Showing posts with label பறிபோன தமிழ் மண். Show all posts
Showing posts with label பறிபோன தமிழ் மண். Show all posts

Sunday, 23 July 2017

ஜனநாயகத்தில் இவ்வளவு நிலத்தை இழந்த இனம் வேறு எங்குமில்லை

ஏன் வேண்டாம் இன்பத்திராவிடம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழ்நாட்டின் எல்லைகள் எவை?

”வடா அது பனிபடு நெடு வரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்”

என்கிறார் காரிகிழார் எனும் புலவர், புறநானுாற்றில்.

அதாவது தமிழ் மண்ணின் எல்லைகள் என்பன,

வடக்கே தொடர்ந்து பனி உருகும் நீண்ட நெடிய மலை அதாவதுஇமயமலையும்

தெற்கே வளம் மிக்க குமரியும் (குமரி என்பது இன்றைய கன்னியாகுமரி அல்ல.
கடலில் மூழ்கியிருக்கிற, வெகு துாரம் தெற்கிலும் நீண்டிருந்த பழைய குமரிக் கண்டம்)

கிழக்கே கரையைத் தொட்டக் கரைப்பதற்காக தொடர்ந்து போராடும் அலைமிக்க கடல்பரப்பும்,

மேற்கே தொன்மையான வரலாறு கொண்டஅதிகம் அறியப்படாத கடல் பகுதியும்.

இதுதான் காரிகிழார் காட்டும் தமிழ் மண்ணின் எல்லைகள்.

(குணக்கு என்றால் கிழக்கு என்று பொருள்.
குடக்கு என்றால் மேற்கு.
காவிரி நதி நீரைப் பயன்படுத்திய விவசாயத் தமிழர்களின் நிலப்பகுதிகி்கு மேற்கே,
தமிழ் மண்ணுக்குள் ஒரு மலை இருந்தது.
அதில் இருந்து தான் காவிரி உற்பத்தியானது.
எனவே கிழக்கத்தித் தமிழர்கள், அதனை மேற்கு மலை என்ற பொருளில் குடக்கு மலை என்று அழைத்தனர்.
அது தான் குடகு மலை என்று திரிந்தது.
அது இப்போது கர்நாடகாவிடம் உள்ளதால் தான் காவிரி நீரை வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் காட்டுகிறது, கர்நாடகா)
--------------------
தொல்காப்பியத்துக்கு, பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்ட, பனம்பாரனார் பாயிரம் பாடிய காலத்தில் தமிழக எல்லைகள் எது?

”வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்”

அதாவது வடக்கில் வேங்கடமலை (திருப்பதி மலை)
தெற்கே குமரி மலை. (அதாவது கடலில் மூழ்காத பழைய குமரிக் கண்டத்தில் இருந்த ஒரு மலை)
மேற்கிலும் கிழக்கிலும் கடல் எலலைகள்.
இது தான் தமிழகம்.
--------------------

”நன்னுால்” பாயிரம் எழுந்த காலத்தில்....

”குணகடல், குமரி, குடகம், வேங்கடம் எனும்நான்கெல்லை”
என்று தமிழக எல்லைகள் குறைந்தது.
அதாவது மேற்கில் காவிரி உற்பத்தியாகும் குடகு மலை வரை.
வடக்கில் திருப்பதி மலைகள் அனைத்தும் தெற்கே குமரிக் கடல்.

குமரிக் கண்டம், குமரி மலை எல்லாம் தண்ணீருக்குள் போய் விட்டது? கிழக்கில் கீழைக்கடல்.
-------------
மகாகவி பாரதி என்ன சொன்னான்?

”நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய் குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு”
என்றான்.
மாலவன் குன்றம் என்பது திருப்பதிதான். கிழக்கே கடல் எல்லை.
இயற்கையைத் தவிர அதை யாராலும் அபகரிக்க முடியாது.
எனவே மாற்றமில்லாதது அது. அதனால் பரவாயில்லை.
மேற்கு எல்லையைப் பற்றி அவன் சொல்லவே இல்லையே.
ஏன்? பெங்களுரும், காவிரி நதியும் தமிழனுக்கு அநியாயமாகப் போகும் என்று சத்தியமாக நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான் பாரதி.
கிழக்கு எல்லைபோல மேற்கு எல்லையும் மாறவே மாறாது என்று நம்பியிருக்கிறான் பாரதி. அதனால் தான் கிழக்கு, மேற்கு எல்லைகள் பற்றி அவன் பேசவே இல்லை.
-----------
ஆனால் இன்று தமிழ்நாட்டின் எல்லைகள் என்னென்ன?

வடக்கே திருத்தணி.
மேற்கில் கூடலுார்,
தெற்கே குமரி முனை
என்று எவ்வளவோ குறுகி விட்டது.

தமிழன் இழந்ததைப் போல தரணியில் எந்த இனமும் சனநாயக ஆட்சியில் இவ்வளவு நில இழப்புக்கு ஆளானதில்லை.

கிழக்கே கடல் எல்லை மட்டும் தான் மாறாமல் உள்ளது.
அதைக் கூட கடல் அரிப்பின் மூலம் அலைகள் குறைந்ததுக் கொண்டே வருகின்றன.

தமிழ்நாட்டில் தமிழ் உணர்ச்சியை பின்தள்ளி, வேறொரு விதமான மாயத்தனமான-அறிவுக்கு அப்பாற்பட்ட-உண்மைத் தமிழ் உணர்ச்சியை மழுங்கடித்த,
திராவிடம் என்ற மயக்கத்தை கொண்டு வந்த திராவிட இயக்கத் தலைவர்கள்தான் தமிழ் நிலப்பகுதிகள் நம்மை விட்டுப் போவதற்குக் காரணம்.

இந்த விடயத்தில் ஈ.வெ.ரா. அண்ணாத்துரை முதற்கொண்டு அத்தனை திராவிட இயக்கத் தலைவர்களும் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றவாளிகளே.

ஏன் வேண்டாம் இன்பத்திராவிடம்
- தொடர் (2002-2003)
ஆசிரியர் சு.செந்தில்குமரன்
தேவி வார இதழ்

முகநூல் பதிவர்: வழக்கறிஞர் பா.குப்பன் திருத்தணி தமிழ்

Saturday, 11 March 2017

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் (3/3)

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் -3

தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் படம் காலம் 1325 - 1499
இரண்டாம் படம் காலம் 1499 - 1649

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்:
Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra
By Cynthia Talbot

Friday, 10 March 2017

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் (2/3)

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் -2

தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் படம் காலம் 1000 - 1174
இரண்டாம் படம் காலம் 1174 - 1324

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra

By Cynthia Talbot

Thursday, 17 November 2016

ஈழத்தில் இழந்த மண் -சுருக்கமான வரலாறு

ஈழத்தில் இழந்த மண்
-சுருக்கமான வரலாறு

ஈழம் அதாவது பழங்கால இலங்கைத் தீவு முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதி ஆகும்.

வடயிந்தியாவிலிருந்து (தற்போதைய வங்கதேசம்) தமது கூட்டாளிகளுடன் கப்பலில் ஏற்றி விரட்டப்பட்ட இளவரசன் விஜயன் என்ற மன்னன் கரை ஒதுங்கிய இடம் தென்னிலங்கை.
அவனை குவேனி என்ற தமிழ் அரசி வரவேற்று உதவிகள் செய்து குடிவைத்தாள்.

இது சிங்களவரின் மூல காப்பியமான மகாவம்சம் கூறும் வரலாறு ஆகும்.

குடிவந்த சிங்களவர் பாண்டிய நாட்டிலிருந்து பெண்ணெடுத்து இனப்பெருக்கம் செய்து நாகரீக குடிகளாகி தமக்கான அரசை தென்னிலங்கையில் நிறுவினர்.
தமிழர்களுடன் நட்புறவுடன் இருந்த அவர்கள் காலம் செல்லச் செல்ல தமிழர்களையே போட்டியாக நினைக்கத் தொடங்கினர்.

இன்றும் சிங்கள பாடத்திட்டத்தில் இருக்கும் மகாவம்ச கதை ஒன்று துட்டகாமினி அல்லது துட்டகைமு என்ற சிங்கள இளவரசன் பற்றிக் கூறுகிறது.

அவன் சிறுவயதாக இருக்கும் போது அவனது தந்தையுடன் உணவருந்துகையில் வழக்கமாக உறுதிமொழி எடுத்துவிட்டு உணவருந்துவது வழக்கம்.
அப்போது அவனது தந்தை "தமிழர்களுடன் போர் புரியமாட்டேன்" என்று உறுதிமொழி கூறி மகனையும் கூறச்சொல்கிறார்.
துட்டகாமினி மறுக்கிறான்.
கோபமாகச் சென்று படுக்கையில் கைகால்களைச் சுருக்கி படுத்துக்கொள்கிறான்.
அவனது அன்னை வருகிறாள் அவனிடம் "மூன்று புறம் கடல், வடக்கே தமிழர்கள், நான் எப்படி நீட்டி படுப்பது?" என்று கேட்கிறான்.

இவன் மன்னனானதும் தமிழர்கள் மீது போர் தொடுக்கிறான்.
தமிழர்கள் அப்போது பெரும்பான்மை.
தீவின் முக்கால்வாசி தமிழர் பகுதி.
படையிலும் அறிவியலிலும் நாகரீகத்திலும் மிக முன்னேறிய நிலையில் இருந்தனர்.
துட்டகாமினி படைகள் தோல்வியடைகின்றன.
உடனே துட்டகாமினி தமிழ் அரசனான எல்லாளனை தனிப்பட்ட நேருக்குநேர் போருக்கு அழைக்கிறான்.

துட்டகைமு இளைஞன், எல்லாளனோ வயது முதிர்ந்தவன்.
ஆனாலும் அவன் ஒத்துக்கொள்ளவேண்டிய நிலை.
எனவே மோதல் நடக்கிறது.
அதில் எல்லாளனை கொன்று துட்டகாமினி முழு தீவையும் தனது ஆட்சியில் கொண்டுவருகிறான்.
இது மகாவம்சம் கூறும் வரலாறு ஆகும்.

ஆனாலும் தீவில் தமிழர்கள் தொடர்ந்து பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

சோழரும் பாண்டியரும் இலங்கை மீது படையெடுத்து தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்ததும் சைவம் தமிழர் மத்தியில் பரவியதும் நடந்தது.

சிங்களவர் அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்து தமிழர்களுக்கு சமமான எண்ணிக்கையில் 1700 களில் வருகிறார்கள்.
தமிழர் பகுதியில் குடியேறி குடியேறி தீவில் பாதியை சிங்கள மயமாக்குகிறார்கள்.

1850 வரை தீவில் வடக்கு கிழக்கு என சரிபாதி தமிழர்கள் வசமே இருக்கிறது.

அதன் பிறகு தமிழகத்தை அடிமைப் படுத்திய நாயக்கர்கள் இலங்கையின் மத்தியப்பகுதி அரசான கண்டியின் சிங்கள மன்னர்களுடன் திருமணத் தொடர்பு கொண்டு தாமும் குடியேறி இறுதியில் மன்னனுக்கு வாரிசில்லாதபோது மன்னனின் மைத்துனனாக தெலுங்கனை கண்டி மன்னனாக்குகின்றனர்.
பிறகு வரிசையாக தெலுங்கு மன்னர்களால் இலங்கையின் பாதியளவு விரிந்திருந்த கண்டி ராஜ்ஜியம் ஆளப்பட்டு கடைசியாக கண்ணுச்சாமிநாயுடு என்ற மன்னனுடன் முடிகிறது.
வடக்கே வன்னிப்பகுதியை ஆண்ட பண்டார வன்னியனுடன் தமிழர் ஆட்சி முடிகிறது.

ஐரோப்பியர் தமிழர்களையும் சிங்களவரையும் வீழ்த்தி தமது ஆட்சியை நிறுவுகிறார்கள்.

அதன்பிறகு தமிழகத் தமிழர்களை உலகம் முழுவதும் தோட்டத்தொழிலுக்கு கொண்டுசென்ற ஆங்கிலேயர்.
இலங்கை மத்தியில் இருக்கும் மலையகத்திற்கும் கொண்டுசென்று குடிவைக்கின்றனர்.

ஆட்சிகள் எவ்வாறு மாறினாலும் சிங்களவர் தமது இனப்பெருக்கத்தை நிறுத்தவில்லை.
நிறைய பிள்ளைகள் பெற்று பெற்று அவர்களது தாய்நிலம் விரிந்துகொண்டே போனது.
இயற்கையான முறையில் இனப்பெருக்கம் நடந்த தமிழினம் சிறுபான்மையாகி சுருங்கிக்கொண்டே வந்தது.

மிதமிஞ்சிய இனப்பெருக்கத்தால் சிங்களவர் மத்தியில் பஞ்சமும் நெருக்கடியும் எப்போதும் இருக்கிறது.

ஆங்கிலேயர் தம் பிரித்தாளும் அரசியலுக்கு வடயிந்தியாவைப் போலவே இலங்கையிலும் மத அடையாளத்தை திணித்தனர்.
தமிழ் சைவர்களையும் கிறித்துவர்களையும் "தமிழர்" என்றே குறித்தனர்.
ஆனால் இலங்கை இசுலாமியர் அனைவரும் தமிழரே.
அவர்களை "முஸ்லீம்" என்று ஆவணங்களில் குறித்தனர்.
தனிச் சலுகைகள் வழங்கினர்.

தமிழகத்திலும் கிறித்தவ இசுலாமியருக்கு அரசு தனியாக சலுகைகள் தந்தது.
அதனாலேயே இந்துக்கள் பிராமணர்- பிராமணரல்லாதார் என்று ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலக் கல்வி கற்று ஆங்கிலேயருக்கு அடுத்ததாக தென்னிந்தியாவில் தமிழ்-பார்ப்பனரும் இலங்கைத் தீவில் யாழ்-வெள்ளாளரும் பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்தனர்.

ஆங்கிலேயர் மற்றும் பார்ப்பனர் செய்த அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகள் அனைத்தும் தமிழரே பூர்வ குடி என்றும் தமிழே மூத்த மொழி என்றும் உண்மையை வெளிக்கொண்டு வந்தது.

இதனால் அத்தனை இனங்களும் தமிழர்களை பொறாமையுடன் பார்க்க தொடங்கினர்.

இதுவே சிங்கள இனவாததத்திற்கும் திராவிட அரசியலுக்கும் வித்திட்டது.
இந்த வித்து மரமாக வளர்ந்து தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களுக்கு எதிரான அரசியல் களம் அமையக் காரணமானது.
கல்வி மூலம் தமிழர் அடைந்த உயர்வை தமிழரல்லாதார் அரசியல் மூலம் அடைய வழி வகுத்தது.

சென்னை மாகாணத்தில் அமைந்த முதல் அமைச்சரவையில் ஒரு தமிழர் கூட இல்லை.
அதே போல இலங்கையில் அமைந்த முதல் அமைச்சரவையில் ஒரு தமிழர் கூட இல்லை.

ஆங்கிலேயர் தமது பிரித்தாளும் அரசியலுக்காக தமிழகத் தமிழரையும் ஈழத் தமிழரையும் பிரித்தே ஆண்டனர்.

விடுதலை வழங்கும்போதும் 1947லேயே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒரே நேரத்தில் விடுதலை வழங்கியிருக்கலாம்.
இலங்கைக்கு 1948ல் தனியாக விடுதலை வழங்கினர்.
ஈழத் தமிழர்கள் இதனை எதிர்க்கவில்லை.
தமிழகத் தமிழரும் எதிர்க்கவில்லை.
இருவரும் ஒன்றுசேர்ந்து இருக்க நினைக்காதது ஒரு வரலாற்றுப் பிழை ஆகும்.

கண்டியில் அரசாட்சியைக் கைப்பற்றிய தெலுங்கு வாரிசுகள் இப்போது சிங்கள இனவெறியைக் கையிலெடுத்து அரசியலைக் கைப்பற்றினர்.
ஆங்கிலேயருக்குப் பிறகு இலங்கையை ஆளும் அனைவரும் தெலுங்கு வாரிசுகளே.
முழு சிங்களவர் யாரும் இதுவரை ஆளவில்லை.
அதேபோல தமிழகத்திலும் ஆண்டவர்கள் ஆள்பவர்கள் 80% தெலுங்கர்கள்.

பிறகு தந்தை செல்வா தலைமையில் அறவழிப் போராட்டம்.
அதனையடுத்து தனிநாடு கோரிக்கை.
அதனையடுத்து ஆயுதப்போராட்டம் வெடித்தது.

இதேபோல தமிழகத்திலும் தமிழரசன் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியது.
ஆனால் ஆரம்பத்திலேயே எம்.ஜி.ஆர் ஆல் ஒடுக்கப்பட்டது.

ஆனால் சிங்களவர் இனப்பெருக்கமும் தமிழர் தாய்நிலம் சுருங்குதலும் நிற்கவேயில்லை.

அதேபோல தமிழகத்தில் வேற்றின ஆட்சி 1550ல் ஏற்பட்ட பிறகிலிருந்து வேற்றினத்தார் தொடர்ந்து குடிவந்துகொண்டே இருக்கின்றனர்.

பிறகு லட்சக்கணக்கான தமிழகத் தமிழரை மலையகத்திலிருந்து வெளியேற்றியது.
அதற்கு ஈழத்தவர் உதவமுடியாது தவித்தது.

பிறகு புலிகளின் எழுச்சி.
இந்தியாவின் தலையீடு.
தமிழர் மீதான இந்தியாவின் இனப்படுகொலை.
பிறகு தமிழகத்தின் உதவியுடன் புலிகளின் இராணுவ பேரெழுச்சி.

அதன்பிறகு உலகநாடுகள் சேர்ந்து இந்திய திராவிட ஆதரவுடன் சிங்கள இராணுவத்தால் தமிழர் மீது நிகழ்த்தப்ட்ட வெளிப்படையான இனப்படுகொலை என வரலாறு நீள்கிறது.

இன்று சிங்கள பேரினவாத அரசு இலங்கையில் முக்கால்வாசிக்கும் மேல் சிங்களமயமாக்கி விட்டனர்.

தமிழர்கள் தாய்நிலத்தை விட்டு வெளியேறி பல நாடுகளில் அகதிகளாக  திரியும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

தமிழகத் தமிழர்கள் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.

தமிழகத்தில் தென்கோடியில் விளாத்திகுளம் வரை தெலுங்ரும்
தென்கோடி தேனி வரை கன்னடவரும்
வடகோடி சென்னை வரை மலையாளிகளும்
குடியேறி கணிசமாக வாழ்கின்றனர்.
தமிழகத் தமிழரோ வேளாண்மை அழிந்து வந்தேறி அரசாங்கத்தின் திறமற்ற செயல்பாடுகளால் பிழைப்பு தேடி தாய்நிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

உலகில் பரந்துவாழும் ஈழ அகதிகள் 15 லட்சம்.
ஆனால் தமிழகத் தமிழர் அகதிகள் எண்ணிக்கை ஒரு கோடி.
(தமிழகத்திற்கு வெளியே இந்திய மாநிலங்களில் மட்டுமே 80 லட்சம் பேர் வாழ்கின்றனர்)

  ஆக தமிழகமும் ஈழமும் சேர்ந்த தமிழர்நாடு நான்குபுறமும் சுருங்கிக்கொண்டே வருகிறது.

தாய்நிலத் தமிழர் அடர்த்தியும் குறைந்துகொண்டே வருகிறது.

ஆகவே ஈழத்தமிழர்கள் தனியே ஈழம் கேட்டுப் போராடாமல் தமிழகத் தமிழருடன் ஒன்றுசேர்ந்து தமிழர்நாடு அமைக்கப் போராடவேண்டும்.

Wednesday, 23 March 2016

திருப்பதி முருகனுடையது வலுவான சான்று

திருப்பதி முருகனுடையது
வலுவான சான்று

வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை
-வெற்றி (பொருந்திய) *வேலி*னையுடைய திரையனது வேங்கடமெனும் நீண்ட மலையில்...
(அகநானூறு 199)

Tuesday, 22 December 2015

குருதியில் நனைந்த குமரி -2

குருதியில் நனைந்த குமரி -2

1950களில்...
திருநெல்வேலியில் மக்கள் பேசிக்கொண்டார்கள்

"மலையாளிக்கு வசதியா வீடு வேணும்னா என்ன செய்யணும்?"

"..."

"தெரியாதா? எதாவது பெருசா செஞ்சிட்டு ஜெயிலுக்கு போணும்.
வெளிய வந்ததும் தேவிகொளத்துளத்துலயோ பீருமேட்டுலயோ அரசாங்கமே வீடு குடுக்கும்?"

"ஏ அப்டி?"

"அரசாங்கத்துக்கு பத்தணா வருமானம்னா அதுல ஓரணா அங்கருந்துதான வருது.
நேரு ஒரு குழு அனுப்பிருக்காராம்.
அது வந்து பாத்து எந்த இனம் அதிகமா வாழுதோ அந்த மாநிலத்தோட சேத்துருமாம்.
அதான் பட்டம்பய அங்க மோசமானவங்கள குடி வச்சு நம்ம மக்கள விரட்டுறானாம்"

"இதலாம் பாத்துட்டு நம்ம தலைவர்கள் சும்மாவா இருக்காங்க?"

"அவங்களும் ஊர்வலம் கடையடைப்புனு நடத்திட்டுதான் இருக்காங்க. போராட்டத்துக்கு போனாலே போலீச விட்டு அடிக்கிறாங்களாம். அல்லது புடிச்சிட்டு போய் பொய்கேஸ் போடுறாங்களாம்.
நம்ம நேசமணி காங்கிரசுகாரங்க அங்க மக்கள வெசாரிக்க போயிருக்காங்களாம்"

"நேசமணி ஐயா எறங்கிட்டாகனா பட்டாசுதான்.
இங்க வடகரைக்கு பேச வந்தப்ப கால தரைல வச்சா வெட்டிருவோம்னானுவோ.
ராசாவாட்டம் யான மேலலா உக்காந்து வந்தாரு"

"திருவனந்தரம் ராசாவெல்லாம் சும்மாவாம்.
இப்ப ராசானா அது நம்ம நேசமணி ஐயாதானாம்".
---------------------------------
மூணாறு, 1954 மே.

"ஐயா இந்த மலையாள வரத்துக்காரனுக அழிச்சாட்டியம் தாங்கமுடியல.
பொண்டு புள்ளைங்க நடமாட முடியல. போலீஸ்காரன்ட சொன்னா, நாம சொன்னத நம்ம மேலயே கேஸ் போடுறாங்க".

"ஆமாங்கய்யா மோசமானவனுகள தேடி பிடிச்சு கூட்டிவந்துருக்கானுக.
நாங்க நாலு பேரு தட்டிக்கேக்கப்போய் அடிதடி ஆயிருச்சு.
போலீஸ்காரன் எங்க மேலதான் கேஸ் போட்டான்.
அடிச்சாலும் நாமதா குத்தவாளி அடிவாங்குனாலும் நாமதா குத்தவாளி"

"வள்ளியக்கா நடந்து போகும்போது வம்பிழுத்துருக்கான் ஒருத்தன்.
அக்கா தைரியமானது நாலு கன்னத்துல விட்ருக்கு.
அவன் போலீசோட வீட்டுக்கு வந்து கூட்டுப்போய்ட்டான்.
அவன அருவாவாள வெட்ட வந்ததா பொய்கேசு எழுதி பாலாய் கோர்ட்டுல போட்ருக்கானுக.
பொட்டபயலுக.
வாரவாரம் அவ்ளோ தூரம் அலையுது"

"ஆமாங்கய்யா பொய்கேஸ் போடுததுமில்லாம அதவச்சு தொலவா இருக்குற கோர்ட்டுக்கு அலையவும் வைக்கிறானுக"

"நம்ம தென்னிந்திய தோட்ட சங்கத்துல போய் சொன்னமுங்க.
அவனுக என்னமோ புதுசா கேரளா ஐரேஞ்ச் சங்கம் ஆரம்பிச்சி வச்சிருக்கானுகளாமே அங்க போய் கேட்டதுக்கு அடிதடி ஆயிருச்சு.
அத கேக்கறம்னு வந்த போலீசு நம்ம சங்கத்துகாரங்கள அடிஅடினு அடிச்சிருக்கானுக.
மொதலாளிலா அவனுக பக்கம்.
நம்ம சங்கத்துக்காரங்களா கூப்டு அடிதடி பண்ணா வேலயவிட்டு தூக்கிருவோம்கறானுக"

"ஐயா எங்களுக்கு இருக்க ஒரே நம்பிக்க நேசமணி கட்சிக்காரவுங்க நீங்கதான். இதுக்கு எதாவது பண்ணுங்கையா.
எப்படியாவது தமிழ்நாட்டோட சேந்துடணும். அப்பதாய்யா எங்களால நிம்மதியா வாழமுடியும்.
இல்லனா எத்தன வருசம் ஆனாலும் இந்த அடிம வாழ்க்கதா வாழணும்".

மக்கள் குறைகளை கேட்டுவிட்டு மூணாறு கடைவீதிக்கு வந்த தி.த.நா.க (திருவாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ்) தலைவர்கள் துரைபாண்டி (நாடார்) மற்றும் அவருடன் வந்த தொழிற்சங்க செயலர் ஆர்.குப்புசாமி(நாடார்) கேரள போலீசால் வழிமறிக்கப்பட்டனர்.
கையில் விலங்கை மாட்டி வண்டியில் ஏற்றப்போகும்போது மேகம் இருண்டு தூறல் விழத் தொடங்கியது.
போலீஸ் அதிகாரியின் இனவெறி மூளை வேலை செய்தது.
வண்டியில் விலங்கை மாட்டிவிட்டு அவர் மட்டும் உள்ளே ஏறிக்கொண்டு இருவரையும் கொட்டும் மழையில் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர்.

(தொடரும்)
___________________________
பகுதி -1
https://m.facebook.com/photo.php?fbid=640511856052471&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

Sunday, 20 December 2015

குருதியில் நனைந்த குமரி -1

குருதியில் நனைந்த குமரி -1

1954: ஆகஸ்ட் 11:

"தம்பி பீர்முகமது ஒங்க அண்ணன்தானே?"

"ஆமாங்க, என்னாச்சு?"

"புதுக்கடை கூட்டத்துல மலையாள போலீஸ் புகுந்து சுட்டதுல ஒங்கண்ணன் நெஞ்சுல குண்டு பாஞ்சுடுச்சு"

"ஐயையோ என்னம்மா சொல்றீங்க?
எங்கண்ணனுக்கு என்னாச்சு?"

"இப்பதா சேதி தெரிஞ்சது, ஒடனே போ"

ஓடோடிப்போய் புதுக்கடை பகுதிக்குப் போய் பார்த்தால் அங்கே பல பேர் குண்டடிப்பட்டு கிடந்தனர்.
பொதுமக்கள் சிதறி ஓடினர்.

முனங்கிக் கொண்டிருந்த பலரை மலையாள போலீஸ் அங்கே ஒரு பாழுங்கிணத்தில் தூக்கிவீசிக் கொண்டிருந்தனர்.

அங்கே ஒரு ஓரத்தில் வெள்ளைச் சட்டை குருதியால் நனைந்து கீழே கிடந்தது பீர்முகமது உடல்.

"அண்ணே...."
கீழே உட்கார்ந்து கதறி அழுதான்.

அருகே ஒருவர் ஓடிவந்தார்.
"தம்பி தம்பி போலீஸ் வர்றதுக்குள்ள தூக்கு.
இல்லனா கொண்டு போய்டுவானுக".
இருவரும் சேர்ந்து சடலத்தைத் தூக்கிக்கொண்டு ஒரு இடத்தில் ஒழிந்துகொண்டார்கள்.

இரண்டு லாரி நிறைய காயம்பட்டவர்களை அள்ளிக்கொண்டு சென்றனர்.

"என்னண்ணே இதெல்லாம்?
எதுக்கு இப்டி நடந்துக்குறாங்க?
நாம தமிழர்கள் தமிழ்மாநிலத்தோட சேர்க்கணும்னு கூட்டம்தானனே கூடினோம்"

"சாதாரணக் கூட்டமா தம்பி!
குஞ்சனைய்யா வாராருன்னதும் பத்தாயிரம் பேர் கூடிட்டாங்க.
அவரால வரமுடியல.
கோபாலகிருஸ்ணந்தா வந்தாரு.
அவர் பேசிட்ருக்கும்போதே போலீஸ் வண்டி வந்தது.
கோபாலகிருஸ்ணனையும் மதியழகனையும் மேடைல ஏறி கைது பண்ணி வண்டில ஏத்துனாங்க.
ஒடனே மக்கள் கோசம்போட்டுக்கிட்டே போலீஸ் வண்டி சுத்தி நின்னுகிட்டாங்க.
ஒடனே பெரிய பெரிய துப்பாக்கிய எடுத்து சுட ஆரம்பிட்டானுக.
28 ரவுண்ட் சுட்ருப்பானுக முன்வரிசைல நின்ன அஞ்சுபேருக்கு நெஞ்சுல குண்டு பட்டுட்டு.
நான் இன்னொரு பக்கம் நின்னு பாத்துட்ருந்தேன்.
அப்பதா ஒங்கண்ணனுக்கு குண்டு பட்டுச்சு அங்கயிருந்து எல்லாரும் ஓடஆரம்பிச்சாங்க.
விடாம சுட்டதுல பலபேருக்கு காயம்.
ஒங்கண்ணனும் கொஞ்சதூரம் வந்து விழுந்துட்டாரு.
நாதா மறவா அவர தூக்கி வச்சேன்.
இன்னும் மூணுமணிநேரத்துல இருட்டிரும்.
அப்பறம் கெளம்பலாம்.
ஆமா எங்கருந்து வர்றீங்க?"

"தேங்காப்பட்டணம்"

"நல்ல வேள சரியான நேரத்துக்கு வந்தீங்க.
இல்லனா அந்த பாழுங்கெணத்துல தூக்கிபோட்ருப்பானுக".

இருட்டிய பிறகு பிணத்தை தூக்கிச்சென்றனர்.

மறுநாள் காலை தினமலரில் செய்தி வந்தது.

மார்த்தாண்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பலி
புதுக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் நிகழ்விடத்திலேயே பலி.
பலர் கவலைக்கிடம்.
ஆயிரக்கணக்கானோர் கைது.

(தொடரும்)