Wednesday 21 June 2017

ஆரிய மரபணு ஆய்வு - ஒருவேளை உண்மையென்றாலும் அது ஹிந்தியருக்கு மட்டுமே பொருந்தும்

Gunaseelan Samuel
ஐரோப்பியர்கள் ஆழமாக நம்பவும், ஓரிரு நூற்றாண்டுகளாகப் பரப்பவும் செய்த ஆரியக் கோட்பாட்டை அண்மைக்கால ஆய்வுகள் புறந்தள்ளி மறுத்துள்ளன.

அதே ‘ஆரிய’ இனவியல் நிலைப்பாட்டில் இசுபென்சர் வெல்சு (Spencer Wells) என்பார் தொடங்கிய இருபுரி (DNA) வழிவந்த ஆய்வுகள் மெய்ப்பிக்க முயன்றன.

‘ஆப்பிரிக்காவிலிருந்து’ (Out of Africa) எனும் கோட்பாட்டைத் தழுவியே அந்த மரபணு ஆய்வுகள் அமைந்தன.
அவர் போன்றோரின் ஆய்வும்கூட ‘ஆரிய மேன்மைக்’ (Eugenics) கோட்பாட்டையே தழுவியவை.
அந்த ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாட்டைத் தழுவிக் குமரிக்கண்டக் கோட்பாட்டைத் தமிழர்கள் சிலரே மறுக்கவும் நகையாடவும் தொடங்கினர்.
தமிழரின் தொன்மையை எதிர்க்கும் பிராமண, திராவிட ஆய்வாளர்களுக்கும்கூட ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாடு ஒரு நல்ல பற்றுக்கோடாகப் பட்டது.

ஆரிய இனவியல் கோட்பாட்டை மெல்லப் புகுத்தும் ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ எனும் கோட்பாடு ஒரு குறைபிறவி என்பதையும்,
பெரிய இட்டுக்கட்டல் என்பதையும் காட்ட என்னுடைய “தமிழரின் தொன்மை” எனும் நூலில் மிக விரிவாக வழக்குரைத்துள்ளேன்.

‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாட்டை மறுப்பதற்கென்றே அந் நூலை எழுதினேன். முடிந்தால் பார்க்கவும்.

இந்து நாளேட்டில் வந்துள்ள செய்தியின்படி சமற்கிருதம் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்குள் வந்த ஆரியரின் மொழியாயிருந்தது என்பது பெரிய பொய்.
கி. பி. 2ஆம் நூற்றாண்டுக்குமுன் சமற்கிருதம் எனும் மொழியே இல்லையென்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெளிவுறக் காட்டுகின்றன.
மேலும், சமற்கிருதம் என்றுமே மக்களால் பேசப்பட்ட மொழியேயன்று.
எசுப்பராந்தோவைப் (Esperanto) போன்று அஃது ஒரு செயற்கை மொழி.
அந்த மொழியைப் பேசியவர்கள்தாம் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் ‘ஆரியர்களாய்’ நுழைந்தனர் எனும் கூற்று அதனால் பொய்த்துப் போகிறது.

A Genetic Chronology for the Indian Subcontinent எனும் கட்டுரை ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதைப்போல் அதே ஆரிய மேன்மைக் கோட்பாட்டைத்தான் ஒப்புவிக்கிறது.
இதை அறியாது,
அக் கட்டுரையைத் தமிழர்களே புகழ்வது பெரிய நெருடலாகவும் வருத்தமாகவும் உள்ளது.
- குணா
------------------------
மேற்கண்டது அறிஞர் குணா அவர்களின் கருத்து.
தி ஹிந்து ஒரு நம்பத்தகுந்த ஊடகம் கிடையாது.
அதிலே இந்தியர்கள் என்று மொட்டையாக கூறி
அவர்களில் குறிப்பிட்ட ஆண்களிடம் மேற்கத்திய மரபணு தாக்கம் இருப்பதாகக் கூறுகிறது ஒரு கட்டுரை.

உடனே ஏதோ ஆரியர் நுழைந்தது உண்மை என்று உறுதியாகிவிட்டதாக கூத்தாடத் தொடங்கியுள்ளனர் மூளையை பயன்படுத்தாத கூட்டத்தினர்.

அக்கட்டுரையில் ஒரு இடத்தில் தென்னிந்தியர் கலப்பற்றோர் என்றும் வருகிறது.
பிராமணர் என்று எங்கும் வரவுமில்லை.

  அதிலேயே இது ஆரியநுழைவை ஆணித்தரமாக நிறுவப்போதாது என்றும் வருகிறது.

அதாவது பலரின் கருத்துகளை பதிவு செய்து குழப்புகிறார்கள்.

மேற்கண்ட கட்டுரை வடயிந்தியருக்கு பொருந்தலாம்.
தென்னிந்தியருக்கு அதிலும் குறிப்பாக தமிழருக்கு தொடர்பேயில்லாத கட்டுரை அது.

தமிழர்களை அதிலும் குறிப்பாக பார்ப்பனரையும் பறையரையும் தனியாக DNA ஆய்வு செய்யும்வரை இந்த ஆரியக் குழப்பம் தொடரும்.

அதுவரை இக்குழப்பம் திராவிடமும் இந்தியமும் வாழ வழிசெய்யும்.

No comments:

Post a Comment