Wednesday 23 December 2015

குருதியில் நனைந்த குமரி -4

குருதியில் நனைந்த குமரி -4

1954 ஆகஸ்ட் 9.

மாதவன் நாயர் (இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்) திருவனந்தபுரம் சிறைச்சாலையில் கண்கானிப்பாளர் அறையில் அமர்ந்திருந்தார்.
நேசமணியை அழைத்துவந்தனர்.

"ஐயா உமக்கு ஏன் இந்த வேலை?
தென்பகுதி மக்களைத்தான் அரசுக்கு எதிராகத் தூண்டிவிட்டீர்.
மூணாறு மக்களுக்கும்  உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
அங்கேயும் போய் ஏன் கலகம் மூட்டுகிறீர்?
நீர் தலையெடுக்கும் வரை அங்கே மக்கள் தமிழகத்தோடு இணைவதைப் பற்றி சிந்திக்கவில்லை.
இப்போது ஒரே குழப்பமாகிவிட்டது இது உமக்கு திருப்தியா?"

"ஐயா நாயரே!
மூணாறு என்ன மூணாறு ,
5 ஆண்டுகள் முன்பு சென்னையை தெலுங்கர்களிடமிருந்து காக்க கூடிய முதல் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு சென்றவன் நான்.
வில்லிசையோடு அம்மாநாட்டைத் தொடங்கிவைத்ததே ஒரு குமரித் தமிழன்தான்.
மூணாறு மக்கள் 95% தமிழர்கள், அவர்களுக்காக பேச வந்திருக்கும் நீர் ஒரு மலையாளி!
உமக்கு எப்படி புரியும் எங்கள் உணர்ச்சி?
அந்த மக்களை உழைக்கவைத்து உழைக்கவைத்து சுரண்டுவதைத் தவிர நீங்கள் ஒரு அடிப்படை வசதியேனும் செய்யவில்லை.
குமரித் தமிழனை விட மூணாறு தமிழனுக்குத்தான் தமிழகத்தில் இணையவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
பணம் காய்க்கும் மரத்தை நீங்கள் அத்தனை எளிதில் விடமாட்டீர்கள்தான்.
ஆனால் ஒரு அப்பாவியைத் தூக்கிலிருந்து காப்பாற்ற டெல்லி வரை போய் நீதி பெற்றுக் கொடுத்தவன் நான்.
25 லட்சம் தமிழர்கள் தாய்மண்ணோடு இணைவதற்காக என்னால் முடிந்தது அனைத்தையும் செய்வேன்.
மூணாறு தமிழனுக்கு மற்ற தமிழர்கள் யாரும் குரல்கொடுக்கவில்லை என்ற பெயர் வரக்கூடாது இல்லையா?"

"ஹ்ம். தமிழகத்திலிருந்துகூட உங்களுக்கு ஆதரவு கிடைக்காது.
நீர் அங்கே போய்ப் பாரும்.
யாரும் உங்களை மதிப்பதில்லை"

"எல்லாம் உங்கள் புண்ணியம்தான்.
தமிழைத் தடை செய்தீர்கள்.
மலையாளத்தை புகுத்தினீர்கள்.
சாதிய ஏற்றத்தாழ்வை உண்டாக்கி உயர்சாதித் தமிழர்களை உங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டீர்கள்.
நாங்கள் இன்று தமிழகத்திலிருந்து தோற்றத்தால் மொழி பேசும் முறையால் வேறுபட்டு நிற்கிறோம்.
ஆனால் நாங்கள் தமிழினம் என்பது மட்டும் மாறாது"

"தமிழ்நாட்டோடு சேர்ந்தால் முன்னேறிவிடுவீர்கள் என்று எதை வைத்து நம்புகிறீர்கள்?"

"முன்னேறுவதை விட சரியான அடையாளத்துடன் இருப்பது முக்கியம்.
வேறுமொழி பேசும் மேலிடத்திடம் எங்கள் குறைகளைக் கொண்டுசெல்லவே பல இடைஞ்சல்கள் ஏற்படும்.
மலையாள அரசு தமிழைப் புறக்கணிப்பதைக் கண்டு தன் சொந்த பணத்தில் பெரிய நன்கொடை அளித்தாரே வள்ளல் அழகப்பசெட்டியார் அதையும் கூட சரியாகப் பயன்படுத்தினீர்களா?
இல்லை.
தமிழைப் புறக்கணிக்கும் நீங்கள் எங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மையாய் அமையமாட்டீர்கள்.
நாங்கள் உயராவிட்டாலும் தாழாமல் இருக்க விரும்புகிறோம்"

"வேண்டாம் ஐயா, எம்மை சீண்டினால் கடும் விளைவுகள் ஏற்படும். உமக்கு தெரியாதா உம் முன்னோர் வரலாறு?"

"தெரியும். இது எங்கள் மண்.
இங்கே 400 ஆண்டுகள் பழமையான ஒரு மலையாள கல்வெட்டைக் காட்டமுடியுமா உங்களால்?!
பரசுராமர் படைத்த மண் என்ற புராணத்தைத் தவிர உங்களிடம் வேறு என்ன சான்று இருக்கிறது?!
இங்கே முதலில் தோன்றிய இயக்கம் தமிழர் இயக்கம் என்ற பெயரால் தோன்றவில்லை.
140 ஆண்டுகளுக்கு முன்பே 'மலையாள எதிர்ப்பு இயக்கம்'தான் முதலில் தோன்றியது.
25 ஆண்டுகள் முன்புதான் 'தமிழர் விடுதலை காங்கிரஸ்' தோன்றியது.
நாங்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சியை பெறுமுன்  'மலையாள எதிரிகள்' என்ற உணர்ச்சியைத்தான் முதலில் பெற்றோம்.
உங்கள் இயற்கை குணத்தை நாங்கள் நன்கு அறிவோம்"

"நாங்கள் என்ன மனிதர்கள் இல்லையா?
நாங்கள் கேட்பதாவது ஐக்கிய கேரளம்.
ஆனால் திருவாங்கூரைத் தனிநாடாக்க முயன்ற திவான் சி.பி.ராமசாமி ஐயர் தமிழர்தானே?!"

"ஆமாம். அதனால்தான் முகத்தில் சுடப்பட்டார். ஏதோ புண்ணியம் பிழைத்துவிட்டார். மறுநாளே சென்னைக்கு ஓடிவிட்டார்.
நானும் அதுபோல ஒரு துரோகியாக விரும்பவில்லை"

"முதல்மந்திரி உங்களை எச்சரிக்கச் சொன்னார். நான் சொல்லிவிட்டேன்.
இதன் பிறகு ஏற்படப்போகும் மோசமான விளைவுகளுக்கு நீர்தான் பொறுப்பு.
ஆறு ஆண்டு முன்பு ஆட்சியில் அவர் இருந்தபோது தமிழகத்துடன் நீங்கள் இணைய முயன்றபோது நடந்தது நினைவுள்ளதுதானே?!"

"எப்படி ஐயா மறக்கமுடியும்? செல்லையா தேவசகாயம் என்று
2 பேரை சுட்டுக் கொன்றார்.
200 பேர் கைகால்களை உடைத்தார்.
1000 பேரை சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினார்"

"எல்லாம் தெரிந்தும் ஏன் சமாதானமாக ஒற்றுமையாக இருக்க மறுக்கிறீர்"

"ஒற்றுமை என்பது இரு பகுதி மக்களும் சேர்ந்திருப்பது அதன்மூலம் இருவரும் நலமடைவது.
ஒரு பகுதி மக்களை இன்னொரு  பகுதி மக்கள் சுரண்டிக்கொண்டே சேர்ந்திருப்பது என்பது ஒற்றுமை அல்ல.
சமாதானம் என்பது சகித்துக்கொள்வது என்றாகாது.
எந்த விளைவுகள் வந்தாலும் சரி நாங்கள் தமிழகத்துடன் இணைந்தே தீருவோம்"

"முடிவாக என்னதான் கூறுகிறீர்கள்?"

"மூணாறிலிருந்து மலையாள காவலரை போகச்சொல்லுங்கள்.
கோரிக்கை வைக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்கள்.
மாநில வரைவுக் குழு அவர்கள் பணியைச் செய்யவிடுங்கள்"

"இனி என் கையில் ஒன்றுமில்லை"

"பட்டத்தின் கொட்டமடக்குவேன் என்று கூறியே வாக்கு வாங்கி வென்றவன் நான்.
உங்கள் மிரட்டலுக்கு நான் பயப்படப்போவதில்லை"

மாதவன் நாயர் கோபத்துடன் வெளியேறினார்.
-------------
மூணாறு மக்களுக்காகத் தடையை மீறி
9 எம்.எல்.ஏ,
4 பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள்,
3 நகரசபை தலைவர்கள் உட்பட 410 பேர் கைதானார்கள்.

இதுபோக ஸ்டாம்ப் எரிப்பு, நீதிமன்ற மறியல், மாணவர் ஆர்ப்பாட்டம் என்று பெரிய போராட்ட நிகழ்வுகள் நடந்தன.

144 தடையை மீறி கைதான நேசமணி உள்ளிட்டோரின் விடுதலையைக் கொண்டாட 144 கார்களில் ஊர்வலமாகச் சென்று 50,000 பணமுடிப்பையும் வழங்க தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழர்கள் என்றுமில்லாத எழுச்சியைக் கண்ட பட்டம் தாணுப்பிள்ளை இரண்டு நாட்கள் முன்பே அனைவரையும் விடுதலை செய்தார்.

இதனைத் தொடர்ந்து தி.த.நா.க ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் பெரும் வன்முறையை நிகழ்த்த துப்பாக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

அந்த நாளும் வந்தது.

(தொடரும்)
--------------------------------------------
குருதியில் நனைந்த குமரி -3
https://m.facebook.com/photo.php?fbid=641579359279054&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&__tn__=E

No comments:

Post a Comment