Friday, 23 June 2017

தொடரியில் ஒரு அமளி

தொடரியில் ஒரு அமளி

நடு இரவில் தொடரியில் உறங்கிக்கொண்டிருந்த என்னை யாரோ எழுப்பினார்கள்.
விழித்துப் பார்த்தேன் புகையிலையை குதப்பியபடி அந்த தொடரியின் ஏகபோக உரிமையாளரான பயணச்சீட்டு பரிசோதர் நின்றுகொண்டிருந்தார்.

"டிக்கெட்"
எதோ 'மாமூல எடு' என்று தள்ளுவண்டிக்காரரை ஏட்டு கேட்பது போல ஒரு சைகையுடன் கேட்டார்.

ஏதோ போனால் போகிறதென்று தனது பரம்பரைச் சொத்தான தொடர்வண்டியில் நமக்கு ஒரு இடம் கொடுத்த புண்ணியவானாயிற்றே! என்று பயணச்சீட்டை நீட்டினேன்.
அதை சரியாகக் கூட பார்க்காமல் அதன் மேல் எதையோ கிறுக்கிவிட்டு போனார் (கையெழுத்தாம்).
எனது அடையாள அட்டை எதையும் கேட்கவுமில்லை.
ஆக அவரது நோக்கம் பயணச் சீட்டில்லாதவனை பிடித்து கறக்கமுடிந்த அளவு கறப்பதுதான் என்பது புரிந்தது.

அடப்பாவி! ஒரு ப.ப சரியாக வேலை செய்யாததால் நாசமாகப் போன மக்களடா நாங்கள்.
அப்படி அந்த ப.ப திருவாரூரில் ஒழுங்காக வேலையைச் செய்து அந்த மாறுகண்ணனைப் பிடித்திருந்தால் தமிழ்நாட்டைக் கொள்ளையடித்து ஆசியாவிலேயே பெரிய பணக்கார குடும்பம் உருவான வரலாறு ஒரு பட்டாம்பூச்சி விளைவால் தடுக்கப்பட்டிருக்குமே!

இந்த ஹிந்திக்கார ப.ப எத்தனை கொலைஞனை உருவாக்கப் போகிறாரோ?!

சரி அவர் தொடரி அவர் விருப்பம் என்று விட்டுவிட்டேன்.

எதிரே இருந்த மூன்றடுக்கில் இரண்டாம் நிலையில் படுத்திருந்தான் ஒரு வாட்டசாட்டமான ஆசாமி.

ப.ப அவனது கால்மாட்டில் நின்று பாதத்தைத் தட்டி (அதாவது அடித்து) அவனை எழுப்பினார்.

கண்ணைத் திறந்து தலையை தூக்கிப்பார்த்த அந்த ஆசாமி அப்படியே படுத்தவாறே காலைத் தூக்கி வாகாக இருந்த ப.பவின் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்!

யார் இந்த வீரர்?!
(எதற்கும் மரியாதை கொடுத்துவைப்போம், மிதியின் வேகம் அப்படி)
இத்தனை பெரிய தொடரியையும் அதிலிருக்கும் நூற்றுக்கணக்கான அடிமைகளையும் அடக்கியாளும் ப.பவையே மிதித்து தள்ளிவிட்டாரே!

(தொடரியில் அதுவும் வட ஹிந்தியாவுக்கு அடிக்கடி போவோர் இந்த வீரசாகசத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வர்.
ப.ப வை 'டீட்டியா.....ர்' என்று கத்தி கூப்பிட்டு அதிகாரம் செய்வதெல்லாம் அந்நியன் படத்தில்தான் நடக்கும்.
படங்களில் என்று உண்மையைக் காட்டியிருக்கிறார்கள்?)

நிலைகுலைந்து விழுந்த ப.ப சமாளித்து எழ சிறிது நேரமானது.
அவனது வெள்ளைச் சட்டைமீது கருப்பு கோட் போடவில்லை ஆதலால் அதில் கால்தடம் பதிந்துவிட்டது.

ஏதோ அந்த நவீன அரக்கனை வதம் செய்ய அவதரித்த பெருமாள் அவதாரம் போல பக்கவாட்டில் திரும்பிப் படுத்து தலைக்கு கையால் முட்டுக்கொடுத்து தாங்கிக்கொண்டு தன்னிடம் மிதிவாங்கிய அரக்கன் சமாளித்து எழுவதை பார்த்து ரசித்துகொண்டிருந்தார் அந்த வீராதிவீரர்.

அடடா! இவரல்லவா கலியுக பெருமாள்!
நாமெல்லாம் பெயரில் மட்டும்தான் பெருமாள் என்று நினைத்துக்கொண்டேன்.

ப.ப எழுந்து சற்று எட்ட நின்றுகொண்டான்.
(இவனுக்கு என்ன மரியாதை? அதுவும் அவதாரம் பக்கத்தில் இருக்கும்போது)

அவனைப் பார்த்து "எதுக்குடா என்ன எழுப்பின?" என்று கேட்டார் அந்த அவதாரம்.

தமிழில்தான் கேட்டார்.
ஆனால் சொற்கள் ஹிந்தியில் இருந்தன.

அதாவது தமிழர்கள் எந்த மொழி பேசினாலும் அது தமிழ்ப்பாணியில்தான் இருக்கும்.

நானோ வடநாடு வந்து ஆறுமாதம்தான் ஆகிறது.
மற்றவர்கள் இந்திபேசினால் புரியாது.
ஆனால் தமிழர்கள் இந்தி பேசினால் புரியும்.
அவர் பேசியது எனக்கு புரிகிறது அதனால் அவர் தமிழர் என்பது உறுதியாகிவிட்டது.
(அவர் தமிழர் என்பதை மேலும் உறுதி செய்யும் விதமாக அவர் குடித்திருந்தார்)

தூக்கத்தில் யாரென்று தெரியாமல் மிதித்திருப்பான் என்று நினைத்த ப.பவுக்கு இப்போது யாரென்று தெரிந்துதான் மிதிவாங்கினோம் என்பது புரிந்தது.

இருந்தாலும் தன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கையில் தொங்கவிட்டிருந்த கருப்பு கோட்டை போட்டுக்கொண்டு அந்த அரக்கன் தனது விஸ்வரூபத்தை எடுத்தான்

"டிக்கெட் கேட்க எழுப்பினா டிடிஆரையே மிதிக்கிறியா?
மொதல்ல கீழ இறங்கு" என்றான்.
வாங்கிய மிதியில் திமிர் கொஞ்சம் குறைந்திருந்தது.

"எறங்க முடியாது போடா" அவதாரம் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்.

புகையிலையைக் குதப்பியபடி முறைத்து பார்த்துக்கொண்டே ப.ப திரும்பிப்போனான்.
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருந்த பதட்டம் கூட அந்த அவதாரத்திற்கு இல்லை.
அவர் அடுத்த நொடி எந்த கவலையுமின்றி படுத்து கண்களை மூடிக்கொண்டார்.

சிறிதுநேரத்தில் ப.ப தொடர்வண்டி காவலர்கள் இருவருடன் வந்தான்.

அவர்கள் அவதாரத்தை எட்ட நின்று மெதுவாக எழுப்பினார்கள்.
(மிதி வாங்கியதைச் சொல்லியிருப்பான் போலும்)
கண்மலர்ந்த அவதாரம் மீண்டும் தனது பெருமாள் சயன நிலைக்கு வந்து "என்ன?" என்று கேட்டார்.

"டிக்கெட் கேட்ட டிடிஆரை ஏன் அடித்தீர்?"

"டிடிஆரா இருந்தா?
அவனோட வசதிக்கு வருவானா? நான் ஏறி நாலு மணிநேரம் ஆகுது.
இதுவரை எங்க போயிருந்தான்?
நடுராத்திரியில் வந்து என் தூக்கத்தைக் கெடுத்தான்.
அதான் ஒதச்சேன்"

"நீர் முதலில் டிக்கெட்டையும் ஐடியையும் காட்டும்"

அவதாரம் தன் அடையாள அட்டையைக் காண்பித்தார். பார்த்தால் அவர் பட்டாளத்தைச் சேர்ந்தவர்.

வாங்கும்போது கவிழ்ந்திருந்த கை கொடுக்கும்போது மல்லார்ந்திருந்தது.

"ஆர்மியில இருக்குற நீங்களே இப்படி நடந்துக்கலாமா? 
என்ன இருந்தாலும் அவர அடிச்சது தப்புதானே...?"

"அவன் என்ன அடிச்சு எழுப்புனது மட்டும் தப்பில்லையா?
அப்படி என்ன திமிரு இவனுக்கு?"

அரக்கன் பதறிப்போய் "நான் அடிக்கவெல்லாம் இல்லை.
தட்டிதான் எழுப்பினேன்" என்றான்.

"சரி சரி இருவர் மீதும் சமமான(!) தப்பிருக்கிறது இதோடு விடுங்கள்" என்று கூறிவிட்டு பேந்த பேந்த விழித்த அரக்கனை முதுகைத் தடவியபடி அழைத்துக்கொண்டு அந்த காவலர்கள் போய்விட்டனர்.

மறுநாள் காலையில் அந்த அவதாரம் அவராக எழுந்தபிறகு (எழுப்ப எனக்கு 'விருப்பம்' இல்லை) பேச்சுக்கொடுத்தேன்

"எதுவர போறீங்க?"

"திருனவேலி வர, நீங்க?"

"நானும் திருநெல்வேலிதான்.
திருநெல்வேலில எங்க?"

"மன்னார்கோவில்"

"அப்பிடியா! எனக்கு அம்பைதான்.
என் பேரு ஆதிமூலப்பெருமாள்
ஆமா உங்க பேரு என்ன?"

"இசக்கி"

அட! இவர் அவதாரம் இல்லை நம் குலதெய்வம்.

No comments:

Post a Comment