Sunday, 20 December 2015

குருதியில் நனைந்த குமரி -1

குருதியில் நனைந்த குமரி -1

1954: ஆகஸ்ட் 11:

"தம்பி பீர்முகமது ஒங்க அண்ணன்தானே?"

"ஆமாங்க, என்னாச்சு?"

"புதுக்கடை கூட்டத்துல மலையாள போலீஸ் புகுந்து சுட்டதுல ஒங்கண்ணன் நெஞ்சுல குண்டு பாஞ்சுடுச்சு"

"ஐயையோ என்னம்மா சொல்றீங்க?
எங்கண்ணனுக்கு என்னாச்சு?"

"இப்பதா சேதி தெரிஞ்சது, ஒடனே போ"

ஓடோடிப்போய் புதுக்கடை பகுதிக்குப் போய் பார்த்தால் அங்கே பல பேர் குண்டடிப்பட்டு கிடந்தனர்.
பொதுமக்கள் சிதறி ஓடினர்.

முனங்கிக் கொண்டிருந்த பலரை மலையாள போலீஸ் அங்கே ஒரு பாழுங்கிணத்தில் தூக்கிவீசிக் கொண்டிருந்தனர்.

அங்கே ஒரு ஓரத்தில் வெள்ளைச் சட்டை குருதியால் நனைந்து கீழே கிடந்தது பீர்முகமது உடல்.

"அண்ணே...."
கீழே உட்கார்ந்து கதறி அழுதான்.

அருகே ஒருவர் ஓடிவந்தார்.
"தம்பி தம்பி போலீஸ் வர்றதுக்குள்ள தூக்கு.
இல்லனா கொண்டு போய்டுவானுக".
இருவரும் சேர்ந்து சடலத்தைத் தூக்கிக்கொண்டு ஒரு இடத்தில் ஒழிந்துகொண்டார்கள்.

இரண்டு லாரி நிறைய காயம்பட்டவர்களை அள்ளிக்கொண்டு சென்றனர்.

"என்னண்ணே இதெல்லாம்?
எதுக்கு இப்டி நடந்துக்குறாங்க?
நாம தமிழர்கள் தமிழ்மாநிலத்தோட சேர்க்கணும்னு கூட்டம்தானனே கூடினோம்"

"சாதாரணக் கூட்டமா தம்பி!
குஞ்சனைய்யா வாராருன்னதும் பத்தாயிரம் பேர் கூடிட்டாங்க.
அவரால வரமுடியல.
கோபாலகிருஸ்ணந்தா வந்தாரு.
அவர் பேசிட்ருக்கும்போதே போலீஸ் வண்டி வந்தது.
கோபாலகிருஸ்ணனையும் மதியழகனையும் மேடைல ஏறி கைது பண்ணி வண்டில ஏத்துனாங்க.
ஒடனே மக்கள் கோசம்போட்டுக்கிட்டே போலீஸ் வண்டி சுத்தி நின்னுகிட்டாங்க.
ஒடனே பெரிய பெரிய துப்பாக்கிய எடுத்து சுட ஆரம்பிட்டானுக.
28 ரவுண்ட் சுட்ருப்பானுக முன்வரிசைல நின்ன அஞ்சுபேருக்கு நெஞ்சுல குண்டு பட்டுட்டு.
நான் இன்னொரு பக்கம் நின்னு பாத்துட்ருந்தேன்.
அப்பதா ஒங்கண்ணனுக்கு குண்டு பட்டுச்சு அங்கயிருந்து எல்லாரும் ஓடஆரம்பிச்சாங்க.
விடாம சுட்டதுல பலபேருக்கு காயம்.
ஒங்கண்ணனும் கொஞ்சதூரம் வந்து விழுந்துட்டாரு.
நாதா மறவா அவர தூக்கி வச்சேன்.
இன்னும் மூணுமணிநேரத்துல இருட்டிரும்.
அப்பறம் கெளம்பலாம்.
ஆமா எங்கருந்து வர்றீங்க?"

"தேங்காப்பட்டணம்"

"நல்ல வேள சரியான நேரத்துக்கு வந்தீங்க.
இல்லனா அந்த பாழுங்கெணத்துல தூக்கிபோட்ருப்பானுக".

இருட்டிய பிறகு பிணத்தை தூக்கிச்சென்றனர்.

மறுநாள் காலை தினமலரில் செய்தி வந்தது.

மார்த்தாண்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பலி
புதுக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் நிகழ்விடத்திலேயே பலி.
பலர் கவலைக்கிடம்.
ஆயிரக்கணக்கானோர் கைது.

(தொடரும்)

No comments:

Post a Comment