Saturday 28 November 2015

குமரிக்கண்டத்து மன்னனின் சாதனைகள்

குமரிக்கண்டத்து மன்னனின் சாதனைகள்

தமிழ் மன்னர்களிலேயே மிகவும் பழமையான மன்னன் 'நெடியோன்' என்பவனாவான்.
இவனே "நிலந்தரு திருவிற்பாண்டியன்' என்றும் அழைக்கப்படுகிறான்.

இவன் வியப்பில் ஆழ்த்தும் பெரிய பெரிய சாதனைகள் செய்துள்ளான்.

இவன் இன்று கடலடியில்  உறங்கிங்கொண்டிருக்கும் நமது 'குமரிக்கண்டத்தில்' ஓடிய 'பஃறுளி' ஆற்றின் கரையில் அமைந்த பழைய 'மதுரை'யை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளான்.

“செந்நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கீர்த்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப்பக்றுளி மணல்” (புறம் 9)

பஃறுளி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இவன் 'முந்நீர் விழவு' எனப்படும் பெரிய விழா ஒன்றை நடத்தியுள்ளான்.
இந்த விழா இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் நீர் தொடர்பான போட்டி என்று கூறமுடியும்.
கடலில் விடும் நவாய் (அல்லது கப்பல்) போட்டியாக இருக்கலாம்.

இவன் காலத்திலேயே குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டது,

“பக்றுளியாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசையாண்ட தென்னவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுவது இவனைத்தான்.

பல மலைகளையும் பஃறுளியாற்றையும் கொண்ட குமரிக்கோடு கடலால் விழுங்கப்பட்டது.
அதை இணைசெய்ய இமயத்தையும் கங்கையும் இவன் தனதாக்கிக் கொண்டது தெரிகிறது.

அதாவது குமரிக்கண்ட பேரழிவிலிருந்து தப்பித்து தன் மக்களையும் காத்துள்ளான் இந்த பேரரசன்.

ஏற்கனவே குமரிக்கண்ட மக்களுக்கு கப்பல்கள் பற்றிய அறிவு இருந்ததுள்ளது.
குமரிக்கண்டத்தைக் கடல் திடீரென்று ஒரேடியாக விழுங்கவில்லை என்று கூறலாம்.
அதனாலேயே அவர்கள் தப்பிக்கமுடிந்தது.

இவன் தப்பித்துவந்த மக்களைக் குடியமர்த்த இரண்டு பெரிய அரசர்களையும் பல வேளிர்களையும் போரிட்டு வென்று இமயம் வரைக் கைப்பற்றியுள்ளான்.
வளமான நிலப்பரப்பை மக்களுக்குக் கிடைக்கச் செய்தனாலேயே இவன் 'நிலந்தரு' பாண்டியன் எனப்பட்டான்.

இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருது,
அவரைச் செரு வென்றும்,
இலங்கு அருவிய வரை நீந்தி,
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்,
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின்,
நிலம் தந்த பேர் உதவி,
பொலந் தார் மார்பின்,
நெடியோன் உம்பல்
(மதுரைக்காஞ்சி 55)

எனில் தமிழர்கள் வந்தேறிகளா?

இல்லை. இமயம் வரைக்கும் அந்நாளில் ஒரே மொழி (தமிழ்) பேசப்பட்டது.
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத் தோன்று மொழிந்து தொழில் கேட்ப”
என்று அதே மதுரைக்காஞ்சி கூறுகிறது.

இம்மன்னன் பழைய நூல்கள் அழிந்துவிட்டதால், இலக்கியத்தை மீட்டுருவாக்க இடைக் கழகம் (இரண்டாம் தமிழ்ச் சங்கம்) நிறுவி 'தொல்காப்பியம்' எழுதச் செய்துள்ளான்.
இவனது அவையில் புலவராக இருந்த அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் இலக்கணநூலான தொல்காப்பியத்தை அரங்கேற்றினார்.
இவ்விலக்கணத்தின் படி நூல்கள் இயற்றப்பட வரையறை செய்யப்பட்டது.

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து
(பனம்பாரனார் சிறப்புப் பாயிரம்)

இதோடு நில்லாமல் குடியமர்ந்தோருக்கு உணவுத்தேவையைப் பூர்த்தி செய்ய கடல் கடந்து சென்று சாவகநாட்டின் (தற்போதைய இந்தோனேசியா) நெல்வளமிக்க ஒரு ஊரைக் (சாலியூர்) கைப்பற்றியுள்ளான்.

புதிதாக வயல்வெளிகள் ஏற்படுத்தி அதற்கான விதைநெல் கொண்டுவர இவ்வாறு செய்திருக்கலாம்.
நெல் இறக்குமதி செய்ய தன் புதிய நாட்டிடம் பொருளாதாரம் இல்லாமையால் படையெடுத்து சென்று அந்த பகுதியை பிடித்திருக்கலாம்.

நெடுங்கொடிமிசை இதை எடுத்து, இன்னிசைய முரசம் முழங்க,
பொன் மலிந்த விழுப்பண்டம்,
நாடு ஆர நன்கு இழிதரும்,
ஆடு இயல் பெருநாவாய்,
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு இருக்கை,
தெண்கடல் குண்டகழிச்,
சீர்சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ
(மதுரைக்காஞ்சி 79-89)

என்று 'தலையாலக்காலத்துச் செருவென்ற பாண்டியனை' புகழும் மதுரைக்காஞ்சியில் பாண்டியரின் சிறப்புகளான கூறுவனவற்றில் பாண்டியர் கடல் வலிமையும் நெல் செழித்த ஊரையும் பற்றிக் கூறுகிறது.

ஆக பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை இடம், கல்வி, உணவு ஆகியன கொடுத்து அப்பேரழிவினால் ஏற்பட்ட இழப்பை முடிந்த அளவு ஈடுகட்டியுள்ளான் இத்தமிழ் மன்னன்.

விரிவாக
amuthamvaralaru.blogspot.com/2014/07/4.html?m=1

No comments:

Post a Comment