Showing posts with label கன்னி மா குமரி. Show all posts
Showing posts with label கன்னி மா குமரி. Show all posts

Tuesday, 5 January 2016

குருதியில் நனைந்த குமரி -9

குருதியில் நனைந்த குமரி -9

1954 ஆகஸ்ட் 12
அதிகாலை 3மணி
கோதையாறு மணற்கரை

காவல் வாகனம் ஒன்று வந்து நின்றது.

காவலதிகாரி கூறினார்.
"பட்டம் இதை எரிக்கச் சொல்லிவிட்டார்.
இங்கேயே முடித்துவிடலாம்"

அதிலிருந்து உயிரிழந்த 30 உடல்கள் தூக்கிபோடப்பட்டன.

"ஐயா குழி தோண்டினால் விடிந்துவிடும்.
விறகுகளும் இங்கே இல்லை"

"ஆமாம் இவர்களுக்கு மரியாதையான அடக்கம் ரொம்ப அவசியமா?
அருகிலுள்ள தமிழ் குடியிருப்புக்கு சென்று கிடைத்ததை எடுத்துவாருங்கள்"

நான்கைந்து காவலர்கள் அருகிலிருந்த வீடுகளுக்குள் நுழைந்து விறகு துணி காகிதம் என முடிந்ததை அள்ளிக்கொண்டு வந்தனர்.

அதற்குள் மற்றவர்கள் பிணங்களை ஒன்றன்மேல் ஒன்றாக போட்டு குவியல் போல ஆக்கியிருந்தனர்.
அதன் மேல் விறகுகளையும் துணியையும் போட்டு பெட்ரோல் ஊற்றி குப்பையை எரிப்பதுபோல் எரித்தனர்.
--------------------------------
துப்பாக்கிசூடு பற்றி விசாரிக்க பட்டம் அரசு சங்கரன் குழுவை நியமித்தது.

பட்டம் ஒரு தாளில் எழுதிக்கொடுத்தார்
"இதை அறிக்கையாக தயார்படுத்தி வையுங்கள்.
நான் கூறும்போது வெளியிடலாம்.
அதுவரை விசாரணை என்று எதையாவது பதிவு செய்யுங்கள்"

"சரி ஐயா அப்படியே செய்துவிடுகிறேன்"

"கவலை வேண்டாம். தடயங்கள் எதும் இல்லை. நீங்கள் சொல்வதுதான் அறிக்கை.
அரசிதழில் அதை வெளியிடவும் செய்வேன்"

"உத்தரவு ஐயா"

சங்கரன் அந்த தாளைப் பார்த்தார்.
'இறந்தவர் எண்ணிக்கை=4
காயம்பட்டவர் எண்ணிக்கை=8
காவல்துறை தற்காப்புக்காக சுட்டதில் அசம்பாவிதம் நடந்தது.
எனவே காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை'
என்று அதில் போட்டிருந்தது.
---------------------------------------
இருட்டியபிறகு நேசமணி வீட்டின் பின்பக்கமாக ஒரு தொண்டர் வந்தார்.

"ஐயா, ஜீவானந்தத்தை கடுக்கைக்காடு வழியாக வழியனுப்பிவிட்டேன்"

"அப்பாடா பத்திரமாக போய்ச்சேர்ந்தாரா?"

"ஆமாம் ஐயா ஓயாது நடந்ததில் காலில் கொப்புளம் வந்துவிட்டது.
திருநெல்வேலி எல்லைக்கருகே  விட்டுவிட்டுத்தான் வந்தேன்"

"கம்யூனிஸ்ட் தலலைமை ஆதரவு தராவிட்டாலும் அக்கட்சியின் எம்.எல்.ஏ ஜீவா தலைமையை மீறி நம்முடன் களத்தில் நின்றாரே அதுவே போதும்.
அவர் பாதுகாப்பு நமது பொறுப்பு.
அதை சரியாக நிறைவேற்றினாய் தம்பி.
தமிழக பத்திரிக்கைக்காரர்களை இனி ஜீவா நம் பக்கம் திருப்புவார்.
உனக்கு நன்றி.
நமது வழக்கறிஞர்களிடம் இந்த கடிதத்தை கொடுத்துவிடு"

"சரி ஐயா"

"கைதாவோர் அனைவரும் வெளிவர பிணை மனு உடனுக்குடன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால்  கொடுக்கப்படும்"

"சரி ஐயா கொடுத்துவிடுகிறேன்"

"நாளை வந்து என்னைப்பார்"

"வருகிறேன் ஐயா"

எண்ணங்கள் அலைமோத நேசமணி சற்று நிம்மதியடைந்தார்.
------------------------------------------------
1954 ஆகஸ்ட் 14
பைங்குளம்

வேலுவின் குழந்தைக்கு காய்ச்சல் கூடியிருந்தது.
"நான் மருந்து வாங்கி வருகிறேன்" என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிய அவரை தடுத்தாள் அவரது மனைவி.

"வேண்டாம் வெளியே போகாதீர்கள்.
யாரையோ பிடித்து இரவு முழுவதும் கொடுமை செய்தனர் அந்த அலறலை நீங்கள் கேட்கவில்லையா?"

"குழந்தையைக் காப்பாற்றவேண்டுமே,
நான்கு நாட்களாக வெளியே போகவில்லை.
உணவும் தீர்ந்துவிட்டது.
இனி முடியாது எப்படியாவது மருந்து வாங்கி வருகிறேன்.
நீ தைரியமாய் இரு"

தெருவில் இறங்கி நடந்தார்.

பீடி குடித்துக்கொண்டிருந்த ஒரு காவலன் "எடோய்! ஏ பாண்டி!" என்று அழைத்தான்.

வேலு நின்றார்.

அருகில் வந்து "எங்கே போகிறாய்" என்று கேட்டான்.

வேலுவுக்கு அவன் பேசிய மலையாளம் முழுதும் புரியவில்லை.
"புரியவில்லை" என்றார்.

ஆத்திரம் வந்த அவன் துப்பாக்கியின் பின்புறத்தால் நெஞ்சில் இடித்து கீழே தள்ளினான்.
மேலும் அவர் நெஞ்சில் மிதித்தான்.

மக்கள் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர்.
காவலர்கள் போனதும் அவரை தூக்கிக்கொண்டுபோய் அவர் வீட்டில் கிடத்தினார்கள்.

நல்லவேளை இவர் தி.த.நா.க கட்சி தொண்டர் கிடையாது என்று மக்கள் ஆறுதல் பட்டுக்கொண்டனர்.
-------------------------------------------
ஆத்திவிளை காவல்நிலையம்

தி.த.நா.க தொண்டர் சிங்காராயரை இழுத்துவந்தனர்.

மேசையில் கிடத்தி கட்டிவைத்து சொல்லமுடியாத இடங்களில் அடித்து கொடுமைப்படுத்தினர்.

எவ்வளவு அடித்தும் தி.த.நா.க தலைவர்கள் மறைந்திருக்கும் இடத்தை அவர் காட்டிக்கொடுக்க மறுத்தார்.

இதேபோல மற்றவர்களையும் பிடித்து தலைமறைவாயிருந்த தலைவர்களைப் பற்றி தகவலை வெளிக்கொண்டுவந்து ஒவ்வொரு தலைவர்களாகக் கைது செய்தனர்.
----------------------------------
குலசேகரம் பகுதியில் சந்தை கூடியிருந்தது.
கூட்டம்தான் இல்லை.
திடீரென்று அங்கே காவல்படை நுழைந்து வியாபாரிகளை பெண்களை அடித்து உதைத்து விரட்டினர்.
அதிலே கீழே விழுந்த நிறைமாத சூலிக்கு வயிற்றுவலி அதிகமாக மக்கள் ஓடிவந்து உதவ  திறந்தவெளி குழந்தைபிறந்தது.
-----------------------------------
வெறியடங்காத அந்தக் கூட்டம் அடித்து உதைத்தது போக ஒரே நாளில் பல்வேறு இடங்களில் 1054 பேரைக் கைது செய்து இழுத்துச் சென்றது

(தொடரும்)
-------------------------------------
குருதியில் நனைந்த குமரி -8
https://m.facebook.com/photo.php?fbid=645523828884607&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

Friday, 25 December 2015

குருதியில் நனைந்த குமரி -3

குருதியில் நனைந்த குமரி -3

"தேவிகுளம், பீருமேடு பகுதியை கலவரபூமியாக்குங்கள்"

"வரப்போகும் 'மாநில புனரமைப்புக் குழுவை' குழப்பி அந்த பகுதியை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டும்"

"அதெப்படி மூணாறை நாம் விடமுடியும்?
பணிக்கரை அக்குழுவில் போட்டாயிற்று.
தமிழர் யாரும் அக்குழுவில் இடம்பெறாமல் செய்தாயிற்று.
எல்லாம் நேருவைச் சுற்றியிருக்கும் மேனன்கள் கிருபை"

1954ல் 'ஐக்கிய கேரளம்' கனவு கண்ட மலையாளிகளின் கூச்சல்கள் இவை.
இவைகள் நிறைவேறியும் விட்டன.

ஐக்கிய கேரளத்தில் நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டமும் கூட சேர்க்கப்பட்டிருக்கும்,
நேசமணி என்றொரு தமிழன் பிறக்காமல் இருந்திருந்தால்.

குழப்பமான அந்த காலத்தில் 60 வயதில் நேசமணி தனது தளபதி அப்துல் ரசாக்குடன் மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கால்கடுக்க நடந்து ஆங்காங்கே காணப்படும் தமிழர்களின் குடிசைகள் ஒன்றுவிடாமல்  சென்று சந்தித்து பேசி படிப்பறிவில்லாத அம்மக்களுக்கு எடுத்துக்கூறி தெம்பூட்டி போராட்டத்திற்கு ஆயத்தமாக்கினார்.

அவர் இருக்கும் தெம்பில் மூணாறு தமிழர்கள் துணிச்சலுடன் மலையாளிகளை எதிர்த்தனர்.

அதனால்தான் மலையாளிகளின் கொடுங்கரங்கள் நீலகிரி கோவை வரை நீளமுடியவில்லை.

தி.த.நா.க தலைவர்கள் கைது செய்யப்பட்டு தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டதை அறிந்ததும் தென் தமிழ் முனை கொந்தளித்தது.

"உங்களுக்கு 30 நாட்கள் கெடு, அதற்கு மேலும் தேவிகுளம் பீர்மேட்டில் குழப்பம் விளைவித்தால் மக்கள் அரசுக்கு எதிராக செயல்படுவார்கள்"  நேரடியாக அறிவித்தார் நேசமணி.
அடங்க மறுத்தார் பட்டம் தாணுப்பிள்ளை.

ஜூன் 30ஆம் நாளை 'தேவிகுளம் தினமாக' முன்னெடுக்க தமிழகத்தைக் கோரினார்.
தமிழகம் அதைச் செய்தது.

போராட்டக்குழு அமைக்கப்பட்டது.
பி.இராமசாமி(பிள்ளை)
ஏ.குஞ்சன்(நாடார்)
ஆர்.பொன்னப்பன்(நாடார்)
ப.தாணுலிங்கம்(நாடார்)
எ.அப்துல் ரசாக்

கெடு முடிந்ததும். நேசமணி ரசாக்கையும் சிதம்பரநாதனையும் அழைத்துக்கொண்டு ஜூலை 2 (1954) அன்று புறப்பட்டு மூணாறு வந்து சேர்ந்தார்.
அதற்குள் பட்டம் அரசு அங்கே 144 தடை உத்தரவு ஒரு மாதகாலத்துக்குப் பிறப்பித்துவிட்டது.

ஜூலை 4 தடையை மீறி கூட்டம் கூடியது.
நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் மூவரும் கைதானார்கள்.
அடிப்படை வசதிகூட இல்லாத கோட்டையம் சிறையில் வைக்கப்பட்டனர்.

நேசமணியையே கைது செய்துவிட்டார்களா?!
தென்முனை குமுறியது.

தடை உத்தரவு இருந்த அந்த ஒரு மாத காலத்தில் தினம்தினம் தடையை மீறி பல தலைவர்கள் கைதானார்கள்.

அண்ணா ஆதரவளித்தார், ஜீவானந்தம் ஆதரவளித்தார்.

144 உத்தரவு முடியும்போது (9 எம்.எல்.ஏ உட்பட) மூணாறு தமிழருக்காகத் தடையை மீறி கைதானோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

410 !!!!!

(தொடரும்)
____________________
குருதியில் நனைந்த குமரி -2
https://m.facebook.com/photo.php?fbid=641222135981443&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

Wednesday, 23 December 2015

குருதியில் நனைந்த குமரி -4

குருதியில் நனைந்த குமரி -4

1954 ஆகஸ்ட் 9.

மாதவன் நாயர் (இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்) திருவனந்தபுரம் சிறைச்சாலையில் கண்கானிப்பாளர் அறையில் அமர்ந்திருந்தார்.
நேசமணியை அழைத்துவந்தனர்.

"ஐயா உமக்கு ஏன் இந்த வேலை?
தென்பகுதி மக்களைத்தான் அரசுக்கு எதிராகத் தூண்டிவிட்டீர்.
மூணாறு மக்களுக்கும்  உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
அங்கேயும் போய் ஏன் கலகம் மூட்டுகிறீர்?
நீர் தலையெடுக்கும் வரை அங்கே மக்கள் தமிழகத்தோடு இணைவதைப் பற்றி சிந்திக்கவில்லை.
இப்போது ஒரே குழப்பமாகிவிட்டது இது உமக்கு திருப்தியா?"

"ஐயா நாயரே!
மூணாறு என்ன மூணாறு ,
5 ஆண்டுகள் முன்பு சென்னையை தெலுங்கர்களிடமிருந்து காக்க கூடிய முதல் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு சென்றவன் நான்.
வில்லிசையோடு அம்மாநாட்டைத் தொடங்கிவைத்ததே ஒரு குமரித் தமிழன்தான்.
மூணாறு மக்கள் 95% தமிழர்கள், அவர்களுக்காக பேச வந்திருக்கும் நீர் ஒரு மலையாளி!
உமக்கு எப்படி புரியும் எங்கள் உணர்ச்சி?
அந்த மக்களை உழைக்கவைத்து உழைக்கவைத்து சுரண்டுவதைத் தவிர நீங்கள் ஒரு அடிப்படை வசதியேனும் செய்யவில்லை.
குமரித் தமிழனை விட மூணாறு தமிழனுக்குத்தான் தமிழகத்தில் இணையவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
பணம் காய்க்கும் மரத்தை நீங்கள் அத்தனை எளிதில் விடமாட்டீர்கள்தான்.
ஆனால் ஒரு அப்பாவியைத் தூக்கிலிருந்து காப்பாற்ற டெல்லி வரை போய் நீதி பெற்றுக் கொடுத்தவன் நான்.
25 லட்சம் தமிழர்கள் தாய்மண்ணோடு இணைவதற்காக என்னால் முடிந்தது அனைத்தையும் செய்வேன்.
மூணாறு தமிழனுக்கு மற்ற தமிழர்கள் யாரும் குரல்கொடுக்கவில்லை என்ற பெயர் வரக்கூடாது இல்லையா?"

"ஹ்ம். தமிழகத்திலிருந்துகூட உங்களுக்கு ஆதரவு கிடைக்காது.
நீர் அங்கே போய்ப் பாரும்.
யாரும் உங்களை மதிப்பதில்லை"

"எல்லாம் உங்கள் புண்ணியம்தான்.
தமிழைத் தடை செய்தீர்கள்.
மலையாளத்தை புகுத்தினீர்கள்.
சாதிய ஏற்றத்தாழ்வை உண்டாக்கி உயர்சாதித் தமிழர்களை உங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டீர்கள்.
நாங்கள் இன்று தமிழகத்திலிருந்து தோற்றத்தால் மொழி பேசும் முறையால் வேறுபட்டு நிற்கிறோம்.
ஆனால் நாங்கள் தமிழினம் என்பது மட்டும் மாறாது"

"தமிழ்நாட்டோடு சேர்ந்தால் முன்னேறிவிடுவீர்கள் என்று எதை வைத்து நம்புகிறீர்கள்?"

"முன்னேறுவதை விட சரியான அடையாளத்துடன் இருப்பது முக்கியம்.
வேறுமொழி பேசும் மேலிடத்திடம் எங்கள் குறைகளைக் கொண்டுசெல்லவே பல இடைஞ்சல்கள் ஏற்படும்.
மலையாள அரசு தமிழைப் புறக்கணிப்பதைக் கண்டு தன் சொந்த பணத்தில் பெரிய நன்கொடை அளித்தாரே வள்ளல் அழகப்பசெட்டியார் அதையும் கூட சரியாகப் பயன்படுத்தினீர்களா?
இல்லை.
தமிழைப் புறக்கணிக்கும் நீங்கள் எங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மையாய் அமையமாட்டீர்கள்.
நாங்கள் உயராவிட்டாலும் தாழாமல் இருக்க விரும்புகிறோம்"

"வேண்டாம் ஐயா, எம்மை சீண்டினால் கடும் விளைவுகள் ஏற்படும். உமக்கு தெரியாதா உம் முன்னோர் வரலாறு?"

"தெரியும். இது எங்கள் மண்.
இங்கே 400 ஆண்டுகள் பழமையான ஒரு மலையாள கல்வெட்டைக் காட்டமுடியுமா உங்களால்?!
பரசுராமர் படைத்த மண் என்ற புராணத்தைத் தவிர உங்களிடம் வேறு என்ன சான்று இருக்கிறது?!
இங்கே முதலில் தோன்றிய இயக்கம் தமிழர் இயக்கம் என்ற பெயரால் தோன்றவில்லை.
140 ஆண்டுகளுக்கு முன்பே 'மலையாள எதிர்ப்பு இயக்கம்'தான் முதலில் தோன்றியது.
25 ஆண்டுகள் முன்புதான் 'தமிழர் விடுதலை காங்கிரஸ்' தோன்றியது.
நாங்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சியை பெறுமுன்  'மலையாள எதிரிகள்' என்ற உணர்ச்சியைத்தான் முதலில் பெற்றோம்.
உங்கள் இயற்கை குணத்தை நாங்கள் நன்கு அறிவோம்"

"நாங்கள் என்ன மனிதர்கள் இல்லையா?
நாங்கள் கேட்பதாவது ஐக்கிய கேரளம்.
ஆனால் திருவாங்கூரைத் தனிநாடாக்க முயன்ற திவான் சி.பி.ராமசாமி ஐயர் தமிழர்தானே?!"

"ஆமாம். அதனால்தான் முகத்தில் சுடப்பட்டார். ஏதோ புண்ணியம் பிழைத்துவிட்டார். மறுநாளே சென்னைக்கு ஓடிவிட்டார்.
நானும் அதுபோல ஒரு துரோகியாக விரும்பவில்லை"

"முதல்மந்திரி உங்களை எச்சரிக்கச் சொன்னார். நான் சொல்லிவிட்டேன்.
இதன் பிறகு ஏற்படப்போகும் மோசமான விளைவுகளுக்கு நீர்தான் பொறுப்பு.
ஆறு ஆண்டு முன்பு ஆட்சியில் அவர் இருந்தபோது தமிழகத்துடன் நீங்கள் இணைய முயன்றபோது நடந்தது நினைவுள்ளதுதானே?!"

"எப்படி ஐயா மறக்கமுடியும்? செல்லையா தேவசகாயம் என்று
2 பேரை சுட்டுக் கொன்றார்.
200 பேர் கைகால்களை உடைத்தார்.
1000 பேரை சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினார்"

"எல்லாம் தெரிந்தும் ஏன் சமாதானமாக ஒற்றுமையாக இருக்க மறுக்கிறீர்"

"ஒற்றுமை என்பது இரு பகுதி மக்களும் சேர்ந்திருப்பது அதன்மூலம் இருவரும் நலமடைவது.
ஒரு பகுதி மக்களை இன்னொரு  பகுதி மக்கள் சுரண்டிக்கொண்டே சேர்ந்திருப்பது என்பது ஒற்றுமை அல்ல.
சமாதானம் என்பது சகித்துக்கொள்வது என்றாகாது.
எந்த விளைவுகள் வந்தாலும் சரி நாங்கள் தமிழகத்துடன் இணைந்தே தீருவோம்"

"முடிவாக என்னதான் கூறுகிறீர்கள்?"

"மூணாறிலிருந்து மலையாள காவலரை போகச்சொல்லுங்கள்.
கோரிக்கை வைக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்கள்.
மாநில வரைவுக் குழு அவர்கள் பணியைச் செய்யவிடுங்கள்"

"இனி என் கையில் ஒன்றுமில்லை"

"பட்டத்தின் கொட்டமடக்குவேன் என்று கூறியே வாக்கு வாங்கி வென்றவன் நான்.
உங்கள் மிரட்டலுக்கு நான் பயப்படப்போவதில்லை"

மாதவன் நாயர் கோபத்துடன் வெளியேறினார்.
-------------
மூணாறு மக்களுக்காகத் தடையை மீறி
9 எம்.எல்.ஏ,
4 பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள்,
3 நகரசபை தலைவர்கள் உட்பட 410 பேர் கைதானார்கள்.

இதுபோக ஸ்டாம்ப் எரிப்பு, நீதிமன்ற மறியல், மாணவர் ஆர்ப்பாட்டம் என்று பெரிய போராட்ட நிகழ்வுகள் நடந்தன.

144 தடையை மீறி கைதான நேசமணி உள்ளிட்டோரின் விடுதலையைக் கொண்டாட 144 கார்களில் ஊர்வலமாகச் சென்று 50,000 பணமுடிப்பையும் வழங்க தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழர்கள் என்றுமில்லாத எழுச்சியைக் கண்ட பட்டம் தாணுப்பிள்ளை இரண்டு நாட்கள் முன்பே அனைவரையும் விடுதலை செய்தார்.

இதனைத் தொடர்ந்து தி.த.நா.க ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் பெரும் வன்முறையை நிகழ்த்த துப்பாக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

அந்த நாளும் வந்தது.

(தொடரும்)
--------------------------------------------
குருதியில் நனைந்த குமரி -3
https://m.facebook.com/photo.php?fbid=641579359279054&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&__tn__=E

Tuesday, 22 December 2015

குருதியில் நனைந்த குமரி -2

குருதியில் நனைந்த குமரி -2

1950களில்...
திருநெல்வேலியில் மக்கள் பேசிக்கொண்டார்கள்

"மலையாளிக்கு வசதியா வீடு வேணும்னா என்ன செய்யணும்?"

"..."

"தெரியாதா? எதாவது பெருசா செஞ்சிட்டு ஜெயிலுக்கு போணும்.
வெளிய வந்ததும் தேவிகொளத்துளத்துலயோ பீருமேட்டுலயோ அரசாங்கமே வீடு குடுக்கும்?"

"ஏ அப்டி?"

"அரசாங்கத்துக்கு பத்தணா வருமானம்னா அதுல ஓரணா அங்கருந்துதான வருது.
நேரு ஒரு குழு அனுப்பிருக்காராம்.
அது வந்து பாத்து எந்த இனம் அதிகமா வாழுதோ அந்த மாநிலத்தோட சேத்துருமாம்.
அதான் பட்டம்பய அங்க மோசமானவங்கள குடி வச்சு நம்ம மக்கள விரட்டுறானாம்"

"இதலாம் பாத்துட்டு நம்ம தலைவர்கள் சும்மாவா இருக்காங்க?"

"அவங்களும் ஊர்வலம் கடையடைப்புனு நடத்திட்டுதான் இருக்காங்க. போராட்டத்துக்கு போனாலே போலீச விட்டு அடிக்கிறாங்களாம். அல்லது புடிச்சிட்டு போய் பொய்கேஸ் போடுறாங்களாம்.
நம்ம நேசமணி காங்கிரசுகாரங்க அங்க மக்கள வெசாரிக்க போயிருக்காங்களாம்"

"நேசமணி ஐயா எறங்கிட்டாகனா பட்டாசுதான்.
இங்க வடகரைக்கு பேச வந்தப்ப கால தரைல வச்சா வெட்டிருவோம்னானுவோ.
ராசாவாட்டம் யான மேலலா உக்காந்து வந்தாரு"

"திருவனந்தரம் ராசாவெல்லாம் சும்மாவாம்.
இப்ப ராசானா அது நம்ம நேசமணி ஐயாதானாம்".
---------------------------------
மூணாறு, 1954 மே.

"ஐயா இந்த மலையாள வரத்துக்காரனுக அழிச்சாட்டியம் தாங்கமுடியல.
பொண்டு புள்ளைங்க நடமாட முடியல. போலீஸ்காரன்ட சொன்னா, நாம சொன்னத நம்ம மேலயே கேஸ் போடுறாங்க".

"ஆமாங்கய்யா மோசமானவனுகள தேடி பிடிச்சு கூட்டிவந்துருக்கானுக.
நாங்க நாலு பேரு தட்டிக்கேக்கப்போய் அடிதடி ஆயிருச்சு.
போலீஸ்காரன் எங்க மேலதான் கேஸ் போட்டான்.
அடிச்சாலும் நாமதா குத்தவாளி அடிவாங்குனாலும் நாமதா குத்தவாளி"

"வள்ளியக்கா நடந்து போகும்போது வம்பிழுத்துருக்கான் ஒருத்தன்.
அக்கா தைரியமானது நாலு கன்னத்துல விட்ருக்கு.
அவன் போலீசோட வீட்டுக்கு வந்து கூட்டுப்போய்ட்டான்.
அவன அருவாவாள வெட்ட வந்ததா பொய்கேசு எழுதி பாலாய் கோர்ட்டுல போட்ருக்கானுக.
பொட்டபயலுக.
வாரவாரம் அவ்ளோ தூரம் அலையுது"

"ஆமாங்கய்யா பொய்கேஸ் போடுததுமில்லாம அதவச்சு தொலவா இருக்குற கோர்ட்டுக்கு அலையவும் வைக்கிறானுக"

"நம்ம தென்னிந்திய தோட்ட சங்கத்துல போய் சொன்னமுங்க.
அவனுக என்னமோ புதுசா கேரளா ஐரேஞ்ச் சங்கம் ஆரம்பிச்சி வச்சிருக்கானுகளாமே அங்க போய் கேட்டதுக்கு அடிதடி ஆயிருச்சு.
அத கேக்கறம்னு வந்த போலீசு நம்ம சங்கத்துகாரங்கள அடிஅடினு அடிச்சிருக்கானுக.
மொதலாளிலா அவனுக பக்கம்.
நம்ம சங்கத்துக்காரங்களா கூப்டு அடிதடி பண்ணா வேலயவிட்டு தூக்கிருவோம்கறானுக"

"ஐயா எங்களுக்கு இருக்க ஒரே நம்பிக்க நேசமணி கட்சிக்காரவுங்க நீங்கதான். இதுக்கு எதாவது பண்ணுங்கையா.
எப்படியாவது தமிழ்நாட்டோட சேந்துடணும். அப்பதாய்யா எங்களால நிம்மதியா வாழமுடியும்.
இல்லனா எத்தன வருசம் ஆனாலும் இந்த அடிம வாழ்க்கதா வாழணும்".

மக்கள் குறைகளை கேட்டுவிட்டு மூணாறு கடைவீதிக்கு வந்த தி.த.நா.க (திருவாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ்) தலைவர்கள் துரைபாண்டி (நாடார்) மற்றும் அவருடன் வந்த தொழிற்சங்க செயலர் ஆர்.குப்புசாமி(நாடார்) கேரள போலீசால் வழிமறிக்கப்பட்டனர்.
கையில் விலங்கை மாட்டி வண்டியில் ஏற்றப்போகும்போது மேகம் இருண்டு தூறல் விழத் தொடங்கியது.
போலீஸ் அதிகாரியின் இனவெறி மூளை வேலை செய்தது.
வண்டியில் விலங்கை மாட்டிவிட்டு அவர் மட்டும் உள்ளே ஏறிக்கொண்டு இருவரையும் கொட்டும் மழையில் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர்.

(தொடரும்)
___________________________
பகுதி -1
https://m.facebook.com/photo.php?fbid=640511856052471&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56