Thursday 31 December 2015

திருப்பதி: சைவ, வைணவ மோதலால் தமிழன் இழந்த மண்

திருப்பதி: சைவ, வைணவ மோதலால் தமிழன் இழந்த மண்

"திருப்பதி முருகன் கோவில் இல்லை அது திருமாலின் உறைவிடம்" என்போர் காட்டும் ஒரு வலுவான சான்று சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் வரும்,

ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் *கையி னேந்தி*
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

என்ற பாடலைத்தான்,
அதாவது காவிரிக்கரையில் (திருவரங்கம்?!) கிடந்தவண்ணம் இருக்கும் இறைவன் வேங்கடத்தில் சக்கரமும் சங்கும் கையில் ஏந்தி வேங்கடத்தில் நிற்கிறான் என்று இதிலிருந்து அறியமுடிகிறது.

இதுதான் முறியடிக்கவியலாத வலுவான சான்று.
ஆனால் இதை வலுவிழக்கச் செய்யமுடியும்.

திருப்பதி சிலையில் சங்கும் சக்கரமும் கையிலா ஏந்தப்பட்டுள்ளது??????

இல்லை. தோளில்தான் ஒட்டப்பட்டுள்ளது!

வேங்கடத்தைக் குறிக்கும்போது மறக்காமல் குறிப்பிடப்படும் பெரிய அருவி இன்று இல்லை.
அதேபோல ஆயிரம் தலையுடைய பாம்பின்மேல் அரங்கன் படுத்திருக்கவும் இல்லை.

சரி, சங்கும் சக்கரமும் திருமாலுக்கு மட்டுமே உரியதா?

இதே சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதைக்கு அடுத்துவருவது வேட்டுவ வரி அதில்,

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த
கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்

தனது சடைமுடியில் கங்கையை அணிந்துள்ள, நெற்றியில் கண்ணை உடையவனின் (சிவன்?!) திருமேனியிலே மறைகள் போற்றும் பாதி பெண்ணுருவமான நீ,
உன் தாமரை போன்ற கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தி சினத்தால் சிவந்தகண்ணுடைய சிங்கத்தின் மேலேறி நிற்பது என்ன மாயமோ?!
என்று இதற்குப் பொருள்.
கொற்றவை கூட சங்கு சக்கரம் ஏந்தியுள்ளாள்!

பால்வெண் சங்கம் என்று வந்துள்ளது. திருமாலுக்கு பிடித்தது சாளக்கிராமம் என்ற கருப்பு சங்கு.
சிவனுக்கு பிடித்தது அதிவெண்மையான வலம்புரி சங்கு.

அழகாபுத்தூர் சிவன் ஆலயத்தில் முருகன் சங்கும் சக்கரமும் ஏந்தியுள்ளான்.

சரி நெடியோன் என்பது திருமாலுக்கு மட்டுமே உரிய பெயரா?

சிலப்பதிகாரம் மற்றொரு இடத்திலும் 'நீலமேனி நெடியோன் கோயிலைப்' பற்றிக் கூறுகிறது.

அகநானூறு (149) நெடியோன் என்று விளிப்பது திருப்பரங்குன்றத்து தலைவனை அதாவது முருகனை!!!

"வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்" என்று புறநானூறு (241) கூறுகிறது. வச்சிரம் வைத்திருப்பவன் இந்திரன்.

மதுரைக் காஞ்சி தேவர்தலைவனை (இந்திரனை) 'மழுவாள் நெடியோன்' (453 - 467) என்கிறது.

பெரும்பாணாற்றுப்படை (402) கூறும் நெடியோன் கரிய நிறத்திலும் தொப்புள்கொடியில் நான்முகனைக் கொண்டவனாகவும் திருமாலுடன் ஒத்துபோகும் உருவத்துடன் உள்ளான்.

குமரிக்கண்டத்தில் ஆட்சி செலுத்திய பாண்டியமன்னன் பெயர் நெடியோன்தான் (மதுரைக்காஞ்சி 764).

சிலப்பதிகாரமே அழற்படுகாதையில் (56-61) பல அரசர்களை தோற்கடித்து நான்குவகை நிலங்களை கைப்பற்றிய மன்னனை 'உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன' என்று உவமை கூறுகிறது.
நடுகற்காதையில் பகைவரை வென்ற சேரனான செங்குட்டுவனை 'நிலந்தரு திருவின் நெடியோன்' என்று குறித்தலைக் காணலாம்.

நெடியோன் என்பது பொதுப்பெயர்.
உயர்ந்தவன் அல்லது உயரமானவன் என்று பொருள்படும்.
இது மன்னருக்கும் கடவுளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சரி கிடந்தநிலை திருமாலுக்கு மட்டுமே உரியதா?

திருப்பதிக்கு அருகே சுட்டபள்ளியில் உள்ள சிவனும் குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முருகனும் கூட கிடந்தநிலையில்தான் உள்ளனர்.
சிறுதெய்வங்களிலும் சில தெய்வங்கள் கிடந்தநிலையில் உண்டு. சிறந்த எடுத்துக்காட்டு வண்டிமறிச்சம்மன்.

சிலப்பதிகாரத்தில் வரும் தெய்வங்களின் அடையாளங்கள் இன்றைய சிவன், திருமால், முருகன், துருக்கை ஆகிய தெய்வங்களுடன் ஒத்துப்போனாலும்
அப்போது சைவமோ வைணவமோ இந்துமதமோ இருந்திருக்கவில்லை.

மாயோனை திருமாலாக்கி வைணவம் எடுத்துக்கொண்டது.
சேயோனை முருகனாக்கி சைவம் எடுத்துக்கொண்டது.

மாயோன்தான் திருமால் என்று பழந்தமிழ் இலக்கியம் எங்கும் கூறவில்லை.

மாயோன் அன்ன மால் என்கிறதுதான் நற்றினை (37:1) கூறுகிறது.

மால் மாயோன் ஆகியோர் கடவுளரா?

கலித்தொகையில் தலைவன் மாலுக்கும் (104:35) மாயோனுக்கும் (109:17) ஒப்பானவனாக புகழப்படுகிறான்.

புறநானூறு பாண்டிய மன்னின் புகழ் மாயோனின் புகழுக்கு ஒப்பானது என்கிறது (57:1)

ஆக மால், மாயோன் ஆகியோர் ஏற்கனவே புகழ்பெற்றிருந்த *மனிதர்கள்* என்று கருதமுடியும்.

சங்க நூல்களிலே வேங்கடமும், அதனைச் சூழ்ந்த நாட்டிற்கும் தலைவரென விளங்கிய
புல்லி (அகம் 61, 83, 209, 393-புறம் 385),
திரையன் (அகம் 85),
ஆதன் உங்கன் (புறம் 389) என்போரும் புகழ்பெற்ற மன்னர்கள்.

மலைபடுகடாம் பாடும் நன்னன் வேண்மான், வேல் உடையவனாகவும் திருவார் மார்பன் என்றும் புகழப்படுகிறான்.
வேல் முருகனுடன் தொடர்புடையது, திருவாழமார்பன் என்பது மார்பில் திருமகளைக் கொண்ட திருமாலைக்குறிப்பது.
மதுரைக்காஞ்சி (611) முருகனை நன்னன் என்றே அழைக்கிறது.

மேலும் ஒரு சான்று தரவா?

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் *திருமலை*மேல் எந்தைக்கு,
இரண்டுருவும் *ஒன்றாய் இணைந்து*
- பேயாழ்வர், (மூன்றாம் திருவந்தாதி 63)

அதாவது சடை, மழு, சூழரவு இவை சிவனின் அடையாளங்கள்,
நீள்முடி, சக்கரம், பொன்னாண் இவை திருமாலின் அடையாளங்கள்,
இரண்டும் கலந்த உருவம்தான் திருப்பதியில் உள்ளது என்று பொருள்.

திருப்பதியில் நடக்கும் வில்வ அர்ச்சனை, பாலாஜி என்பதில் பாலா என்ற  வேலைக் குறிக்கும் வடசொல் என பல சான்றுகள் சைவத்தின் தொடர்புக்கு வலுசேர்க்கின்றன.

என்றால் திருமால் என்ற சொல் அப்போது இருந்ததில்லையா?
இருந்துள்ளது.
காடுகாண் காதையிலேயே
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்

*திருமால்*குன்றம் மலையின் மேலே
புண்ணிய*சரவணம்* என்ற  பொய்கை இருந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார் இளங்கோவடிகள்.
அதுதான் இன்றைய அழகர் மலை.
பழைய பெயர் 'திருமாலிருஞ்சோலை'.
மலைக்கு மேலே சுனையும் உண்டு.
இதனை சிலம்பாறு (சிலம்பு!) என்றும் கூறுவர்.

ஆனால் இவ்விரண்டிற்கும் நடுவில் இருக்கும் பழமுதிர்சோலை பற்றி எந்த குறிப்பும் இல்லை.
அழகர்தான் முருகரோ என்ற ஐயம் தோன்றுகிறது.
காரணம் முருகனைத்தான் அழகன் என்று கூறுவர்.
இளங்கோவடிகள் திருமால் என்று முருகனைக் குறிப்பிட்டுள்ளார் என்றுகூடச் சொல்லலாம்.

சரவண என்பது முருகருடன் தொடர்புடையதா?
ஆம். குன்றக்குரவையில்
'சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான்
திருக் கை வேல்' என்று வருகிறது.
அதாவது ஆறுகுழந்தையாகப் பிறந்து சரவணப் பொய்கையில் ஆறு (கார்த்திகைப்) பெண்களிடம் தாய்ப்பால் குடித்த முருகன் கையில் இருக்கும் வேல் என்பதிலிருந்து இதை அறியலாம்.

அழகர் ஆற்றிலிறங்குவது நாயக்கர்கள் காலத்தில்தான் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
காலங்காலமாக அழகர் மலையில் இருந்து அலங்காநல்லூர் வழியாக தேனூரில் வைகையாற்றிலிறங்கிய அழகரை, நாயக்கர்கள் இறங்கவிடாது தடுத்து முறையை மாற்றி மதுரையிலேயே இறக்குகின்றனர்.

மேலேயிருந்த சிலம்பாற்றில் 'ராக்காயி' அம்மனை உட்காரவைத்தனர்.
கள்ளழகர் நகைகள் தெலுங்கு குடும்பத்தின் பொறுப்பில்தான் உள்ளது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாயக்கர்களால் முருகனின் படைவீடான பழமுதிர்சோலையே மறைக்கப்பட்டது.
அதை வெளிக்கொணர்ந்து இப்போது தற்காலக் கோவிலான சோலைமுருகன் கோவிலை 1950களில் நிறுவியவர் அண்ணல் கி.பழனியப்பனார்.

நான் ஏற்கனவே போட்ட இந்த பதிவிலும் சில சான்றுகளைத் தந்துள்ளேன்.
( vaettoli.blogspot.in/2014/09/blog-post_20.html?m=1 )

அப்பதிவு தமிழர் மண்மீட்பை அடிப்படையாகக் கொண்டது.
அதாவது நாயக்கர்காலத்தில் வைணவ ஆதரவும் தெலுங்கு ஆதரவும் தமிழர் பகுதியான திருப்பதியை பறித்து தெலுங்கு வைணவரிடம் கொடுத்துவிட்டன.

திருமால் பக்தரோ முருக பக்தரோ தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளாமல் திருப்பதியை மீட்டுவந்தால் போதும்.

1 comment:

  1. சிலப்பதிகாரத்தில் பிறவா யாக்கைப் பெரியோன் என்று சிவபெருமானைப் பற்றி வருகிறதே!'நாராயணா வென்னா நாவென்ன நாவே' என இருகிறது.இராமனைப் பற்றியும் கிருட்டிணனைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.சங்கப் புலவர்களில் ஒருவர் உறையூர் மருத்துவன் தாமோதரனார்.சங்க காலத்தில் சனாதன தருமம் தமிழகத்தில் இல்லை என்று எப்படிக் கூற முடியும்?இவை பிற்சேர்க்கை என்றால் சங்க நூல்களில் விநாயகரைப் பற்றி இல்லையே?'முக்கட்செல்வர்' என்று சிவபெருமானைப் பற்றி புறநானூற்றில் இருக்கிறதே!'ஆல்கெழு கடவுட் புதல்வ' என்று திருமுருகாற்றுப் படையில் இருக்கிறது.வட இந்தியாவைச் சேர்ந்த மகாபாரதப் பிரதிகளிலும் ஸ்கந்தனின் கதை இருக்கிறது.ஆனால் வட இந்தியாவில் கந்தனுக்குக் கோவில்ககள் இல்லை.மகாபாரதத்தில் முருகன் என்ற சொல்லும் வள்ளியும் இல்லை.

    ReplyDelete