Showing posts with label சிறுதெய்வம். Show all posts
Showing posts with label சிறுதெய்வம். Show all posts

Thursday, 30 August 2018

பெறாத பெற்றோர்

பெறாத பெற்றோர்

நேற்று உறவினர்கள் கூடி  எங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று எங்கள் மகளுக்கு மொட்டை போட்டு தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தினோம்.
சர்க்கரைப் பொங்கலிட்டு அனைவருக்கும் அளித்து உண்டோம்.
தமிழர் பண்பாட்டில் காதுகுத்து சடங்கானது மிக முக்கியமான ஒன்றாகும்.

இது கிறித்துவர்களின் ஞானஸ்நானம் (baptism),
யூதர்களின் பிரிட் மிலா (brit milah) மற்றும்
சீனர்களின் காண் டீ (gan die) அல்லது கை மா (kai ma) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

அதாவது ஒரு குழுந்தைக்கு பெற்றோருக்கு அடுத்த நிலையில் ஒரு உறவை நியமிப்பது.
அவர் அந்த குழந்தையின் "பெறாத  பெற்றோர்" ஆவார்.

தமிழர் பண்பாட்டில் இந்த உறவு "தாய்மாமன்" ஆவார்.

பெற்றோருக்கு அடுத்து ஒரு குழந்தையைக் காக்கும் பொறுப்பு தாய்மாமனுடைது ஆகும்.

தாய்மாமனிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து சுற்றத்திற்கு அதனை அறிவிக்கும் சடங்குதான் தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தும் விழா.

கிறித்துவ நாடுகளில் குழந்தைக்கு ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு அளித்து குழந்தையின் god father ஆக ஒருவர் நியமிக்கப்படுவார். (பெண் என்றால் god mother).
இந்த ஞானத் தந்தை குடும்ப உறுப்பினராகவோ அல்லது குடும்ப நண்பராகவோ இருக்கலாம்.

யூத மத வழக்கத்தில் சன்டெக் (santek) என்று அழைக்கப்படும் "பெறாத பெற்றோர்" மடியில் வைத்து குழந்தையின் ஆணுறுப்பின் முன்தோல் அகற்றும் சடங்கு நடக்கிறது.

சீனரில் அனைத்து மதத்தினரும் பெறாத பெற்றோர் நியமிக்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.
ஆனால் பெரும்பாலும் தாத்தா பாட்டி அல்லது வயது முதிர்ந்தோரை நியமிக்கின்றனர்.

நமது வளைகாப்பு சடங்கு ஐரோப்பிய நாடுகளில் Baby shower எனும் சடங்குடன் ஒத்துப் போகிறது என்பது கூடுதல் தகவல்.

நகர்ப்புறங்களின் மறைந்துவரும் இத்தகைய சடங்குகளை அதன் முக்கியத்துவம் உணர்ந்து அழியாமல் காப்பது நமது கடமையாகும்.

Tuesday, 20 June 2017

பாதபூசை

தமிழ்தேசியம் என்பது... சரி விடுங்க...

இன்று வேறு எதாவது எழுதுவோம்.

ஒரு பத்தண்டுகள் முன்பு,
நான் என் பெரியப்பா வீட்டிற்கு போயிருந்தேன்.

அங்கே ஒரு கோவில் உண்டு.
அந்த கோவில் தெய்வம் தங்களது குலதெய்வம்தான் என்று இரண்டு வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் உரிமை கொண்டாடினார்கள்.

அதனால் கொடைவிழா கோவிலில் நடத்த தடையிருந்தது.

இருபிரிவினரும் உருவம் எடுத்து தத்தமது பகுதிகளில் கொடை நடத்துவார்கள்.

உருவம் என்றால் வாழைத்தண்டை மானிட உருவம் போலச் செய்து அதில் சதைபோல சந்தனத்தை அப்பி கண், காது, மீசை, நகை, உடை போன்றவற்றை பல நிறம் கொண்ட தாள்களால் செய்து ஒட்டி அதையே சாமியாக நினைத்து விழா எடுப்பார்கள்.

எங்கள் பெரியப்பா தெருவில் உருவம் வைக்கப்பட்டிருந்தது.

(எதிர்தரப்பு குடும்பங்களும் விட்டுக்கொடுக்காமல் வந்து அந்த தெருவிலேயே ஒரு பக்கமாக தங்கியிருந்து நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தனர்)

கொடையும் கோலாகலமாக நடந்தது.

நான் போயிருந்தபோது என் அக்காவுக்கு திருமணமான புதிது.
அக்காவும் அத்தானும் வந்திருந்தனர்.
அத்தான் ஒரு வழிசல் பேர்வழி.

வில்லிசை நடந்துகொண்டிருந்தது.

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அலிக்கதவு போட்ட தார்சாவில் (திண்ணையில்) அமர்ந்து அளவளாவிக்கொண்டு இருந்தனர்.

எனக்கு வில்லுப்பாட்டு கேட்பது மிகவும் பிடிக்கும்.
நான் மட்டும் அதைக் கேட்பதில் கவனமாக இருந்தேன்.

பலமுறை கேட்ட சுடலைமாடன் கதைதான்.

சிவன் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்க போனார்.
பார்வதி ஒரு சிமிலுக்குள் இரண்டு எறும்புகளை அடைத்து வைத்துக்கொண்டு சிவனை சோதனை செய்ய முடிவெடுத்தாள்.
சிவன் படியளந்துவிட்டு வந்தார்.
பார்வதி பாதபூசை செய்கிறாள்.

பச்சைநிறப் பட்டுடுத்தி வெற்றிலைபோட்டுச் சிவந்த வாயுடன் வில்லுப்பாட்டு பாடும் பெண்மணி "ஏண்ணே! உங்களுக்கு ஒங்க பொண்டாட்டி பாதபூச பண்ணுமா?"
ஆணா பெண்ணா என்று கண்டறியமுடியாத தனது கணீரென்ற குரலால் ஆமாம் போடுபவரைப் பார்த்துக் கேட்டார்.

"ஆ.. அதுவா.. காலைல அஞ்சுமணிக்கு என்ன எழுப்பிட்டு அவா தூங்கிருவா.
நா போய் காப்பி வாங்கிட்டு வருவேன்.
ஏட்டி எந்திட்டினு எழுப்புவேன்.
நெட்டிட்டு நெஞ்சுல ஒரு மிதி மிதிப்பா அதுதா பாதபூச"

பக்கத்தில் அத்தான்வேறு அமர்ந்திருந்தார்.
அடக்கமுடியாமல் நான் மட்டும் விழுந்து விழுந்து சிரித்தேன்.

'இவன் என்னைக்கி மிதிவாங்கப் போறானோ?!'