Tuesday, 15 May 2018

சிவனடியாரும் போற்றும் இராமன்!

சிவனடியாரும் போற்றும் இராமன்!

இராவணன் சிறந்த சிவ பக்தன் என்று பலரும் கூறுகிறார்கள்.
ஆனால் சைவ அடியார்களோ இராமனையே போற்றியுள்ளனர்.

சங்க இலக்கியச் சான்றுகளுடன் ஏற்கனவே வெளியிட்ட "இராமனும் தமிழனே" எனும் பதிவினை அனைவரும் படித்திருப்பீர்கள்.

மேலதிக சான்றுகளாக இப்பதிவில் பிற்காலத்து இலக்கியங்களான சைவ மதத்தின் பக்தி இலக்கியங்களைப் பார்ப்போம்.

முதலில் திருநாவுக்கரசர் தேவாரம்,
திருவலம்புறப்பதிகம்....

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ

என்று பாடுகிறது.

அதாவது சிவந்த கண்களையுடைய திருமால் வில்லை ஏந்திக் குரங்கு சேனையோடு
சேதுக் கடலில் அணைகட்டி (இலங்கை) சென்றடைந்து
மேம்பட்ட பலபோர்கள் செய்து வென்றழித்த அரக்கனுடைய (இராவணனுடைய) நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழ்ந்தன.

மேலும் நாவுக்கரசர் இராமேச்சுரப் பதிகத்திலும்....

வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே

என்று பாடுகிறார்.

அதாவது, வன்மையை காட்டும் கண்களை உடைய அரக்கர்கள் வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாராய்த் துன்புறுத்தும் இயல்பினராய் நின்று போர்களைச் செய்ய,
அவரை அழித்துச் சிவந்த கண்களை உடைய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தம் கண்ணால் தரிசிக்க முடிந்தவர்கள் தலைவன் (அதாவது இறைவனாகிய சிவன்) பக்கத்திலிலேயே தங்கும் வாய்ப்பினைப் பெறுவர்.
--------
அடுத்து திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை....

தேவியை வவ்விய
தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல்
நண்ணும் இராமேச் சுரத்தாரை

என்று பாடுகிறது.

அதாவது, சீதையைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனின் (இராவணனின்) வலிமையை அழித்து,
அம்பு எய்யும் வில்லேந்திய இராமன் வழிபட்ட திருஇராமமேச்சுரம்

மேலும் ஞானசம்பந்தர் திருமறைக்காட்டுப் பதிகத்திலும்...

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே

என்று (இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில்) சிவன் தன் கால் விரலால்  அழுத்தியதைக் கூறி 'இரக்கம் இல்லையா எம்பெருமானே' என்று சிவனை செல்லமாகக் கடிந்துகொள்கிறார்.

அதோடு நில்லாது நமது ஞானசம்பந்தர் கோளறு பதிகத்திலும்...

ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா

என்று ஒரு வரியைக் கூறுகிறார்

அதாவது, ஏழு கடல்களால் சூழப்பட்ட இலங்கை அரசன் (இராவணன்) போன்ற அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது என்று பாடுகிறார்.

-------- 
அருணகிரிநாதர் முருகன் மீது பாடிய திருப்புகழ் இராமனைப் புகழ்வதையும் இங்கு கூறலாம்.

சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு மருமகப் பரிவோனே

தன்னுடைய சமத்தினால் (சாமர்த்தியத்தால்) புகழுக்குரிய சானகியை (சீதையை) துன்பத்துக்கு ஆளாக்கி திருடிச்சென்ற அரக்கனுடைய (ராவணனுடைய) உடலைத் துண்டாக்கி,
வெற்றியுடன் (சயத்து) அயோத்தி நகருக்குத் திரும்பி வந்த அரியின் (திருமாலின்) அழகிய மருமகனே!
-------
இராமனை ஆரியன் என்று திரிக்கும் திராவிடவாதிகள் காட்டிய தவறான வழியில் சென்று
தமிழ் இலக்கியங்கள் போற்றும் தமிழனான இராமனை வடவருக்கு தாரைவார்த்துவிட்டு
"நாங்கள் இராவணனின் பிள்ளைகள்" என்று பிதற்றும் இளைய தலைமுறையினர் சற்று உணர்ச்சிவசப்படாமல் உண்மையை அறிய முற்படவேண்டும்.

1 comment:

  1. கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு. அறாஅருநகை இனிதுபெற் றிகுமே -ஊன்பொதிபசுங்குடையார்( புறநானூறு 378)

    ReplyDelete