Monday, 19 June 2017

வாஞ்சிநாதன் கடிதம் - உண்மையான பொருள்

வாஞ்சிநாதன் கடிதம்
- உண்மையான பொருள்

வாஞ்சிநாதன் பையில் கிடைத்த அந்த கடிதத்தின் வரிகளை சற்று நிதானமாகப் படியுங்கள்

" ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள்.

ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்,
கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது.

அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.
இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.

இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta "

இதிலே "அழியாத ஸனாதன தர்மத்தை" என்ற இடமும் "கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை" என்ற இடமும் தவறாகப் பொருள்கொள்ளப் படுகின்றன.

'சனாதன' என்றால் 'நிலைத்த' என்று பொருள்.
சனாதன தர்மம் என்பதே இந்து மதத்தின் பழைய பெயர்.
அதாவது உண்மையான பெயர்.
இதற்கும் சாதிக்கும் தொடர்பில்லை.
இதைத்தான் 'அழியாத சனாதன' என்று வாஞ்சி எழுதியுள்ளார்.
ஒருவேளை இரண்டிற்கும் ஒரே பொருள் என்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அதாவது பலர் 'நடுசென்டர்' என்று கூறுவது போல.
தவிர சனாதான தர்மத்தை ஆங்கிலேயர் மிதிப்பதாகக் கூறுகிறார்.
இது 'சாதி அமைப்பு' என்றால் ஆங்கிலேயர் சாதியமைப்பை ஒழிக்க எதாவது செய்திருக்கிறார்களா என்றால் ஆங்கிலேயர் சாதியொழிப்பு நடவடிக்கை எதையும் செய்யவில்லை.

இன்னொன்று 'கோமாமிசம் அதாவது மாட்டிறைச்சி தின்பது' பற்றிய திரிபு.
அதாவது மாட்டிறைச்சி தலித்துகளின் உணவாம் அதனால் பிராமணர்கள் வெறுக்கிறார்களாம்.
அதனால் அது சாதிவெறியின் வெளிப்பாடாம்.
உண்மை என்னவென்றால் தாய்க்கு அடுத்து நமக்கு பால் தருவது பசு.
அதனால் அதைக் கோமாதா என்று அழைத்து அதைக் கொல்வதை பிற்கால இந்துத்துவம் தடைசெய்தது.
(இந்துமத வேதங்களில் மாட்டிறைச்சி உண்பது ஊக்குவிக்கப் படுகிறது).
வெள்ளைக்காரர்கள் காலத்தில் 'மாட்டைக் கொல்லும் கூடங்கள்'  பல ஏற்படுத்தப்பட்டு மாட்டிறைச்சி மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆங்கில கல்லூரிகளில் மாட்டிறைச்சியும் விஸ்கியும் உண்பது புகுத்தப்பட்டது.
பசுக்களைக் காப்பது ஆங்கிலேய எதிர்ப்பு நடவடிக்கையாக அப்போது எண்ணப்பட்டது.
இதற்கு பல இயக்கங்களும் நடத்தப்பட்டன.

மூன்றாவது 'மிலேச்சன்' என்பது.
இது கீழ்சாதியைக் குறிக்குமாம்.
ஆனால் மிலேச்சன் அந்நியன், வெளிநாட்டவன் என்றே பொருள்படும்.
மிலேச்சன் என்று ஆங்கிலேயரை வாஞ்சி குறிப்பிட்டுள்ளது அந்நியன் என்ற பொருளில்தான்.
(சீவக சிந்தாமணி 2216)

நான்காவது 'பஞ்சமன்' எனும் சொல்.
நால்வர்ணத்திற்கும் கீழானோர் பஞ்சமர் என்றழைக்கப்பட்டு அது கீழ்சாதி பெயர் ஆனது என்கின்றனர்.
ஆனால் 'பஞ்சம்' எனும் சொல் 'ஐந்தாவது' என்றே பொருள்படும்.
வாஞ்சிநாதன் 'ஐந்தாம் ஜார்ஜ்' என்பதை 'ஜார்ஜ் பஞ்சமன்' என்று எழுதியுள்ளார்.
அதாவது 1911ல் இந்தியாவிற்கு இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வருவதாக இருந்தபோது அவரைக் கொல்லப்போவதாக வாஞ்சிநாதன் கூறுகிறார்.

ஆக இந்துமத பற்றாளராக இந்துதேசப் பற்றாளராகவே அவர் அக்கொலையைச் செய்துள்ளார்.
தனது இந்து மதத்தைப் புகழும் அதே நேரத்தில் ஆங்கிலேயரின் மதத்தை அவர் திட்டவில்லை.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தையும் பழக்கவழக்கத்தையும் மட்டுமே திட்டியுள்ளார்.
ஆக அவரை பிற மதத்தை வெறுக்கும் மதவெறியர் என்றுகூட கூறமுடியாது.

அவரை சாதிவெறியர் என்று எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் பாருங்கள்.

வாஞ்சி வாழ்ந்த பகுதியான செங்கோட்டை மற்றும் குற்றாலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1956 வரை இருந்தது.
ஆஷ் திருநெல்வேலிக்கு சப்-கலெக்டர் மட்டுமே.
அவரது அதிகாரம் தென்காசி தாண்டி செல்லாது.
இருவரும் சந்தித்திருக்கவோ தனிப்பட்ட பகை இருந்திருக்கவோ வாய்ப்பில்லை.

ஆஷ் வாஞ்சிநாதன் பகுதியில் செய்த சில தலித் ஆதரவு செயல்பாடுகளாக கூறப்படுபவை கட்டுக்கதைகள் என்பதற்கு இதுவே சான்று.

சரி வாஞ்சிநாதனின் கடிதத்தில் கொலைமிரட்டல் விடுத்த பிறகும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தாரா?

ஆம் வந்தார்.
27.12.1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் (George V) இந்தியா வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்தான் 'ஜன கன மன' எனும் இன்றைய ஹிந்திய தேசிய கீதம்.
(search எழுந்து நில் வெள்ளையனை வாழ்த்து வேட்டொலி)

வாஞ்சிநாதன் காணாப்பிணமாகி சாதிவெறியனாக வரலாற்றில் பதிவானதும்
தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்து தேசியகவி ஆனதும் எப்படி என்று புரிகிறதுதானே?!

சரி, தமிழ்தேசியத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

அதாவது பார்ப்பனரை சாதிவெறியராக்குவது திராவிடம் தமிழருக்குள் ஊடுருவ வழிவகுக்கிறது.

என்றால் இந்துமதப்பற்று ஹிந்தியர் ஊடுருவ வழிவகுக்காதா?

வாஞ்சிநாதன் காலகட்டத்தில் இந்திய விடுதலை உணர்வு இந்து மதப்பற்றுடன் கலந்திருந்தது.
அப்போதும் வெறிபிடித்த இந்துவாக அல்லாமல் ஒரு பற்றுள்ள இந்துவாக இருந்தது அத்தனை பெரிய குற்றமில்லை.

இன்று தமிழ்தேசியத்தின் காலம்.
இப்போது தமிழ் இனவுணர்வே  தேவை.
அவ்வுணர்வை சாதிவெறியாகத் திரிப்பது திராவிடத்தின் தலையாய வேலையாக உள்ளது.

இன்று தமிழ்தேசிய உணர்வாளனுக்கு முதலில் கிடைப்பது சாதிவெறியன் பட்டமே!

திரிப்புவேலைகளை புரிந்துகொள்ளத்தான் இந்த பதிவு.

1 comment: