம்! அடுத்து என்ன...?! சாவுதான்!
 என் தொழில்முறை தோழி ஒரு யோசனை கூறியிருந்தாள்!
 "இளமை இருக்கும்போது கொஞ்சம் வயதான பணக்காரனை வளைத்துப் போட்டு சின்னவீடு ஆகிவிடு! அப்படியே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டால் இரண்டாம் தர வாழ்க்கையாவது கிடைக்கும்".
 இளமை இருந்த திமிரில் அந்த அறிவுரை காதுகளில் ஏறவில்லை! 
 இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை!  
 என் உருவம் சிறியது! உள்ளாடை போடாமலே நேராக குத்திட்டு நிற்கும் என் மார்பகம்! எவனையும் அளவுக்கு மீறி கசக்க விட்டதில்லை! அளவான உணவு மற்றும் நல்ல பகலுறக்கம்! அதனால் வாய்த்த கட்டான உடல்! கொஞ்சம் நடனம் கற்றுக் கொடுத்துள்ளனர்! தீய பழக்கங்கள் பக்கம் போகவில்லை! எனவே இப்போதும் பார்க்க 25 வயது போல இருக்கிறேன் (என்று நினைக்கிறேன்).
தோழி சொன்ன திட்டத்தை இன்றே நிறைவேற்ற வேண்டியதுதான்.
 வருபவன் கொஞ்சம் பணக்காரனாக இருந்தால் சரி!
 இந்த ஆண்களைக் கவிழ்ப்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை!
 ஆண் ஒரு பெண்ணின் உடல் மீது வைத்திருக்கும் ஆசைதானே இந்த உலகமே இயங்க அடிப்படை!
 ஆறுதலாக நான்கு வார்த்தைகள்!
பிறகு கொஞ்சம் வலியைத் தாங்கிக்கொண்டால் போதும்! காலில் விழுந்து கிடப்பார்கள்!
 கதவு தட்டப்பட்டது! திறந்தேன்!
 ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் நின்றுகொண்டு இருந்தார்!
 இருவரும் ஒருவருக்கொருவரை பார்வையால் அளந்தோம்!
 அவரை கையைப் பிடித்து உள்ளே இழுத்து கதவைத் தாழிட்டேன்!
 சிலர் தாழிடும்போது பின்புறத்தில் இருந்து கட்டிப்பிடிப்பார்கள்! இவர் அப்படி இல்லை! தலையைக் குனிந்தபடி நின்றுகொண்டு இருந்தார்.
 நல்ல உடைகள் உடுத்தி இருந்தார்! நடுத்தர வர்க்கம் என்று தெரிந்தது! அரசாங்க ஊழியராக இருக்கலாம்!
 "என்னங்க முதல் தடவையா?!" 
"ம்"
"உக்காருங்க! இந்தாங்க தண்ணி குடிங்க!"
"இல்ல வேண்டாம்.."
"சரக்கு எதும்..."
"இல்ல பழக்கமில்ல"
"டீ கொண்டு வர சொல்லவா"
"இல்ல அதுவும் பழக்கமில்லை" 
"சரி உக்காருங்க"
அவர் உட்கார்ந்தார். அருகில் அமர்ந்தேன்.
"சொல்லுங்க என்ன பண்ணனும்?!"
"நா அதுக்காக வரலை! ஏதோ வேகத்துல வந்துட்டேன்"
"முதல் தடவை எல்லாரும் இப்டித்தான் சொல்வாங்க! கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா நானே போதும்னு கையெடுத்து கும்புடுற மாதிரி பண்ணுவீங்க!"
 அவர் என் முகத்தைப் பார்த்து சிரித்தார்.
"நா என்ன சொன்னாலும் செய்வீங்களா?!"
"செய்வேன். என்ன நீங்க என்னவேணாலும் செய்யலாம்!"
 ஏன்தான் இந்த வார்த்தைகள் ஆண்களுக்கு ரொம்ப பிடிக்குமோ தெரியாது!
  அவர் தயாரானார்! தன் கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்தார்.
 "அங்கே போய் நில்லு"
அடடா! என்ன அதிகாரம்! 
கொஞ்சம் தூரம் போய் நின்றேன்! 
அவர் தன் சட்டையைக் கழற்றினார்.
நானும் என் உடைகளைக் கழற்றினேன்!
அவர் கண்களை சுருக்கி விரித்து பார்த்தார்.
கண் கண்ணாடி இல்லாமல் அவருக்கு மங்கலாகத் தெரிகிறேன் என்று புரிந்தது.
 சட்டைப்பையில் சிறிய பொட்டலம் வைத்திருத்தார் அதில் பாரம்பரிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் வாசனைப் பவுடர் இருந்தது. அதை என்னை நோக்கி விட்டெறிந்து "இதைப் போட்டுக்க" என்றார்.
 நான் அதைக் கைகளில் கொட்டி கழுத்து அக்குள் மார்பு என பூசிக்கொண்டேன்! 
 கட்டிலில் அமர்ந்தபடி அவர் கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் நீட்டி குழந்தை போல அழைத்தார்! 
 நான் அருகே வந்ததும் கட்டி அணைத்துக் கொண்டார்.
 அவர் வலது காதை என் இடது மார்பில் வைத்து அழுத்தியபடி இறுகக் கட்டியணைத்தார்.
 நான் ஏதோ சொல்லவர "ஷ்..." என்று அமைதிப் படுத்தினார்.
 அவர் என் இதயத் துடிப்பைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
 மார்புக்கு அடியில் என் விலா எலும்புகளில் கைவைத்து நான் மூச்சுவிடுவதை உணர்ந்தார்.
ஐயோ பாவம்! காதல் தோல்வி அடைந்தவர்! இவருடைய காதலி இறந்துவிட்டாள் போலிருக்கிறது! அவளை உயிரோடு இருப்பதாக உணர்வதற்காக இப்படி செய்கிறார்!
 அவர் தலையை என் மார்போடு அணைத்தேன்.
என் மூச்சுக்காற்று அவர் மீது படும்படி செய்தேன்!
என் மார்பைச் சுட்டது அவரது கண்ணீர்.
கொஞ்ச நேரம் அழவிட்டேன். பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டேன். தலைமுடியைக் கோதிவிட்டேன்!
முதுகைத் தடவிக் கொடுத்தேன்!
 "தங்கம்... எந்...தங்கம்! எந்ந்ந்... தங்க்...கம்!" என்று அவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்ததார். 
சில காதல் தோல்வி அடைந்தவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள்! ஒரு பெண்ணின் உடலில் இன்னொரு பெண்ணின் ஆன்மாவைத் தேடுவார்கள்! பிறகு அது கிடைக்காமல் மேலும் நொறுங்கிப் போவார்கள்! 
 பார்க்கவே பாவமாக இருக்கும்!
 நான் அணைத்தபடி அவரைத் தூங்கவைப்பது போல  தட்டிக் கொடுத்தேன்! அவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார்! விசும்பியபடி கைக்குட்டையால் கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டார்!
 நான் அவர் அருகில் அமர்ந்தேன்!
 அவரது ஒரு கையை என் மார்பில் பதியுமாறு அணைத்துக்கொண்டு ஒட்டி உட்கார்ந்தேன்!
"என்ன ஆச்சுங்க?! ஏன் அழறீங்க?"
"என் காதலி நினைவு வந்துருச்சு" 
"அவங்க பேரு தங்கமா?!"
"இல்ல! நா அவள அப்பிடித்தான் கூப்பிடுவேன்!"
"ம்..."
"இன்னைக்கு கடைவீதில உன்னைப் பார்த்தேன்! அவள மாதிரியே இருந்தே! அதான் பின்னாடியே வந்தேன்"
 "கவலைப் படாதீங்க எல்லாம் சரியாயிடும்! ஆமா உங்களுக்கு ஏன் அவங்க கிடைக்காம போனாங்க?! உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்கிட்ட சொல்லலாம்!"
 "அவ எங்க வீட்டுக்கு பக்கத்து தெரு! சொக்கத் தங்கத்துல செஞ்ச சிலை மாதிரி இருப்பா! அவ பேரு தெரியாதப்பவே அவளுக்கு நா எனக்குள்ள வச்ச பேருதான் தங்கம்! தங்கத்தை ரொம்ப நாளா ஒரு தலையாக் காதலிச்சேன்! ஆனா என் தங்கத்துக்கு என்ன புடிக்கல! அப்பறம் சாக மனசில்லாம எங்கேயோ போய்ட்டேன்! ஆனா ரொம்ப நாள் கழிச்சு விதி எங்களை சேத்துவச்சது!"
 "அப்போ அவங்க இப்ப..."
"என் மனைவி!"
"அவங்க கிடைச்சிட்டாங்களே அப்பறம் ஏன் இவ்வளவு சோகம்?!"
"அவ மனசுல யாரோ இருக்காங்க! அவளால என்னோட ஒட்ட முடியல! காதலி கிடைச்சிட்டா ஆனா காதல் கிடைக்கல!"
 அடக் கடவுளே! இதென்ன கொடுமை! 
காதலி இறந்துவிட்டால் தானும் இறந்துவிடலாம்! காதலி நிராகரித்துவிட்டால் மனதைத் தேற்றிக்கொண்டு வேறு பெண்ணை ஏற்றுக் கொண்டு வாழலாம்!
 ஆனால் இது வாழவும் முடியாத சாகவும் முடியாத நிலை ஆயிற்றே!
 காதலே இல்லாத கண்களை தினமும் பார்க்கும் இவர் எத்தனை கொடுப்பினையற்ற பிறவி?!
 இருந்தாலும் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றத் தோன்றியது! 
"இவ்வளவு காதல் வச்சிருக்கீங்க!? இதுவே வாழ்க்கைக்கு போதுமே! பெரும்பாலும் காதலர்கள் னு சொன்னாலே அதுல ஒருத்தர்தான் காதலிப்பாங்க! இன்னொருத்தர் அத ஏத்துக்குவாங்க! ஒருத்தரோட காதலை வச்சுதான் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வாங்க! இதுதான் யதார்த்தம்"
 "ஆமா! ஆனா.... எப்ப அவ என்னை வேண்டாம்னு சொன்னாளோ அப்பவே என் உலகம் நின்னு போச்சு! 
 நா காதலிச்ச தங்கமும் என் மனைவியும் ஒருத்திதான் னு என்னால ஏத்துக்க முடியல!"
 நான் என்ன சொல்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்!
"எனக்கு பெண்குழந்தை பிறக்கும்னு நெனச்சேன்! அத என் தங்கமா நெனச்சு வாழலாம்னு நெனச்சேன்! அதுவும் நடக்கல!"
 "அவங்க மனசுல இருக்குறது யாரு?!"
"தெரியாது! இருக்காங்களா இல்லையானு கூட தெரியாது!"
அவர் அமைதியாக எதையோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தார். பிறகு மூச்சை இழுத்த படி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
 "என் தங்கம் இவ இல்ல! அவ இன்னும் எங்க வீட்டு பக்கத்துல தெருவுல இருக்கா! அவ என்னையே நினச்சுக்கிட்டு இருக்கா! எனக்கு நல்லா தெரியும்! அவ என்னோட தங்கம்! எனக்கு மட்டும்தான் அவ சொந்தம்!"
 அப்படியே இருந்தோம்! 
கதவு தட்டப்பட்டது! 
நேரம் முடிந்துவிட்டது!
அவர் கிளம்பினார். அவரது பர்சை எடுத்துக் கொடுத்தபோது பார்த்தேன் ஒரு பழைய புகைப்படத்தில் மாணவி ஒருவர் சிரித்தபடி இருந்தார். 
 
 

 

 

Thursday, 30 August 2018

பெறாத பெற்றோர்

பெறாத பெற்றோர்

நேற்று உறவினர்கள் கூடி  எங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று எங்கள் மகளுக்கு மொட்டை போட்டு தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தினோம்.
சர்க்கரைப் பொங்கலிட்டு அனைவருக்கும் அளித்து உண்டோம்.
தமிழர் பண்பாட்டில் காதுகுத்து சடங்கானது மிக முக்கியமான ஒன்றாகும்.

இது கிறித்துவர்களின் ஞானஸ்நானம் (baptism),
யூதர்களின் பிரிட் மிலா (brit milah) மற்றும்
சீனர்களின் காண் டீ (gan die) அல்லது கை மா (kai ma) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

அதாவது ஒரு குழுந்தைக்கு பெற்றோருக்கு அடுத்த நிலையில் ஒரு உறவை நியமிப்பது.
அவர் அந்த குழந்தையின் "பெறாத  பெற்றோர்" ஆவார்.

தமிழர் பண்பாட்டில் இந்த உறவு "தாய்மாமன்" ஆவார்.

பெற்றோருக்கு அடுத்து ஒரு குழந்தையைக் காக்கும் பொறுப்பு தாய்மாமனுடைது ஆகும்.

தாய்மாமனிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து சுற்றத்திற்கு அதனை அறிவிக்கும் சடங்குதான் தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தும் விழா.

கிறித்துவ நாடுகளில் குழந்தைக்கு ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு அளித்து குழந்தையின் god father ஆக ஒருவர் நியமிக்கப்படுவார். (பெண் என்றால் god mother).
இந்த ஞானத் தந்தை குடும்ப உறுப்பினராகவோ அல்லது குடும்ப நண்பராகவோ இருக்கலாம்.

யூத மத வழக்கத்தில் சன்டெக் (santek) என்று அழைக்கப்படும் "பெறாத பெற்றோர்" மடியில் வைத்து குழந்தையின் ஆணுறுப்பின் முன்தோல் அகற்றும் சடங்கு நடக்கிறது.

சீனரில் அனைத்து மதத்தினரும் பெறாத பெற்றோர் நியமிக்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.
ஆனால் பெரும்பாலும் தாத்தா பாட்டி அல்லது வயது முதிர்ந்தோரை நியமிக்கின்றனர்.

நமது வளைகாப்பு சடங்கு ஐரோப்பிய நாடுகளில் Baby shower எனும் சடங்குடன் ஒத்துப் போகிறது என்பது கூடுதல் தகவல்.

நகர்ப்புறங்களின் மறைந்துவரும் இத்தகைய சடங்குகளை அதன் முக்கியத்துவம் உணர்ந்து அழியாமல் காப்பது நமது கடமையாகும்.