Showing posts with label குமரிக்கண்டம். Show all posts
Showing posts with label குமரிக்கண்டம். Show all posts

Wednesday, 13 September 2017

குமரிக்கண்டம் இருக்க கவலை ஏன்?

13ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு கேட்பாரற்று கிடக்கிறது.
அழிக்கப்பட்ட கல்வெட்டுகள் திரும்பக் கிடைத்தன.

செய்தி:
கண்மாய்க்குள் சிதறி கிடக்குது 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் : பாண்டியர் காலத்தவை என ஆய்வில் தகவல்
10.09.2017 தினகரன்

எத்தனை சான்றுகள் அழிக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.
நம்மிடம் ஒரு கருவூலம் இருக்கிறது.
ஒரு கண்டமே இருக்கிறது.

தமிழர்நாடு தமிழரின் கட்டுப்பாட்டில் வந்ததும் மக்கள் நிலை ஓரளவு மேம்பட்ட பிறகு நாம் கடலில் இறங்கி குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டும்.
நாம் உலகின் முன்தோன்றிய மூத்தகுடி, நமது நாகரீகமே முதல் நாகரீகம் என்பதை நிறுவவேண்டும்.

அதுவரை தமிழர் பழமைக்கான சான்றுகளைப் பற்றி கவலைப்படாமல் இனவிடுதலைக்காகப் போராடவேண்டும்.

Tuesday, 18 July 2017

நான் குமரிக்கண்டத்தின் மகன் _ கணபதி ஸ்தபதி

நான் குமரிக்கண்டத்தின் மகன் _ கணபதி ஸ்தபதி

எவ்வளவு பெரிய கலைஞனின் தன்னடக்கமான பதில்.........

தீராநதி : உங்களைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக எங்களுக்குச் சொல்லுங்கள்.

கணபதி : என்னை யார் என்று கேட்கிறீர்களா? இப்படி ஒரு கேள்வியை யாராவது என்னைப் பார்த்துக் கேட்க மாட்டார்களா என்று மிகுந்த ஆசைப்பட்டவன். இதுவரைக்கும் யாரும் என்னை இப்படிக் கேட்டதில்லை.
தனிப்பட்டமுறையில் என்னை நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி ஒன்று உண்டு.
அந்தக்குடியின் வழித்தோன்றல்கள்தான் எங்கள் இனம்.
கடல் கொண்ட குமரிக்கண்டத்தைச்
சேர்ந்தவன் நான். கடல் கொண்டு விட்டதால் அந்த இனம் அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.
அந்த மக்கள் இப்போதும் ஆஸ்திரேலியாவில், ஹவாயில், மலேசியாவில் இன்னும் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி உலகளாவிய ஒரு மரபை, ஒரு விஞ்ஞான மரபைச் சேர்ந்தவன் நான்.
எனவே, உலக இனத்தைச் சேர்ந்தவன் நான்.

தீராநதி : உங்களைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே! ஏன்? பெரிய, பெரிய கோயில்களைக் கட்டியபிறகு சிற்பிகள் தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் விடுவது போல நீங்களும் நடந்து கொள்கிறீர்களா?

கணபதி : உண்மையான கலைஞன், அசல் கலைஞன் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளமாட்டான்.
கோயில்களில் ட்யூப் லைட்டுகளில் கூட உபயம் ராமசாமி என்று எழுதுகிறார்கள். ஆனால் சிற்பிகள் தங்களுடைய பெயரை எப்போதுமே மறைத்துத்தான் வைத்திருக்கிறார்கள். இன்று நேற்றல்ல பதினைந்தாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் செய்து வருகிறோம். ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ளே போய் கடவுளைத் தேடி நமஸ்கரிக்கிற அதேவேளையில் மூலை முடுக்குகளிலெல்லாம் தேடிப் பாருங்கள். ஏதாவது ஒரு மூலையில் அந்தக் கோயில் கட்டிய சிற்பி வேண்டுமென்றே தன்னுடைய பெயரை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உலக அதிசயமாகச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு கோயிலை இன்றைய தேதியில் கட்டவேண்டும் என்றால் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் கோடி ரூபாய் தேவை. தஞ்சாவூரில் உள்ள எல்லா மக்களையும் வெளியேற்றிய பிறகுதான் அப்படிப்பட்ட கட்டடத்தைக் கட்டவே ஆரம்பிக்க முடியும்.
அப்படிப்பட்ட அற்புதமான கோயிலைக் கட்டிய மகாசிற்பி பெருந்தச்சனின் பெயர் மாமன்னன் ராஜராஜனுக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே! இப்படி எல்லாப் பெரிய கோயில்களைக் கட்டிய ஸ்தபதிகளின் பெயரும் எழுதத்தான் செய்திருக்கிறார்கள். //

தகவல் குறிப்பு உதவி : நண்பர் மயன்.

(நன்றி: ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்)

Sunday, 26 March 2017

யார் மூவேந்தர் வாரிசு?

யார் மூவேந்தர் வாரிசு?

தமிழர் அனைவருக்கும் (சேரருக்கும் சோழருக்கும் கூட) முன்னோன் பாண்டியன்.

எனக்கு இன்று பாண்டியன் வாரிசு யார் என்றெல்லாம் தெரியாது.
ஆனால் பாண்டியன் கூடப்பிறந்த குடி எது என்று தெரியும்.

"தென்னவன் தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர்" என்று கலித்தொகை கூறுகிறது.

முழுமையாக,

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய நல்லினத்து ஆயர்”
(கலித்தொகை 104)

(மூன்றாம் ஊழியில்) குமரிக்கண்டத்தின் கடைசி பகுதி மூழ்கியபோது வடக்கே முன்னேறிய பாண்டியன் சேரர், சோழரைத் தோற்கடித்து (புலியொடு வில் நீக்கி) தன் ஆட்சியை பரப்பினான்.
அந்த தென்னவனின் (பாண்டியனின்) குடி தோன்றியபோதே ஆயரும் தோன்றிவிட்டார்களாம்.

அப்பன் சொத்தை அடுத்தவன் ஆட்டையைப் போட்டு வளமாக வாழ்கிறான்.

அண்ணன்-தம்பிகள் 'அப்பனின் புகழுக்கு யார் வாரிசு' என்று அடித்துக்கொள்கிறார்கள்.

சித்தப்பன் இதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

எவன் அப்பன் சொத்தை மீட்கிறானோ அவனே உண்மையான மகன்.

எவன் சேர, சோழ, பாண்டியர் ஆண்ட 'தமிழர்நாட்டை' மீட்டு எவன் தனியரசு செலுத்துகிறானோ அவனே மூவேந்தர் வாரிசு.

Tuesday, 11 October 2016

குமரிக்கண்டம் தாண்டி இராவணன் ஆண்ட இலங்கை

குமரிக்கண்டம் தாண்டி இராவணன் ஆண்ட இலங்கை 

உண்மையில் இராவணன் ஆண்ட இலங்கை தற்போதைய இலங்கைத் தீவு கிடையாது.
இதைக் கம்பரே கூறுகிறார்.

இராமாயணத்தில் சீதையைத் தேடி அனுமன் தென்திசையில் செல்கிறான்.
அகத்தியர் தமிழ்ச்சங்கம் அமைத்த பொதிகை மலையில் பொருநை (தாமிரபரணி) ஆறு ஓடுவதையும்
அதற்கடுத்து மயேந்திரமலை (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தற்போதைய மகேந்திரகிரி) இருப்பது குறிப்பிடப்படுகிறது.

கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலத்தில் இது வருகிறது,

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் "திருமுனிவன் தமிழ்ச்சங்கம்..."
"பொருநையெனும் திருநதிபின்..."
"மயேந்திரமா நெடுவரையும்..."

அங்கேயிருந்து நூறு ஓசனை (யோசனை) தொலைவில் நடுக்கடலில் இலங்கை இருக்கிறது என்றும் வருகிறது.

இது கிட்கிந்தா காண்டம்,
சம்பாதிப் படலத்தில்,
"ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை..."
என்றும்,

கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில்
"ஓசனை ஒன்று நூறும்...."
என்றும் வருகிறது.

யோசனை என்றால் எவ்வளவு?

பொறிஞர் கொடுமுடி சண்முகத்தின் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற புத்தகத்தில் பழந்தமிழ் அளவீடுகளுக்கான தற்போதைய அளவுகள் தரப்பட்டுள்ளன.
அவை,

1 விரல் = 3.48958 cm
6 விரல் = 1 சாண் = 21cm
2 சாண் = 1 முழம் = 42 cm
2 முழம் = 1 கோல் = 84 cm
4 கோல் = 1 தண்டம் = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1.675Km
4 கூப்பீடு = 1 காதம் = 6.7 Km
4 காதம் = 1 யோசனை = 26.82 Km

எனில் 100 யோசனை என்பது 2682 கி.மீ. தொலைவு ஆகும்.

அதாவது கிட்டத்தட்ட காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி (2750 கி.மீ, வான்வழி) இருக்கும் தூரம் ஆகும்.

நன்றி:- திரு.இராம.கி

தேடுக - இராமனும் தமிழனே வேட்டொலி

Sunday, 12 June 2016

குமரிக்கண்டமும் நேசமணியும்

குமரிக்கண்டமும் நேசமணியும்

மூழ்கிப்போன கண்டமொன்று இருந்தாக மேலைநாட்டு அறிஞர்கள் கூறியபோது,
தமிழ் இலக்கியங்களுடன் அதைப் பொருத்திப்பார்த்து
குமரிக்கண்டத்தை மீண்டும் மக்கள் அறியச் செய்தவர்,
ஈழத்தமிழரும்,
தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவருமான கனகசபை ஆவார்.

ஆனால் குமரிமுனை மலையாளிகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது.

அதை மீட்டு அங்கிருந்த மக்கள் வணங்கிவந்த (கன்னி) குமரியம்மன் பெயராலும்,
மூழ்கிய குமரிக்கண்டத்தின் நினைவாகவும்,
"கன்னியாகுமரி" என்று பெயர் வைத்தவர் (கிறித்தவரான) நேசமணி ஆவார்.

இதற்கு பின்னணிக் காரணம் 'குமரிக் கண்டத்து வழக்கறிஞர்' என்றழைக்கப்படும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை ஆவார்.

தந்தை செல்வாவுக்கு இருபது ஆண்டுகள் முன்பே அதிரடி அரசியல் செய்து,
காமராசரின் ஆதரவு இல்லாமல் போனாலும்,
ஈ.வே.ரா ஆதரவு தர மறுத்து திருப்பி அனுப்பினாலும்,
திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளாது போனாலும்,

தன் அறுபத்தைந்து வயதிலும் தளராது போராடி,
பாதியளவு மண்ணையாவது தமிழகத்துக்கு மீட்டுத்தந்த தமிழர் தந்தைதான் நேசமணி அவர்கள்.

சாதியாகவும் மதமாகவும் ஏன் மொழியாலும் பிரிந்து கிடந்த தமிழினத்தினை ஒன்றுதிரட்டி மண்மீட்பில் வெற்றிபெற்ற முதல் தமிழ்தேசியவாதியும் அன்னாரே ஆவார்.

தமிழியத் தலைவர் மார்சல்.நேசமணியை தமிழினம் வரமாய் பெற்ற நாள் இன்று (12-06-1895).

Wednesday, 11 May 2016

யானையை விட பலம்வாய்ந்த ஆளி

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ….
– நக்கண்ணையார்,
அகநானூறு 252 : 1-4

அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய
வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு,

ஆளியானது (யாளி) பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி,
அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

Saturday, 28 November 2015

குமரிக்கண்டத்து மன்னனின் சாதனைகள்

குமரிக்கண்டத்து மன்னனின் சாதனைகள்

தமிழ் மன்னர்களிலேயே மிகவும் பழமையான மன்னன் 'நெடியோன்' என்பவனாவான்.
இவனே "நிலந்தரு திருவிற்பாண்டியன்' என்றும் அழைக்கப்படுகிறான்.

இவன் வியப்பில் ஆழ்த்தும் பெரிய பெரிய சாதனைகள் செய்துள்ளான்.

இவன் இன்று கடலடியில்  உறங்கிங்கொண்டிருக்கும் நமது 'குமரிக்கண்டத்தில்' ஓடிய 'பஃறுளி' ஆற்றின் கரையில் அமைந்த பழைய 'மதுரை'யை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளான்.

“செந்நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கீர்த்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப்பக்றுளி மணல்” (புறம் 9)

பஃறுளி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இவன் 'முந்நீர் விழவு' எனப்படும் பெரிய விழா ஒன்றை நடத்தியுள்ளான்.
இந்த விழா இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் நீர் தொடர்பான போட்டி என்று கூறமுடியும்.
கடலில் விடும் நவாய் (அல்லது கப்பல்) போட்டியாக இருக்கலாம்.

இவன் காலத்திலேயே குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டது,

“பக்றுளியாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசையாண்ட தென்னவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுவது இவனைத்தான்.

பல மலைகளையும் பஃறுளியாற்றையும் கொண்ட குமரிக்கோடு கடலால் விழுங்கப்பட்டது.
அதை இணைசெய்ய இமயத்தையும் கங்கையும் இவன் தனதாக்கிக் கொண்டது தெரிகிறது.

அதாவது குமரிக்கண்ட பேரழிவிலிருந்து தப்பித்து தன் மக்களையும் காத்துள்ளான் இந்த பேரரசன்.

ஏற்கனவே குமரிக்கண்ட மக்களுக்கு கப்பல்கள் பற்றிய அறிவு இருந்ததுள்ளது.
குமரிக்கண்டத்தைக் கடல் திடீரென்று ஒரேடியாக விழுங்கவில்லை என்று கூறலாம்.
அதனாலேயே அவர்கள் தப்பிக்கமுடிந்தது.

இவன் தப்பித்துவந்த மக்களைக் குடியமர்த்த இரண்டு பெரிய அரசர்களையும் பல வேளிர்களையும் போரிட்டு வென்று இமயம் வரைக் கைப்பற்றியுள்ளான்.
வளமான நிலப்பரப்பை மக்களுக்குக் கிடைக்கச் செய்தனாலேயே இவன் 'நிலந்தரு' பாண்டியன் எனப்பட்டான்.

இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருது,
அவரைச் செரு வென்றும்,
இலங்கு அருவிய வரை நீந்தி,
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்,
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின்,
நிலம் தந்த பேர் உதவி,
பொலந் தார் மார்பின்,
நெடியோன் உம்பல்
(மதுரைக்காஞ்சி 55)

எனில் தமிழர்கள் வந்தேறிகளா?

இல்லை. இமயம் வரைக்கும் அந்நாளில் ஒரே மொழி (தமிழ்) பேசப்பட்டது.
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத் தோன்று மொழிந்து தொழில் கேட்ப”
என்று அதே மதுரைக்காஞ்சி கூறுகிறது.

இம்மன்னன் பழைய நூல்கள் அழிந்துவிட்டதால், இலக்கியத்தை மீட்டுருவாக்க இடைக் கழகம் (இரண்டாம் தமிழ்ச் சங்கம்) நிறுவி 'தொல்காப்பியம்' எழுதச் செய்துள்ளான்.
இவனது அவையில் புலவராக இருந்த அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் இலக்கணநூலான தொல்காப்பியத்தை அரங்கேற்றினார்.
இவ்விலக்கணத்தின் படி நூல்கள் இயற்றப்பட வரையறை செய்யப்பட்டது.

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து
(பனம்பாரனார் சிறப்புப் பாயிரம்)

இதோடு நில்லாமல் குடியமர்ந்தோருக்கு உணவுத்தேவையைப் பூர்த்தி செய்ய கடல் கடந்து சென்று சாவகநாட்டின் (தற்போதைய இந்தோனேசியா) நெல்வளமிக்க ஒரு ஊரைக் (சாலியூர்) கைப்பற்றியுள்ளான்.

புதிதாக வயல்வெளிகள் ஏற்படுத்தி அதற்கான விதைநெல் கொண்டுவர இவ்வாறு செய்திருக்கலாம்.
நெல் இறக்குமதி செய்ய தன் புதிய நாட்டிடம் பொருளாதாரம் இல்லாமையால் படையெடுத்து சென்று அந்த பகுதியை பிடித்திருக்கலாம்.

நெடுங்கொடிமிசை இதை எடுத்து, இன்னிசைய முரசம் முழங்க,
பொன் மலிந்த விழுப்பண்டம்,
நாடு ஆர நன்கு இழிதரும்,
ஆடு இயல் பெருநாவாய்,
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு இருக்கை,
தெண்கடல் குண்டகழிச்,
சீர்சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ
(மதுரைக்காஞ்சி 79-89)

என்று 'தலையாலக்காலத்துச் செருவென்ற பாண்டியனை' புகழும் மதுரைக்காஞ்சியில் பாண்டியரின் சிறப்புகளான கூறுவனவற்றில் பாண்டியர் கடல் வலிமையும் நெல் செழித்த ஊரையும் பற்றிக் கூறுகிறது.

ஆக பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை இடம், கல்வி, உணவு ஆகியன கொடுத்து அப்பேரழிவினால் ஏற்பட்ட இழப்பை முடிந்த அளவு ஈடுகட்டியுள்ளான் இத்தமிழ் மன்னன்.

விரிவாக
amuthamvaralaru.blogspot.com/2014/07/4.html?m=1