Tuesday, 18 July 2017

நான் குமரிக்கண்டத்தின் மகன் _ கணபதி ஸ்தபதி

நான் குமரிக்கண்டத்தின் மகன் _ கணபதி ஸ்தபதி

எவ்வளவு பெரிய கலைஞனின் தன்னடக்கமான பதில்.........

தீராநதி : உங்களைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக எங்களுக்குச் சொல்லுங்கள்.

கணபதி : என்னை யார் என்று கேட்கிறீர்களா? இப்படி ஒரு கேள்வியை யாராவது என்னைப் பார்த்துக் கேட்க மாட்டார்களா என்று மிகுந்த ஆசைப்பட்டவன். இதுவரைக்கும் யாரும் என்னை இப்படிக் கேட்டதில்லை.
தனிப்பட்டமுறையில் என்னை நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி ஒன்று உண்டு.
அந்தக்குடியின் வழித்தோன்றல்கள்தான் எங்கள் இனம்.
கடல் கொண்ட குமரிக்கண்டத்தைச்
சேர்ந்தவன் நான். கடல் கொண்டு விட்டதால் அந்த இனம் அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.
அந்த மக்கள் இப்போதும் ஆஸ்திரேலியாவில், ஹவாயில், மலேசியாவில் இன்னும் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி உலகளாவிய ஒரு மரபை, ஒரு விஞ்ஞான மரபைச் சேர்ந்தவன் நான்.
எனவே, உலக இனத்தைச் சேர்ந்தவன் நான்.

தீராநதி : உங்களைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே! ஏன்? பெரிய, பெரிய கோயில்களைக் கட்டியபிறகு சிற்பிகள் தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் விடுவது போல நீங்களும் நடந்து கொள்கிறீர்களா?

கணபதி : உண்மையான கலைஞன், அசல் கலைஞன் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளமாட்டான்.
கோயில்களில் ட்யூப் லைட்டுகளில் கூட உபயம் ராமசாமி என்று எழுதுகிறார்கள். ஆனால் சிற்பிகள் தங்களுடைய பெயரை எப்போதுமே மறைத்துத்தான் வைத்திருக்கிறார்கள். இன்று நேற்றல்ல பதினைந்தாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் செய்து வருகிறோம். ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ளே போய் கடவுளைத் தேடி நமஸ்கரிக்கிற அதேவேளையில் மூலை முடுக்குகளிலெல்லாம் தேடிப் பாருங்கள். ஏதாவது ஒரு மூலையில் அந்தக் கோயில் கட்டிய சிற்பி வேண்டுமென்றே தன்னுடைய பெயரை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உலக அதிசயமாகச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு கோயிலை இன்றைய தேதியில் கட்டவேண்டும் என்றால் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் கோடி ரூபாய் தேவை. தஞ்சாவூரில் உள்ள எல்லா மக்களையும் வெளியேற்றிய பிறகுதான் அப்படிப்பட்ட கட்டடத்தைக் கட்டவே ஆரம்பிக்க முடியும்.
அப்படிப்பட்ட அற்புதமான கோயிலைக் கட்டிய மகாசிற்பி பெருந்தச்சனின் பெயர் மாமன்னன் ராஜராஜனுக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே! இப்படி எல்லாப் பெரிய கோயில்களைக் கட்டிய ஸ்தபதிகளின் பெயரும் எழுதத்தான் செய்திருக்கிறார்கள். //

தகவல் குறிப்பு உதவி : நண்பர் மயன்.

(நன்றி: ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்)

No comments:

Post a Comment