Sunday 23 July 2017

ஜனநாயகத்தில் இவ்வளவு நிலத்தை இழந்த இனம் வேறு எங்குமில்லை

ஏன் வேண்டாம் இன்பத்திராவிடம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழ்நாட்டின் எல்லைகள் எவை?

”வடா அது பனிபடு நெடு வரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்”

என்கிறார் காரிகிழார் எனும் புலவர், புறநானுாற்றில்.

அதாவது தமிழ் மண்ணின் எல்லைகள் என்பன,

வடக்கே தொடர்ந்து பனி உருகும் நீண்ட நெடிய மலை அதாவதுஇமயமலையும்

தெற்கே வளம் மிக்க குமரியும் (குமரி என்பது இன்றைய கன்னியாகுமரி அல்ல.
கடலில் மூழ்கியிருக்கிற, வெகு துாரம் தெற்கிலும் நீண்டிருந்த பழைய குமரிக் கண்டம்)

கிழக்கே கரையைத் தொட்டக் கரைப்பதற்காக தொடர்ந்து போராடும் அலைமிக்க கடல்பரப்பும்,

மேற்கே தொன்மையான வரலாறு கொண்டஅதிகம் அறியப்படாத கடல் பகுதியும்.

இதுதான் காரிகிழார் காட்டும் தமிழ் மண்ணின் எல்லைகள்.

(குணக்கு என்றால் கிழக்கு என்று பொருள்.
குடக்கு என்றால் மேற்கு.
காவிரி நதி நீரைப் பயன்படுத்திய விவசாயத் தமிழர்களின் நிலப்பகுதிகி்கு மேற்கே,
தமிழ் மண்ணுக்குள் ஒரு மலை இருந்தது.
அதில் இருந்து தான் காவிரி உற்பத்தியானது.
எனவே கிழக்கத்தித் தமிழர்கள், அதனை மேற்கு மலை என்ற பொருளில் குடக்கு மலை என்று அழைத்தனர்.
அது தான் குடகு மலை என்று திரிந்தது.
அது இப்போது கர்நாடகாவிடம் உள்ளதால் தான் காவிரி நீரை வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் காட்டுகிறது, கர்நாடகா)
--------------------
தொல்காப்பியத்துக்கு, பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்ட, பனம்பாரனார் பாயிரம் பாடிய காலத்தில் தமிழக எல்லைகள் எது?

”வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்”

அதாவது வடக்கில் வேங்கடமலை (திருப்பதி மலை)
தெற்கே குமரி மலை. (அதாவது கடலில் மூழ்காத பழைய குமரிக் கண்டத்தில் இருந்த ஒரு மலை)
மேற்கிலும் கிழக்கிலும் கடல் எலலைகள்.
இது தான் தமிழகம்.
--------------------

”நன்னுால்” பாயிரம் எழுந்த காலத்தில்....

”குணகடல், குமரி, குடகம், வேங்கடம் எனும்நான்கெல்லை”
என்று தமிழக எல்லைகள் குறைந்தது.
அதாவது மேற்கில் காவிரி உற்பத்தியாகும் குடகு மலை வரை.
வடக்கில் திருப்பதி மலைகள் அனைத்தும் தெற்கே குமரிக் கடல்.

குமரிக் கண்டம், குமரி மலை எல்லாம் தண்ணீருக்குள் போய் விட்டது? கிழக்கில் கீழைக்கடல்.
-------------
மகாகவி பாரதி என்ன சொன்னான்?

”நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய் குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு”
என்றான்.
மாலவன் குன்றம் என்பது திருப்பதிதான். கிழக்கே கடல் எல்லை.
இயற்கையைத் தவிர அதை யாராலும் அபகரிக்க முடியாது.
எனவே மாற்றமில்லாதது அது. அதனால் பரவாயில்லை.
மேற்கு எல்லையைப் பற்றி அவன் சொல்லவே இல்லையே.
ஏன்? பெங்களுரும், காவிரி நதியும் தமிழனுக்கு அநியாயமாகப் போகும் என்று சத்தியமாக நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான் பாரதி.
கிழக்கு எல்லைபோல மேற்கு எல்லையும் மாறவே மாறாது என்று நம்பியிருக்கிறான் பாரதி. அதனால் தான் கிழக்கு, மேற்கு எல்லைகள் பற்றி அவன் பேசவே இல்லை.
-----------
ஆனால் இன்று தமிழ்நாட்டின் எல்லைகள் என்னென்ன?

வடக்கே திருத்தணி.
மேற்கில் கூடலுார்,
தெற்கே குமரி முனை
என்று எவ்வளவோ குறுகி விட்டது.

தமிழன் இழந்ததைப் போல தரணியில் எந்த இனமும் சனநாயக ஆட்சியில் இவ்வளவு நில இழப்புக்கு ஆளானதில்லை.

கிழக்கே கடல் எல்லை மட்டும் தான் மாறாமல் உள்ளது.
அதைக் கூட கடல் அரிப்பின் மூலம் அலைகள் குறைந்ததுக் கொண்டே வருகின்றன.

தமிழ்நாட்டில் தமிழ் உணர்ச்சியை பின்தள்ளி, வேறொரு விதமான மாயத்தனமான-அறிவுக்கு அப்பாற்பட்ட-உண்மைத் தமிழ் உணர்ச்சியை மழுங்கடித்த,
திராவிடம் என்ற மயக்கத்தை கொண்டு வந்த திராவிட இயக்கத் தலைவர்கள்தான் தமிழ் நிலப்பகுதிகள் நம்மை விட்டுப் போவதற்குக் காரணம்.

இந்த விடயத்தில் ஈ.வெ.ரா. அண்ணாத்துரை முதற்கொண்டு அத்தனை திராவிட இயக்கத் தலைவர்களும் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றவாளிகளே.

ஏன் வேண்டாம் இன்பத்திராவிடம்
- தொடர் (2002-2003)
ஆசிரியர் சு.செந்தில்குமரன்
தேவி வார இதழ்

முகநூல் பதிவர்: வழக்கறிஞர் பா.குப்பன் திருத்தணி தமிழ்

No comments:

Post a Comment