Tuesday, 20 June 2017

பாதபூசை

தமிழ்தேசியம் என்பது... சரி விடுங்க...

இன்று வேறு எதாவது எழுதுவோம்.

ஒரு பத்தண்டுகள் முன்பு,
நான் என் பெரியப்பா வீட்டிற்கு போயிருந்தேன்.

அங்கே ஒரு கோவில் உண்டு.
அந்த கோவில் தெய்வம் தங்களது குலதெய்வம்தான் என்று இரண்டு வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் உரிமை கொண்டாடினார்கள்.

அதனால் கொடைவிழா கோவிலில் நடத்த தடையிருந்தது.

இருபிரிவினரும் உருவம் எடுத்து தத்தமது பகுதிகளில் கொடை நடத்துவார்கள்.

உருவம் என்றால் வாழைத்தண்டை மானிட உருவம் போலச் செய்து அதில் சதைபோல சந்தனத்தை அப்பி கண், காது, மீசை, நகை, உடை போன்றவற்றை பல நிறம் கொண்ட தாள்களால் செய்து ஒட்டி அதையே சாமியாக நினைத்து விழா எடுப்பார்கள்.

எங்கள் பெரியப்பா தெருவில் உருவம் வைக்கப்பட்டிருந்தது.

(எதிர்தரப்பு குடும்பங்களும் விட்டுக்கொடுக்காமல் வந்து அந்த தெருவிலேயே ஒரு பக்கமாக தங்கியிருந்து நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தனர்)

கொடையும் கோலாகலமாக நடந்தது.

நான் போயிருந்தபோது என் அக்காவுக்கு திருமணமான புதிது.
அக்காவும் அத்தானும் வந்திருந்தனர்.
அத்தான் ஒரு வழிசல் பேர்வழி.

வில்லிசை நடந்துகொண்டிருந்தது.

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அலிக்கதவு போட்ட தார்சாவில் (திண்ணையில்) அமர்ந்து அளவளாவிக்கொண்டு இருந்தனர்.

எனக்கு வில்லுப்பாட்டு கேட்பது மிகவும் பிடிக்கும்.
நான் மட்டும் அதைக் கேட்பதில் கவனமாக இருந்தேன்.

பலமுறை கேட்ட சுடலைமாடன் கதைதான்.

சிவன் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்க போனார்.
பார்வதி ஒரு சிமிலுக்குள் இரண்டு எறும்புகளை அடைத்து வைத்துக்கொண்டு சிவனை சோதனை செய்ய முடிவெடுத்தாள்.
சிவன் படியளந்துவிட்டு வந்தார்.
பார்வதி பாதபூசை செய்கிறாள்.

பச்சைநிறப் பட்டுடுத்தி வெற்றிலைபோட்டுச் சிவந்த வாயுடன் வில்லுப்பாட்டு பாடும் பெண்மணி "ஏண்ணே! உங்களுக்கு ஒங்க பொண்டாட்டி பாதபூச பண்ணுமா?"
ஆணா பெண்ணா என்று கண்டறியமுடியாத தனது கணீரென்ற குரலால் ஆமாம் போடுபவரைப் பார்த்துக் கேட்டார்.

"ஆ.. அதுவா.. காலைல அஞ்சுமணிக்கு என்ன எழுப்பிட்டு அவா தூங்கிருவா.
நா போய் காப்பி வாங்கிட்டு வருவேன்.
ஏட்டி எந்திட்டினு எழுப்புவேன்.
நெட்டிட்டு நெஞ்சுல ஒரு மிதி மிதிப்பா அதுதா பாதபூச"

பக்கத்தில் அத்தான்வேறு அமர்ந்திருந்தார்.
அடக்கமுடியாமல் நான் மட்டும் விழுந்து விழுந்து சிரித்தேன்.

'இவன் என்னைக்கி மிதிவாங்கப் போறானோ?!'

No comments:

Post a Comment